கம்யூனிஸ சமுதாயம் வெறும் கனவா ?

Posted by அகத்தீ Labels:





கம்யூனிச சமுதாயம் ஏற்கப்படும் 

காலம் கனியுமோ?

சரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம்? குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா?
மதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா? அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா? மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ? சொல்லுங்கள்!

தொடர்ந்து பேசப்பேச நிறையவே கேள்விகள் வருகின்றன. வந்துள்ள கேள்விகளில் புதியவை இவை. தொடர்ந்து விவாதிப்பதற்கு மனதைத் திறந்துவைத்திருப்பதே முக்கியம்.

சரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம்? குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா?

அவசியம் பதில் சொல்ல வேண்டிய பெருங்கேள்வி. இதற்காக தனி நூலே எழுதத்தக்க அளவு விவரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆயினும் ஒரிரு வரிகளில் சொல்லவேண்டியுள்ளது.சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லப்படுகிற மொஹஞ்சோதாரா, ஹராப்பா நாகரீகம் ஆரியர் இந்த பூமிக்குள் நுழையும் முன்பே நின்று நிலைத்த நகர நாகரீகம்.

இம்மண்ணின் தொல்குடிகளான திராவிடருக்கு உரியது அது என்றே இதுவரை கிடைத்த அனைத்து சான்றாதாரங்களும் நிறுவுகின்றன. தொல்குடிகளை திராவிடர் எனச் சுட்டுவதில் மாறுபடுவோரும் உண்டு ; ஆனால் அது ஆரிய நாகரிகம் என்பதற்கு எந்தத் தடயமும் கிடையாது,

 இந்துத்துவம் பேசும் சங்பரிவார் இதனை மறுத்து சரஸ்வதி நதி நாகரீகம் என சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்காக அவர்கள் புனைந்த அனைத்துக் கட்டுக்கதைகளையும் அறிவியலாளர்கள் நிராகரித்து ; அவை அனைத்தையும் பொய்யென நிறுவிவிட்டனர். அது சிந்து சமவெளி நாகரீகமே. மொஹஞ்சதோரா - ஹராப்பா நாகரீகமே .

லெமூரியாக் கண்டம் எனும் குமரிக் கண்டம் குறித்து தமிழ்ச் சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. அண்மையில் வந்த சுனாமி போல் பெரும் ஆழிப்பேரலையாலோ கடற்கோள்களாலோ இப்பெரும் நிலப்பரப்பைக் கடல் கொண்டிருக்கும் எனக்கூறுகின்றனர்.1965ல் தனுஷ்கோடி மூழ்கியதும் 2004 சுனாமியில் ஏற்பட்ட பேரழிவும் ஏன் இது போல் பெரும் பரப்பை கடல் கொண்டிருக்கக் கூடாது என கேள்வி எழுகிறது.
சௌராஷ்டிரம் அருகே கடலுக்கடியில் ஒரு பழைய துறைமுகம் கண்டுபிடிக்கப்பட்டதும், பூம்புகாரில் நடத்திய ஆய்வுகளில் கடலடியில் சிதைந்த கட்டிடங்கள் காணப்படுவதும் லெமூரியா கண்ட கற்பிதத்துக்கு உயிர் கொடுத்ததுபோல் தோன்றும். இவற்றை எல்லாம் ஒப்புக்கொள்ளும் சு.கி. ஜெயகரன் எழுதிய நூலொன்று லெமூரியா கண்டமொன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என புவியில் அறிவியல் துணையோடு வாதிடுகிறது .

ஆரம்பத்தில் புவியியலாளர்கள் மத்தியில் இக்கண்டம் குறித்த நம்பிக்கை வெளிப்பட்ட போதிலும் ஆய்வு வலுவானபின் இது குறித்த சந்தேகமே வலுத்துவருகிறது. இன்னும் உறுதியான அறிவியல் ரீதியான நிரூபனங்கள் தேவைப்படுகின்றன. அதுவரை தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியில் லெமூரியா கற்பிதம் தொடரவே செய்யும்.

சோழர் காலமோ, குப்தர் காலமோ, அசோகர் காலமோ பொற்காலம் என்பதெல்லாம் மிகைக் கூற்றே. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் சில சிறப்புகள் இருக்கும்; அது போல் பெரும் அவலங்களும் இருக்கும். முன் கேள்வி ஒன்றில் நாம் குறிப்பிட்டது போல சோஷலிசத்துக்கு முந்தைய எல்லா ஆட்சிகளும் சாராம்சத்தில் சுரண்டும் வர்க்க ஆட்சியே.

மன்னராட்சி என்பது நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பேணிக்காக்கும் அரசமைப்பே. இந்த ஆட்சிகள் நிலப்பிரபுக்களின் நலனை பாதுகாத்தன.குடியானவர்களை வஞ்சித்தது. அடக்கி ஒடுக்கியது. சாதியம் ஏதோ ஒருவகையில் பாதுக்காக்கப் பட்டது.

கோடிக்கணக்கான மக்கள்“ஆடையின்றி வாடையில்மெலிந்துகையதுகொண்டு மெய்யது பொத்திகாலது கொண்டுமேலதுதழீ இப்பேழையில் இருக்கும்பாம் பெனஉயிர்க்கும்ஏழையாளனைக் கண்டனம்எனுமே”-எனும்படியாகத்தான் வாழ்ந்தனர்.

“இரந்தும் உயிர்வாழ்தல்வேண்டின்பரந்துகெடுகஉலகியற்றியான்”-என இறைவனையே சபிக்கும் படியாகத்தான் உயிர் வாழ்ந்தனர்.

உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இந்த ஆட்சிகள் ஒரு போதும் பொற்கால ஆட்சியல்ல.

இப்போது நாம் இங்கு காண்கிற ஆட்சி எதுவும் பொற்கால ஆட்சி அல்ல. பொற்கால ஆட்சி நேற்றும் இல்லை; இன்றும் இல்லை; இனிதான் பூக்க வேண்டும்.

இதனைச் சொல்வதால் பழம் பெருமைகளை முற்றாக நிராகரிப்பதாகாது; மாறாக முந்தைய நியாயமான பெருமைகளைச் சொல்வது வேறு; பொற்காலமென விமர்சனமின்றி போற்றிப் புகழ்வது வேறு.மன்னராட்சியா? குடியாட்சியா? அந்நிய ஆட்சியா? மண்ணின் ஆட்சியா? ஆளுவது அவரா? இவரா? எதுவாக இருப்பினும் ; கொடியும் கோஷமும் மாறினும், சுரண்டல் ஆதிக்கம் மட்டும் தொடரவே செய்யுமெனில், அடக்குமுறை நீடிக்குமெனில், உழைப்போர் நலன் உதாசீனப்படுத்தப்படும் எனில் -அது எப்படி பொற்கால ஆட்சியாகும்?

நாம் முன் கேள்விக்கான பதிலில் சுட்டிக்காட்டியவாறு சோஷலிச கட்டத்தையும் தாண்டி வர்க்கப் பகைமையும் மோதலும் இல்லாத - அரசும் அடக்குமுறையும் இல்லாத - “ உற்பத்தி சக்திகள் வளர்ந்து கூட்டு உழைப்பு எனும் ஊற்றிலிருந்து செல்வம் அளவின்றி பெருகி ஓடுகிற” கம்யூனிஸ சமுதாயமே பொற்காலமாகும். நம் கவிஞர்கள் கனவு கண்ட‘எல்லோரும் இன்புற்றிருக்கும் பொன்யுகம்’ இனிதான் பூக்க வேண்டும்.
அதற்காக உழைக்கும் மக்களை அணிதிரட்ட கடந்தகால பொற்கால மயக்கங்களை தோலுரிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உண்டு. செய்வோம்.

மதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா? அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா? மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ? சொல்லுங்கள்!

நூறு கேள்விகளோடு முடிக்கிறேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டதாலும், இதுவே நூறாவது கேள்வி என்பதாலும் கிடுக்கிப் பிடி கேள்வியை வீசி இருக்கிறார் நண்பர். பதில் சொல்ல பல பக்கங்கள் தேவை. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே இதுவரை சொன்ன பதில்களை மீண்டும் அசை போட்டபடியே இப்பதிலை வாசிக்க வேண்டுகிறேன் .

மதமும் கடவுளும் இல்லாத தேசமும் ஒரு பொன்னாளும் கேடகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்நாளை உங்களைப் போலவே நானும் ஆவலொடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன் வறுமையும், வேலையின்மையும், அடக்குமுறையும் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு வேண்டும். அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் அறியாமையிலிருந்தும் விடுதலை வேண்டும். இல்லையா ?
“எல்லா ஒடுக்கும் வர்க்கங்களுக்கும் நம் வர்க்க ஆட்சியை நிலைபேறுடையதாக ஆக்கிக் கொள்வதற்காக இரு சேவைகள் தேவைப்படுகின்றன; ஒன்று, தூக்கிலிடுபவன் சேவை [ hungman’s function] , இரண்டு, பூசாரிகள் சேவை  [priestly function ]  - இரண்டும் அவர்களுக்குத் தேவை. ஏனெனில் , சுரண்டுவோருக்கு எதிராக சுரண்டப்படுவோர் மத்தியில் எழும் எதிர்ப்பை, போராட்டத்தை அடக்கி ஒடுக்க தூக்குமரமும் தூக்கிலிடுவோனும் தேவை. மறுபுறம் சுரண்டப்படுவோனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி, ‘துன்பங்களை கஷ்டங்களை சகித்துக்கொண்டு கீழ்ப்படிந்து தியாகம் செய்தால் உனக்கு இன்பம் கொழிக்கும் சொர்க்கம் கிடைக்கும்’ என்று சொல்லி - அது வெறும் சரடு நடை முறை சாத்தியமற்றது எனினும் - மயங்கச் செய்ய பூசாரி தேவை. வர்க்க ஆட்சியை உறுதி செய்து - அதற்கு அவர்களை அடிபணியச் செய்து - புரட்சிகர செயல்பாட்டிலிருந்து ஒதுக்கி - புரட்சிகர மனவெழுச்சி ஏற்படாமல் முனை மழுங்கச் செய்து  புரட்சிகர உறுதியைக் குலைக்க பூசாரிகள் தேவை,” என்றார் தோழர் லெனின்.
ஆக, ஆளும் வர்க்கம் அவ்வளவு சுலபமாக தன் ஆதிக்கக் கருத்தோட்டத்தை விட்டுக்கொடுத்துவிடாது. அதனால்தான் முதலாளித்துவ சமுதாயம் உள்ளிட்டு இதுவரையிலான எல்லா சமூக அமைப்புகளும் மதத்தையும் கடவுளையும் விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு அறிவியல் உண்மைகள் மதம், கடவுள் இவற்றை கேள்விக்குள்ளாக்கினும் தன் சுய நலத்துக்காக இவற்றை நீடிக்கச் செய்வதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது. நவீன அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் இதற்கே சேவை செய்கின்றன.

அதிலும் உலகமயம் சகல நல்ல விழுமியங்களையும் அடித்து உடைத்துவிட்டு வெறும் நுகர்வு இயந்திரமாக, பணவெறி மிக்க மிருகமாக, சுயநலக் கிருமியாக மனிதனை மாற்றிக்கொண்டிருக்கிறது. இதனால் அவனுக்கு/அவளுக்கு ஏற்படும் மன உழைச்சலுக்கு ஆன்மீக மருந்து தடவுவதாய்க் கூறி மேலும் மேலும் மதத்திடமும் கடவுளிடமும் சரண்டையச் செய்கிறது .இச்சூழலில் சமூக உளவியலை வென்றெடுக்கும் சவாலான பணிநம்முன் உள்ளது .

ஆனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் வேலையின்மை , கடன் நெருக்கடி , வாழ்வைப்பற்றிய அச்சம் என எல்லா நெருக்கடியும் வேறுவழியின்றி மனிதனை வேறு பாதையை தேடவே நிர்பந்திக்கும். முதலாளித்துவம் தன் சவக்குழியைத் தானே வெட்டிக்கொள்ளும். அச்சூழலில் சமூக அமைப்பை மாற்றுவதற்கான போரட்டமும் பகுத்தறிவுக்கான விழிப்புணர்வும் ஒரு சேர முன்னெடுக்க இயலும். செய்ய வேண்டும் .

“மனிதர்களை இயங்கச் செய்யும் ஒவ்வொன்றும் அவர்களுடைய மனத்தினூடே சென்று தீர வேண்டும். அது என்ன வடிவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பெரிதும் சூழ்நிலைகளையே பொருத்திருக்கும்,” என்று எங்கெல்ஸ் கூறினார்.

“ வரலாற்று வளர்ச்சியில் ஆன்மீகத்தின் இயங்கு பாத்திரத்தை புரிந்து கொள்ள இக்கூற்று உதவிடும். சமூக உறவுகள், தேவைகள் மற்றும் நலன்கள் சித்தாந்த மதிப்புகளின் வடிவத்தில், அதாவது கருத்துகள், இலட்சியங்கள், கோட்பாடுகள், நோக்கங்கள் என்ற முறையில் ஈடேற்றமடைகின்றன. பெருந்திரளான மக்கள் புரட்சிகர சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்திக்கொள்ளும் பொழுது அது பொருளாயத சக்தியாகிறது,” என்றனர் ரஷ்ய தத்துவ ஆசிரியர்கள் .

முன்னொரு கேள்விக்கான பதிலில் சுட்டியதுபோல, இப்போது கூட உலகில் வெறுமே 30 நாடுகள் மட்டுமே ஏதோ ஒரு வகையில் மதத்தோடு அரசைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. 166க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏதோ ஒருவகையில் மதம் அரசிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 22 விழுக்காடு மக்கள் ஏதோ ஒரு வகையில் நாத்திகத்தை நெருங்கியுள்ளனர். 11 விழுக்காட்டினர் நாத்திகராகவே அடையாளப்படுத்துகின்றனர் .
எனவே நம்பிக்கை வலுக்கிறது .காலந்தோறும் சில கருத்துகள் அழிகின்றன; சில மாறுகின்றன; சில புதியனவாகத் தோன்றுகின்றன. வரலாற்றுப் பொருள் முதல்வாத நிலையிலிருந்து நோக்கும்பொழுது கருத்துகள் பிறத்தலும் மாறுதலும் அழிதலும் பொருளுற்பத்தி நிலைமைகளிலும் உறவுகளிலும் எழும் மாற்றங்களையொட்டியே நிகழ்கின்றன .எடுத்துக்காட்டாக , முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கட்ட நிலையில்தான் ஜனநாயகக் கருத்துகளும் சோஷலிசக் கருத்துகளும் மிகத் தெளிவாகப் பிறந்தன. புதிய பௌதீக நிலைமைகளின் ஆதாரத்தில்தான் புதிய கருத்துகள் பிறக்க முடியும் . பழைய கருத்துகள் சிலவும் கூட தொடர்ந்து ஒரு பங்கை வகிக்கும். மாறாதது எதுவும் இல்லை .

“ கம்யூனிசம் ஒரு நம்பிக்கை சார்ந்த கோட்பாடல்ல ;மாறாக அது ஒரு இயக்கம். அது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதில்லை; மாறாக நடப்பு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்பார் எங்கெல்ஸ். ஆம். நடப்பு உண்மைகளில் காலூன்றி சமூக மாறுதலுக்காக அர்ப்பணிக்கும் ஒரு பேரியக்கமாக கம்யூனிசம் வலுப்படும் சூழலில், மக்களை வென்றெடுக்க முடியும். கம்யூனிசக் கனவு கைக்கூடும்.

“ உலகத் தொழிலளர்களே! ஒன்றுபடுங்கள்! இழக்கப் போவது விலங்குகளே! எதிரே தெரியுது பொன்னுலகம்.” -கம்யூனிஸ்ட் அறிக்கையின் இந்த அறைகூவல் காலம் கடந்தும் எங்கும் உயிர்த்துடிப்புடன் ஒலிக்கிறது.

நூறு கேள்வி பதிலுடன் உரையாடலை நிறைவு செய்கிறேன்.இதன் பொருள் உரையாடலும் விவாதமும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல; இங்கு இவ்வளவுதான் சாத்தியம் . அவ்வளவே. உரையாடலை, விவாதத்தை வேறுவேறு தளங்களில் நாம் தொடர்ந்துகொண்டே இருப்போம். ஆம்  
அறிவைத் தேடிக்கொண்டே இருப்போம்!” “அநீதியை எதிர்த்துக் கொண்டே இருப்போம்!”

நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 17-04-2016






0 comments :

Post a Comment