உங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட .......

Posted by அகத்தீ Labels:






உங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட...


சு.பொ.அகத்தியலிங்கம் .

“பாட்டுத் தொழிலிலே மனதை வையடா / தீயைப் பிசைந்து கவிதை செய்யடா!” என தன் கவிதையில் சொன்னவன் மட்டுமல்ல ; அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிர்த்துடிப்புள்ள பாட்டாளி ஆம் பாட்டாளி பக்கம் நின்று பாடல் யாத்திடும் பாட்டாளி நவகவி

.“முறையாக எழுதத் தொடங்கி முப்பத் தேழு ஆண்டுகளாக நான் விட்ட உயிர் மூச்சுகளுக் கிடையில் இந்த கவிமூச்சுகளும் கலந்துள்ளன”என தொகையறாவில் நவகவி சொல்வது மிகையல்ல .

“இந்த முன்னுரையை எழுதுவதற்காக அவரு டைய தொகுப்புகளை ஒரு சேர வாசித்த போது மலைப்பு ஏற்பட்டது .கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த பூமியில் ,இந்த நாட்டில் ,இந்த தமிழ் மண்ணில் பொதுவெளியில் நடந்த எல்லாவற்றுக்கும் ஒவ் வொன்றுக்கும் முகம் கொடுத்துப் பாடியிருக்கும் தமிழின் ஒரே கவி நவகவிதான் என்கிற மலைப்பும்வியப்பும் …… ரூப்கன்வரிலிருந்து இடுவாய் ரத்தினசாமி கொலைவரை, பாபர் மசூதி இடிப்பிலிருந்து தொழிற்சங்கங்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வரை, சே குவாராவைப் பாடிய பாடலிலிருந்து கட்சிக்கு மாதமாதம் லெவி தர வற்புறுத்தும் பாடல்வரை என அவர் பாடிக்கொண்டே இருப்பதை  சக படைப்பாளிக்குள்ள பொறாமையுடன் பார்த்தேன்.” என முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை .

“நவகவி எனும் வேப்பமரத்தின் கிளைகளில் உட்கார்ந்து பழந்தின்று வளர்ந்த காக்கை நான்.” என்பதில் பெருமை கொள்ளும் ஏகாதசி 27 தலைப்புகளில் இந்த ஆயிரம் பாடல்களைத் தொகுத்திருப்பது தமிழுக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் செய்துள்ள அருஞ்சேவை .

“ மதுர மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும்/ வருஷம் ஓர் கல்யாணமாம் – தெருமேலே/ மாப்பிள்ளை ஊர்கோலமாம் –எங்க / எதுத்த வீட்டுப் பொண்ணு வயசாகி நாளாச்சி / எப்பதான் கல்யாணமாம் – அவ கண்ணில் / எப்பவும் நீர் கோலமாம்!” – கரிசல் கிருஷ்ணசாமி குரலில் இப்பாடல் வரிகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கக் கேட்டிருக்கிறோம்.

“ இலைகள் அழுத ஒரு மழை இரவு” இந்தப்பாடலுக்கு உருகாதார் யார் ? இன்றும் மாறாத சமூகச் சித்திரமன்றோ அது . “ அழகைப் பாட ஆயிரம் கவியுண்டு / எங்க ஊர் / அழுக்கைப் பாட ஏடெடுத்தேன் நெஞ்சில் / ஆசைமிகக் கொண்டு” என பிரகடனம் செய்த நவகவி அப்படியே வாழ்ந்து காட்டுவதன் சாட்சி இந்நூல் . இவன் பாடல்கள் வெற்று கோஷமோ வெறும் கண்ணீரோ அல்ல ; அதையும் மீறி ஒரு கண்ணீரின் சீற்றம் .கலையின் புதிய பரிணாமம் .


“ திரும்பிய பக்கமெல்லாம் தேசத்தின் காயங்கள் / திருடரின் கைகுலுக்கும் நீதிகள் நியாயங்கள்” என்ற தொகையறாவுடன் தொடங்கும் ‘’முறையீடு’ பாடல் இன்றைய குரூர யதார்த்தத்தை படம்பிடித்துவிட்டு கவித்துவமாய் – நாட்டார் மரபுபோல் கற்பனையில் நீளும் ; இந்த சோகத்தைக் கேட்டால் ‘ பூக்களும் அரும்புகளும் இடம்பெயரும்’ .’ ‘ மலை குலுங்கி அழும்’ ‘ மேகமாய் மாறி கடல் வான்போகும்’ .

“இந்தப் பக்கம் அடுப்பு; /அந்தப் பக்கம் படுக்க/ ஏதுமில்ல தடுப்பு /எப்படி முத்தம் கொடுக்க’ – யோசிச்சுப் பாருங்க நெஞ்சை சுருக்கென்று தைக்கும் . ‘ எருமைப்பட்டியும் எங்க வீடும்’ என்கிற இந்தப் பாடலில் கடைசியில் சொல்லுவார் “இப்படி வீடு கட்ட – நீ / எதுக்கு திட்டமிட்ட? / மானங்கெட்ட மரக்கட்டயா / எங்கள நினைச்சிப்புட்ட” . கருணாநிதியை ஒரு முறை நள்ளிரவில் கைது செய்த போது படுக்கையறையில் நுழையலாமா என சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் அத்துணை பேரும் அறிக்கை விட்டனர். மனித உரிமை பற்றி வகுப்பெடுத்தனர். படுக்கையறை, சமையலறை என்று எல்லாமே ஒற்றை அறையாய் இருக்கும் ஏழையைப் பற்றி அவர்கள் யோசித்ததில்லை . நவகவி யோசித்தார்.பாடினார். அண்மையில் சென்னை வெள்ளத்தின் போது கூவம் கரையோர மக்களை கூண்டோடு பெயர்த்து பெரும்பாக்கத்தில் கொட்டடியில் அடைத்தஜெயலலிதாவின் கருணையை பாராட்டியவர்கள் அந்த எட்டடி குச்சின் அங்கலட்சணத்தை சொன் னாரா ? இந்தப்பாடல் தீர்க்க தரிசனமாய் ஒலிக்கிறது. சென்னையிலும் எருமைப்பட்டி நிலைதான்.

“ உலகம் பிறந்த கதை தெரிந்தவரே / உழவன் பிறந்த கதை தெரியுமா ? / கதையில் உயர்ந்த கதை என்பதனால் / கவிதையில் பாடவந்தேன் விவரமா” என்கிற நவகவி “ அவனே எனது கதாநாயகன்” என்கிறார். உழவின் மேன்மையை உழவரின் வலியை பல பாடல்களில் சொல்லி அறச்சீற்றம் கொள்கிறார் .

“ மாடு தீண்டலாம் உங்களை ஆடு தீண்டலாம் நாங்க / மனுஷன் மட்டும் தீண்டக் கூடாதா ?” என எரிஈட்டி வீசும் கவிஞரிவர் . “ வேத கால பிராமணர் வீட்டுக்கறி / ரிஷிபத்தினி சமைச்ச மாட்டுக்கறி /சாப்பிடக் கூடாதாம் எப்படிச் சரி / சனாதனிகள் மூஞ்சியில பார் அடுப்புக்கரி” இப்படி இவர் பாடாத பொருள் ஏது ?

“ மனிதன் இருக்கும் இடமே அழகின் வாழிடம்! / மனிதன் இல்லா இடமோ வெறுமை பாழிடம்! ” என்பது கவிஞரின் முடிபு ; பாடல் நெடுக அதன் புன்னகை விரிப்பு .
காதலையும் உழைப்பையும் போற்றுவதே மார்க்சியம் . மார்க்சியத்தில் தோய்ந்த நவகவி போற் றாமல் இருப்பாரோ ? காதலைப் பாடும் கவிஞரின் வார்த்தைகளில் மண்ணின் வாசமும் மனசின் நேசமும் ஒட்டிக்கிடக்கிறது . “கரிசக் காட்டுச் செழுமையாட்டம் / கன்னம் தெரிந்தது – அவள் / விதைத்த சோளம் சிரிப்பில் வந்து / விந்தை புரிந்தது / அது – நாணல் போல குனிந்து குழையாத காதல் / மூங்கில் போல நிமிர்ந்து வளர்கின்ற காதல்.” அடடா ! இதைவிடவா இலக்கிய நயம் சொட்டணும் .

நீங்கள் சந்திக்கிற – பேசுகிற – எழுதுகிற ஒவ்வொரு பிரச்சனையைப் பற்றியும் நெக்குருகி பாடியிருக்கிறார் நவகவி . நீங்கள் அதனை உங்கள் பேச்சில் எழுத்தில் கலந்து தந்தால் மக்கள் இதயத்தை ஊடுருவுமே ! ஏன் செய்யக் கூடாது ? ; இவரது இலக்கியம் புத்தக அலமாரியில் அழகு பார்க்க அல்ல ; உங்கள் பரப்புரைக்கு அழகும் ஆழமும் சேர்க்க என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது :தொடர்ந்து விடாது பயன்படுத்தினாலே படைப்பின் நோக்கம் நிறைவேறும்.

சிறுகதை எழுத்தாளர்களே ! குட்டிக் கதை சொல்லிகளே ! வாழ்வின் நாட்டின் நீள அகலங்களை ஆழங்களை காயங்களை படைப்பாக்குங்கள்! நவகவி 1000 போல் அவையும் எம் கைவாளகும் ! இதைவிட பெருவிருது உமக்கு வேறேது ?


நவகவி 1000 பாடல்கள்,ஆசிரியர் : கவிஞர் நவகவி,தொகுப்பு : ஏகாதசி,வெளியீடு : பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை,சென்னை- 600 018.பக் :1072 , விலை : ரூ .745.

நன்றி : தீக்கதிர் . புத்தகமேசை , 07-2016.


0 comments :

Post a Comment