நாத்திகம் இங்கே வேர் பிடிக்கவில்லையா?
சு.பொ.அகத்தியலிங்கம்.
சோஷலிசம், கம்யூனிசம்
என்றெல்லாம் புரியாத வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை
என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதா?அந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான்
விளிக்க வேண்டுமோ?
இந்தியாவின் -
தமிழகத்தின் தத்துவ மரபாக உலகே வியந்து பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே?
சார்வாகன் முதல் பெரியார் வரை போராடியும் இம்மண்ணில் நாத்திகம்
வேர்பிடிக்கவில்லையே ஏன் ?
மாற்றுக் கருத்துகள் கூறுவோரைப் பார்க்க மாட்டேன் என்று கண்களையும்,
மாற்றுக் கருத்துகளைக் கேட்க மாட்டேன் என்று காதுகளையும், மாற்றுக் கருத்துகள்
பற்றிப் பேச மாட்டேன் என்று வாயையும் மூடிக்கொள்வோரை விட, இப்படி விவாதிக்க
வருவோர் சிந்தனைகள் வளம் பெற உதவுகிறவர்களே. ஆகவே, அவர்களிடமிருந்து ஒரே விதமான
கேள்விகள் வரினும் விளக்கமளிப்பது மார்க்சியர்களின் கடமையே.
சோஷலிசம் , கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத
வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ
பயன்படுத்தலாகாதா?அந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க
வேண்டுமோ?
சுற்றிச் சுற்றி இது ஒரு அந்நிய தத்துவம் என்று கோடு போட்டு, இந்த மண்ணில்
இது முளைக்காது எனச் சொல்வது இந்தத் தத்துவத்தின் எதிரிகளுடைய ஒரு உத்தி. அது
இருக்கட்டும், நம் தமிழ் நாட்டில் புரட்சி, அம்மா, மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட பல
சொற்கள் படும்பாட்டைப் பார்த்தபின்னும் இப்படி ஒரு கேள்வியா ? கம்ப்யூட்டர், லேப்
டாப் என எண்ணற்ற கருவிகளின் பெயர் எந்த மொழியில் என்பது மட்டுமா பிரச்சனை ?
பெயர்ச் சொல்களை அப்படியே பயன்படுத்தலில் பிழை என்ன? எந்தச் சொல்லால் விளிப்பது
என்பதற்கு முன்னால் அவற்றின் உட்பொருளை அறிவது அவசியமல்லவா ?
முதலாளித்துவம் மூர்க்க லாபெவெறியோடு நிலம் தொழிற்சாலைகள், சுரங்கங்கள்
போன்றவற்றை சிலரிடம் குவித்து ஏகபோகமாக்குகிறது. அவர்களின் சொத்தைப் பாதுகாக்க
அரசு இயந்திரம் முழுதாய் முடுக்கி விடப்படுகிறது . உழைப்பாளி மக்கள் மேல் ஒடுக்கு
முறை ஏவப்படுகிறது . இதற்கு துணையான கருத்தோட்டமும் ஒழுக்க விதிகளும் சமூகச் சட்ட
மாக்கப்படுகிறது. கேள்வி கேட்போரும் எதிர்ப்போரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்.
விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சமூகத்தின் மொத்த செல்வத்தின் பெரும் பகுதி
குவிய; பெரும்பாலான மக்கள் வறுமைப் படுகுழியில் தள்ளப்படுகின்றனர். இருப்பவர்
இல்லாதவர் இடைவெளி பெருகுகிறது. வறுமையும் வேலையின்மையும் வாட்டி வறுக்கிறது.
போரும் மோதலும் தொடர்கிறது .
இந்த முதலாளித்துவ சமுதாயத்துக்கு மாற்றாக சோஷலிசம் முன் வைக்கப்படுகிறது.
இங்கு உற்பத்திக் கருவிகளான தொழிற்சாலை சுரங்கம் முதலியன அரசுக்குரியதாகிறது.
லாபவெறிக்கு கடிவாளம் போடப்படுகிறது. நிலக் குவியல் உடைக்கப்பட்டு பரவலாக்கப்
படுகிறது. உணவும் உறைவிடமும் வேலையும் கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும்
உத்திரவாதப்படுத்தப்படுகிறது.ஏழை பணக்காரன் இடைவெளி ஒழிக்கப்படுகிறது; மாறாக
சக்திக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம் நடைமுறைக்கு வருகிறது. இங்கு அரசு
என்ற அடக்குமுறைக் கருவி தொடரும்; ஆனால் முன்பு முதலாளிகள் நலன் காக்க
உழைப்பாளிகளை ஒடுக்கியதற்கு மாறாக உழைப்பாளிகள் நலன் பேண முதலாளிகளை அடக்கும்.
உலகப் போருக்கு அல்ல உலக சமாதானத்துக்கே முன்னுரிமை. இன்னும் சொல்லலாம்.
இடம் கருதி இதோடு நிறுத்துகிறோம். இவைவெல்லாம் ஈயடிச்சான் காப்பியாக எல்லா
நாட்டிலும் ஒரே மாதிரியாக அமையாது. அமைக்கவும் இயலாது. அந்தந்த மண்ணிற்கேற்ப
ஆங்காங்குள்ள சமூகச் சூழல், சமூகத் தேவை, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அக, புற
சூழல் இவையொட்டி நாட்டுக்கு நாடு கூடுதலாகவோ குறைவாகவோ அமலாகும். இதனைக்
குறிக்கும் சரியான சொல் சோஷலிசம் என்பதே. இதே உணர்வோடு சமதர்மம் என்ற சொல்லைச்
சொன்னாலும் அட்டியில்லை.
மாறாக கம்யூனிசம் என்பது இதனினும் உயர்ந்த கட்டம். இன்னும் எங்கும்
சோதிக்கப்படவில்லை. கம்யூனிச சமுதாயத்தில் தனிநபர் சொத்துரிமை முற்றாக
ஒழிக்கப்பட்டிருக்கும். எல்லோருக்கும் எல்லாம் பொதுவாக இருக்கும். தன் சக்திக்கு
ஏற்ப ஒவ்வொருவரும் உழைப்பர். அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வர். இங்கே
அடிமையும் கிடையாது எஜமானனும் கிடையாது. சுரண்டுபவரும் இருக்கமாட்டார்.
சுரண்டப்படு வோரும் இருக்கமாட்டார். ஒடுக்குவோரும் இருக்கமாட்டார்
ஒடுக்கப்பட்டோரும் இருக்கமாட்டார். உடையோரும் இல்லாதோரும் இல்லாத - ஒவ்வொருவர்
சுதந்திரத்தையும் ஒவ்வொருவரும் மதிக்கிற =- அரசு என்கிற அடக்குமுறை கருவியே
உலர்ந்து உதிர்ந்து போகிற ஒரு பொன்னுலகம் அது. அந்த லட்சிய யுகத்துக்கு கம்யூனிஸம்
என்று பெயர். இதனை பொதுவுடைமை என விளிக்க விரும்பினும் இதே உணர்வோடு விளிப்பின்
நமக்கென்ன கசக்கவா செய்யும்?
“தனிநபராட்சி, அரசியல் சட்டரீதியான மன்னராட்சி, குடியாட்சி ஆகியவை வர்க்கப்
போராட்டத்தின் பல்வேறு வடிவங்களே; இந்த வடிவங்களில் ஒவ்வொன்றும் அதன் வர்க்க
உள்ளடக்கத்தின் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் ஊடே கடந்து செல்கிறது என்று
வரலாற்றின் இயக்கவியலில் உள்ளது.ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கான இடை
மாற்றம் தன்னளவில், புதிய புறத்தோற்றத்தின் கீழ் உள்ள முந்தைய சுரண்டும்
வர்க்கத்தை ஒழிப்பதில்லை,” என்பார் லெனின்.
ஆம். உண்மை அதுவே. வரலாற்றில் முதல் முறையாக சுரண்டும் வர்க்கத்தைக் கீழே
தள்ளி உழைக்கும் வர்க்கத்தை ஆட்சிக் கட்டிலில் உடகார வைத்தது சோஷலிசப் புரட்சியே.
இதுதான் அதன் உள்ளடக்கத்திலேயே மிக முக்கியமானது. வர்க்க வேறுபாட்டை சோஷலிசம்
முற்றாக ஒழித்துவிடாது, ஆயின் உழைக்கும் வர்க்க மேலாண்மையை நிறுவும். சோஷலிச
சமுதாயத்தின் முக்கிய மரபணு இதுவே. இதனால்தான் ஆயிரம் ஆண்டுகளாய் அடக்கியும்
சுரண்டியும் ஆளும் வர்க்கமாய் இருந்த சுரண்டும் வர்க்கம் தன் வீழ்ச்சியை இழப்பை
தாங்கமுடியாமல் வஞ்சகம், சதி, கலகம் இவற்றின் மூலம் சோஷலிச சமூகத்தை அழித்தொழிக்க
முயல்கிறது. சோவியயூனியன் உள்ளிட்ட சில இடங்களில் வெற்றியும் கண்டிருக்கிறது.
எனினும் சோஷலிசத்தின் மீதான அவதூறுகளையும் தாக்குதலையும் முதலாளித்துவம் தொடரவே
செய்கிறது.
கம்யூனிச சமுதாயமோ வர்க்க பகைமையே இல்லாத - வர்க்கங்களையே இல்லாமல்
செய்துவிடும் புதிய சமூகம். அனைவரும் அனைத்திலும் எல்லாவிதத்திலும் சமம்.
வறுமையைப் பங்கு போடும் சமூகம் அல்ல. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி - நவீன
தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றால் பெருகும் வளத்தினை எல்லொரும் தேவைக்கு ஏற்ப
துய்க்கவும் - அதற்காக தன் சக்திக் கேற்ப உழைப்பை நல்கவுமான ஒரு புதுயுகம் .
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றறியேன்” என்கிற கனவு
அப்போதே மெய்ப்படும். அந்தப் பொன்னுலகம் நம் கனவாகவும் லட்சியமாகவும் மட்டுமே
இருப்பினும், எதிர்காலச் சந்ததியினர் வசப்படச் செய்வர் என்கிற சமூக அறிவியல்
நம்பிக்கையைப் பிரகடனப்படுத்துவோம்!
மேலும் அறிய , ஆர். பார்த்தசாரதி எழுதிய “மார்க்சியம்- எதிர்காலம்” உட்பட
ஏராளமான நூல்கள் நம்முன் குவிந்து கிடக்கின்றன.சரி! இப்போது சோசலிசம்,
கம்யூனிசம் எனும் வார்த்தைகளை நீங்கள் ஏற்பதும் மாற்றுவதும் உங்கள் கையில்.
அதே சமயம் மார்க்சியம் ஒரு மண்ணுக்கோ, ஒரு இனத்துக்கோ உரிய தத்துவம் அல்ல; உலகம்
முழுமைக்குமான சமூக விஞ்ஞானம். மின்சாரமும் மார்க்சியமும் இன்றி உலகில் மெய்யான
விடியல் கிடையவே கிடையாது .
இந்தியாவின் - தமிழகத்தின் தத்துவ மரபாக உலகே வியந்து
பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே? சார்வாகன் முதல் பெரியார் வரை
போராடியும் இம்மண்ணில் நாத்திகம் வேர்பிடிக்கவில்லையே ஏன் ?
ஒரு நாட்டைப் பற்றிய சித்திரம் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தால்தான்
உருவாக்கப்படும் . இங்குள்ள ஆளும் வர்க்கமும் இங்குள்ள பார்ப்பனிய ஆதிக்க
சக்திகளும் உருவாக்கிய மாயைகள் பல. இந்தியர்கள் எல்லோருமே புலால் மறுப்பாளர்கள்,
மரக்கறி உணவுப் பழக்கம் மட்டுமே உள்ளவர்கள் என்றே வெளிநாட்டுக்கு அறிமுகம்
செய்யப்படுகிறது. உண்மை என்ன? இங்கு மிகச் சிறுசதவீதத்தினரே புலால் மறுப்பாளர்.
பெரும்பகுதியினர் புலால் உண்போரே. அது போல் கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமுமே
இந்தியக் கலை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டையும் விரும்புவோர் இங்கு
மிகச் சொற்பமே. பெரும்பாலோர் பல்வேறு நாட்டார் கலைகளையே விரும்புகின்றனர். இதுபோல்
இந்தியாவைப் பற்றி ஆளும் வர்க்கம் கட்டமைத்திருக்கும் பொய்மைகள் அநேகம். அதில்
ஒன்றுதான் இந்தியா ஆன்மீக நாடென்பதும். இந்தியாவை உலகமே ஆன்மீக பூமியாகப்
பார்க்கிறது எனத் தொடர்ந்து நம் காதில் பூ சுற்றப்படுகிறது. இந்தியா மிகவும் பின்
தங்கிய நாடு. குறைந்த கூலிக்கு கொள்ளையடிக்கலாம். கனி வளங்கள் ஏராளம். விருப்பம்
போல் வேட்டையாடலாம். இங்கு மூட நம்பிக்கைகள் அர்த்தமற்ற சடங்குகள் அதிகம்...
இப்படித்தான் உலகம் நம்மை புரிந்து வைத்திருக்கிறது. இதனை மாற்றுவதே முற்போக்காளர்
கடமை.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நா. வானமாமலை, அருணன், தேவ. பேரின்பன் உள்ளிட்ட
பலர் எழுதிய நூல்கள் விரிவாக நம் தத்துவ வேர் ஏதோ ஒரு வகையில் கடவுள் மறுப்பு
சிந்தனை என்பதை அடையாளம் காட்டுகின்றன. ஆழமாக நிறுவுகின்றன.நா. வானமாமலை இப்படித்
தொகுத்துக் கூறுவார்:
1. இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை.
மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன.
2. நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சியம்தான் நிவர்த்தி
செய்து அவர்களது நாத்திக வாதத்தை தருக்க நிலையில் இருந்து , கீழே கொணர்ந்து
வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்வைச் சுட்டிக் காட்டுகிறது.
3. இன்று, மார்க்சியம் உலகெங்கும் பரவியுள்ள நிலையிலும் கூட, நமது பண்டைய
நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்கவாதங்களாகவே உள்ளன.
அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் .
“ இந்திய நாத்திகவாதிகள் மிகப்பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதன்
இயற்கையை அறிந்து அதனை மாற்றும் அறிவியல் முயற்சிகள் துவக்க நிலையிலேதான் இருந்தன.
எனவே அறிவியலின் இயற்கை விதிகளைப் பயன்படுத்தித் தங்கள் நாத்திகவாதங்களை உருவாக்க
இயலவில்லை. பிற்கால பிரெஞ்சு நாத்திகவாதிகளுக்கு அறிவியல் அறிவு கைகொடுத்தது.
அவர்களுடைய வாதங்கள் செல் அமைப்பு , டார்வினது பரிணாமக் கோட்பாடு , புதிய
அணுக்கொள்கை , வேதியல் மாறுதல்கள் குறித்த அறிவு இவற்றையெல்லாம் சான்றுகளாகக்
கொண்டிருந்தன. ஆயினும் விஞ்ஞான சோஷலிசக் கொள்கையின் மூலவர்களுக்கு , பிற்கால
நாத்திகர்களின் நிலை கூட திருப்தி அளிக்கவில்லை .அவர்கள் இயக்க இயல்
பொருள்முதல்வாதம் , வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகிய முரணற்ற தத்துவச் சிந்தனையை
உருவாக்கி பொருள் இயக்கம் பற்றியும், சமூக இயக்கம் பற்றியும் முழுமையான விளக்கம்
கொடுத்த பின்னர்தான், நாத்திகம் சிந்தனைப் போக்கில் அதற்குரிய ஸ்தானத்தில்
அமர்த்தப்பட்டது.”
மார்க்சிய தத்துவம் குறித்து இக்கேள்வி பதில் தொடரில் முன்பே தொடர்ச்சியாக
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பெரியார் சாதி மறுப்பில் தொடங்கி - சாதியைக்
காப்பாற்றும் மதம் - மதத்தை போதிக்கும் புராணாங்கள் சடங்குகள் - இவற்றின்
அடிப்படையான கடவுள் மறுப்புக்கு வந்து சேர்ந்தார். பின் பிசிறில்லாமல் கடவுள்
மறுப்பில், மத மறுப்பில் உறுதி காட்டினார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோ
அறிவியல் துணை கொண்டும், மார்க்சிய அணுகுமுறையோடும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை
மேற்கொண்டார்.
கருத்து மோதல்கள் இருப்பினும் தன் ‘குடியரசு’ ஏட்டில் சிங்காரவேலர்
தொடர்ந்து எழுத பெரியார் இடம் கொடுத்தார்.சார்வாகர் தொடங்கி சிங்காரவேலர்,
பெரியார் எனத் தொடரும் இந்திய - தமிழக பகுத்தறிவாளர் படை இன்னும் வீரியமாகவே
இருக்கிறது . பெரியார் என்கிற பெயரே இந்துத்துவ வெறியர்களுக்கு அலர்ஜியாக -
ஒவ்வாமையாக இருப்பது இதனால்தான். இப்படை தோற்காது, மேலும் மேலும் முன்னேறவே
செய்யும்.
(அடுத்த இதழில் இத்தொடர் நிறைவடையும்)
வண்ணக்கதிர் , தீக்கதிர் , 07 – 04-2016
0 comments :
Post a Comment