இதய நோயை மதவழிபாடு போக்குமா ?

Posted by அகத்தீ Labels:

இதய நோயை மதவழிபாடு போக்குமா ?

சு.பொ.அகத்தியலிங்கம் .


 "நம்பிக்கையூட்டும் மதம் " என்ற தலைப்பில் ஜெ. மரிய அந்தோனி என்பவர் தினமணியில் [ 11-09-2014] ஒரு கட்டுரை எழுதியுள்ளார் . அதில் ஒரு பகுதி மதவெறிக்கு எதிராகப் பேசுகிறது . நன்று . ஆனால் மதநம்பிக்கையை நியாயப் படுத்த  போலியான அறிவியல் சுட்டப்பட்டுள்ளது . இது தவறானது . ஆபத்தான பார்வை . மதநம்பிக்கை தனிப்பட்ட உரிமை . அதனை யாரும் கேள்விகேட்கவில்லை . ஆனால் தவறான அறிவியல் பார்வையை ஏற்க இயலாது . இக்கட்டுரையை சற்று அலசுவோம்.
 "மார்டின் பபர் என்ற அறிஞர் சொன்னார்: கடவுளின் பெயரால் தொண்டுநிறுவனங்கள் தோன்றியுள்ளன. பிறரன்புச் சேவை மலர்ந்துள்ளது. மக்கள் இயக்கங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. விழிப்புணர்வு விதைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆன்மிக தாகம் தூண்டப் பட்டிருக்கிறது.ஆனால், அதே கடவுளின் பெயரால் மனிதர்கள் மரணத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். புரட்சியாளர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்ப்பாளர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். ரத்தம் பூமியைக் குளிப்பாட்டியிருக்கிறது. இயற்கை சின்னாபின்னப் படுத்தப் பட்டிருக்கிறது.இவ்வாறு ஒரு பக்கம் மதத்தால் வரலாறு வாழ்ந்திருக்கிறது. உலகம் உயர்ந்திருக்கிறது. பூமி புத்துணர்வு அடைந்திருக்கிறது. அதே மதத்தால், வரலாறு வாடியுமிருக்கிறது. உலகம் ஊனமடைந்திருக்கிறது. பூமி புண்படவும் செய்திருக்கிறது."
இவ்வாறு மரிய அந்தோனி வாதிடும் போது மதப்பகைமை , மதவெறி கூடாது ; மதம் ஆக்கபூர்வமாகச் செயலாற்ற வேண்டும் எனக் கூறுவது சரிதான் . மதம் குறித்து எமக்கு மாற்றுப் பார்வை இருப்பினும் ; மதவெறிக்கு எதிரான ஜனநாயக் குரல் என்கிற முறையில் இதனை வரவேற்கலாம் . வரவேற்போம்.

ஆனால் அடுத்து சொல்லப்பட்டிருப்பவை அறிவியலை தவறாகப் பயன்படுத்துவதாகும் . " ஆலய வழிபாடுகளில் பங்கேற்று, அடிக்கடி செபித்து, தங்களுடைய மத புத்தங்களை வாசித்து தியானிக்கின்றவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைபாடுகள் அதிகம் இல்லாததைக் கண்டுபிடித்தார்.அதேபோல ராபர்ட் ஹம்மர் (ஈழ். தர்க்ஷங்ழ்ற் ஏன்ம்ம்ங்ழ்) என்பவர் தனது குழுவினரோடு இணைந்து, ஏறத்தாழ 21,000 அமெரிக்கர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.அவரது ஆய்வு முடிவுகளின் படி மதச் சடங்குகளில் பங்கேற்காதவர்கள், அவற்றில் பங்கேற்றவர்களைவிட விரைவில் இறப்பதற்கான இரண்டு மடங்கு சாத்தியக் கூறுகளைக் கொண்டிருந்தனராம். கடவுள்மீது கொள்ளும் நம்பிக்கை ஒரு மனிதரது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதையும் கண்டுபிடித்தார்."

இதே செய்தி சமீபத்தில் தினத்தந்தி ஆன்மீக மலரில் தொடர் எழுதுபவர் இந்துமதத்தை நியாயப்படுத்தவும் பயன் படுத்தியிருந்தார் . ஆக கிறுத்துவமோ . இந்துமதமோ  தங்கள் மத நம்பிக்கையை பிரச்சாரம் செய்ய அறிவியலை தேடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதே அவர்களின் தோல்வி துவங்கிவிட்டதின் குறியீடாகப் பார்க்கலாம் . விஷயதுக்கு வருவோம் . மேலே உள்ள செய்தியை பொய்யென நிரூபிக்க நீங்கள் பெரும் ஆராய்ச்சியெல்லாம் தேவை இல்லை . சாதாரண பகுத்தாய்வே  போதும் .

தமிழ்நாட்டிலும் சரி - இந்தியா முழுவதும் சரி - உலகெங்கும் சரி மத நம்ப்பிக்கையாளர்களே அதிகம் .  இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு 99 பேர் மத நம்பிக்கை உள்ளவர்களே ; வழிபாட்டில் ஈடுபடுகிறவர்களே ! நோய் தொற்றிலும் இதே நிலைதான் . உங்கள் வீட்டில் நோயுற்றவர்கள் , மாரடைப்பால் உயிநீத்தவர்கள் எல்லோரும்  மதநம்பிக்கையுள்ளவர்கள்தானே ! இது உங்கள் கைப்புண் . இதனையே இல்லையென சொல்பவர் ஆராய்ச்சியும் முடிவும் நிச்சயம் போலியானதே ! சந்தேகமில்லை. இன்னொரு அபத்த வாதத்தை மரிய அந்தோனி முன்வைக்கிறார் .

  "இதேபோன்ற ஆய்வு இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் நடத்தப்பட்டது.கிறித்தவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. கிறித்தவர்கள் மேரிமாதா உருவப்படத்தையும், மற்றவர்கள் இன்னொரு சாதாரண பெண்ணின் ஓவியத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.அப்போது அவர்கள் உடம்பிற்குள் இலேசான மின்சாரம் செலுத்தப்பட்டு அதிர்ச்சியளிக்கப்பட்டது. அரைமணி நேரத்திற்குள் நான்குமுறை அவர்கள் உடம்புக்குள் மின்சாரம் செலுத்தப்பட்டு, அதனால் அவர்கள் மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.ஆய்வு முடிவுகளின்படி, மேரிமாதாவின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கிறித்தவர்களில் ஏற்பட்ட பாதிப்பு மிகக் குறைவாகவும், மற்ற ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவும் இருந்ததாம்.இந்த பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட கிறித்தவர்கள் "மேரி மாதாவின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் கடவுளால் பாதுகாக்கப்படுகிறோம் என்ற உணர்வைப் பெற்றோம். அது ஆழமான அமைதியையும் மனநிம்மதியையும் கொடுத்தது' என்று குறிப்பிட்டார்களாம்."


மேலே அவர் மேற்கோள்காட்டியுள்ள செய்தி முழுமையான மதப்பிரச்சாரம் என்பது சொல்லாமலே விளங்கும் . உயிர்பயத்தில் தப்பிக்கவோ அல்லது உதவி செய்யவோ விரைந்து ஓடும்போது காலில் முள் குத்துவதோ அல்லது கல்தடுக்கி ரத்தம் வருவதோகூட உறைக்காது ; காரணம் அப்போது எண்ணம் முழுவதும் ஒரே நோக்கில் குவிக்கப் பட்டிருப்பதால் தற்காலிகமாக உடலின் வேறு உணர்வு நரம்புகளின் தகவலை மூளை ஏற்காமலிருக்கலாம் . தீ மிதிப்பதற்கு பக்தி தேவை இல்லை . பல நாத்திகர்கள் தீ மிதித்து நிரூபித்துள்ளனர் . அது போன்ற ஒரு நிலையே மேலே சொல்லப்பட்டிருப்பது .

இன்னொரு வகையிலும் யோசித்துப் பாருங்கள் . உண்மையை கண்டறியும் சோதனை என்ற பெயரில் நடக்கும் சோதனைகளில் திடீரென குற்றம் செய்தவர்கள் மாட்டிக்கொள்வார்கள் . ஆனால் தொழில்முறை கொலைகாரர்கள் சிக்குவதில்லை . ஏன் தெரியுமா ? பயத்தில் பதற்றத்தில் இதயத்துடிப்பு சீரற்றுப் போவதும் ; இரத்த ஓட்டம் சீரற்றுப் போவதும் நடக்கும் இதனைக் கொண்டே குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர் . ஆனால் கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடிக்கும் பலே கில்லாடிகளிடம் இந்த இயந்திரம் தோற்றுப் போகும் . ஏன் பஸ்ஸ்லிலோ ரயிலிலோ முண்டியடித்து செல்லும் போது நம் கவனம் முன் செல்வதிலேயே இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நம் பர்ஸையோ நகையையோ களவாடுவதில்லையா அது போலத்தான் இதுவும் .

இப்படி பல கூறமுடியும் ஏதோ ஒன்றில் கவனம் குவியும் போது இன்னொன்றை கவனிக்காமல் விடுவதும் ; அல்லது உறைக்காமல் போவதும் இயல்பே . இதற்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை . .உடற்கூறியலை  நன்கு அறிந்த யாரும்  இதனப் புரிந்து கொள்ளலாம் . பயன் படுத்தலாம் . இந்த அறிவியல் உண்மை அறியாத அப்பிராணியை கடவுள் அருளென ஏமாற்றலாம் . இவை மத நம்பிக்கையை நியாயப்படுத்த போதுமானதல்ல . அறியியலை சரியாக உபயோகிப்பின் அது மத நம்பிக்கையைத் தகர்க்கவே செய்யும் .


 "கடவுள் மனிதனைக் காப்பாற்றுகிறார் என்று சொல்வதுதான் மதம். ஆனால், இப்படிப்பட்ட மனிதர்களோ மதத்தின் பெயரால் கடவுளையே காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். அதுதான் பிரச்சினையே." எனக் கடைசியாகச் சொல்கிறார் மரிய அந்தோனி . ஆமய்யா ! எதற்காக அறிவியலைத் திரித்து உங்கள் மத நம்பிக்கைக்கு  - உங்கள் கடவுளுக்கு முட்டுக்கொடுக்க முயல்கிறீர்கள் என்பதே எமது கேள்வி.

முதலில் மதமும் அறிவியலும் எதிர் எதிர் பாதையில் பயணிப்பவை என்பதை உணரவேண்டும் . மதநம்பிக்கை தனிமனித உரிமை . அதனை மதிக்கிறோம் . ஆனால் அருள்கூர்ந்து அறிவியலை உங்கள் பொய்மைக்கு சாதகமாக திரிக்க முயலாதீர் என்பதே எமது வேண்டுகோள். ஏனெனில் அறிவியலின் மகத்தான சாதனைகளை கண்டும் கேட்டும் அனுபவித்தும் வருகிறவர்கள் நாம் . அதனை உங்களின் மலிவான மதப்பிரச்சாரத்திற்காகச் சிறுமைப் படுத்தாதீர்கள் !

0 comments :

Post a Comment