சும்மா கிடந்த சொல்லை எடுத்து -20

Posted by அகத்தீ Labels:


சும்மா கிடந்த சொல்லை எடுத்து -20


மனிதர் நிலை தெரிஞ்சுக்கோ ...

சு.பொ.அகத்தியலிங்கம்

“ எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? /பணத்தை எங்கே தேடுவேன்? / உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்? / உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்? / அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்? / எங்கே தேடுவேன்? / ..... /கருப்பு மார்க் கெட்டில் கலங்குகின்றாயோ? / கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? / கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ? /… / அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை / எங்கே தேடுவேன் பணத்தை /எங்கே தேடுவேன்? /....பூமிக்குள் புகுந்து புதையலானாயோ? /பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ? /சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?/ சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? /..எங்கே தேடு வேன்? பணத்தை எங்கே தேடுவேன்? / திருப்பதி உண்டிய லில் சேர்ந்து விட்டாயோ? / திருவண்ணாமலை குகை புகுந் தாயோ? / இரும்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ? / இரக்க முள்ளவரிடம் இருக்காத பணந்தனை / எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்?/தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ? / தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ? / சுவற் றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ? / சூடஞ் சாம்பிராணி யாய்ப் புகைந்து போனாயோ? / எங்கேதேடுவேன் எங்கே தேடு வேன்? / பணத்தை எங்கே தேடுவேன்?/ உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே “ “பணம் ” (1952) திரைப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் தானே எழுதிப் பாடிய பாடல் இது .

கல்வி , மருத்துவ வியபாரி களிடம் சேர்ந்து விட்டாயோ ? நிலக் கொள்ளையர் மணல் கொள்ளையர்களிடம் சுருண்டு விட்டாயோ ! சுவிஸ் பேங்கில் புகுந்து விட்டாயோ என சேர்த்தால் இன்று இப்பாடல் முழுமையாகி விடுமே!அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் உடுமலை நாராயணகவி எழுதினார்.”தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் / காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன்செல்லாதடி / ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் / காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே “ இதே படத்தில் வரும் “ முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே! காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே ! கட்டி அழும் போதும் தாண்டவக் கோனே ! / பணப்பெட்டி மீது கண் வையடா தாண்டவக்கோனே ” என்ற வரிகளை உச்சரிக்காத உதடுகளே இருக்கமுடியாது . “பாண்டித்தேவன்” ( 1958) திரைப்படத்தில் சூரியனை பார்த்துப் பாடுவதுபோல் ஒரு பாடல் பட்டுக்கோட்டை எழுதி யிருப்பார் . “ வா வா சூரியனே / மனிதர் நிலை தெரிஞ்சுக்கோ / வஞ்சகர் அதிகம் உண்டு / நோக்கம் பார்த்து நடந்துக்கோ ” சூரியனை இப்படி ஏன் எச்சரித்தார் தெரியுமா ? அடுத்து ஒரு சரணத்தில் விடை சொல்லுவார் , “ உலகத்தை நினைச்சாலே/ உடம்பு நடுங்குது / ஊரு கெட்ட கேட்டைப் பார்த்து / நீதி பதுங் குது/ உருவங்கள் மனிதர்கள் போல / ஓடி அலையுது / உள்ளத் திலே எண்ணமெல்லாம் / நஞ்சா விளையுது ” இப்படி சமூகச் சூழல் இருப்பதைக் கண்டு நொந்தவர்.மனம் வெந்தவர். மாற்று வர மார்க்கம் சொன்னவர் பட்டுக்கோட்டை.

திரைப்படத்துறையில் இலட்சிய நோக்கோடு பாடல்கள் புனைந்த காலமொன்றிருந்தது. பட்டுக்கோட்டை வாழ்ந்த காலத்தும் அதற்கு முன்பும் எனப்பார்த்தால் மதுரகவி பாஸ்கர தாஸ் , சந்தானகிருஷ்ணநாயுடு, பாபநாசம்சிவன் , பாபநாசம் ராஜகோபாலய்யர் , உடுமலை நாராயணகவி , ச.து.சு. யோகி , அ.மருதகாசி , கண்ணதாசன் எனப் பலர் திரையுலகில் கொடி கட்டிப்பறந்தனர் . பின்னர் வாலி, புலமைப்பித்தன் , கவி கா மு ஷெரிப், வைரமுத்து, ந. முத்துக்குமார் என தொடருது படை வரிசை. படத்தின் தேவை கருதி அரசியல் பாடல்களை கிட்டத்தட்ட எல்லோரும் எழுதியுள்ளனர். ஆயினும் பட்டுக் கோட்டையின் தனிச் சிறப்பென்ன ?

“மதுரகவி பாஸ்கரதாஸ் தேசியக்கோட்டைக்கு அதிபதி யாய்த் திகழ்ந்தார் .உடுமலை நாராயணகவி சுயமரியாதைக் கோட்டைக்கு அதிபதியாய்த் திகழ்ந்தார் . பட்டுக்கோட்டை ஒரு வரே இன்றுவரை பொதுவுடைமைக் கோட்டைக்கு அதிப தியாய்த் திகழ்கிறார் ” என்ற கே.ஜீவபாரதியின் கணிப்பு திரைத் துறையைப் பொறுத்தவரை மிகச்சரியே ! திரைத்துறைக்கு வெளியே பாடல்களைப் புனைந்த திருமூர்த்தி , பாவலர் வரதரா சன் ,தமிழ் ஒளி இன்று நம்மிடையே வாழும் இன்குலாப் , தணிகைச்செல் வன் , பரிணாமன் , நவகவி இன்னும் பலர் பட்டுக்கோட்டையின் தொடர்ச்சியும் நீட்சியுமாய் - அவரவருக்கே உரிய பலம் பலவீனத்தோடு திகழ்கிறார்கள் .பண்பாட்டுப் போரிலும் அரசியல் போரிலும் பாடல்களும் கவிதைகளும் கூர்மையான ஆயுதம் என உணரவேண்டும் . அவர்கள் பாடல்களை எங்கும் உரக்க இசைக்க வேண்டும் . இதனை ஆசையினால் சொல்ல வில்லை அனுபவமும் அதுவே !

“எனது முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றால் ஆனவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது!’’ - 1982-ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வானொலிக்கு அளித்த பேட்டியின்போது, அவரது ஆழ்மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இவை.

அந்த பட்டுக்கோட்டை பொதுவுடைமைப் பிரச்சாரத்தை வலிந்து திணித்தவன் என இன்றும் சில இலக்கிய விமர்சனப் புலிகள் முனகிக்கொண்டிருப்பதுடன் அதனாலேயே அவரது கவித்துவ மேதமையை உரிய அங்கீகரிக்க மறுத்துவருகிறார்கள். ஆனால் மக்கள் அங்கீகாரம் என்றும் பட்டுக்கோட்டைக்கே . எம்ஜிஆரின் மேலே சொன்ன வாக்குமூலம் மட்டுமல்ல ; இன் றும் எம்ஜிஆர் என்கிற ஈர்ப்பு நீடிப்பதன் பின்னால் பட்டுக் கோட்டையின் பாடல் வரிகள் உண்டு .

கவிஞரின் பாடல்களில் பொதுவுடைமை கருத்துகள் இயல்பாய் விழுந்தது எப்படி ? அவரின் நண்பர் பி.ரத்தினம் பிள்ளை ஒரு பேட்டியில் (ஆதாரம் : காலமறிந்து கூவும் சேவல்) கூறுகிறார் , “ அவன் எந்தப் பாட்டு எழுதினாலும் எங்காவது ஒரு இடத்தில் பொதுவுடமக் கருத்தச் சொல்லிடுவான், ‘ இது எப்படியப்பா ஒன்னால முடியுது’ன்னு ஒரு தடவ அவங்கிட்ட கேட்டேன் . அதற்கு அவன் , ‘ அது என்ன அறியாமலே வந்திடுது.அதச் சொல்லாம இருக்க முடியல…’ன்னு சொல்லிச் சிரிச்சான் ”

ஆம், பொதுவுடைமைச் சிந்தனை அவன் இரத்தத் தோடும் நரம்போடும் பின்னிக்கிடந்தது .ஆகவேதான் பக்தி பாடல் எழுத நேர்ந்தபோதும் பாதை மாற வில்லை . மஹேஸ்வரி (1955 ) படத்தில் அம்மனைக் கும்பிடும் பாடல் . “ அறம் காத்த தேவியே! / குலம் காத்த தேவியே நல் / அறிவின் உருவமான ஜோதியே ..” என்றுதான் தொடங்குவான். இதில் எதை அறம் என்கிறான் - எதை அறிவு என்கிறான் - எதைகுலம் என்கிறான் என்பதுதான் முக்கியம் .” துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம் / ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம் ..” என்றும் ; “ மலிந்த கொடுமை நீக்கவே / இம் / மனித வாழ்வில்உயர்வு காணவே “ எனவும் “ ஏழைகளின் வாழ்வில் சுகம் தா” எனவும் தெளிவு படுத்துவான் . அறம் , அறிவு , குலம் அனைத்தும்இவ்வரிகளில் விளக்கமாகும்.

தோழர். எம். மாசிலாமணி பட்டுக்கோட்டை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்தவர் . பட்டுக்கோட்டை யுடன் உரிமையோடு பழகியவர் . அவர் ஒரு பேட்டியில் கூறுவார். “ 1942 முதல் 1953 வரை இந்த மாவட்டத்தில் (ஒன்றாயிருந்த தஞ்சை மாவட்டத்தில்) நடந்த பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு 83 தோழர்கள் இறந்திருக்காங்க . அவர்களைப் பற்றி உழைக்கும் மக்கள் பாடுவதற்கு கும்மி , நாடோடிப் பாட்டு வடிவத்தில் பாட்டுகள் எழுதித் தரும்படி கவிஞரிடம் கூறினேன். அவரும் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறினார் .1957 தேர்தல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலை வர்கள் தோற்றனர் . தோல்விக்கான காரணத்தை கவிஞர் என்னிடம் விவாதித்தார் . தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் நம்முடையகருத்துகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல இந்தத் தேர்தலைப்பயன்படுத்துவது பற்றியும் நமக்கிருக்கிற வாய்ப்பு வசதியில் இவ்வளவுதான் செய்ய முடிஞ்சதுன்னும் சொன்னேன்.“சரி ! சரி ! அடுத்த தேர்தலுக்கு நான் பிரச்சாரத்திற்கு வருகி றேன் டேப் அடிச்சு ஜனங்களைத் திரட்டி , நம்ம தோழர்களை ஜெயிக்க வைக்க முயற்சிக்கிறேன் .” என்றார் .அடுத்த எலெக்ஷன் வந்தது .ஆனால் , மக்கள் கவிஞர் திரும்பி வரமுடியாத இடத்துக்கு சென்றுவிட்டார்.” பட்டுக்கோட்டை நினைத்ததை முடிக்கும் முன்பு செத்துப் போனார். அவரது படைவரிசை அதைத் தொடரவேண்டாமா?

“ கோடிக்கால் பூதமடா தொழிலாளி
கோபத்தின் ரூபமடாநாடி எழுந்தது பார் குவலயம்
நாற்றிசையும் அதிர
தேடிய தேகம்ஒன்றே நடை நெஞ்சு
தீப்பொறிப் பார்வை ஒன்றே !
 சாடிக் குதித்துமுன்னே முன்னேறித்
 தாவியே செல்வதைப் பார் !” என வீறுமிகுகவிதை யாத்தார் ப.ஜீவானந்தம். பட்டுக் கோட்டையும் ஜீவாவைப் போலவே பாட்டாளி இயக்கம் மீதான நம்பிக்கையைப் பிரகடனப் படுத்தியவர். அதனை மேலும் பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 15 - 09 -2014

0 comments :

Post a Comment