சும்மா கிடந்த சொல்லை எடுத்து - – 21
வெஞ்சிறை உடைந்தொழிந்தது…
சு.பொ.அகத்தியலிங்கம்
“ தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்
தனி முறையில் நான் உனக்குப் புதியசொத்து !
அமிழ்தான கவிதை பல அளிக்கவந்தேன்
அவ்வழியில் உனைத் திருத்த ஓடிவந்தேன் !
இமை திறந்து பார் ! விழியை அகலமாக்கு !
என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்
திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்!
சிந்தனைக்கு விருந்தாகும் உண்ணவா நீ ! ”
கவிஞர் தமிழ் ஒளியின் பொருள் பொதிந்த இப்பிரக டனம் பட்டுக்கோட்டைக்கும் அப்படியே பொருந்தும் .
இவ்விரு கவிஞர்களுக்கும் ஒற்றுமை உண்டு . தமிழ் ஒளி 41வயதுவரையே வாழ்ந்தான் . பட்டுக்கோட்டை இருபத் தொன்பது வயதுவரையே வாழ்ந்தான் . இருவரும் பொதுவு டைமை லட்சியத்தை வரித்துக் கொண்டவர்கள் . வீரிய மிக்க கவிதைகள் பல தந்தவராயினும் தமிழ் ஒளி பரந்த வாசகர் பரப்பைச் சென்றடையவில்லை .
காரணம் ஆய் வுக்குரியது . ஆயின் , பட்டுக்கோட்டை வலிமையான திரைத் துறையில் கால்பதித்து நின்றதால் மக்கள் திரளைச் சென்றடைய முடிந்தது . அதுவும் எளிமையும் கவித்துவ மும் சரிவிகிதத்தில் கலந்த பட்டுக்கோட்டையின் பாடல் வடிவம் மக்கள் நெஞ்சைத் தொட்டது .
“ பொங்காத பெருங்கடல் / பொங்கி வந்தது போல் / பொங்குது உள்ளமெல்லாம் / அன்பில் முழக்குதடா / போகாத துன்பமெல்லாம் / போனதே என்றும் / தீராத சண் டைகளும் தீர்ந்ததடா” என “ புதுமைப் பெண் ” (1959) திரைப்படத்தில் பட்டுக்கோட்டை நம்பிக்கை யோடு பிரகடனம் செய்வார் .
அந்தப் பாடலின் இறுதி வரிகளில் மிகத்துல்லியமாகச் சொல்வார். “ கொத்தும் பணக்கழுகு / கொள்ளைப் பெருச்சாளி / எத்திப் பிழைக்கவே / சுத்தும் நரிக்கூட்டம் / ரத்தவெறி கொண்டலையும் / யுத்தப் பெருமுதலை / பித்தம் பிடித் தலையும் பேதக் குரங்குகள் / திட்டம் உடைந்தது / சித்தம் தெளிந்தது / தேசத்தின் மாசற்ற / தீபம் பிறந்தது / ஒற்றுமை மக்களின் / ஒற்றுமை வந்தது / உலகம் விடிந்தது / கலகம் ஒழிந்தது சோர்ந்த / கைகள் உயர்ந்தது ” இந்தப் பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியல் செறிவும் கூர்மையும் தொலைநோக்கும் பொதிந்துள்ளதை விவரிக்காமலே உள் வாங்க முடியும் .
“ ஏனென்று கேட்கவே / ஆளில்லை என்பதாலே / தானென்ற அதிகாரம் / தலைவிரித்து ஆடுதடா / ஊனு ருக ஏழைகளின் / உள்ளமெல்லாம் புண்ணாக / உயி ரோடு கொல்பவனைக் காலம் / உயர்வாய் மதிக்குதடா!” என “ இரத்தினபுரி இளவரசி” (1959) யில் பட்டுக் கோட்டைப் பாடியது இன்று 2014 ல் மத்திய - மாநில ஆட்சிகளை சாட்டையால் அடிப்பதுபோல் சுளீரென உறைக்கிறதே ! அந்தப் பாடலில் பொறுமை ஒரு நாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமென்பார் .
பல மாலை பல இரவு போயினும் அந்த எழுச்சி இன்னும் வரவில்லையே எனும் ஏக்கமும் ; எல்லாம் மாறும் எனும் நம்பிக்கையும் எதிரொலிக்கப் பாடுவார் . திரைப்பட பாடல்களில் மட்டுமல்ல ஜனசக்தியில் அவ்வப்போது எழுதிய கவிதைகளிலும் நாடகங்களுக்கு எழுதிய பாடல்களிலும் இன்னும் துலக்கமாக அறை கூவல் மிகுந்த ஆவேசம் மிகுந்த வரிகளைக் காணலாம். ரஷ்யப் புரட்சியைப் பாடாத கவிஞர்கள் அந்நாளில் அநே கமாக இருக்கமுடியாது .
பாரதி , பாரதிதாசன் போன்றே ரஷ்யப் புரட்சியில் உத்வேகம் பெற்ற பட்டுக்கோட்டை அவர்களை அடியொற்றி அதனைப் பாடாதிருப்பானோ ? “புதிய ஒளி வீசுது பார்” என தலைப்பிட்டு கவிஞர் எழுதிய கவிதையில் தொடக்கமே களைகட்டும் ,
“ புதிய ஒளி வீசுது பார் / இமயம் தாண்டிப் / புன்சிரிப்புக் காட்டு துபார் / இன்பம் அங்கே / கதை புனைந்து கூறவில்லை / கண்ணில் தோன்றும் / காட்சியிவை ரஷ்யாவின் / மக்க ளாட்சி “
நாற்பது வரிக் கவிதை முழுவதையும் மேற்கோள் காட்டுவது சாத்தியமல்ல கடைசி பத்தியைப் பார்ப்போம் .
“ உதிர்த்த கண்ணீர் துடைத்தெழுந்தார் / துணிந்தார் அன்றே / உதித்தது பார் புரட்சியெனும் / உரிமைச் செம்போர் / குதித்தார்கள் மக்களெல்லாம் / குருதிச் செம்போரில் / கொழுந்து விட்டுப் பற்றியது / செந்தீ எங்கும்” இதன் மூலம் இங்கொரு உரிமைச் செம்போரை பட்டுக் கோட்டை கனவு கண்டாரெனில் தவறல்ல .
ஆம் , 1955 ல் “ கண்ணின் மணிகள் “ நாடகத்திற்கு எழுதிய பாடலில் இதன் இன்னொரு முகத்தைக் காண லாம் .
“ கண்ணை இழுக்கும் அழகொன்று கண்டேன் / காவியம் ஓவியம் யாவையும் கண்டேன் / மின்னல் நிகரிடை பெண்களும் ஆண்களும் / வேலை செய்யும் கோலத்துடன் கண்டேன்” அடடா !அழக்குக்கும் புதிய விளக்கம் . உழைப்பை இழிவாய்க் கருதிய மநுவின் பார்வைக்கு எதிர் பார்வை . உழைப்பை அழகென்று கொண்டா டும் பேரானந்தம் . அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் அபாரம் .
. “ வண்ணக் கலையங்கு வாழ்ந்திடக் கண்டேன் / மக்கள் உழைப்பின் உயர்வெனக் கண்டேன் / பொன் னைப் பழிக்கும் கதிர்கள் ஒன்றை ஒன்று / பின்னிப் பின்னி அசைந் தாடிடக் கண்டேன்” இப்படி உழைப்பை கொண்டாடுவதுடன் ஓய்ந்தாரா ? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித் திருப்போரை நிந்தனை செய்வோம் எனப்பாடிய பாரதி யைத்தாண்டி பட்டுக்கோட்டை பயணித்தான் . “ நாடு செழிக்க உழைக்கும் எளியவர் / நாதியின்றி உள்ளம் நைந்திடக் கண்டேன் / நன்றியில்லாத முதலாளி ஆட்சியின் / நயவஞ்சகத்தால் நலிவென்று கண்டேன்” என அடையாளம் காட்டினார் .
கஞ்சிக்கு வழியிலார் அதன் காரணம் ஏனென்ற அறிவுமிலார் எனச் சபிக்கவில்லை. மாறாக மாற்றம் தானே வராது என்பதால் எப்படி வரவைக்க வேண்டுமெனச் சொல்லுவார் . “ பொறுமை யிழந்தனர் மக்க ளெல்லாம்மனம் / பொங்கி எழுந்தனர் எரிமலைபோல் / உரிமை பறித்த உலுத்தர் எதிர்த்தனர் / ஒருமித்த ஜனசக்தி வென்றது / தோளோடு தோள் ஒட்டிச் சென்றனர் / அரிவா ளொடுமார்தட்டி நின்றனர் / ஆளடிமை தளையறுத்து வீழ்ந்தது நம்மை / அடைத்து வைத்த வெஞ்சிறை உடைந் தொழிந்தது” இதில் மக்கள் சக்தி எனப் பொதுவில் கூறாமல், அன்றைய கம்யூனிஸ்ட் ஏடு “ ஜனசக்தி” யைக் குறியீடாக்கினார். .
“ எங்கும் விவசாய சங்கம் அமைத்து அதில் / அங்கம் வகித்திடுவோம் இந்தத் / தங்க முயற்சிக்கு பங்கம் விளைத் திடும் / தன்மையை வெட்டி மிதித்திடுவோம் ” எனத் தொடங்கும் கவிதை ஜனசக்தியில் 1955 ல் வெளியானது.36 வரிகள் கொண்ட அக்கவிதை பொதுவுடைமை கருத்தை உரக்கப் பேசும் . “ கங்குல் பகல்நின்று காடு திருத்திய / கைகள் உயர்த்திடுவோம் என்றும் / எங்கள் உழைப் பினை எங்களுக்கே என / எக்காளம் ஊதிக்கிளப்பிடுவோம்” என்றும் ; “ ஊரைச் சுரண்டி உயர்ந்த மனிதரின் / உல்லாச வாழ்க்கையெல்லாம் தின்னச் / சோறுமின்றி தினம் கோயிலில் துஞ்சிடும் / தோழன் உதிர்த்த வியர்வை யன்றோ” என்றும் மிகத்தெளிவாக சுரண்டலையும் உழைக் கும் வர்க்க நியாயத்தையும் படம் பிடிப்பார் . இதனை வெறுமே இயக்கப் பாடலென ஒதுக்க இயலாது . தான் வாழ்ந்த தஞ்சை மண்ணில் வீறுகொண்டெழுந்த விவசாய இயக் கத்தின் வீச்சையும் - சமூக அவலத்தையும் - அதற் கெதிரான போர்க்குணம் மிக்க விழிப்புணர்வையும் பதிவு செய்துள்ளார் என்பதே சரியாகும்.
இப்படி சரியான திசைவழியை உள்ளுணர்ந்து பாடிய பட்டுக்கோட்டையின் பாடல்களை ஒரு ஆறு நிலையில் பகுத்து “ காலமறிந்து கூவும் சேவலில் ” கே . ஜீவபாரதி கூறு வார் . உள்ளசூழலை உள்ளபடி பாடிய முதல் நிலை ; பொத் தாம் பொதுவாகச் சொல்லாமல் யாரென்று காட்டிய இரண் டாம் நிலை ; அப்போதும் எப்போது விடியும் என்ற கேள்விக் குறியே ஒலித்தது ; அடுத்து மூன்றாம் நிலை கொடுமைக்கு முடிவு காண முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது அத்திக்கில் படகை செலுத்தும் வகையில் தொடர்ந்தது ; போராட அழைக்கும் நான்காம் நிலை ; அறைகூவல் விடு கிற உச்சநிலை ; தொழிலாளர் மீது நம்பிக்கை கொள்கிற இறுதி நிலை.ஒரு ஆய்வு நிலையில் அப்படிப் பகுத்துப் பார்க்க விமர் சகனுக்கு உரிமையும் வாய்ப்பும் உண்டு ; ஆனால் கே.ஜீவ பாரதி கூறியுள்ளதுபோல் பட்டுக்கோட்டை அப்படி பகுத்து எழுதியதாகக் கொள்ள இயலாது .
அவன் திரைப்பட திற்கோ , நாடகத்திற்கோ , எழுத நேரும் போது ; கதைச் சூழல் கதை மாந்தர் தயாரிப்பாளர் , இயக்குநர் இவ்வளவு பேரையும் மனதிற்கொண்டு தன் வரம்புக்குள் நின்று - இயன்ற அளவு தன் கருத்துகளை சொன்னான் . அது எந்த நிலையில் இருப்பினும் விழிப்புணர்வை விதைக்கத் தவறக் கூடாது என்பதில் விழிப்பாய் இருந்துள்ளான். பட்டுக் கோட்டையின் ஒவ்வொருபாடலிலும் இதன் கூறுகள் உண்டு . கவிதை எழுதும் போது – அதுவும் ஜனசக்தியில் தான் பெரும்பாலும் வெளியாயிற்று என்கிறபோது - கவிதைகள் இன்னும் பட்டவர்த்தனமாக வர்க்கப்போரின் ஈட்டிமுனையைக் காட்டியது . பேசப்பேச கூடும் பட்டுக்கோட்டை பாடல்களின் வீரியம்
எழுபதுகளில் எண்பதுகளில் இடதுசாரி மேடைகளில் கணீரென ஒலித்த கவிஞர் தணிகைச் செல்வனின் கவிதைகள் நரம்பை முறுக்கேற்றியது ; பின்னர் அவரது அரசியல் பயணம் சற்று நிலைமாறியது எனினும் அவரது கவிதைகள் பல இன்னும் சூடேற்றும்.
“ தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு
தூக்கிடும் குஞ்சு காக்க துடித்தெழும் கோழி; சிங்கம்
மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்...
சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !
சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்
பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்
பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்
மறித்தவன் வென்றதுண்டா ? மறுத்தவன் நின்றதுண்டா?”
இந்த வரிகளை மறக்க இயலுமா ?
அடுத்த வாரத்தில் மேலும் சில முத்தாய்ப்பான செய்திகளோடு இத்தொடரை நிறைவு செய்வோம்………………………………………………………………………………………..
நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 22 செப் 2014
0 comments :
Post a Comment