உரைச் சித்திரம் : 16. வளமை ஓர்புறம் வறுமை ஓர்புறம் : தொடர்கதை

Posted by அகத்தீ Labels:

 



உரைச் சித்திரம் : 16.

 

வளமை ஓர்புறம் வறுமை ஓர்புறம் : தொடர்கதை

 

 

 

பசியை ஓர் நோயாகச் சொன்னது தமிழ் மரபாகும் .பசிப்பிணி அகற்ற கனவு கண்ட இலக்கியங்கள் தமிழில் ஏராளம் .இதன் பொருள் தமிழ்ச் சமூகம் பசிப்பிணியை பெரும் சவாலாகவே பார்த்து வந்திருக்கிறது ; அதனை வேரறுக்க தொடர் கனவு கண்டு வந்துள்ளது என்பதே ஆகும் . சங்க காலம் பொற்காலம் என்போர் ,அதன் இன்னொரு பக்கத்தை சொல்லுவதில்லை .இன்று அப்பக்கம் சிறிது செல்வோமா ?

 

பசிப்பிணி குறித்த ஓரிரு காட்சிகள் பார்ப்போம் ;

 

தன்மானம் மிக்க ஒருவர் அதனை காத்து நிற்க முனைவரா , அல்லது தன்மானத்தை உதறிவிட்டு கூனிக்குறுகி பிறரிடம் ஈயென்று இரந்து நிற்பாரா ? நாலடியார் இது குறித்து பேசியுள்ளது .

 

பசி நோயால் உடல் வாடி வதங்கி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் உதவி கேட்பாரோ தன்மானம் மிக்கவர்கள் .  மாட்டார்கள் .நிச்சயம் மாட்டார்கள் .  அதே வேளையில் தான் தன் வறுமையை எடுத்துச் சொல்லாமலே பார்த்தவுடன் குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் பேரன்பு உடையவரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பாரோ? கூறுவார்கள். ஆக ,தன் வறுமையை எடுத்துச் சொல்லி உதவி கேட்கும் போதும் பண்பில்லாதவரிடம் கேட்கக்கூடாது .

 

புறநானூற்றில் இன்னொரு காட்சி . சற்று வேடிக்கையானதும்கூட .புலவர் கழைதின் யானையார் பாடி பரிசில் பெற கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியிடம் போகிறார் . அந்த நேரம் வல்வில் ஓரி என்ன மனோ நிலையில் இருந்தாரோ ! இல்லை என கைவிரித்து விட்டார் . விடுவாரா புலவர் “ நீர் வள்ளல்தான் .குறைத்துப் பேசமாட்டேன் .ஆயின் நான் வந்த நேரமும் சகுனமும் சரியில்லை” என தன்னை நொந்து கவிபாடுகிறார் . அதை முழுதாகப் பார்ப்போம்.

 

 

ஈ என அதாவது தாவென கை நீட்டி யாரோ ஒருவரிடம் பிச்சை கேட்பது யாராயினும்  மிகவும் இழிவு தருவதாகும். வேதனை தருவதாகும் .அப்படியும் மானமிழந்து ஒருவர் கேட்ட பிறகும் ஈயேன் கொடுக்கமாட்டேன் என கொடுக்காமல் இருப்பது அதைவிட கேவலமானதும் இழிந்ததும் ஆகும்.

 

இதையே இன்னொரு வகையிலும் சொல்லலாம் .இதோ வாங்கிக் கொள் என ஒருவர் கொடுப்பது உயர்வானது ஆகும்; அப்படிக் கொடுத்தாலும் அதை ஏற்க மாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்வானது ஆகும்.

 

உப்புக் கரிக்கும் கடலில் அளவில்லாமல் நீர் நிறைந்து இருந்தாலும்  அதனை நாடி தாகம் தணிக்க ஒருவரும் செல்வது இல்லை. [ இப்போது கடல் நீரை குடி நீராக்குகிறோம் அது வேறு தளம் ]

 

பசுமாடும் , கால்நடைகளும் ஏனைய விலங்குகளும் சென்று தண்ணீர் குடித்து கலக்கி சேறாக்கிவிட்ட  சிறு நீர்த் தேக்கம் என்றாலும் குடிநீருக்காக அதனை  நோக்கிப் பலரும் செல்வார்கள்; குடிநீர் என்பதால் அதற்கு வழிகள் பல தானாக அமைந்தும் விடுகின்றன.

 

வள்ளியோரை நாடி உள்ளி  அதாவது வல்வில் ஓரியை நாடி அவர் பரிசில் தருவார் என்று கருதிச் செல்கின்றனர். அவரை நாடிப் போகும் பாதையோ பலரும் போய் போய் தேய்ந்து பழகிய பாதை பாதை. தப்பித் தவறி அங்கு எதிர்பார்த்த பரிசில் கிடைக்கவில்லை என்றாலும்  அங்கு போவோர் அப்பரிசில் தரும் மேன் மக்களைக் குறைவு பட இழித்துப்  பேசமாட்டார்கள்.

 

பரிசில் கிடைக்காவிடினும் வழங்குபவரைக் குறை கூறுவது இல்லையாம். தம் சகுனம் சரி இல்லை என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்வராம். தாம் சென்ற நேரம் சரி அல்ல என்றுதான் பேசுவார்களாம்.

 

யாரென பேதம் பார்க்காமல் பொழியும் மழை போல் , ஆம் மாரி போல வாரி வழங்கும் இயல்பு உன்பால் உள்ளது; அதனால் எப்பொழுதும் உன்னை வெறுப்பது என்பது இல்லை.

 

இப்படி பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி தலையில் வைத்தபின் கொடுக்காமல் இருந்திருப்பார்பாரோ ?

 

இன்னொரு காட்சி ,

 

குடுமி வைத்திருக்கும்   தமது மகன் பசியால் துடிக்கும் காட்சியை புலவர் பெரும்சித்திரனார் பார்க்கின்றார் . உண்ண உணவில்லாது பசியோடு தாயிருக்கிறாள் . அந்த தாயின் முலைக் காம்பை சப்பிச் சப்பி  பால் இன்றி ஏமாறுகிறது குழந்தை . பால் இல்லாததால் கூழாவது கஞ்சியாவது கிடைக்குமா  என பாத்திரத்தைத் திறந்து திறந்து பார்த்து, உணவு ஏதுமில்லாமல் பாத்திரம் காலியாக இருப்பதைக் கண்டு  குழந்தை  மேலும் வீறிட்டு அழகிறது .அதனைக் கண்டு தந்தையான பெருஞ்சித்திரனார்  கலங்குகிறார் .

 

இப்படி 160 வது புறநானூற்றுப் பாடலில் காட்சி விரிகிறது .இதன் தொடர்ச்சி இன்னும் வலுவாய் 164 வது பாடலில் வெளிப்படுகிறது .

 

 

வள்ளல் குமணன் காட்டில் இருக்கிறார் .ஆனாலும் விரட்டிச் சென்று புலவர் பெருஞ்சித்திரனார் தான்படும் கொடுந் துயரத்தைச் சொல்லி உதவி கேட்டு நிற்கிறார் . கொடுக்காவிடில் இவ்விடத்தை விட்டு நகர மாட்டேன் என அடம் பிடிக்கிறார் .

 

அடுப்பு எதற்கு ? சோறு சமைப்பதற்குத்தானே , ஆனால் ,தன் வீட்டு அடுப்பில் பலநாள் சோறே சமைக்காததால் காளான் பூத்துக் கிடக்கிறது.

 

 

அதனால் தம் பிள்ளைகளுக்கு பசியாற்ற முடியவில்லையே என வருந்தி என் மனைவியின் ஈர இமை கொண்ட கண்கள் விடாது கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருக்கின்றன. 

 

 

அதுமட்டுமா ? பலநாள் சாப்பிடாததால் அவள் முலையில் பால் சுரக்கவில்லை . ஆயினும் அதையெல்லாம் அறியாத குழந்தை மூலைக் காம்பை சப்பி சப்பி பால் வராமல் பசி பொறுக்காமல் தேம்பித் தேம்பி அழுகிறது . குழந்தை முகத்தைப் பார்த்து தாயின் கண்களிலும் கண்ணீர்மழை கொட்டுகிறது.

 

 

அவள் துன்பத்தைப் காணச் சகிக்காமல் நான் உன்னை நோக்கி வந்துள்ளேன்.

 

 

என் கொல்வறுமை நிலை அறிந்து தேவையானதை நீ நல்கும்வரை உன்னை விட்டு நான் போகமாட்டேன்.

 

 

நீயோ வறிய யாழிசைக் கலைஞர்கள்  வறுமையைப் போக்கும் உயர்ந்த குடியில் பிறந்தவன் ஆயிற்றே.

 

 

இப்படி குமணனிடம் யாசித்து நின்றார்.

 

 

இப்படி நிறைய காட்சிகளைச் சுட்ட இயலும் .இப்போது இன்னொரு காட்சியோடு முடிப்போம் .

 

 

மன்னனைப் புகழ்ந்து யாசகம் கேட்கும் பாணர்களுக்கு கொடுக்க ஏதுமின்றி மன்னனே இருக்கிறான் .ஆயினும் அவன் நெஞ்சில் ஈரம் இருக்கிறது .கவுரவம் பார்க்காமல் இன்னொரு வள்ளலைப் புகழ்ந்து  சோறு கிடைக்கும் இடம் நோக்கி கை நீட்டுகிறான் .இது மிகவும் வித்தியாசமான காட்சி .

 

அந்த மன்னன் சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவன் .அவன் காட்டிய வள்ளல் சிறுகுடி கிழான் பண்ணன் .இதனைப் பாடியதும் அந்த மன்னனே .

 

நான் வாழும் நாளெல்லாம் சேர்த்து அந்த பாணன் வாழ்க !

 

நிறைய பழங்கள் பழுத்திருக்கும் மரத்தில் தமக்கேற்ற உணவு இருப்பதால் ; அம்மரம் நாடிச் சென்று மகிழ்ச்சியால் பறவைகள் ஆரவார ஒலி எழுப்பும் .

 

அதுபோல  அங்கே ஒலி கேட்கிறதே அது என்ன ஒலி ?

 

 

சிறுகுடி கிழான் பண்ணன் வீட்டில் பாணர்கள் கூட்டம் கூட்டமாய் கள் குடித்து , வயிறு முட்ட உணவு உண்டு , மகிழ்ந்து எழுப்பும் பேரொலி அது.

 

அவன் இல்லத்தில் அந்தப் பேரொலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 

 

அப்போது மழை இல்லாவிடினும் சீக்கிரம் மழை பெய்யும் என இருண்ட வானம் பார்த்து  அறிந்த எறும்புகள் , தன் முட்டைகளை எடுத்துக்கொண்டு 

வலிமையான மேட்டுநிலம் நோக்கி வரிசை வரிசையாகச் செல்கின்றன.

 

 

அதுபோலவே சிறுவர் சிறுமியர் தம் குடும்பத்தார்க்குத் தந்த சோற்று மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வரிசையாச் செல்கின்றனர்.

 

 

பண்ணன் சாதாரண ஆளல்ல ; பசிப்பிணியைப் போக்கும் மருத்துவன்.

 

 

அவனை நான் பார்த்தாக வேண்டும்.எனக்கு சொல்லுங்கள் அவன் இல்லம் அருகில் உள்ளதா ? தொலைவில் உள்ளதா ?

 

 

ஆக , சேரர் காலம் பொற்காலம் ,சோழர் காலம் பொற்காலம் ,பாண்டியர் காலம் பொற்காலம் , குப்தர் காலம் பொற்காலம் , மொகலாயர் காலம் பொற்காலம் , அவர் காலம் பொற்காலம் ,இவர் காலம் பொற்காலம் என்பதெல்லாம் காதில் பூமாலை சுற்றுகிற வேலை .உண்மையல்ல .

 

எல்லா காலத்திலும் வளமை ஒரு பக்கம் ; வறுமை ஒரு பக்கம் என இரண்டு கூறுகள் தொடர்கதையே ! ஒன்றை மட்டும் பார்த்துவிட்டு மொத்தமும் இப்படித்தான் என்பது அறியாமை . இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுதான் நேர்மையான அணுகுமுறை .

 

வளமை ஓர்புறம் வறுமை ஓர் புறம் தொடர்கதை ஆவதுவோ ?

பசிப்பிணி இல்லா பொற்காலம் நோக்கி பயணிக்க வழி காண்போம் .

 

 

 

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.


            நாலடியார் 292.

 

 

என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழிய ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

 

புறநானூறு பா. 204

 

 

குடுமி புதல்வன் பல்மான் பால்இல் வறுமுலை
சுவைத்தனன் பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ ஊழின் உள்இல்
வறுங்கலம் திரிந்து, அழக் கண்டு

புறநானூறு பா. 160

 

 ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தேலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம் தன்மகத்து முகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!”

புறநானூறு பா. 164

.

 யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு துண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றென
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே

புறநானூறு பா. 173

 

வளமை ஓர்புறம் வறுமை ஓர் புறம் தொடர்கதை ஆவதுவோ ?

பசிப்பிணி இல்லா பொற்காலம் நோக்கி பயணிக்க வழி காண்போம் .

 

 

சுபொஅ.

26/7/2022.



எளியது ஆயினும் வலியது கண்டாய்….

Posted by அகத்தீ Labels:

 

 


எளியது ஆயினும் வலியது கண்டாய்…. 

 

 “ இளையவர்களுக்கான கவிதைகள் “ என அட்டையிலேயே தெளிவாக அச்சிட்டுவிட்டு, அதனை இந்த முதியவரிடம் ஏன் கொடுத்தார் தோழர் .ந.பெரியசாமி ? இந்த முதியவருக்குள்ளும் இன்னும் ஓர் இளைஞர் இருப்பாரென நம்பி இருப்பாரோ ?

 

அவர் நம்பிக்கையை வீணாக்கலாமோ ? நானும் கவிதைகளுக்குள் மூழ்கினேன் . பரந்த வாசிப்பும் கூர்த்த பார்வையும் கொண்டவர் ந.பெரியசாமி என்பதை அவரின் “ மொழியின் நிழல்” உட்பட இவரின் முந்தைய ஐந்து நூல்களும் சொல்லும் .எனவே எதிர்பார்ப்புடன் தான் உள் நுழைந்தேன் .ஏமாற்றவில்லை .

 

 “மாம்பழக் கொட்டையினுள்

இருக்கும் வண்டாக

மனதுக்குள் கேள்விப்புழு .”

இந்தக் கவிதை அரசு வேலை ,அரசு கல்லூரி கேட்போர் அரசு பள்ளியெனில் முகம் சுழிப்பதை அழுத்தமாகச் சொல்லுகிறது .இந்த  “கேள்விப்புழு” கவிதையை தமிழ் நாட்டு கல்வி அமைச்சருக்கு சமர்பிக்கிறேன்.

 

 “கன்றெனத் துள்ளி

கடுகெனப் பொரிந்து

கலகலப்பாக வகுப்பில் இருப்பவள்

கண் சோர்வுற்று

அசதியாக அமர்ந்து

தவிப்போடு இருப்பவளைக் கண்ட

ஆசிரியை அருகில் சென்று

ரகசிய உரையாடலில்

கொண்டுவராததை அறிந்து

தன் கைப்பையைத்

தாய்மையோடு கொடுத்தனுப்பினார்.

 

நாப்கின் மலர்ச்சியைத் தந்தது .”

 

 “ வகுப்பறை விலக்கு”  எனும் இக்கவிதை சொல்லும் உளவியல் அற்புதம் . இப்படிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டாடத்தானே காத்திருக்கிறோம் . அரசுக்கும் இந்த தாய்மை உணர்வு வேண்டும் .இலவச நாப்கின் என கேலி பேசும் மூடர்கூட்டத்திற்கு இந்த வலியெல்லாம் புரியவே புரியாது .இக்கவிதையை வாசித்த போது நல்ல எழுத்தாளரும் ஆசிரியருமான தோழர் .இரா.எட்வின் நினைவுக்கு வந்தார் .

 

 “ உன்னிடம் சொல்லத் தோன்றியது

என் உடலின் மாற்றங்களுடன்

பிரியமும் பெருகுகிறது

….. …… …… …… …..

…. ….. ….. …. ….

 

வலியவரும் அன்பை

இனி அடையாளம் காண வேண்டும்.”

 

“ டியர் வாகினி” எனும் இக்கவிதை பதின்ம வயதில் உளவியலை உரக்கச் சொல்கிறது .

 

“ வகுப்பாசிரியை

எதுக்கெடுத்தாலும் யாருடனாவது

ஒப்பிட்டே பேசுறாங்க

ஒவ்வாமையா இருக்குப்பா.

 

என் திறமை எனக்கானதுதானே…”

 

“ ஒவ்வாமை” எனும் கவிதை எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது . ஒப்பிட்டு பேசும் கெட்ட வழக்கம் பள்ளிகளில் மட்டுமா ? வீட்டினுள்ளும் பாடாய்ப் படுத்துகிறதே! ‘பலரறிய பாராட்டுவதும் ,தனியாக விமர்சிப்பதும்’ எனும் அருங்குணம் எங்கும் அருகிவருகிறதே !

 

சில மாதங்கள் முன்பு நானும் இணையரும் மெரினா பீச்சுக்கு போய் வந்த பின் முகநூலில்  , கடற்கரையை குப்பை களமாக்கும் பொறுப்பற்ற குடிமக்களின் செயல் குறித்தும் ,அரசின் செயலின்மை குறித்தும் கவலைப் பட்டிருந்தேன். “ கடலென்னும் அற்புதம்” கவிதையை வாசித்த போது ந.பெரியசாமிக்கும் எனக்கும் ஒத்திசைவு இருந்ததை எண்ணி மகிழ்ந்தேன் .அவர் அக்கவிதையின் இறுதியில் சொல்கிறார் ;

 

“குப்பைகளைக் கொட்டிடாது

குதூகலித்திருந்து வந்திடுவோம்.”

 

தலை முறை ,ரகசியப் பொய் ,கரோனா கொடுமை ,குளோரின் நீர் என ஒவ்வொரு கவிதையையும் பேசத்தான் ஆசை . நீங்களே வாங்கிப் படித்து அனுபவிக்க வேண்டுமே ! ஆகவே இன்னும் ஒரே ஒரு கவிதையோடு நிறுத்திக் கொள்கிறேன் .

 

“கடைசி பெஞ்ச்”கவிதை என்னுள் நேற்றைய நினைவை மீட்டியது . ஆசிரியர் எத்தனை முறை இழுத்து வந்து முதல் பெஞ்சில் உட்கார வைத்தாலும் நைசாக நழுவி கடைசி பெஞ்சுக்கு தாவிவிடும் என்னைப் பார்த்து என் ஆசிரியர் சொன்னார் “ நீ எங்கே இருந்தாலும் மார்க் வாங்கி விடுகிறாய் ,தயவு செய்து மற்றவர்களைக் கெடுத்துவிடாதே … நான் அவர்களைத் தனியாக கவனிக்க வேண்டும் .” இப்படியும் யோசித்த ஆசிரியர்கள் இருந்த காலம் அது .

 

கடைசி பெஞ்சர்களின் தனிப்பட்ட பல்வேறு திறமைகளை அடுக்கிவிட்டு  பெரியசாமி கவிதையில் இறுதியில் சொல்கிறார் ;

 

 “ கடைசி பெஞ்ச் குறித்து

கவலை கொள்ளாது இருந்தாலும்

வேடிக்கை பார்க்க இயலாதது

வேதனையாகத்தான் பட்டதாம்.”

 

முன்னுரையில் தேவசீமா சொன்னது போல பதின் வயது குழந்தைகளின் குரலாய் வெளிப்பட்டு , அவர்களுக்கு குளிர் காய்வதற்கான நெருப்பை அளித்து கதகதப்பை இக்கவிதைகள் ஊட்டியிருக்கின்றன எனில் மிகை அல்ல.

 

பதின்ம வயதின் உளவியலை புரிவது எளிதல்ல ,மிகவும் கடினம் . பெரியசாமி துணிந்து நுழைந்துள்ளார் . ‘எளியது ஆயினும் வலியது கண்டாய்’ எனச் சொல்ல வைத்துவிட்டார் .

 

ஓர் நல்ல கவிதை நூல் எது என்பதை ,  பக்கங்களின் எண்ணிக்கை மற்றும் கவிதைகளின் எண்ணிக்கை இவற்றைக் கொண்டா தீர்மானிக்க வேண்டும் ? இல்லை .இல்லவே இல்லை .32 பக்கங்களில் 25 கவிதைகளில் நல்ல கவிதை நூலைத் தந்த பெரியசாமிக்கு என் வாழ்த்துகள் .தொடர்க உம் முயற்சி !

 

கடைசி பெஞ்ச்

இளையோருக்கான கவிதைகள்

ஆசிரியர் : ந.பெரியசாமி ,

வெளியீடு : ஓங்கில் கூட்டம் ,தொடர்புக்கு : 044 24232424 , 24332924 ,24356935

பக்கங்கள் : 32 ,விலை : ரூ.30/

 

 

சுபொஅ.

25/7/2022.

 

 

 

 

 

 


நடுகற்கள், கோட்டைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் :

Posted by அகத்தீ Labels:

நடுகற்கள், கோட்டைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் :

 ஓசூர் கோட்டைதான் காதல் கோட்டை .

காதலர் தினத்தைக் கொண்டாட உலகெங்கும்

ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் ஓசூரில்தான்

காதலிக்காக கட்டப்பட்ட கோட்டையும் உள்ளது

 


 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொல்லியல் தடயம் தேடிய பயணங்களின் பதிவுத் தொகுப்பே இந்நூல்  . தேடிய தொல்லியல் செல்வங்களும் தேடலில் மூழ்கிய அறம் கிருஷ்ணனும் நிறைந்த நூல் இது எனச் சொல்லினும் பிழையில்லை.

 

இந்நூல் வழக்கமாக நான் பயணிக்காத அறிவுப் புலம், எனவே இந்நூலின் நிறை குறைகளை எடை போட்டு அறிமுகம் செய்யும் சோதனையில் நான் ஈடுபடப்போவதில்லை .பொதுவாசக மனோநிலையில் இருந்து சில செய்திகளைச் சுட்டவும் கேள்விகளை எழுப்பவுமே விழைகிறேன்.

 

கோயில்கள் , கல்வெட்டுகள் ,நடுகற்கள் , கோட்டைகள் ,நெடுங்கற்கள் , கற்திட்டைகள் ,கல்வட்டங்கள் ,பாறை ஓவியங்கள் ,அகழாய்வுகள் , கள ஆய்வுகள் என விரிந்த பரப்பில் அறம் கிருணன் பயணப்பட்டிருக்கிறார் .அது சார்ந்து அவர் மேற்கொண்ட மரபு நடை பயணம் ,கோவில் புனரமைப்பு என செய்தித் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன .

 

முதலில் 22 கோவில்கள் குறித்த தொல்லியல் செய்திகளும் படமும் தொகுக்கப் பட்டுள்ளது . இதைப் புரட்டியதும் கோயில் கோயிலாய் தேடியலைந்த  பயணமோ என முதலில் எண்ணினேன் . பிற அத்தியாயங்கள் அப்படி இல்லை தொல்லியல் பயணமே எனச் சொன்னது .

 

இந்தக் கோவில்களின் காலம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே . பெரும்பாலும் இந்த ஆலயங்கள் மன்னர்களால் கட்டப்பட்டதே .  “தேவதானம்” என்கிற பெயரில் கோவில்களுக்கு நிலமும் கிராமமும் தானமாக வழங்கப்பட்ட செய்தி பதிவாகி உள்ளது .அதுபோல் பிராமணர்களுக்கு நில தானம் வழங்கப்பட்ட செய்தியும் உள்ளது .ஆயின் இந்த  “பிரம்மதானம்” குறித்த அதிகத் தகவல்கள் இல்லை .

 

சைவ ,வைணவ கோயில்கள் பற்றிய செய்தியே பெரிதும் உள்ளது . பெரிதும் மலையும் காடும் சூழந்த இப்பரப்பில் ஆதி வழிபாடான தாய் தெய்வம் ,காவல் தெய்வம் ,நாட்டார் வழிபாடு முதலியன இந்த தொல்லியல் தேடலில் இடம் பெறவில்லையா ? அல்லது கிடைக்க வில்லையா ? சமண ,புத்த கோயில்கள் சைவ ,வைணவ கோயில்களாக மாற்றப்பட்ட நிகழவுகளாக எதுவும் இல்லையா ? ஆய்வின் பரப்பில் அது இடம் பெறவில்லையா ? இது போன்ற சில ஐயங்கள் இந்த அத்தியாயம் தொடர்பாக எழுகின்றன .

 

ஒரு செய்தி தெளிவாகிறது ; அரசர்களே கோவில்களைக் கட்டியுள்ளனர். பராமரிக்கவும் வழிசெய்துள்ளனர் . ஆக கோயில்கள் அரசு ஆளுகைக்கு உட்பட்டதே . அப்படி இருக்க இன்றைக்கு , “ இந்து அறநிலையத் துறையிடம் இருக்கும் கோயில்களை பக்தர்களிடம் அதாவது தனியாரின் கொள்ளைக்கு ஒப்படை..” என சிலர் கூப்பாடுபோடுவது  துளியளவும் நியாயமற்ற கோரிக்கை அன்றோ ?

 

செவிடபாடி ,செவிடவாடி ,சூடவாடி , ஹொசாவூரு [ ஹொசா எனில் கன்னடத்தில் புதிய எனும் பொருளுடையது ] ஹொசூரு ,ஹொசூர் , ஓசூர் [ புதிய ஊர் என்றே பொருள்] என ஆயிரம் ஆண்டுகளில் பெயர் மாறி மருவி வந்துள்ள செய்தி இந்நூலில் உள்ளது .

 

அடுத்து கல்வெட்டுகள் குறித்த அத்தியாயம் ஈர்த்தது . “ இருது கோட்டையில் பூர்வாதிராசன் தர்மத்தாழ்வார் எனும் குறுநில அரசனின் நன்மைக்காக ஆண்டாள் எனும் பெண் கட்டிய கோயில்.” எனும் செய்தி வியப்புக்குரியது .

 

 “ வயிற்றுப் பசியோடு யாரும் வாழ்ந்திடகூடாது என்று யோசித்த ஓர் மன்னன் அதற்கான அரசாணையும் ,அதனை எப்படி செயற்படுத்த வேண்டும் என்ற முறையையும் ..” பேசள அரசன் வீர ராமநாதன் 1295 ல் வெளியிட்ட ஆணை கல்வெட்டாக உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . அதில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் அந்த சூழலை உருவாக்கிய அதிகாரிகள் தலையைச் சீவ ஆணையிட்டுள்ளார் . பசிப்பிணிக்கு எதிரான போராட்டம் வலுவாக தமிழ் மண்ணில் நடைபெற்றுள்ள செய்திக்கு மேலும் ஓர் சான்றாகும் இது .

 

 “அதியமான்களின் கொடி  ‘வில்’ என்பது ஆந்திர மாநிலத்திலுள்ள லட்டிகம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு மட்டுமே சான்றாக இருந்தது .தற்போது குந்துக்கோட்டை என்ற ஊரில் இவரால் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டில்  ‘வில்கொடி’ உள்ளதாகப் பதிவு செய்துள்ளார் எனவே அதியமானின் கொடி  ‘வில்கொடி’ என்பதை இவ்விரண்டு கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன.” என்கிறார் தொல்லியல் துறை உதவி இயக்குநர் முனைவர் தி .சுப்பிரமணியன் .

 

16 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன . அதில் சில கன்னடத்திலும் உள்ளன . இவை முறைகாக வாசிக்கப்பட்டு வரலாற்று பின்புலத்தோடு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

 

அடுத்து முக்கியமானது நடுகல் . தொல் பழங்காலந்தொட்டே நடுகல் எடுக்கும் பழக்கம் தமிழ் நாட்டில் உள்ளது . அகநானூறு ,புறநானூறு போன்றவற்றிலும் நடுகல் பற்றிய செய்திகள் உண்டு . கால்நடைகளை கவர்தல் ,மீட்டல் ,பாதுகாத்தல் என வாழ்ந்த வீரர்களின் நினைவாகவும் நடுகல் நடப்படுவதுண்டு . உள்ளூர் வீரர்களைப் போற்றியும் நடுகல் உண்டு . நாட்டார் தெயவழிபாட்டின் தொடக்கமாகவும் நடுகற்களைப் பார்ப்பதுண்டு . மிகவும் தொல்கால எச்சங்களாகும் இவை .

 

கிருஷ்ணகிரி ,தருமபுரி மாவட்டங்களில்தான் அதிகமாக நடுகல் உள்ளன என்கிறார் நூலாசிரியர் .ஓசூர் ,தேன்கனிக்கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களில்தான் குவியல் குவியலாக நடுகற்கள் உள்ளன என்கிறார் .

 

“ இதுவரையிலும் தமிழகத்தில் அதிகமான நடுகல் உள்ள இடமாக தளிக்கு அருகில் உள்ள நாகொண்டா பாளையம் அறியப்பட்டுள்ளது . நாகொண்டா பாளையம் 48 , தேன்கனிக் கோட்டை அருகிலுள்ள பிக்கண பள்ளி 45 , உளிவீரணள்ளி 25 ,கொத்தூர் 26 , கெலமங்கலம் 25க்கும் மேல் ,ஒன்னல்வாடி 20 ,தேர்பேட்டை 20 , குடிசெட்லு 20 ,சின்னக் கொத்தூர் 20 -30 …’” இப்படி இன்னும் பல ஊர்களில் இருப்பதாக நூலாசிரியர் குறுப்பிடுகிறார் .நடுகற்கள் ,புலிக்குத்திக்கற்கள் ,மாடுபிடிச் சண்டை நடுகற்கள் என பலவற்றைச்  சுட்டிக்காட்டுகிறார் .

 

பொதுவாக முவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களெனவும் சொல்லிச் செல்கிறார் .குறும்பர்கள் கல்வெட்டை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் . காவேரிப் பட்டிணத்திற்கு அருகே உள்ள நெடுங்கல்லில் உள்ள நெடுங்கல்லையும் சுட்டுகிறார் .இவற்றை எல்லாம் துல்லியமாக ஆய்வு செய்தால் நம் மரபின் வேர் எவ்வளவு ஆழமானது என அறிய முடியும் .தொல்லியல் துறை செய்யுமா ?

 

கற்திட்டைகள் ,கல்வட்டங்கள் சிலவற்றையும் அடையாளம் கண்டு காட்சிப் படுத்தியுள்ளார் .இவை நடுகல் போன்றவை அல்லது அதன் தொடர்ச்சி . இவை மிக தொன்மைக் காலத்தை சுட்டுவன .இவற்றை உரியமுறையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

 

 

தமிழ்நாட்டில் அதிகமான கோட்டைகள் உள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி என்கிறார் நூலாசிரியர் .

 

 “1,கிருஷ்ணகிரி 2. ஜெகதேவி துர்க்கம் ,3.வீரபத்ரதுர்க்கம் ,4.கவல்கரா ,5. மகராஜாக்கடை ,6.பஜங்கரா ,7.கடோர்கர் ,8.திருப்பத்தூர், 9.வாணியம்பாடி ,10.கனகநகரா ,11.சுதர்சநகரா ,12.தட்டக்கல் . மேற்கண்ட கோட்டைகளில் ஆறு கோட்டைகள் தற்போது இல்லை .”

 

“16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பாராமகால் என்று குறிப்பிடப்படும் பன்னிரண்டு கோடைகளின் பெயர்களே இவை . இந்தப் பெயர்கள் அனைத்தும் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டதாகும்.”

 

“ திப்பு சுல்தான் காலத்திலும் உருவாக்கப்பட்ட மேலும் சில கோட்டைகள் : இராயக் கோட்டை , ஓசூர் கோட்டை , தேன்கனிக் கோட்டை , தளிக் கோட்டை ,மத்தூர் கோட்டை ,காவேரிப்பட்டிணம் தரக்கோட்டை , ஊடே துர்க்கம் கோட்டை , இரத்தினகிரிக் கோட்டை.” என நூலாசிரியர் பட்டியலிடுகிறார் .

 

இவ்வளவு கோட்டைகளைச் சொல்லிவிட்டு காதல் கோடையைச் சொல்லாமல் போனால் வரலாற்றுப் பிழையாகிவிடுமே !

 

ஓசூர் கோட்டைதான் காதல் கோட்டை . காதலர் தினத்தைக் கொண்டாட உலகெங்கும் ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் ஓசூரில்தான் காதலிக்காக கட்டப்பட்ட கோட்டையும் உள்ளது என்கிறார் நூலாசிரியர் .

 

சேலம் மாவட்ட ஆளுநராக  1853 – 64 காலக்கட்டத்தில் செயல்பட்ட கேப்டன் எச் ஏ பிரெட் தன் காதல் மனைவியின் விருப்பத்திற்காக ஓசூர் இராமப்பநாய்க்கன் ஏரிக்கரையில் கட்டிய மாளிகை அது . லண்டன் கெனில்வர்த் மாளிகை மாதிரி ஓர் காதல் மாளிகையை அன்றைய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் செலவில் ஹாமில்டன் எனும் பொறியாளர் மேற்பார்வையில் கட்டி முடித்தார் .

 

அவர் காதல் மனைவி இங்கு வந்து வாழ வரவே இல்லை .ஆனால் அரசு பணத்தை கையாடல் செய்த குற்றச்சாட்டில் பிரெட் சிறையில் அடைக்கப்பட்டார் . இன்று அந்த காதல் மாளிகை மண்மூடிக் கிடக்கிறது .

 

இன்னொரு காதல் சின்னம் . ஆங்கில அதிகாரியான ஜான் குளோவர் யுத்தத்தில் பெற்றோரை இழந்த அமீருன்றிஷாவை பாதுகாத்து ,திருமணம் செய்துகொடுக்கவும் முயல்கிறார் ,அப்பெண் இவரை காதலிப்பதை சொன்னதால் , மதம்மாறி திருமணமும் செய்து கொள்கிறார் .

 

மனைவி இறந்த பின்  இராயக்கோட்டை அருகே பஞ்சப்பள்ளி எனும் இடத்தில் புதைத்த இடத்தில் ஓர் நினைவுச் சின்னமும் ஈத்காவும் அமைக்கிறார் . காதலுக்கு மதம் ஏது ? மொழி ஏது ?

 

இந்த இரண்டு காதல் செய்திகளும் புனைவு எழுதாளர்கள் பார்வைக்கும் ; திரைப்பட ஆர்வலர் பார்வைக்கும் உரியதும்கூட

 

இராயக்கோட்டை அருகில் கெட்டூரில் 2500 ஆண்டுகள் பழமையான 50 க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதாக நூலாசிரியர் சுட்டுகிறார் . மேலும் சிலவற்றையும் அடையாளம் கண்டுள்ளார் .எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி மேலதிகச்  செய்திகளைத் தெரியலாம். .

 

தேன்கனிக்கோடை அருகில் பிதிரெட்டி கிராமம் அருகில் நானூறு வருட பழமையான ஆலமரம் ஐந்து ஏக்கரில் பரவி நிற்பதையும் , ஜெக்கேரியில் 500 ஆண்டு பழமையான ஆலமரம் இருப்பதையும் சுட்டிய நூலாசிரியர் அவற்றை சுற்றுலா மையமாக்க வேண்டும் எனக் கோரி இருப்பது மிகச்சரியே !

 

மயிலாடும் பாறையில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த ஒரு மீட்டர் நீளமுள்ள இரும்புவாள் ,மூன்று கால் ஜாடி பற்றி ஓர் கட்டுரை உள்ளது . இதில் 4194 ஆண்டு பழமையான இரும்பு வாள் எனவும் சுட்டுகிறார் . கெலமங்கலம் அருகே பாவடரப்பட்டி மலைக்குன்றில் இரும்பு உருக்கும் தொழிற்கூடம் செயல்பட்ட விவரத்தை இன்னொரு கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் . நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தும் நுட்பம் தமிழ்ர்க்கு கைவரபெற்றது என்கிறார் .மேலும் ஆய்வுகள் தொடர்ந்தால் இன்னும் பல செய்திகளும் தகவல்களும் உறுதிப்படும்.

 

குறும்பர் ,இருளர் உள்ளிட்ட பல பிரிவினர் தனித்திறமை படைத்தவர்களாக பொதுவாகவே பல ஆய்வுகளில் காண்கிறோம் . இந்நூலிலும் இதற்கான குறிப்பு உண்டு .ஆயின் அச்சமூகங்கள் ஒடுக்கப்பட்டது எப்படி ? எப்போது ? யாரால் ? போன்ற கேள்விகளுக்கான விடை தேடப்பட வேண்டும்.

 

மேட்டூர் அணையைக் கொண்டாடுகிறோம் . காவிரி தண்ணீருக்காகச் சண்டை போடுகிறோம் . மேட்டூர் அணையை உருவாக்க கரையோரத்தில் இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டதால்  வாழ்வை இழந்த மக்களின் வலியை நூலாசிரியர் பகிர்ந்திருப்பது சிறப்பு .

 

மரபு நடை பயணச் செய்திக் குறிப்புகள் ,நூலாசியர் பற்றிய குறிப்புகள் எல்லாம் இடம் பெற்றுள்ளன .

 

நூல் நெடுக பல செய்திகள் விரவிக் கிடக்கின்றன .அவற்றைக் கோர்த்து அவற்றிலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தியை காலக் கிரமமாக தொகுத்து வடிகட்டி சொல்லி இருப்பின் ,இனி வரும் ஆய்வாளர் மேலும் தொடர நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கும் .

 

இப்போது எப் ஐ ஆர் என போலிஸ் மொழியில் சொல்லப்படுவதைப் போல் இவை பெரும்பாலும் முதல் தகவல் அறிக்கை போல் உள்ளது .இனி வருவோர் இதனுள் நுழைந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்து நம் வேரின் தொன்மையை வலிமையை வெற்றியை தோல்வியை எடுத்து இயம்புவார்கள் என நம்புவோமாக !

 

நூல் நெடுக படங்கள் நிறைந்திருப்பது தனிச் சிறப்பு .ஒவ்வொரு செய்தியும் படத்துடன் பதியப்பட்டுள்ளது . ஒவ்வொரு படமும்கூட ஓர் செய்தியை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது .பாராட்டுகள்!

 

அறம் கிருஷ்ணனின் தேடலும் உழைப்பும் ஈடுபாடும் நூல் நெடுக பளிச்சிடுகிறது .பாராட்டுகள் .அவரோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் .

 

அதே சமயம் வாழ்த்துரை வழங்கிய கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவர் இரா.கோமகன்  வாழ்த்துரையில் சுட்டிக்காட்டியுள்ள எச்சரிக்கை பொருள்பொதிந்தது எனக் கருதுகிறேன்.

 

 “… வரலாற்றை மத பெருமிதமாகக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன .இனம் நிலை நிறுத்தப்பட்ட தளத்தில் மதம் என்னும் நிறுவனம் தன் நிழல் பரப்புகிறது .”

 

 “ வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மதம் என்னும் நிகழ்காலத் தளைக்குள் சிக்கவைக்கப்படுகின்றனர் ,…. தமிழ் மன்னன் என்ற கட்டமைப்புக்கு மாறாக  இந்து மன்னன் என்ற கட்டமைப்புக்குள் திணிக்கும் முயற்சி தொடங்கிவிட்டன .நிலவுடைமை அரசதிகாரம் ,அரசு பேரரசு உருவாக்கம் பற்றிய ஆய்வுகள் சிலவே .”

 

இதற்குமேல் நானும் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன் .இனப்பெருமிதம் ,மதப்பெருமிதம் என்பதைத் தாண்டி மக்களின் வாழ்வியலோடு கூடிய சமூக உண்மைகளைத் தேடிப் பயணம் செல்ல வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம் எனும் நிகழ்கால உறுத்தும் உண்மையை மறந்துவிடவே கூடாது. .

 

வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்,

ஆசிரியர் : அறம் கிருஷ்ணன்,

வெளியீடு :அறம் பதிப்பகம் , 3/336 - W ஸ்ரீ சாய் நகர் , அரசனட்டி ,மூக்கண்டப்பள்ளி , ஓசூர் – 635 126 , கிருஷ்ணகிரி மாவட்டம்.

அலைபேசி :7904509437 , 9578468122. மின்னஞ்சல் : aramhosur@gmail.com

பக்கங்கள் : 416 /  விலை : ரூ.500/

 

[ ஜூலை 8-19 ஓசூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்ட நூல் .]

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

23/7/2022.

 

 

 

அம்மியும் ஆட்டுக்கல்லும் உலக்கையும்

Posted by அகத்தீ Labels:

 

அம்மியும் ஆட்டுக்கல்லும் உலக்கையும்

அருங்காட்சியக் பொருள்களாகிவிட்டன

வருத்தமில்லை எம்பெண்களின் முதுகெலும்பை

உடைத்துக் கொண்டிருந்ததல்லவா ?

 

உள்கிராமத்திலும் நைட்டியின் சுதந்திரத்தை

எம் பெண்கள் அனுபவிப்பது சாதாரணமானதா ?

உடைக்கட்டுப்பாடு உடைகிறது என்பதால்

வருத்தம் இல்லை .மகிழ்ச்சிதான் .

 

ஆணாதிக்கமும் பண்பாட்டு போலிஸுகளும்

பல்லை நற்நறவென கடித்தாலும்

அவர் வீட்டுக்குள்ளும் மெல்லமெல்ல

மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன

 

ஆனால் என்ன ? மண்டைக்குள்ளே கூடுகட்டி வாழும்

ஆணாதிக்க புழுக்களும் சாதி மத விஷப்பூச்சிகளும்

மீண்டும் இருட்குகையை நோக்கி விரட்டுகின்றனவே !

பெண்களில் ஒருசாராரையும் இப்பெருநோய் தொற்றிவிட்டதே !

 

சுபொஅ.

4/7/2022.