உரைச் சித்திரம் : 13.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 13.

 


கல்வி கரையில ; பொருள்நனி கொடுப்போருக்கு…

 

 

கல்வியின் பெருமை சங்க இலக்கியத்தில் நிறைய சொல்லப்பட்டிருக்கும் ? அவற்றைக் கொண்டு அக்காலத்தில் எல்லோருக்கும் தடையற்ற கல்வி கிடைத்தது என்றோ , எல்லோருக்கும் ஒரே போல் கல்வி கிடைத்தது என்றோ கருத முடியுமா ? நிச்சயம் முடியாது .

 

அந்தக் கல்வி என்பதுகூட இன்று நாம் வகுக்கும் வரையறை சார்ந்ததா ? இல்லவே இல்லை .அன்றையத் தேவையும் அன்றைய சமூக அமைப்பும் சார்ந்ததே ! அப்படித்தான் இருக்கவும் முடியும் . நம் ஆசையை எல்லாம் நேற்றின் மீது ஏற்றி வாசிக்க முடியாது ;கூடாது .

 

கல்வி என்பது ஒவ்வொரு சமூகத்தின் வர்க்க வர்ண ஆதிக்கத் தேவை சார்ந்ததே . நேற்றும் அப்படித்தான் .இன்றும் அப்படித்தான் .

 

இவற்றை மாற்ற போரிடும் நமக்கு , நேற்றைய சங்க இலக்கியத்தில் கூறியுள்ள கல்விப் பார்வை சிலவற்றை அறிதல் தேவையாக இருக்கிறது .

 

ஒருவனுக்கு செல்வத்தைப் போல் வலிமையுடையது வேறில்லை. ஆம் செல்வம் அவ்வளவு வலிமை தரும் . ஆயினும் ,கல்வியைப் போல் துணையாவதும் பிறிதில்லை. அப்படியாயின் செல்வமும் கல்வியும் கூட்டுச் சேர்ந்தால் அதன் ஆற்றல் அதிகம் அல்லவா ? வறுமையைப் போல் ஒருவருக்கு துன்பமானது வேறு எதுவும் இல்லை. வறுமை வந்தால் கல்வியும் இல்லை எனச் சொல்லலாமோ ? பிச்சை கேட்டு வருவரோக்கு இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானதும் வேறு இல்லையாம். ஆக வறுமை இருந்தது . பிச்சை எடுத்து வாழ்ந்தோரும் பிச்சை ஈந்து வாழ்ந்தோரும் இருந்தனர் இல்லையா ?

 

நான்மணிக்கடிகையில் விளம்பி நாகனார் பாடிய பாடலை [29] கேட்டபோது மேலே சொன்னவையே என்னுள் எழுந்த உணர்வு .

 

அது ஒரு புறம் இருக்கட்டும் . எப்போது கற்க வேண்டும் ? எப்படிக் கற்க வேண்டும் .

 

ஒருவர் எவ்வளவு கற்க வேண்டும் என்பதற்கெல்லாம் எல்லை கிடையாது . ஆம் ,கற்பதற்கு கரை இல்லை . எவ்வளவு வேண்டுமானலும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கற்கலாம் . ஆனால் சிக்கல் என்ன வெனில் நம் வாழ்நாள் மிகக்குறைவு .வாழும் நாளிலும் எத்தனை நாள் நோய் நொடியின்றி இருப்போம் ? யாராலும் சொல்லவே முடியாது . பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அன்னப்பறவை தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பருகுமாம் .இப்படி ஒரு கற்பனை சமூகத்தில் நீண்டநாள் உள்ளது . ஆயினும் அது போன்ற ஓர் திறமையை வளர்த்துக் கொண்டு எதையோ படித்து காலத்தை ஓட்டாமல் ; அறிஞர் தெளிந்துரைத்த நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்கிறது நாலடியார்.

 

அப்படிக் கற்றால் என்ன பயன் ? இதனையும் நாலடியார் சொல்கிறது .

 

இப்பிறவியில் இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வு இம்மை வாழ்வு . செத்த பிறகு சொர்க்கம் நரகம் என வாழும் வாழ்வு மறுமை வாழ்வு . இந்த நம்பிக்கை அன்றும் இருந்தது .இன்றும் இருக்கிறது .எனவேதான் நாலடியார் அழுத்திச் சொல்கிறது ; இந்த இம்மை வாழ்வில் கல்வி பெரும் பயன் .தரும் எனவே படி ..சொர்க்க வாழ்வுக்காகப் படி எனச் சொல்லவில்லை . இந்த உலகில் நல்லபடி வாழ படி என்கிறது . அதுமட்டுமல்ல நீ படித்த கல்வியை இன்னொருவருக்கு நீ கற்றுக்கொடுத்தாலும் குறைந்து போய்விடாது ,மாறாக புகழைத்தான் கொண்டு வரும் .எவ்வளவு காலம் இருந்தாலும் கல்வி கெட்டுப் போகாது . எத்தனை பிறவி எடுத்தாலும் அறியாமை எனும் நோயைக் குணமாக்கும் மாமருந்து கல்வியே !

 

இக்கல்வி ஆண்களுக்கு மட்டுமே உரியது என்கிற செய்தியும் தொல்காப்பியத்தில் உண்டு .இரு பாலருக்கும் உரியது என நாலடியார் சொல்லும் .

 

குஞ்சி யழகு என்பது ஆண்களின் சிகை அழகைக் குறிக்கும் அவ்வழகும் , பட்டு கரை வைத்த உடையின் அழகும் , பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசியதால் பொலியும் அழகும்  நிச்சயம் பேரழகுதான் .ஆயின் அதைவிட எல்லாம் மகாப்பேரழகு எது தெரியுமா ? இது அறம் ,இது ஒழுக்கம் என நடுநிலை நின்று தனக்குதானே உணரும் அறிவைக் கொடுக்கும் கல்வியே அனைத்திலும் மிக்க பேரழகாகும் என்கிறது நாலடியார். இதன் வழி இருபாலருக்கும் கல்வி என்கிற கருத்தோட்டம் உள்ளுறையாக சொல்கிறது நாலடியார் .

 

திருக்குறளில் பெண்கல்வி வலியுறுத்தப்படவில்லை என வாதிடுவோரும் உண்டு ; இல்லை இரு பாலருக்கும் பொதுவானதாகவே கல்வி அதிகாரம் சொல்லப் பட்டிருக்கிறது என்பாரும் உண்டு .வள்ளுவன் வாழ்ந்த காலத்தோடுதான் சேர்த்துப் பார்க்க வேண்டும் .

 

இக்கல்வி இல்லாவிடில் என்னவாகும் ? ஒளவையார் மூதுரையில் சொல்கிறார் .

 

அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது மரம் .நிறைய கிளைகள் . இலை ,பூ என பசுமையாய் ஓங்கி நிற்கிறது . ஆனால் அது மரம் அல்லவாம் . ஒளவையார் சொல்கிறார் . அப்படியாயின் எது நல்ல மரம் ? கற்றோர் நிறைந்த சபையில் நீட்டப்பட்ட ஓலைச் சுவடியை வாசித்து பொருள் சொல்ல முடியாமலும் ; அடுத்தவர் சொல்லும் குறிப்பை அறிய முடியாமலும் நிற்கிறானே நெடுமரம் என்கிறார் ஒளவையார் . மொத்தத்தில் படிக்காதவன் நெட்டை மரம் என்கிறார் .

..

 

இப்போது இந்த உரைச் சித்திரத்தின் முதல் இரண்டு பத்தியை மீண்டும் படியுங்கள் .அன்றைய கல்வி எல்லோருக்குமானதா ? உயர் குலத்தில் பிறந்தவனே ஆசிரியர் ஆகமுடியும் என கோடு போட்டது நன்னூல் எனும் இலக்கண நூல் ; மேலும் யார் யார் மாணக்கராக இருக்கலாம் என்பதையும் அந்நூல் கோடிகாட்டியுள்ளது.

 

 

 தன் மகன், தன்னுடைய ஆசிரியர் மகன், அரசன் மகன், மிகுதியாகப் பொருள் பணம் கொடுப்பவன், தன்னை வழிபாடு செய்பவன், தான் சொல்லும் கருத்தினை விரைவில் கற்றுக் கொள்ளும் அறிவு உடையவன் ஆகியோர் மட்டுமே மாணாக்கர் ஆவதற்குத் தகுதியுடையோர் என நன்னூல் வரையறுத்துவிட்டது .  “எல்லோருக்கும் கல்வி” என்கிற இன்றையக் கனைவைக்கூட அன்றைக்கு காணவில்லையே !

 

 

 

கல்வியின் பெருமையை சங்க இலக்கியம் ஓங்கி முழங்கியதும் பேருண்மை .அக்கல்வி எல்லோருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் சமூகச் சூழல் அன்றைக்கு இல்லை என்பதும் பேருண்மை .

 

 

ஆம் . “கல்வி கரையில” என்றதும் உண்மை ; கல்விக்கு கரை கட்டியதும் உண்மை; . ”பொருள் நனி கொடுப்போர்க்கே” கல்வி என்றதும் உண்மை .

 

 

 “எல்லோருக்கும் கல்வி” இந்த ஜனநாயக யுகத்திலேயே சவாலாக இருக்கும் போது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வின் பெருமையைப் போற்றியது தமிழ் சமூகம் என்பது சாதாரணச் செய்தி அல்லவே !

 

 

கல்வியைப் போற்றினோம் ; வாசலை அகலத் திறந்தோமா ? கேள்வி இதுதான்.

 

 

திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத
வன்கையின் வன்பாட்டது இல். . . . .

 

நான்மணிக்கடிகை [29]- விளம்பி நாகனார் 

 

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து.

 

நாலடியார் :135

 

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

 

நாலடியார் : 132.

 

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

 

நாலடியார் : 131.

 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.

 

ஒளவையார் எழுதிய மூதுரை :13.

 

“தன்மகன் ஆசான் மகனே மன்மகன்

 பொருள்நனி கொடுப்போன் வழிபடுவோனே

 உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே ”  

 

 

நன்னூல்

 

 

கல்வியைப் போற்றினோம் ; வாசலை அகலத் திறந்தோமா ?

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10/6/2022.




 

வெறுப்பின் சுனாமி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Posted by அகத்தீ Labels:

 வெறுப்பின் சுனாமி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிரிகெட்டில் வெறுப்பைத் தூவினர்
சாப்பாட்டில் வெறுப்பைக் கலந்தனர்
உடையில் வெறுப்பைச் சேர்த்தனர்
பெயரில் வெறுப்பை உமிழ்ந்தனர்
படிப்பில் வெறுப்பை விதைத்தனர்
பாடங்களில் வெறுப்பை விரவினர்
வரலாற்றில் வெறுப்பை திணித்தனர்
தொல்லியல் ஆய்விலும் வெறுப்பைத் தேடினர்
விஞ்ஞானத்தில் வெறுப்பை பொதிந்தனர்
தொற்றுநோயிலும் வெறுப்பைப் பரப்பினர்
அரசியலில் வெறுப்பை வியூகமாக்கினர்
காதலில் வெறுப்பை கக்கினர்
வழிபாட்டில் வெறுப்பை ஆயுதமாக்கினர்
ஊடகங்களில் வெறுப்பை நிறைத்தனர்
செய்திகளை வதந்திகளை வெறுப்பால் செய்தனர்
நீதியை நிர்வாகத்தை வெறுப்பின் கருவிகளாக்கினர்
அன்றாட வாழ்வில் வெறுப்பை சர்வசாதாரணமாக்கினர்
வெறுப்பின் சுனாமி சுழன்றடிக்கிறது
தேசத்தையும் சுழற்றி அடிக்கிறது
விதைத்ததைத்தானே அறுக்க முடியும் !!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
8/6/2022.

உரைச் சித்திரம் : 12.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 12.

 

கர்வமும் வேண்டாம் !

கழிவிரக்கமும் வேண்டாம் !

 

 


 

 

விலங்குகள் ,பறவைகள் ,புழு பூச்சிகள் ,மரம் செடி கொடிகள் என நம்மைச் சுற்றி இருக்கும் உலகில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்பானது ; ஒவ்வொன்றிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள செய்திகள் உண்டு .

 

தமிழ் சங்க இலக்கிய பரப்பு நெடுகிலும் இத்தகைய நுண் நோக்கு நிறைந்து காணப்படும் . தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர் .இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டனர் . அவற்றை அடுத்த தலைமுறைக்கு சிந்தனைப் புதையலாய் கையளித்துச் சென்றனர் .அவற்றில் சில இக்கால அறிவியல் மற்றும் சமத்துவ உலகுக்கு பொருந்தாமல் போகலாம்.ஆயின் ,காலவெள்ளத்தில் கரையாத உண்மைகளும் நிரம்ப உண்டு.

 

புலவர் காரியாசானின் சிறுபஞ்சமூலத்தில் இருந்து சில காட்சிகளைப் பார்ப்போம்.

 

சிலந்திப்பூச்சிக்கு தன் முட்டையே எமனாகுமாம். பெண்சிலந்தி தன் கடைசி முட்டையை இட்டதும் இறந்துவிடும் .

 

மான் ,ஆடு ,மாடு இன்னபிற விலங்குகளுக்கு கொம்பு எமனாகிவிடும் . புலி ,சிங்கம் ,சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாட துரத்தும் போது மரம் செடி கொடிகளுக்கு இடையே புகுந்து மான்,ஆடு ,மாடு போன்றவை ஓடுமல்லவா ,அப்போது கொம்புகள் அவற்றில் சிக்கிக் கொள்ளும் ; பலியாகிவிடும்.

 

கவரிமான் தன் மயிரை இழந்தால் உயிர் நீத்துவிடும் என்கிற ஒரு செய்தி நீண்டகாலமாக உலவுகிறது .

 

நண்டுக்கு அதன் குஞ்சே எமனாகிவிடும் என்பதையும் அறிவோம்.

 

இப்படி நான்கு இயற்கைச் செய்திகளைச் சொன்ன புலவர் ,அடுத்து நெத்தியடியாய்ச் சொன்னதுதான் “டாப்”

 

ஒருவர் பேசும் வசைமொழிகளே அவருக்கு எதிரியாகிவிடும்.

 

சரிதானே !

 

இன்னொரு பாடலில் புலவர் சொல்கிறார் ;

 

வான் குருவி எனப்படும் தூக்கணாங்க் குருவி மிக வலிமையாக கூட்டைக் கட்டுகிறது .மின்மினிப் பூச்சியை விளக்காக வைத்து அந்தரத்தில் தொங்கி தூக்கணாங்குருவி கூடுகட்டுவது அற்புதமானது.

 

அரக்கு பூச்சி என்றொரு பூச்சி கல்யாண முருங்கை ,பூவரசம் மரம் இவற்றில் குடியேறி அவற்றின் சாற்றை உண்டு எச்சிலாய் துப்பும் ; அது காய்ந்து அரக்காகும் .அதன் வலிமை அதிகம்.

 

உலண்டு என்கிற பட்டுப்புழுக்கள் பின்னும் பட்டுநூலின் மென்மை தனித்துவம் மிக்கது .

 

ஒருவகை அந்துப் பூச்சிகள் குட்டிகுட்டி மரக்குச்சிகளை ஒண்றிணைத்து கூட்டுப்புழுவாக வாழும் .கோல்கூடு அல்லது புழுக்கூடு என அழைக்கப்படும் அவற்றினை பார்த்து வியக்காமல் இருக்க முடியுமா ?

 

அதேபோல் தேன்கூடு .அதனை யோசிக்க யோசிக்க வியப்பே மிஞ்சும் .

 

இப்படி இயற்கையின் வியப்பான செய்திகளைச் சொல்லிவிட்டு புலவர் ஓங்கி உரைப்பது என்ன தெரியுமா ?

 

ஒருவர் எளிதாய் செய்துவிடுகிற செயலை இன்னொருவர் அதேபோல் செய்துவிட முடிவதில்லை . ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் செயல் எளிது ;பிறர் செய்யும் செயல் அரிது . எதையும் குறைத்து மதிப்பிடாதீர்I

 

 

இன்னொரு பாடலில் மிகச்சாதாரண்மாக உண்மையைப் போட்டுடைத்து விடுகிறார் காரியாசான்.

 

 “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்கிற சொலவடை சொல்வதென்ன ? எல்லாம் தெரிந்த ஒருவர் என யாரும் கிடையாது ; இருக்கவும் முடியாது.

 

அதுபோல் எதுவும் தெரியாத சாணி மூளை என வசைபாடுவோம் . ஆனால் அப்படி எதுவும் தெரியாத  “சுத்த சூன்யம்” யாரும் கிடையாது ;இருக்கவும் முடியாது.

 

இரண்டுக்கும் நடுவில்தான் நாமெல்லாம்.

 

இவன் தங்கக் கம்பி ,அப்பழுக்கில்லாதவன் என சிலரைச் சுட்டுவோம் .இதுவும் மிகைக்கூற்றே . கெட்ட குணமோ ,கெட்ட சிந்தனையோ துளியும் இல்லாதவர் எவரும் இல்லை.

 

இவன் /இவள் மகா அயோக்கியன்/ள் மருந்துக்கும் நல்லகுணம் இல்லை என வெறுப்போம் . ஆனால் அந்தக் கல்லிலும் ஈரம் இருக்கும் ;ஒரு புல் தலைநீட்டும் .முழுக்க கெட்டவர் என்று யாருமில்லை .இருக்கவும்முடியாது .

 

இரண்டுக்கும் நடுவில்தான் நாமெல்லாம்.

 

நான் இருபதாயிரம் புத்தகங்கள் படித்துவிட்டேன் . நூல்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என்கிற அகந்தை யாருக்கும் வேண்டாம் . எல்லா நூல்களையும் பழுதறக்கற்றவர்கள் என்று யாருமில்லை ;இருக்கவும் முடியாது .

 

ஆகவே கர்வமும் வேண்டாம் ! கழிவிரக்கமும் வேண்டாம் !

 

இங்கே நான் விவரித்த மூன்று சிறுபஞ்சமூலம் பாடல் காட்சிகளை .இப்போது கீழிருந்து மேலாக அசை போடுங்கள் !

 

மீண்டும் சொல்கிறோம் ;

கர்வமும் வேண்டாம் ;கழிவிரக்கமும் வேண்டாம் !

 

 

சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை

(சிறுபஞ்சமூலம் - 11)




“வான்குருவிக் கூடுஅரக்கு வால்உலண்டு நூல் புழுக்கோல்

தேன்புரிந்து யார்க்கும் செயல்ஆகா - தாம்புரீஇ

வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோ ஒருவர்க்கு

ஒல்காது ஓரொன்று படும்”                                            

                                                         - (சிறுபஞ்சமூலம்: 25)

ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும், இல்.                                       [ சிறுபஞ்சமூலம்:29]

 

 

கர்வமும் வேண்டாம் !

கழிவிரக்கமும் வேண்டாம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/5/2022.