இது மிக நல்ல திருப்பம்.

Posted by அகத்தீ Labels:

 

இது மிக நல்ல திருப்பம்.








ஆம். படத்திலுள்ள மூவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் .அண்மையில் நடந்த மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



குல்பர்க்கா எனப்படும் கல்புர்க்கி மாவட்டச் செயலாளராக தோழர் நீலாவும் [ வயது 55] , பீதர் மாவட்ட அமைப்புச் செயலாளராக தோழர் அம்புபாயி மாளகேவும் [வயது 53] ,உத்தர்கன்னடா மாவட்டச் செயலாளராக யமுனா கோவங்கரும் [வயது 47] தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . யமுனாவின் கணவரும் தோழருமான விட்டல் பண்டாரி மே மாதம்தான் கொரானாவால் உயிரிழந்தார்.



இவை மூன்றும் தமிழ்நாடல்ல என்பதும் , கர்நாடக மாநிலம் என்பதும் சொல்லாமலே விளங்கும் .



கேரளாவில் எனில் வியப்பில்லை கர்நாடகத்தில் என்பதே வியப்பு .



தமிழ்நாட்டில் எப்போது எங்கு என்கிற பேராசையுடன் நினைவலைகளோடு பின்னோக்கி பயணித்தேன்.



பேச அசைபோட விவாதிக்க நிறைய இருக்கிறது …



தெலுங்கானாவும் புன்னப்புராவயலாறும் வோர்லி பழங்குடி போராட்டமும் இன்னபிற வீரகாவியங்களும் கம்யூனிஸ்ட் பெண் போராளிகளின் ஆற்றல்மிகு பங்களிப்பை ,துப்பாக்கியை ஏந்தும் வலிமையை , நாங்கள் பூங்கொடிகளல்ல போர்க்கொடிகள் எனும் உறுதி மிக்க அர்ப்பணிப்பைப் பறை சாற்றுகிறது .



வீரத்தியாகி அக்னீஸ்மேரி ,மணலூர் மணியம்மாள் ,அன்னை லட்சுமி , புரட்சி மலர் லீலாவதி வால்பாறை வீரகாவியத்தில் செங்குருதி சொரிந்த தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளிகள் ,தஞ்சையில் நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் ஒரு சேர எதிர்த்த உழுகுடி பெண்கள் , குமரிமாவட்ட இரப்பர் தோட்டங்களில் செங்கொடி ஏந்தியதற்காக அடக்குமுறையை எதிர்கொண்ட பெண் தொழிலாளர்கள் , ஆலைகளில் முதலாளித்துவக் கொடுமைக்கு எதிராய் இரத்தம் சிந்திய எம் பெண்கள் என நீண்டுகொண்டே செல்லும் தமிழக பெண் கம்யூனிஸ்டுகளின் வீரமும் தீரமும் தியாகமும் அர்ப்பணிப்பும் .



ஜானகி அம்மா , பாப்பா உமாநாத் ,ஷாஜாஜி கோவிந்தராஜன் ,ஜானகி ராமச்சதிரன் என் நீளும் ஆளுமை மிக்க பெண் தலைமைத் தோழர்கள் என நெஞ்சை நிமிர்த்தும் பாரம்பரியம் நம்முடையது .



ஆயினும் சமூகத்தில் சரிபாதியாய் உள்ள பெண்கள் கட்சியிலும் உரிய இடம் பெற வேண்டாமா ? சால்க்கியா பிளீனத்தின் போது இத்திக்கு நோக்கி நம் பார்வையும் பயணமும் திருப்பப்பட்டது . தமிழகத்தில் இக்கடமையை நிறைவேற்ற ஜானகி அம்மாவும் பாப்பா உமாநாத்தும் மைதிலி சிவராமனும் இன்ன பிறரும் நடத்திய இடைவிடா போராட்டம் உந்துவிசையானது .



நாளையும் பேசுவோம்….

 

இது மிக நல்ல திருப்பம். 2.

 

[ நேற்று பதிவிட்டதை மீண்டும் வாசித்துவிட்டு இதனை படித்தால் நன்று ]

 

கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களில் பெண் செயலாளர்கள் தேர்வு பற்றி நான் நேற்றுக் குறிப்பிட்டேன் .மகாராஷ்டிரம் உட்பட வேறு சிலவற்றையும் சில தோழர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .மகிழ்ச்சி .

[மேலும் முன்செல்வோம். நேற்றைய பதிவை ஒட்டி தோழர்கள் பதிவிட்ட பின்னோட்டத்தில் சிலவற்றை இங்கே மேற்கோளாக கையாண்டுள்ளேன்.]

 

ஒரு மாநிலக்குழு கூட்டத்தில் அப்போதைய நெல்லை மாவட்டச் செயலாளர்  பாண்டியனும் பாப்பாவும் நானும் ஓரே காரில் பயணித்து வழியில் ஓர் கூட்டத்தில் பாப்பாஉமாநாத்தை இறக்கிவிட்டுவிட்டு நானும் அவரும் வேறொரு கூட்டத்துக்கு போனோம். திருப்பி வரும் போது பாப்பாவை அழைத்துக் கொண்டு வந்தோம் . பாண்டியனுக்கு பாப்பாவின் போர்க்குணம் மிகவும் பிடிக்கும் . அவர் என்னிடம் அந்த பயணத்தில் சொன்னது “ பாப்பா போடுற சண்டை பலருக்கு கசக்கும் , இந்த சண்டையில்லேண்ணா இந்த ஆம்பிளைங்க பொம்பள பிள்ளைகள கட்சிப் பொறுப்புகளில் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாங்க..” அனுபவத் தெறிப்பான வார்த்தைகள் அவை. .

 

அவசரகாலத்திற்குப் பின் பெண்களை கட்சியில் அதிகம் சேர்க்கவும் வளர்தெடுக்கவும் தீவிர கவனம் செலுத்துவது என கட்சி முடிவெடுத்தது .வாய்ப்புள்ள இடங்களில் பெண்களுக்கென தனிக்கிளை அமைக்கலாம் என்றும் வழிகாட்டப்பட்டது .

 

அதன் ஒரு பகுதியாக பழவந்தங்கலிலும்  பெண்கள் ஆதராவாளர் கிளை தொடங்கும் முகத்தான் ஓர் கூட்டம் தோழர் விஜய ஜானகிராமன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது . விஜயா ஜானகிராமன் , கீதா சேகர் , அறிவியல் இயக்க ராமலிங்கத்தின் மனைவி , என் அம்மா தங்கம்மா , குமாரதாஸின் அம்மா ஜெயாம்மாள் , போக்குவரத்துத் தொழிலாளி ராஜுவின் மனைவி உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர் . நான்தான் கட்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினேன் .

 

அப்போதெல்லாம் கட்சிக் கிளைக்கூட்டம் எனில் விடிய விடிய கச்சேரியாகத்தான் இருக்கும் . அச்சூழலில் மாவட்டச் செயலாளர் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் ஒரு பேரவைக்கூட்டத்தில் சொன்னார் , “ பெண்கள் பங்கேற்கும் கிளைக்கூட்டத்தை சுருக்கமாக குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்கணும் ; பெண்கள் அவர்கள் வீட்டுச்சூழல் வீட்டார் ஒத்துழைப்பு இவற்றிற்கு ஏற்பத்தான் கட்சிப் பணிகளில் பங்கேற்க இயலும் என்கிற சமூக யதார்த்தத்தை புரிந்து பெண்கள் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.

 

 “ஒன்றுபட்ட கட்சியிலும் நமது கட்சியிலும் அதிக பெண்கள் / தலைவர்கள் பங்களித்திருக்கிறார்கள்.  தொழிற்சங்க அமைப்புகளில் ஊழியர்கள் செயல்பட்டார்கள். கட்சிக் கிளைகளில் ஆண்களும் பெண்களும் இணைந்த கிளைகளாகவும் இருந்தன. மாதர் சங்க வளர்ச்சியின் ஊடாக கட்சிக்கு பெண்கள் வரவு அதிகரித்தது . இச்சூழலில் பெண்களுக்கான தனிக் கிளைகள் தேவையாகின . கிளைகள் கூடும் நேரம், (பொதூவாக ஞாயிற்றுக்கிழமை) இவைகளும் பெண்கள் பங்கேற்புக்கு தடையாக இருந்தது ஆகவே அதிலும் மாற்றங்கள் மெல்ல நிகழ்ந்தன .

 

தஞ்சை கிராமங்களில் கட்சி அமைப்புக்குள் பெண்கள் - பெரும்பகுதியும் விவசாயத் தொழிலாளிகள் எனவே இரவுநேர குவியலான கூட்டங்கள் சாத்தியப்பட்டன, நகராட்சி பகுதிகள், மாநகரப் பகுதிகள், தொழிற்சங்க அமைப்புகளோடு இணைந்த உழைக்கும் பெண்கள். மத்தியதர அரங்கங்களில் பணியாற்றும் பெண்கள் இவர்களை கவனத்தில் கொண்டு கட்சி ஆங்காங்கு தன்னை தகவமைக்க வேண்டி இருந்தது. இதற்கொப்ப பல்வேறு யோசனைகளை பாப்பா உமாநாத்தும் மைதிலி சொன்னதை தோழர் சின்னையா நினைவு கூர்ந்தார்.

 

பாலின சமத்துவம் பற்றிய இன்றையப் புரிதல் அன்றைக்கு இருந்ததாகச் சொல்ல முடியாது . பெண்விடுதலை பற்றிய எழுபதுகளுக்கு முந்தைய கருத்தாக்கமும் , எண்பதுகளில் உருவான பெண்சமத்துவ கருத்தாக்கமும், பின்னர் ஓங்கிய பெண்ணிய கருத்தாக்கமும், இன்றைய பாலின சமத்துவப் பார்வையும் ஒன்றல்ல ; ஆனால் ஒன்றின் வளர்ச்சி ஒன்று என கருத்தின் பரிணாம வளர்ச்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் .

 

குருப்ஸ்கயா எழுதிய பெண் சமத்துவ கட்டுரைகளையும் ,லெனின் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக பணிபுரிந்த அலெக்சாண்டிரா கொலந்தாய் வாழ்க்கை வரலாற்றையும் எழுத்துகளையும் மீண்டும் இப்போது வாசிப்பதும் அவசியம் .

 

உழைக்கும் வர்க்க பாலின சமத்துவப் பார்வைக்கும் , உயர் நடுத்தர வர்க்க மற்றும் செல்வச் சீமாட்டிகளின் பாலின சமத்துவத் தேடலுக்கும் இடைவெளி உண்டு ; அதிலும் சாதியம் பீடித்துள்ள நம் சமூக அமைப்பில் அதன் படிநிலையும் ஆதிக்கமும் பெண்ணிற்கு கூடுதல் வலி .மதம் பிடித்த சமூகச் சூழலில் இன்னும் சுமை .

 

இந்த சமூக யதார்த்தம் கட்சிக்குள்ளும் முரண்பட்ட குரலாய் ஒலித்துக் கொண்டே இருக்கும் .அதை எதிர்த்து பாலின சமத்துவதுக்கான நேர்மையான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் .அது நெடிய கருத்துப் போராட்டமும்கூட.

 

பெண்கள் குறித்து தோழர் மைதிலி சிவராமன் எழுதிய ஓர் சிறுபிரசுரம் நீண்ட விவாதங்களுக்குப் பின் அப்போது வெளிவந்தது மிக முக்கியமானது .அது கட்சியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது .

 

 

வாலிபர் சங்கம் ஆரம்பித்த பொழுது அது பெரிதும் ஆண்கள் அமைப்பாகவே இருந்தது . எண்பதில் முற்பகுதியில் கடுமையான முயற்சிக்கு பிறகே அங்கு பெண்களும் இடம் பெறலாயினர் .இங்கு இரண்டு சம்பவத்தை குறிப்பிடல் பிழையல்ல .

 

வாலிபர் சங்கத்தில் பெண் உறுப்பினர்களை சேர்க்க பெரும் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம் . பெண்களும் வாலிபரும் சேர்ந்து பழகினால் பிரச்சனைகள் உருவாகுமென எதிர்த்த ஓர் சிலர் இருந்தனர் .கட்சி போராடி பயிற்றுவித்து அவர்களை இணங்க வைக்க வேண்டி இருந்தது .

 

இன்னொரு சம்பவம் வாலிபர் சங்க மாவட்ட செயற்குழுவில் பெண்களைச் சேர்க்க வேண்டுமென முடிவெடுத்து முதலில் ஐந்து மாவட்டங்களை குறிவைத்தோம் கடும் முயற்சிக்கும் போராட்டத்துக்கும் பின்னேதான் சாத்தியமாயிற்று . உறுதியாக அதனை அமலாக்க கட்சி தோழர்களுக்கு தோழர் ஏ நல்லசிவன் அறிவுறுத்தியதை மறக்க இயலாது .

 

கட்சியிலும் எல்லா அமைப்புகளிலும் பெண்களை மாவட்டக்குழுவுக்கு தேர்வு செய்ய பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது . பேனல் முறைத் தேர்வில் பெண்களை ஒதுக்குவது எளிது , எனவே சில கறாரான வழிகாட்டுதல்களை ,இடஒதுக்கீட்டை பின்பற்றச் செய்ய பெரும் போராட்டமே நடத்த வேண்டி இருந்தது .

 

கடந்த மாநாடுகளில் சில இடைக் குழுக்களின் செயலாளராக பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர் . அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுப்பேற்ற பெண் தோழர்களின் செயல்பாடுகள் மிகவும் மெச்சத் தகுந்ததாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது .

 

தோழர் வே .மீனாட்சி சுந்தரம் சொன்னார் ,  “ களப்பணியில் முத்திரை பதிக்கும்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்  நாட்டு பிரிவு   உண்டு. அதையும் முழுதாக நினைவில் கொண்டாக வேண்டும்.”  

 

அண்மை மாநாடுகளில் மேலும்பல இடைக்குழுக்களுக்கும் கிளைகளுக்கும் பெண் தோழர்கள் செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர் ; மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தன . ஏதேனும் ஓர் மாவட்டத்திலாவது பெண் தோழர் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என ஆவலோடு காத்திருக்கிறேன்…

 

அண்மையில் ஒரு தோழரோடு பேசிக்கொண்டிருந்த போது அவர் கேட்டார் , “ மாவட்டச் செயலாளரோ / வட்டச் செயலாளரோ பெண்ணாக இருந்தால் திடீர்னு இரவில் போலீஸ் ஸ்டேஷன் போக முடியுமா ?”

 

இந்தக் கேள்வியே அபத்தம் .கட்சி அமைப்பு பற்றிய புரிதல் இல்லாமை . செயலாளர் எனில் வட்டகுழுவின் செயலாளர் /மாவட்டக்குழுவின் செயலாளர் என்றே பொருள் . வட்டத்துக்கோ மாவட்டத்துக்கோ செயலாளர் அல்ல . கூட்டுத் தலைமைதான் நம் பண்பாடு . சரியான வேலைப் பங்கீடும் பரஸ்பர ஒத்துழைப்பும் இருந்தால் எந்தச் சிக்கலும் எழாது .அடுத்து நம் செயல்பாட்டின் வீரியம் எங்கும் நமக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தரும் .இந்த சமூகம் ஆண் /பெண் என கோடு போட்டு பிரித்துள்ள வேலைகளை அடித்து நொறுக்கி மாற்றுவதும் கம்யூனிஸ்ட் வேலைதானே !”

 

 “ ஆளுமையும் ஆற்றலும் தலைமைதாங்கும் நற்பண்பும் போர்க்குணமும் மிக்க நம் கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தை நேற்றைய பதிவில் சுட்டினேன். இன்றைக்கும் அந்த பாரம்பரிய தொடர்ச்சியை  காண முடிகிறது .

 

தலைமைப் பொறுப்புகளுக்கு மேம்படுத்துவது - ஏற்க வழிவிடுவது - என்கிற பிரச்சினைகள் பொதுவாக ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் மிகப்பெரும் பிரச்சினை. கட்சியில் ஆண்களே நாற்காலியை இன்னொரு ஆணுக்கே விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத சூழல்.  எல்லைகளும் வரம்புகளும் ஒதுக்கீடுகளும் அமலாக்க வேண்டியுள்ளது.

 

பாலின சமத்துவப் பார்வை கடந்த நாற்பது ஆண்டுகளில் பெரிதும் விசாலமாகி இருக்கிறது . கூர்மைப்பட்டிருக்கிறது .இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும் .கம்யூனிசம் எதையும் இயங்கியலாய் பார்க்கதானே நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது .

 

தமிழ்நாட்டில் மாவட்டச் செயலாளர்களாக பெண்கள் வருவது எப்போது ? பேராசையுடன் அதேவேளை மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .

 

 

·         போர்க்குணமும்

·         லட்சிய உறுதியும்

·         தியாக வாழ்வும்

·         அர்ப்பணிப்பும்

·         தத்துவப் பயிற்சியும்

·         அமைப்பாய் செயல்படும் பாங்கும்

 

இரு பாலருக்கும் உரியதே . இரு பாலர் எனச் சுருக்குவதுகூட இனி சரியா ? திருநங்கை ,திருநம்பி உட்பட அனைத்து பாலினருக்கும் உரியதே !

 

என் பேத்தி மேகா [ இன்னும் நாலு வயசு ஆகலை ] அடிக்கடி சொல்கிறாள் ,”தாத்தா ! பாய்ஸ் செய்கிற எல்லாத்தயும் கேர்ள்ஸூ செய்யலாம்… நான் செய்வேன்…”

 

நாளை இன்னும் வீரியமான மாறுதல் நிகழட்டும் .அதற்கு விதை தூவுவோம்.

 

 

சுபொஅ.

22/12/2021.

 

 

 

 

 

அகத்தாய்வில்… நியாயத்தராசில்….

Posted by அகத்தீ Labels:

 


அகத்தாய்வில்… நியாயத்தராசில்….




நெருநல் உளனொருவன் இன்றில்லை 

இருந்த தடமேனும் இருக்கிறதா ?

தடவிப் பார்த்தாலும் பலருக்கும் தெரிவதில்லை

தோள்தட்டும் பரம்பரையை துலக்கிப் பார்த்தாலும்

தலைமுறைக்கு சொல்ல சங்கதிகள் இல்லை


உண்டான் உறங்கினான் குட்டிகள் ஈன்றான்

வேறென்ன சாதித்தான் ? விவரங்கள் சொல்வீர்!

வாழுங் காலத்தில் அன்பை விதைத்தானா ?

வெறுப்பை மிதித்தானா ? அறிவைத் தேடித்திரிந்தானா ?

இரத்த அணுக்களில் மானுடத்தைக் கலந்தானா ?

வியர்வை சொரிந்தானா ? விஞ்ஞானம் தெளிந்தானா ?

பிறர்கென முயன்றானா ? பிறர் துயர் களைந்தானா ?

காலத்தில் கரைந்தானா ? வரலாற்றில் நிலைத்தானா ?


உயிரோடு இருந்தது வெறும் காலக் கணக்கு

பிறர்கென வாழ்ந்தது மானுடக் கணக்கு

தனக்கென மட்டுமே இருந்தது பிழைக்கணக்கு

ஊரை எழுப்ப ஓயாதுழைத்தது பொதுக்கணக்கு

உலகம் உய்ய குருதி சிந்தியது தியாகக் கணக்கு

பதவி பணம் என குறியாய் இருந்தது குற்றக்கணக்கு

அகத்தாய்வில் உனது கணக்கைத் திருப்பிப் பார் ! 

அடுத்த தலைமுறை  நியாயதராசில் எடைபோடும் !


சுபொஅ.

15/12/2021.

ஓசூரிலிருந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கு...

Posted by அகத்தீ Labels:

 

ஓசூரிலிருந்து லேட்டாக வந்தாலும் , லேட்டஸ்ட்டா வந்திருக்கு….




 

 “வாசல்” ஓர் வித்தியாசமான அதேவேளை செறிவான ஓர் இலக்கியத் தொகுப்பு .ஓசூர் புத்தகத் திருவிழா 2021 ஐ ஒட்டி வெளியிடப்பட்ட நூல் .இது வழக்கமான மலரல்ல . விளம்பரம் துளியும் இடம்பெறவில்லை . ஒண்பது சிறுகதைகள் , எட்டு கவிதைகள் ,  மூன்று கட்டுரைகள் ,ஒர் புகைப்படத் தொகுப்பு ,இதரவை ஐந்து என 144 பக்கங்களில் ஓசூரின் படைப்பு மனம் பளிச்சிடுகிறது . அனைத்து படைப்பாளிகளும் ஓசூரோடு வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர்கள் என்பதுதான் இத்தொகுப்பின் மேன்மை .

 

கரிசல் இலக்கியம் கரிசல் எழுதாளர்கள் என மண்சார்ந்து ஓர் இலக்கிய படைவரிசை தென் மாவட்டங்களில் உருவானது . தங்கர் பச்சான் செம்மண் இலக்கியம் செம்மண்  எழுத்தாளர்கள் என பேசினார் ; முயன்றார் . நாஞ்சில் ,கொங்கு ,தஞ்சை இப்படி சில முயற்சிகளும் துளிர்த்தன ஆயினும் கரிசல் அளவு நிலைக்க முடிந்ததா ? ஏன் ? இதுவே விரிவாகப் பேச வேண்டிய செய்தி. சென்னையின் பெருநகர நெரிசலில் தனித்துவம் பளிச்சிடும் வாய்ப்பு மிகக்குறைவு . ஓசூரின் முகவரிக்கான முயற்சியில் 1997ல் “ பனியெனக் கவியும்” கவிதைத் தொகுப்பு முதன் முதலாய் வெளிவந்தது .இருபத்தி நாலு ஆண்டுகளுக்குப் பின் “ வாசல்” திறந்திருக்கிறது .  “ ஓசூரிலிருந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு”ன்னு சொல்லும் தரத்தோடு …

 

எல்லா படைப்பாளிகளும் ஓசூரில் பிறந்தவரல்ல . செவிடப்பாடி எனும் சிற்றூர் ஓசூரானதும் , எழுபதுகளில் ஆலைச்சங்கு முழங்க புது முகம் பெற்றதும் , நிறைய பேர் வாழ்வு தேடி இங்கு வந்து இவ்வூர்வாசிகளாகிப் போனதும் வரலாறு . அப்படி இந்நகருக்கு வந்து கலந்துவிட்ட எழுத்தாளர் , பேராசிரியர் ,தொழிலாளர் , சமூக செயல்பாட்டாளர் ,கணக்காளர் , தொழில் முனைவோர் என பலதரப்பட்டவரின் படைப்பாற்றல் வியக்க வைக்கிறது .இது மோசம் என எதையும் தள்ளி வைக்க முடியவில்லை. பைரவி சிவாவின் முகப்போவியம் பின் அட்டை ஓவியம் தொடங்கி முத்துவேலின் புகைப்படம் வரை ஒவ்வொரு பக்கமும் பொருள் பொதிந்ததே !

 

இத்தொகுப்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சார்ந்து இரண்டு கதைகள் .ஒன்று ஆதவன் தீட்சண்யா எழுதிய “ அடுத்த கதை…?” நம்மை உலுக்கி எடுக்கிறது . “ செத்த பின்னும் அடையாள அட்டையாய் இருந்து இவர்களுக்காக உழைக்கும் அந்த அனாமதேயங்களைப் பற்றி ஒரு கதை எழுதும் யோசனையுடன் நான் அங்கேயே அமர்ந்திருக்கிறேன் வெகுநேரமாய் .” என முடியும் அக்கதை ,எப்படி முகமும் முகவரியும் அற்று பாதுகாப்பும் இன்றி உழைப்புச் சுரண்டலில் ஓசுருக்கு வந்த வடநாட்டு தொழிலாளர்கள் பிழிந்து எறியப்படுகிறார் என்பதை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது  . அடுத்து பழ.பாலசுந்தரம் எழுதிய “ பொன்னாறு” ராஜஸ்தானுக்குப் போன ஆழ்குழாய் கிணறு தோண்டும் தமிழகத் தொழிலாளரின் எந்திரமயமான வாழ்வும் பணியுமாய் தொடங்கி பாலைவனத்தில் நீரூற்றாய் முடிகிறது . ராஜஸ்தானின் தண்ணீர் தாகமும் நம்மைக் குடைகிறது . ஆக இந்த இரு கதைகளும் மொழி ,இனம் ,மாநிலம் என்கிற வேலிகளைத் தாண்டி மனிதம் பேசுகிறது .வாழ்வின் வலியைப் பேசுகிறது .

 

ஓசுருக்கும் சர்க்கஸுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது . ஒரு கவிதையும் ஒரு சிறுகதையும் அதனூடே வந்துள்ளது . “ கசங்கிய உடைகளணிந்த அந்த சிறுமி /பறக்கவிடும் விளம்பரக் காகிதங்களை / விரட்டிப் பிடிக்க யாருமில்லை..” இப்படி நெஞ்சைப் பிசையும் வரிகளோடு பத்ம பாரதியின் கவிதை . பெண்ணிய சிறுகதை ஆனால் ஆணாதிக்க மனோநிலையில் கதாநாயகனை பேசவிட்டு ; “ அவள் பொறுமை இழந்துவிட்டாள் எந்த நிமிடமும் கத்தியை சரித்திரத்தின் மீது வீசுவாள் ,”  என எச்சரிக்கும் கதையே  “சர்க்கஸ்.”  எழில் வரதனின் கதை சொல்லும் சேதி அபாரம் .

 

 “ஒரு தடவை புலியைப் பார்த்துவிட்ட நிலையில் இனி அந்த இடத்தில் படுத்துக் கொள்வது அச்சமாக இருக்காதா … என்ற கேள்விக்கு ….. அது முதலில் தங்களுடைய இடமாகத்தான் இருந்தது … அங்கே படுத்துக் கொள்வது தன் பிறப்போடு கூடவே தொடர்ந்தது என்ற அவன் பதில் … ஊடகமதிப்பில் இது செலவாணியற்ற பதில்..” இப்படி விரியும் பா.வெங்கடேசன் படைத்துள்ள சிறுகதை “வாசல்” .  நகர்மயமாகும் போது வாழ்விடத்தை இழந்து கூலியாகி வறுபடும் வாழ்வின் வாதையையும் , ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியையும் இணைத்து பின்னிய உளவியல் நுட்பம் தோய்ந்த கதை .

 

பாலகுமார் விஜயராமன் 12 குறுங்கதைகளை இணைத்து “ தருணங்கள்” என ஓர் சிறு கதைச் சித்திரம் தீட்டியுள்ளார் . ஆலை பற்சக்கரமாய் தேய்ந்து ஓய்வு பெற்றும் ஓர் தொழிலாளி மீண்டும் கூலியாக வேண்டிய நிலையைச் சொல்லும் ஜெகதீஷ் எழுதிய “ சக்கரம்” , செருப்பே பேசி செருப்பே பழிவாங்கும் சாதிய செருக்கை செருப்பாலடிக்கும் சங்கர் எழுதிய “ செருப்பு” , “ கம்மனாட்டி ! நீ என்ன பிறவிடா நீ ! ஒரு எழுத்தை மாற்றிப்போட்டு மூஞ்சி தெரியாதவர்களை அன்பு செஞ்சிட்டியேடா!” என சொற்களின் தேர்விலும் மானுட அன்பை வலியை வலியுறுத்தும் ராகவனின் “ஓரெழுத்தில் ஓங்கினான்” என ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கிறது .

 

 “ காலமெல்லாம் காழ்ப்பில்லா நண்பனாகக் /கடைசிவரை காப்பதுவும் நூல்கள்தாமே” என கவிபாடும் பாவலர் கருமலைத் தமிழன் , “ பெண்ணவளே தலைமைக்கு முன்னவளாம் காண்க” எனும் கவிஞர் ஓசூர் மணிமேகலை ,பெருந்தலைவர் காமராஜுக்கு புகழ்மாலை சாற்றும் இராஜ குமாரன் , “ நலமாக நாள்தோறும் நற்றமிழை நாம் சுவாசித்தால் /வளமான வாழ்க்கை பெற்று மகிழ்ந்திடலாம்” என நம்பிக்கையை சொல்லும் அ.க.இராசு என கவிஞர் படை அழகு சேர்த்திருக்கிறது .

 

“படித்துறை பற்கள் சிதைந்த /உள்வரு நீர்வழிகள் தூர்ந்து / துவாரங்கள் புதைந்த கோமா உடலென / ஏரிச்சடலம்” என கவிதை வீசும் ரமேஷ் கல்யாணும் , ராமநாய்க்கன் ஏரி பற்றி வரலாறும் நினைவுகளும் கவலையுமாய் கட்டுரை தீட்டிய பெரியசாமியும் சொல்லும் செய்தி ,” புதிதாக உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது காணாமலாக்காமல் விழிப்போடிருப்போம்,” என்பதுதான். .

 

தொகுப்பில் எல்லாமே சமூகச் செய்திகளே எனினும் நிகழ்கால அரசியல் வெப்பம் வீசாமல் இருக்குமோ ? “கோணாலனா ஒரு காலத்தில்…” என நிகழ்காலத்தின் கசக்கும் உண்மைகளை சவுக்காலடிப்பதுபோல் கவிதை படைத்த சம்பு , லாக்டவுன் இந்தியாவை வெளிச்சம் போட்டுக் காட்டும் சி.பி.ஜெயராமன் , அற்புதமான பகடி நடையில் சங்கரநாராயணன் தந்துள்ள “  “வரிச்சூடும் வாழைப்பழம்” ஆட்சியாளின் மோசடி நாடகத்தையும் வரிக்கொடுமையையும் ஒருங்கே தோலுரிக்கிறது . இவை அனைத்தும் வாழ்வுரிமை அரசியலைப் பேசுகிறது . [ இவற்றை சமூக ஊடகங்களில் பரப்பலாமே : உரியோர் கவனிக்க ]

 

ஜே .கே , லா. ச. ரா குறித்த சப்தரிஷியின் நினைவோடையும் , அறமும் அன்பும் ஓங்க மூன்று நிகழ்வுகளை சுரேசுகுமார் நாகராசன் சுட்டிக்காட்டி நாட்டு நடப்பை படம் பிடித்திருப்பதும் நன்று. வாசிப்புகளுக்கும் படைப்புகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறார் எம் ஜி சசிதேவ்.

 

ஒவ்வொரு படைப்பின் கீழும் படைப்பாளியைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருப்பது சிறப்பு . குறையெனச் சொல்வதானால் , கவிதைகளை படங்களின் மேல் அச்சிட்டதால் வாசிப்பு சிரமமாகிறது என்பதுதான் . நூல் கிடைக்கும் இடம் தெரிவித்திருக்கலாமே !

 

 “தமிழ் மரபுக்கு இம்மாதிரியான தொகைநூல் புதிதல்ல … அந்த மரபின் தொடர்ச்சியாய் இந்த எளிய தொகுப்பு வந்திருக்கிறது.” என்கிறார் தொகுப்புரையில் கமலாலயன் . ஆம் .மிகச்சரி ! இதுபோன்ற தொகை நூல்களை ஊக்குவிப்பது நம் கடனல்லவா ?

 

வாசல்

2021 – பத்தாவது ஓசூர் புத்தகத் திருவிழா தொகுப்பு நூல் ,

வெளியீடு :

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் - ஓசூர் ,

கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போர் நலச்சங்கம்.

 

பக்கங்கள் : 144 , விலை : ரூ.140/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

11/12/2021.

சங்க இலக்கியத்தின் வழி தமிழர் பண்பாட்டு வேரைக் கொண்டாடி...

Posted by அகத்தீ Labels:

சங்க இலக்கியத்தின் வழி

தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி…..

 

 


 

 “ சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக “ எனும் நூலை வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை .ஆர் .பாலகிருஷ்ணனின் ஆழ்ந்த தேடலும் புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புன்னகைக்கிறது .

 

எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் அலுவலகத்தில் ஓர் மாலையில் சமுத்திரம் ,சிகரம் செந்தில்நாதன் ,தயானந்தன் பிரான்ஸிஸ் , நான் ,ஆர் .பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது ; அப்போது சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட வேர் குறித்து ஊர் பெயர்களூடே அவர் விவரித்த காட்சி மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது .

 

இந்நூல் வழக்கமான சங்க இலக்கிய விவரிப்போ , நயந்துரையோ அல்ல அதற்கும் மேல் மானுட பண்பாட்டில் தமிழரின் உயரிய பங்களிப்பை இன்றைய காலத் தேவையூடே நுணுகி அலசி காட்சிப் படுத்தியுள்ள களஞ்சியம். பத்து தொடர் உரையின் தொகுப்பு இந்நூல் .

 

 “…… …… …… ….. …. ….. …. …. …. ….. …..

….. ……. …… …… ……. ….. ….. ….. ….. ….. ….

பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

மாரி பொய்ப்பினும் ,வாரி குன்றினும்

இயற்கை அல்லன் செயற்கையில் தோன்றினும்

காவலர்  பழிக்கும்இக் கண்கள் ஞாலம்

அதுநற்கு அறிந்தனை யாயின் ,நீயும்

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது

பகடுபறம் தருநர் பாரம் ஓம்பிக்

குடிபுறம் தருகுவை யாயின்நின்

அடிபுறம் தாங்குவர் அடங்காதோரே”

 

இந்தப் பாடலை முதல் உரையில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு கொண்டு வரும் போது நூலாசிரியர் சொல்கிறார் , “ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதாரணப் புலவர் மன்னனைப் பார்த்து ஓர் அறிவுரை சொல்லியிருக்கிறார் . அதனை ஆவணப்படுத்தியுள்ளனர் .இப்போதைய சூழலுக்கு கற்பனை செய்து பாருங்கள் .ஓர் இலக்கியவாதியோ அல்லது ஊடகவியலாளரோ இடித்துச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளதா ?”

 

முழுப்பாடலையும் சுட்டிவிட்டு பொருளைச் சொல்லுகிறார் ,” …. …இவ்வாறு நீ வெற்றி பெறுவதற்கு நீ கொண்டு செல்லும் படை மட்டும் காரணமல்ல , உன் நாட்டில் உழுகின்ற விவசாயிகளின் நெல்லினால் விளைந்த பயனும்தான் காரணம் . விவசாயிகளின் கலப்பை பயிரை மட்டுமல்ல ,உனது வெற்றியையும் கொடுக்கிறது . இவ்வாண்டில் மழை வரவில்லை என்றாலும் வளம் குன்றினாலும் இயற்கை பிரச்சனைகள் அல்லாது செயற்கைப் பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் காவலரைத்தான் குறை சொல்லுவார்கள் . அதாவது மன்னன் மீதுதான் பழிபோடுவார்கள் . அதனால் நீ விவசாயிகள்தான் உனது அரசு ,நாடு என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காத்து ,அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் இதில் அடங்கிவிடும் .”

 

முதல் உரையில் இடம் பெறும் இந்த சித்தரிப்பே நூலின் செல்திசையை நமக்கு சுட்டிவிடுகிறது . ஒவ்வொரு உரைக்கும் எடுத்தாண்டுள்ள தலைப்பை கூர்ந்து நோக்கினாலே நூலின் ஆழமும் அகலமும் விளங்கும் .

 

1.சங்கச் சுரங்கம் அறிமுகவுரை , 2.பசிப்பிணி மருத்துவன் , 3. பிறர்கென முயலுநர் , 4.பருத்திப் பெண்டிர் ,  5.கடவுள் ஆயினும் ஆக , 6.கல்லா இளைஞர் , 7.முதுவோர்க்கு முகிழ்த்த கை ,8.இமிழ் பனிக்கடல் ,9.சேண் நடும் புரிசை ,10 .இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! என்கிற பத்து உரையும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த விவசாயம் , பொதுநலம் , நெசவு , உழைக்கும் பெண்கள் , தோளில் கை போடும் நம் சாமி ,கல்வி ,கல்வி அறிவின்மை , முதியோர் குறித்த பார்வை , சுற்றுச் சூழல் , செங்கல் ,வீடு , மரணம் என நிறையப் பேசுகின்றன .

 

ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் தமிழ் சமூகம் குறித்த பெருமிதத்தோடு ஒவ்வொருவரும் தாம் தமிழனாகப் பிறந்த பேறை எண்ணி இறும்பூதெய்தாமல் இருக்க முடியுமா ?

 

ஒவ்வோர் உரை குறித்தும் தனித்தனியே நிறைய எழுதலாம் . நூலறிமுகத்தின் எல்லை கருதி பத்து உரை குறித்து பத்து செய்திகளும்  கேள்விகளுமாய் மட்டுமே எழுதப் போகிறேன்

 

1] “மண்ணில் விளைந்து வாய்வழி வளர்ந்த மரபுகளின் ஆவணம்,” சங்க இலக்கியம் எனக்கூறும் நூலாசிரியர் ; சங்க இலக்கியத்தில்  “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்கிறார் . மிகச் சரிதான் . நீண்ட இலக்கிய பரப்பினூடே நம் பண்பாட்டு அரசியலை நிறுவும் நுட்பமான முயற்சி பாராட்டுக் குரியது,தோராயமான கால எல்லையும் ,மருதத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த படிநிலையும் சேர்க்கப்பட்டிருக்கலாமோ ?

 

2] பசிப்பிணி குறித்த தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான பார்வையும் கனவும் எண்ணும் தோறும் ஆச்சரியம் கூடுகிறது . அதனை வலுவாகவே உரையில் நூலாசிரியர் பதிவும் செய்திருக்கிறார் .  ‘இரந்தும் உயிர் வாழும்’ சூழலும் இருந்திருக்கிறது ,  ‘கைமாறு கருதா ஈதல்’ குணமும் இருந்திருக்கிறது என இருபுறத்தையும் காட்சிப் படுத்திய  நூலாசிரியர் மத்திய அரசின் தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து அழிபசி போக்க தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தியது சங்க இலக்கியம் தந்த ஊக்கம் என்கிறார் . இப்பகுதியில் மணிமேகலையின் அட்சயபாத்திரம் குறித்து வலுவாகச் சொல்லியிருக்கலாமோ ? பாரதி வரை பயணிக்கும்போது மணிமேகலையும் பேசலாம்தானே ? தமிழ் மண்ணிலும் கற்பனா சோஷலிச வேர் இருந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ ?  [ 49 ம் பக்கம் பாரதியார் பாடல் வரியை வள்ளலார் வரியாகச் சுட்டிய பிழையை அடுத்த பதிப்பில் நேர் செய்க ]

 

3] அமிழ்தமே கிடைப்பினும் பகுத்துண்ணும் பண்பாட்டு பெருமை உரக்கப் பேசப்பட வேண்டிய செய்தியே . “ தமக்கென முயலா நோன்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே,” என்கிற மானுடம் போற்றும் வாழ்நெறிக்கு ஈடில்லை . இது நமக்கு வழித்துணை என நூலாசிரியர் முடிவுக்கு வருவது முற்றிலும் நியாயந்தான்.

 

4] நெசவு , துணி வணிகம் ,உழைக்கும் பெண்கள் என விரிந்த பரப்பில் ஆற்றிய குறுகிய உரையாயினும் ஆழந்த ஆய்வுக்கு களம் காட்டும் முன்னெடுப்பாகும் . யாரேனும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது ; தொடர்ந்து செய்வதும் தேவையே .

 

5]  “ பெருங்கோயில்களில் இத்தகைய சாமி ஆடுதல் நிகழ்வு ஏன் நடைபெறுவதில்லை என்ற கேள்வியினைக் கேட்டால் , அதற்கு பதில் ,ஏனெனில் பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது ;உங்களைச் சாமிக்கும் தெரியாது .அதன் ஸ்தல புராணங்களில் யார்யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை.” எனக் கூறும் நூலாசிரியர் , “ நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்களில் ஒருவரைப்போல் விளித்து கேள்வி கேட்கும் நடை முறைக் காணப்படுகிறது .” என்கிறார் .முருகன் வழிபாடு வெறியாட்டு குறித்து வலுவாகச் சொல்கிறார் . பரிபாடல் காலத்தில்தான் சுப்பிரமணியனும் தெய்வயானையும் முருகனோடு வலிந்து திணிக்கப்பட்டு நம் மூத்தகுடி வள்ளிக் குறத்தி சக்காளத்தி ஆக்கப்படும் கொடுமை நடக்கிறது .இந்த சமஸ்கிருதமயமாக்கல் அல்லது பார்ப்பணிய மயமாக்கல் குறித்து உரையில் சொல்லப்படிருப்பினும் நா.வானமாமலை சுட்டிக் காட்டியதுபோல் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ ? குறிஞ்சி நிலம் போல் ஐவகை நிலத்திலும் நம் மண்ணோடும் மனதோடும் நிறைந்த சாமிகள் வேறு ; அதுபோல் நம் தாய் தெய்வங்கள் வேறு .இது குறித்து தனிநூலே ஆசிரியர் எழுதலாமே ? செய்வீர்களா ?

 

6]  “தொல்தமிழர் கல்விக் கொள்கை : அரசன் வெளியிட்ட அறிக்கை” என புறநானூற்றின் 183 வது பாடலை , “ உற்றுழி உதவியும்…. அவன் கண் படுமே,” எனும் பாடல் வரியைச் சுட்டுகிறார் .கல்வி ,கல்லாமை பற்றி நிறைய செய்திகளை இவ்வுரையில் அடுக்குகிறார் . படித்தவனே போற்றப்படுவான் என வரைந்து காட்டுகிறார் . கீழடியில் கிடைத்த எழுத்து பொறித்த பானையை சுட்டி கல்வியில் ஓங்கிய பழந்தமிழர் என பெருமிதம் கொள்கிறார் .அதே நேரம் கல்லாமை இருந்ததையும் சொல்கிறார் .  இக்கட்டுரை தமிழரை சுயபெருமிதம் கொள்ளத் தூண்டும் .அது தப்பில்லை .ஆயின் , கல்வியிலிருந்து சமூகத்தின் பெரும் பகுதியினரை விலக்கி வைக்கும் அநீதி எப்படி அரங்கேறியது என்பதையும் இவ்வுரைப் பரப்புக்குள் கொண்டுவந்திருக்க வேண்டாமா ?

 

7] முதியோருக்கான கொள்கை அறிக்கை பற்றி இன்றைக்குப் பேசுகிறோம் . அன்றைக்கே முதியோரை வணங்கி துணைநின்ற முதுவோர்க்கு முகிழ்த்த கை இருந்ததையும் முதியோர் குறித்த  தமிழ் சமூகத்தின் நுண்ணிய பார்வையையும் விரிவாகச் சுட்டுகிறது .பயனில் மூப்பையும் சொல்லத் தவறவில்லை .இன்றைக்கு முதியோர் குறித்த பார்வையும் முதியோர் இல்லம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையும் தேவை அல்லவா ? விவாதிக்க களம் அமைக்கும் உரை .

 

8] “ கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமம்” என்கிற சொற்றொடரை வைத்து மீன் தூங்குமா என கேள்வி எழுப்பி , தூங்கும் என விடையும் தந்துள்ளார் நூலாசிரியர் .கடல் என்பது பெரிதும் நெய்தல் நிலத்தோடு தொடர்புடையதுதான் எனினும் பிற நில மக்களுக்கும் கடல் தொடர்புடையதாய் இருப்பதை , பரதவர் வாழ்வை , கடலும் சுற்றுச் சூழலும் ,கடலும் இயற்கைப் பேரிடரும் என கடலுக்குள் மூழ்கி பல செய்திகளை சங்க இலக்கியத் துணையோடு நூலாசிரியர் தருகிறார் . நெய்தல் நிலம் சார்ந்த ‘ இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,’ குறித்து பரக்கப் பேசுகிறது . புவிவெப்பமாதல் குறித்து பேசும் காலகட்டத்தில் இம்மீள் பார்வை மிகத் தேவையான ஒன்று .

 

9] “ சிந்துவெளிச் செங்கல் ,சங்க இலக்கியச் சுடுமண் ,கீழடியின் செங்கல் சுவர் என்ற தொடர் நிகழவினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுரையினுடைய முக்கிய விசயமாகும் .” என நூலாசிரியர் சொல்வது மட்டுமல்ல அத்திக்கில் நம்மையும் நகர்த்தியுள்ளார் . நாம்   உரக்கப் பேச வேண்டிய விசயமல்லவா இது ? அதற்கு விசைதருகிறது இவ்வுரை .

 

10] “ …. பொருள் நிலையாமை ,யாக்கை நிலையாமை ,வாழ்க்கையினுடைய நிலையாமை இதெல்லாவற்றையும் பேசி அதனுடைய உள்ளீடாக இருக்கும் வாழ்க்கையினை வாழச் சொல்லி வற்புறுத்துவதுதான் சங்க இலக்கியத்தின் குறிக்கோள் “ இவ்வாறு மரணம் குறித்த சங்க இலக்கிய பார்வையை விவரிக்கிறார் நூலாசிரியர் . ‘செய்ப எல்லாம் செய்தனன்’ அதாவது ஒருவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதையே வாழ்க்கை எனக் கொண்டாடும் பண்பாட்டு சித்தாந்தம் தமிழருடையது .ஆம்.சாக்குருவி வேதாந்தம் அல்ல , அனுபவித்து வாழும் நெறியே தமிழர் பெருமை .

 

 “ அடிப்படையில் பாலா சார் எந்தத் தத்துவத்தையும் சார்ந்து பார்க்கிறவர் இல்லை .திறந்த மனதோடு எல்லாவற்றையும் பார்ப்பதுதான் அவருடைய தத்துவம் .பன்மியம் என்பதுதான் அவருடைய தத்துவமாக உள்ளது . அதுதான் சங்க தத்துவம்கூட .” என தமிழ்ச்செல்வனின் வரையறை சரியானதுதான் .

 

இந்நூல் கொரானா கடுங்காலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் ,களம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய இணையவழி பத்து தொடர் உரைகளின் தொகுப்பு .  “முதல் பத்து”  என்பது “ டாப் டென் “ என்கிற பொருளிலோ , இது முதல் பத்து உரை இன்னும் தொடரும் எனும் பொருளிலோ இருக்கலாம் .எதுவாயினும் வேறல்ல .சரியே !

 

சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்ப்பதும் , தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது .இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது .

 

இந்த நூல் சுட்டும் நியாயமான பெருமிதத்தோடு ; தமிழ்ச் சமூகம் வர்ணமாக கூறு போடப்பட்டதையும் வர்க்கமாக பிளவுண்டு நிற்பதையும் இணைத்து புரிந்து பண்பாட்டை மேலும் முன்னெடுக்க இந்நூலும் ஆயுதமாகட்டும் !

 

சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ,

நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,

பக்கங்கள் : 264 , விலை : ரூ.270/

வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,

நூல் பெற : 044 24332424 / 24332924 / 24356935

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

பொறியில் சிக்கிய எலியென

Posted by அகத்தீ Labels:

 

எங்கும் ஒரே புழுக்கம்

வெக்கை தாள முடியவில்லை

காற்று மருந்துக்கும் இல்லை

மூச்சுத் திணறுகிறது

கதவு ஜன்னல் என

ஒவ்வொன்றாய் சாத்துகிறார்கள்

ஆங்கார சிரிப்பொலி அச்சுறுத்துகிறது

பொறியில் சிக்கிய எலியென

கொண்டாட்டித் தீர்க்கிறார்கள்

கடவுளும் கார்ப்பரேட் வசமாகிவிட்டார்

நமக்கு நாமே துணை

நாம் பலர் அவர் சிலர் !

இனியும் கதவைத் தட்டிக்கொண்டிருக்க

முடியாது… உடைத்தெறி !

 

சுபொஅ.

18/11/2021.

நெய்தலின் கேள்விகள்

Posted by அகத்தீ Labels:

 சென்னை பெருநகரமாகாமல்

ஐநூறு ஆண்டுகளுக்கு 
முந்தைய நெய்தல் நில 
பாக்கங்களும் பட்டணங்களுமாய்
மட்டுமே இருந்திருந்தால் 
இந்த புயல்மழையில்
யாரேனும் பேசியிருப்போமா ?
கடலோரக் கிராமங்களை
கடல் வாரி முழுங்கினும்
பேச வாய் இருக்குமோ ?
பார்க்க கண் இருக்குமோ ?
நெய்தலின் துயரை 
பேசுவோர் யாரிங்கு
காலங்காலமாய் காட்சி இதுவே!

சென்னையின் வளர்ச்சியிலும் 
நெருக்கடியிலும் துயரத்திலும் 
பங்குதாரரான  மக்களே ! நீங்கள்
பஞ்சம் பிழைக்க வந்தவரோ !
இம்மாநிலத்தோரோ ! அல்லாதோரோ !
துறைமுகம் உருவாக்கப்பட்டு பின்
தொழில் நகராகவும் தலைநகராகவும்
வர்த்தக நகராகவும் இல்லாவிடில்
வந்திருப்பீரோ ! வந்திருப்பீரோ !
நெஞ்சைத் தொட்டுச் சொல்வீர் !

சென்னையின் துயரம் ஒற்றை நாளில்
ஓரிருவரால் வந்ததாமோ ?
யார் யார் பங்கு எவ்வளவு என
காய்தல் உவத்தலின்றி ஆயப்புகின்
குற்றவாளிக் கூண்டில்தான் 
ஒவ்வொருவரும் நின்றாக வேண்டும் !
சம்மதமோ ஒவ்வொருவருக்கும் …
குறைந்த பட்சம் வெள்ளைக்காரன்
தொடங்கி இன்று வரைக்கும்
ஒவ்வொரு ஆட்சிக்கும் 
ஒவ்வொரு அடிவைப்புக்கும்
பிரமாண்ட வளர்ச்சியிலும்
பிரச்சனை புதைசகதியிலும்
பங்குண்டே ! மறுப்பீரோ !

இனி திரும்பிச் செல்லல் என்பது
ஒரு போதும் நடக்க முடியாது
அறிவு –அனுபவம் –நடைமுறை
அனைத்தும் கலந்து
ஆட்சி –வல்லுநர் –மக்கள்
கூட்டிணைவில் காணவேண்டும் 
இனியொரு நல்வழி ! புதுவழி !
காலம் சொல்லும் பாடம் கற்றவழி
நடக்குமா ? நடக்க விடுவாரோ ?

சுபொஅ.
13/12/2021.
---


மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் ஒற்றுமையும் முரண்பாடும்

Posted by அகத்தீ Labels:

 


 “மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர் ஒற்றுமையும் முரண்பாடும்” என்கிற நூலை மூத்த தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதி இருக்கிறார் . ஏற்கனவே இம்மூவரின் வாழ்க்கை வரலாற்றை நயம்பட எழுதியவர் . மூவர் மீது மிகுந்த மரியாதையும் ஆழந்த ஈடுபாடும் கொண்ட ராமகிருஷ்ணன் காய்தல் உவத்தலின்றி அலுசும் இயல்பினர் .

 

இந்நூலில் மூவரின் வாழ்வையும் பங்களிப்பையும் தனித்தனியே சுருக்கமாகத் தொகுத்தளித்துவிட்டு ;இன்றைக்கு மூவரின் தேவையும் வலியுறுத்துகிறார் .

 

தற்போது ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தும் - குறுக்குசால் ஓட்டும் பேர்வழிகள் மிகுந்துவிட்டனர் . இவர்களின் நோக்கமும் செயலும் இறுதியில் பாசிச சக்திகளுக்கு உதவும் .ஆகவே மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் மூவரையும் ஆயுதமாக்க வேண்டிய காலத்தின் கட்டளையை இந்நூல் பேசுகிறது .அத்துடன் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய சமூகப் போராட்டங்களின் வரலாற்று குறிப்புகளை பட்டியலிடுகிறது.

 

“மார்கஸ் – பெரியார் –அம்பேத்கர் ஆகிய மூவரின் கருத்துகளையும் ஒப்பீடு செய்யும்பொழுது உலகம் முழுவதும் அடிப்படையான சமுதாய மாற்றத்திற்காக நிற்கும் மார்க்சியமும் ,பெரியாரின் கடவுள் மறுப்பு கண்ணோட்டமும் ,சுயமரியாதையும் ,அதேபோன்று அம்பேத்கரின் சமூகநீதி என்ற லட்சியமும் இணைந்து இந்தியாவின் அவசர அவசியத் தேவை என்பது மட்டுமல்ல .அது காலத்தின் கட்டாயமும் ஆகும் .” என்கிறார் நூலாசிரியர் என்.ராமகிருஷ்ணன் .

 

களத்தில் நிற்கும் தோழர்கள் வாசிக்க வேண்டிய நூல் .மேலும் மேலும் இவர்களைப் பற்றி அறிய மேலும் மேலும் வாசிக்கத் தூண்டும் நூலும்கூட .அந்தத் தேடலே இன்றையத் தேவையாகும்.

 

நூல் தேவைக்கு தொடர்பு கொள்க : 9486927364  ,044 24356935 / 24332924.