“’தேசபக்தி’ , ‘தேச எல்லை’ பேச்சுகளின் ஆரவாரத்தில் நசுக்குண்டு கதறும் மனிதமும் நாகரீகமும்
நம்மைக் கலங்க வைக்கிறது …. “
பிணவாடையும் கண்ணீர் உப்புக் கரிப்பும் : நடுநிசி
எல்லைகள்
ரொமிலா தாப்பரின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கும் சுசித்திரா
விஜயன் எழுதிய ‘நடுநிசி எல்லைகள்’ எனும் நூலை
வாசித்து முடித்த போது நெஞ்சில் அப்படி ஒரு கனம் . மூளையில் அப்படி ஒரு கொந்தளிப்பு
. ’தேசபக்தி’ , ‘தேச எல்லை’ பேச்சுகளின் ஆரவாரத்தில் நசுக்குண்டு கதறும் மனிதமும் நாகரீகமும் நம்மைக் கலங்க வைக்கிறது .
இந்த நூல் கிட்டத்தட்ட
ஒன்பது ஆண்டு கடும் உழைப்பின் விளைச்சல் . சவால் மிக்க எல்லையோர கிராமங்களில் பயணித்து
கண்டும் ,கேட்டும் ,படித்தும் உரையாடியும்
சேகரித்த செய்திகள் அனுபவங்களின் பிழிவு .
“ ஆக ,ஒரு காலத்தில் ,
எல்லைப் பகுதிகள் வேறுபட்ட கலாச்சாரங்களின் ஒருங்கிணைவு உருவாகும் இடங்களாகவோ,சந்திப்பு
மையங்களாகவோ ,கலாச்சார பரிமாற்றம் நிகழும் இடங்களாகவோ இருந்தன .எல்லைக் கோடுகளைக் கொண்டு
ஏற்படுத்தப்பட்ட நவீன எல்லைகள் , தீவிரவாதமும் வன்முறையும் செழிக்கும் குறுகிய பாதைகளாகி
விட்டன.” என முன்னுரையில் ரொமிலா தாபர் சொல்கிற வரிகள் கவனத்துக்கு உரியன .
பொதுவாக எல்லைக் கோடுகளை வரைந்தவர்கள் எவருக்குமே
அங்குள்ள மனிதர்கள் , கலாச்சாரம் ,புவியியல் உள்ளிட்ட எந்த அறிவும் புரிதலும் இல்லை.
பைத்தியக்காரன் கிழித்த கோடுகள் போல் எல்லைகளை மனம் போல் அவர்கள் வரைந்தனர் என்பதை
இயல்பாய் புரிய வைக்கிறார் சுசித்திரா .
1] ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான்
எல்லை , 2] இந்திய வங்க தேச எல்லை , 3] இந்திய –சீன எல்லை , 4]இந்தியா – மியான்மர்
எல்லை , 5] இந்தியா – பாகிஸ்தான் எல்லை . என ஐந்து எல்லைகளில் நரக வேதனையோடு வாழ்கிற
மனிதர்களின் கதை . அநீதியாய் கொல்லப்பட்ட மனிதர்களின் கதை , இவற்றினூடே சீழ் ஒழுகும்
மனிதமும் உண்மையும் தான் இந்நூல் எனில் மிகை அல்ல.
“ ஒரு சாலையின் சிறு துண்டொன்றைக்
கைப்பற்றப் போராடிய நெடிய ,கொடிய பத்து வருடங்களுக்குப் பிறகு .மடிந்த உடல்களும் வெடிக்காத
குண்டுகளும் தவிர வேறெதும் இல்லை .”- என்கிறார் ஆப்கன் எல்லையில் முகாம் அதிகாரி .
“ இது மரித்த ராஜ்ஜியங்களின் இடுகாடு” எனச் சொல்லும்
ஏகாதிபத்திய நாடுகளை நோக்கி , - ” ஆப்கானியர்களுக்கு அவர்களின் இடுகாடு திரும்ப வேண்டுமாம்
. வரைந்த கோடுகளை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொல்கிறார்கள்.” என நூலாசிரியர் சொல்வது
ஆழ்ந்த பொருளுடையது .
“ அவர்களில் சிலர் தத்தம்
வீடுகளின் வாசலில் இருந்து கொல்லைப்புறம் சென்றாலே சர்வதேச எல்லையைத் தாண்டிவிடுகிறார்கள்
.” – இந்திய வங்க தேச எல்லையில் லட்சணம் இதுதான். “ ஆற்றை ரெண்டா பொளாக்கவா முடியும்
?” என்றார் காஸி . சாமதி ஆற்றின் கரையோரம்
வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் போல் சில அடிகள் தள்ளி வெறொரு நாட்டில் அவர் குடும்பம்
இருந்தது . “ பிரிவினையாவட்டும் ,சண்டையாவட்டும் வெறுமே நடந்து முடிஞ்சிடலீங்க .அது
முடிவில்லாமல் நடந்துகீட்டே இருக்கு.” எவ்வளவு அனுபவச் செறிவான வார்த்தைகள் .
“ காட்டுமிராண்டிகளை காட்டுமிராண்டித்தனமாகத்தான்”
நடத்த முடியும் என்கிற சமூக உளவியல் ஊடுருவி இருப்பதை கேட்கும் போது ; நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்கிற அச்சம்
தொற்றிக்கொள்கிறது .
எல்லை தாண்டும் போது துணியின்
முனை கம்பி வேலியில் மாட்டிக்கொள்ள ,எல்லை காவல் ராணுவத் துப்பாக்கி மார்பைத் துளைத்தது
.இது ஃபெலானியின் கதை ; எல்லை வேலிகளின் வன்முறைக்கு சாட்சி . உறவுகள் அங்கும் இங்குமாய்
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட எல்லைகளில் கூப்பிடு தூரத்தில் இருக்கும் உறவு வழி
திருமணங்கள் சர்வசாதாரணம் .அதில் ஒரு பெண்தான் ஃபெலானி . எல்லை தாண்டி தன் வீட்டுக்கு
போக முயன்றபோது இப்படி உயிர் இழக்கிறார் . ’சட்டவிரோத பங்களாதேஷிகள்’ என்ற சொல் தேர்தல்
அரசியலின் துருப்புச் சீட்டாகிவிட்டது . வெறுப்பு அரசியலின் விதையாகிவிட்டது . மனிதர்கள்
’ஆவணங்களற்றவர்களாக’ இருக்கலாம் ; ’புலம்பெயர்ந்தவர்களாக’ இருக்கலாம் ; முறைகேடானவர்
என்று எப்படிச் சொல்ல முடியும் ?
எல்லைகளில் நடக்கும் போது
சற்று வேகமாக காலை எட்டிப் போட்டால் அடுத்த நாட்டுக்குள் கால்வைக்க நேரிடும் .தாமும்
அப்படிச் சிக்கிய அனுபவத்தை சொல்கிறார் நூலாசிரியர் சுசித்திரா .எல்லைப் பாதுகாப்பு
வீரர்களுக்கும் இது நேர்கிறது .ஆனாலும் எல்லை தாண்டிய பயங்கரவாதியாக அப்பாவிகளை சித்தரிப்பது
தொடர்கிறது .
“அந்த குளத்துக்கு நடுவில தானுங்க ஜீரோ பாயிண்ட்
ஓடுது.” என்றார் ஜம்ஷீது . அவர் நண்பர் அலியின் கதை மிகவும் வித்தியாசமானது . ஜிரோ
பாயிண்டுக்கும் வேலிக்கும் இடையிலுள்ள பகுதி சட்டப்படி இந்தியாவுக்கு சொந்தமானது. ஆனால்
அரசு எழுப்பிய வேலியோ இந்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள்ளேயே ஒரு ’யாருமற்ற நிலப்பரப்பு’
நிலப்பரப்பு உருவாகக் காரணமாக இருந்தது . அலியின் வீடு அங்குதான் .அவன் மனைவி ’கே’
எல்லையின் அந்தப்புறத்தவள் . அரசு கணக்கில் வங்கதேசிகள் . அவளை அவர் இழந்த சோகம் ஒரு
புறம் . இவர் வீட்டில் மேல் பயங்கர வெளிச்சம்
பாய்ச்சும் எல்லை விளக்குகள் . அந்த வெளிச்சமே அவரை சித்திரவதை செய்தது .இண்டு இடுக்குவிடாமல்
ஒளி புகாமல் காகிதம் துணி ஒட்டி அடைத்து இருட்டில் வாழும் கொடுமை . அவர் சொன்ன வார்த்தைதான்,
“என் கனவுகள் களவாடப்பட்டன.”
“ அதிகாரபூர்வ போர் அறிவிப்பு
இல்லாமல் ,ஒரு படையையே அழித்த சம்பவத்தின் ஆவணம் இது.” எனச் சொல்லும் Himalayan
blunders எனும் நூல் பற்றி சுசித்திரா , “ அர்த்தமற்ற அதிகாரப் போட்டியில் தொலையும்
உயிர்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலை இல்லாமல் தன் அதிகாரத்தை நிறுவத் துடிக்கும் அதிகார
பீடத்தின் நபர்களைப் பற்றி பேசுகிறது .” “ஊமையாக்கப்பட்ட
உண்மைகளின் இடத்தில் பொருந்த வைக்கப்படும் பொய்கள் அதனடிப்படையில் கட்டமைக்கப்படும்
வரலாறு “ என அனைத்தையும் இந்நூல் பகர்வதாகச் சொல்கிறார் .
அதே போல் 1980 கருணாகர்
குப்தா எழுதிய ஆய்வு நூல் குறித்த செய்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது . தேசிய வெறியும்
திரிக்கப்பட்ட வரலாறும் எப்படி நம்மை உண்மையை நெருங்கவிடாமல் செய்கிறது என்பதன் சாட்சி
அந்த ஆய்வு நூல் The Hidden History of the Sino – Indian Frontier . இந்தியாவில் குப்தா
[ குஜராத்தியர்தாம் ] புறக்கணிக்கப்பட்டாலும் உலகெங்கும் மதிக்கப்படுகிறார் என்கிறார்
சர் ஆர்லேஸ்டர் லாம்ப் . இதனை சுசித்திரா குறிப்பிட்டுள்ளது முக்கியமானது .
மியான்மர் எல்லையில் உள்ள
நாகாக்கள் , “ நாங்கள் இந்தியர்கள் அல்ல.” என உரக்கச் சொல்கின்றனர் .போராடிக்கொண்டே
இருக்கின்றனர் . வன்முறையோடுதான் வாழ்க்கை என பழகிப் போய்விட்டார்கள் .தங்கள் இனம்
,பண்பாடு அவர்களின் ஆதாரமாக இருக்கிறது . நாகா ,மணிப்பூர் , மேகாலயா ,அருணாச்சல பிரதேசம்
என ஒவ்வொரு மாநிலமும் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் சோகக் கதைகள் எண்ணிலடங்கா .
“இப்பகுதியின் அழகை மட்டும்
எழுதிப் பிரச்சனையை மாற்றிவிடாதீர்கள் .அழகும் வன்முறையும் தனித்திருப்பதில்லை.அவை
ஈரிணைகள் .சேர்ந்தே வாழ்வன.” இவ்வரி களுக்குள் கனந்து கொண்டிருக்கும் யுகங்களின் வலியை
உணர்ந்தால் நெஞ்சு வெடிக்கும்.
பர்மா எல்லையிலுள்ள கம்னியுன்கன்
எனும் சிறு கிராமத்திலுள்ள எளிய கல்லறையொன்றின் வாசகம் ‘ இந்தியா கொன்று போட்ட என்
மகன்.” . பழங்குடியினரும் பல்வேறு இனத்தினரும் வாழும் வடகிழக்கில் வாழும் மக்கள் தங்களை
இந்தியர் என்கிற வட்டத்திற்குள் சுலபமாக இணைத்துக் கொள்ள முடியவில்லை . அவர்களின் பழங்குடியினரின்
வரலாற்று வேரும் பண்பாட்டு வேரும் அப்படி . ஓர் அந்நியரோடு உரையாடுகையில் நாகலாந்தைச் சார்ந்த ’என்’ என்பவர் சொல்கிறார்
, ஏகாதிபத்தியம் ஏவிய போருக்காக கிறுத்துவ , இஸ்லாமிய , இந்து , பார்சி , சீக்கிய
,ஜெயின் ,யூத சகோதரர்கள் அந்நிய மண்ணில் உயிர் நீத்த இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறீர்கள்
.”
எரிக்கப்பட்ட கிராமம்
, கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட இயா என்ற பெண் [ ஒவ்வொரு ஊரிலும் இப்படி இயாக்கள்
உண்டு ] இப்படி நாகலாந்து வடுக்களைத் தடவிப்பார்த்தாலே நெஞ்சு பதைக்கும் .
நெல்லி என்ற பெயரை மறக்கலாமா
? 1983 ல் 3000 இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்ட ஊர் . அசாம் – வங்க தேச எல்லையில் பிரம்மபுத்திரா
கரையை ஒட்டி வெள்ளப் பெருக்கால் அடிக்கடி காணாமல் போவதும் மீள்வதுமாய் மிதவைத் தீவுகள்
மிகுந்த ஊர் . அங்கு அரங்கேறிய கொடூரம்
3000 பேருக்கு மேல் பலி.அசாமில் தொடரும் வன்முறை வலி இவற்றால் நீளும் துயரக்கதைகள்
. தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளும் கிராமங்கள் . இந்த அத்தியாயத்தைப் படிக்க
மனதைக் கல்லாக்க வேண்டும் .
வங்கதேச இஸ்லாமியர் நாடு
தோறும் வலி சுமந்து வாழ்பவர்களாகிவிட்டனர் ‘ரோகிங்கியா” எனும் மியான்மியர் அகதிகள்
யார் ? பிழைக்க மியான்மருக்கு பலபல தலைமுறைக்கு முன்பே போன வங்க இஸ்லாமியர் .இப்போது
அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள் .மொழி ,பண்பாடு ,மதம் ,இனம் இவற்றால் ஒன்றாயினும் மியான்மர் , இந்தியா எங்கும்
வெறுப்புக்கும் வந்தேறிகள் என வசவுக்கு தாக்குதலுக்கும் ஆளான சோகக்கதை சொல்லில் அடங்கா
.
’அவங்கவங்களால் சுமக்க
முடியற கதைகளைத்தான் சுமக்கணும்’என வருந்துகிற சுசித்திரா இந்நூலில் சொன்ன கதைகளையே
திருப்பிச் சொல்ல முடியல அவ்வளவு வலி . அவ்வளவு கண்ணீர் . ஆனால் குடியுரிமை , எல்லை
தாண்டி வந்த அந்நியர்கள் என்ற சொற்கள் வெறுப்பு அரசியலின் மூலதனம் . ஆனால் அடையாளம்
காணப்படாமல் ஆட்சியாளர்களால் புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளும் அதில் ஒழுகும் பிணவாடையும்
கண்ணீர் உப்புக் கரிப்பும் எத்தனை காலமாயினும் ஆறாது . இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பும்
குரோதமும் ஆட்சியாளர்களால் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுவதை எவ்வளவு நாள் சகித்துக்
கொள்ளப் போகிறோம் ?
எல்லையோர கிராமங்கள் நெடுக
கோயில்கள் முளைத்துள்ளன . வன்முறையில் ,போரில் கொல்லப்பட்டவர்களின் கல்லறையே கோயில்களாகி
உள்ளன . ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை புனையப்பட்டு வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை
நூல் நெடுக சொல்கிறார் நூலாசிரியர் . சாமிகள் இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள்
. வரலாறு புதைக்கப்பட்டு புராணங்கள் இப்படித்தான் உருவாக்கப்படுகின்றன .
“ காஷ்மீரில் அழிவு ,காணாமல்
போவது ஆகியவை முடிவிலிக் காட்சிகளாக மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன
.” வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அரச வன்முறை” வழக்கமாகிவிட்ட பூமி இது. “ முடக்கப்பட்ட
நாகரீகம் அன்பு செலுத்துதலை சாத்தியம் இல்லாததாக்கிவிட்டிருக்கிறது” “ எங்கள் வீதிகளுக்குள்ளேயே
நாங்கள் அந்நியமாகிவிட்டோம்.” என்று சொல்வது வேதனையின் வெடிப்பல்லவா ?
“ எங்களிடமிருந்து அனைத்தையும்
பிடிங்கிக் கொள்வதில் அவர்கள் உறுதியாக இருக்கும் போது .போராடுவதைத் தவிர வேறு என்ன
செய்துவிட முடியும் ?” கோவம் நியாயம்தானே !
ராஜஸ்தான் பஞ்சாப் எல்லையில்
வயல்களை கிழித்துக் கொண்டு செல்லும் 1800 கி.மீ நீளம் அமைக்கப்பட்ட கண்ணிவெடி மக்களை நிர்கதியாக்கிவிட்டது.
“ இந்திய வரலாற்றோடு இன்று
என் அம்மா தன்னை அடையாளப் படுத்திக் கொண்டால் ,அவள் என்னவாக இருப்பாள் ? துரோகியாகவா
? என்னவாக முத்திரை குத்தப்படுவாள் ? பாகிஸ்தானின் துரோகி என்றா ?” கேட்கிறாள் நாடாஷா
. இவர் யார் தெரியுமா ? ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்ட கொல்லப்பட்ட 23 வயது இளைஞனின்
கொள்ளுப் பேத்திதான் இந்த நாடாஷா .
“ குணமடைவதற்குக்கூட அனுமதி
கிடைக்காது “ என் வரலாறு எல்லைக் கோட்டின் இருபுறமும் உள்ளது என்கிற நாடாஷா இருபக்கமும்
வரலாறு திருத்தப்படுகிறது என வேதனைப்படுகிறார் . “ சீசாவில் இருக்கும் பூதம் வெளியே
வந்துவிட்டால் உள்ளே அடைக்க முடியாது” என மதவெறி அரசியலை குறித்து அனுபவச் சூட்டோடு
வருந்துகிறார்.
இந்த நூலை நல்ல முறையில்
தமிழாக்கம் செய்த ஞான.வித்யாவிற்கும் , நன்கு பதிப்பித்த சீர்மை வெளியீட்டகத்துக்கும்
வாழ்த்துகள் கூறி நூலில் இருந்து ஒரு மேற்கோளோடு நூலறிமுகத்தை நிறைவு செய்கிறேன் .
“ ‘காட்சித் திரிபென்பது
கூட்டுணர்வின் விடாப்பிடியான களை’ என்று அந்தோனியா கிராம்ஷி எழுதினார் .’வரலாறு கற்பித்துக்
கொண்டேதான் இருக்கிறது. மாணவர்கள்தாம் எவருமே இல்லை .’நாம் வரையும் கோடுகள் எழுப்பிய
வேலிகள், வலியுறுத்தும் எல்லைகள் அனைத்தும் காட்சித் திரிபுகள் . இவை எதுவும் உண்மை
இல்லை என்றாலும் ,அவை ஏற்படுத்திய கொடிய பின் விளைவுகள் நம் கூட்டுணர்வின் ஒரு பகுதி
ஆகிவிட்டன .இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் ஒழுக்கக்
குலைவுகள் எல்லைக் கோடுகளை ஒட்டித்தான் தொடங்கின ..நம்மில் மிக நாகரீகமானவர்கள்கூட
எல்லையில் நடைபெறும் ஒடுக்குமுறை ஈவிரக்கமற்ற வன்முறைச் செயல்களுக்கு சாக்குச் சொல்லத்
தொடங்கிவிட்டனர் .சுதந்திரம் ,வளர்ச்சி ,உரிமை என நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் அனைத்து
குறிக்கோள்களும் அவர்களிடமிருந்து விலக்கப் பட்டவை.வரலாற்றில் பாடங்களைக் கற்போமானால்
மனிதர்களைக் கொன்று குவிக்கும் எல்லைகளற்ற சுதந்திர தேசம்ங்கள் குறித்து சாத்தியக்
கூறுகளைச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.” நூலாசிரியரின் கனவு மெய்ப்பட யுகங்கள் காத்திருக்க
வேண்டுமோ !
சுசித்திரா விஜயனின் இன்னொரு நூலான “இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும் ?” [இந்திய அரசியல் கைதிகளின் குரல் ] வாசித்து
ஜனவரியில் அறிமுகத்தை எழுதினேன் .அதிலிருந்து ஒரு சொல் , ““நம்பிக்கையையும்
போராட்ட குணத்தையும் எந்த சர்வாதிகாரத்தாலும் கொன்றுவிட முடியாது .சில நேரம் அவை வெளிப்படையாகத்
தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் வீரியம் குறைந்தது போலத் தெரியலாம் . ஆனால் நமது
நம்பிக்கையும் போராட்ட குணமும் மீண்டும் மலர்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிடும்.”
நடுநிசி எல்லைகள் [ நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு ],
படைப்பு : சுசித்திரா விஜயன் , தமிழில் : ஞான.வித்யா
வெளியீடு : சீர்மை , தொடர்புக்கு : 91 80721
23326 /
seermainoolvali@gmail.com
பக்கங்கள் : 344 / ரூ.460 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
15/10/25.
0 comments :
Post a Comment