நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டு இது .

Posted by அகத்தீ Labels: ,

 





இதோ இங்கே ஒரு அரிய புகைப்படம் .

உற்றுப்பாருங்கள் .மாவீரன் தோழர் பகத்சிங்கும் தோழர்களும்.

நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டு இது .

 நூற்றாண்டில் அக்னிக் குஞ்சுகள் .

இன்னும் புரட்சி நெருப்பை விசிறிக்கொண்டே இருக்கிறது.

 

1926 மார்ச் 1 அன்று பகத்சிங்கும் அவரது தோழர்களும் அதிகாரபூர்வமாய் நவஜவான் பாரத் சபா என்ற அமைப்பை முதல் அமைப்பு மாநாட்டில் அறிவித்தனர் .

’நவ் ஜவான் பாரத் சபா’ [Naujawan bharath sabha  என்ற சொல் ஹிந்தியும் உருதும் கலந்த ஒரு சொல் . தாருண் பாரத் சங் , [ tarun bharath sangh ] ,அஞ்சுமன் நவ் ஜவானி ஹிந்த் [anjuman nau jawanee hind ] போன்ற பெயர்களை பரிசீலத்த போதும் இறுதியில் பகத் சிங் முன்மொழிந்த ’நவ் ஜவான் பாரத் சபா’ என்றே பெயரே ஏற்புடையதாயிற்று .

 

முதலில் லெட்டர் பேட் [ letter pad ] அச்சிட்ட போது நவ் ஜவான் பாரத் சபா என்ற பெயரோடு அடைப்புக் குறிக்குள் INDIAN YOUTH ASSOCIATION என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார் பகத்சிங் . மேலும் Service , Sacrifice ,Suffering [தொண்டுசெய் , அர்ப்பணி, பாடுபடு ] என மூன்று முழக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன .

 

அமைப்பை உருவாக்குவதில் பகத் சிங்குடன் , சோகன் சிங் ஜோஸ் , கரம் சிங் மான் ,ராம் சந்தர் ,எம். ஏ.மஜீத் ,எஹ்சான் அல்லாஹி ,பேராசிரியர் சாபில்தாஸ்.கோபால் சிங் குமாய் ,ஹரி சிங்  உள்ளிட்டோர் இருந்தனர் . இந்த சோகன் சிங் ஏற்கெனவே மீரட் சதிவழக்கில் சம்மந்தப்பட்டவர் ,பின்னர் கிர்தி கிஷான் கட்சி என்றொரு கட்சியையும் வழிநடத்தினார் .

 

கரம் சிங் லண்டனில் பார் அட் லா படித்தவர் .கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டவர் . இவர் கிராமப்புறங்களில் தேசபக்த கனலை விசிறிவிட உழைத்தார் .கேதர் நாத் சைகால்  நவ் ஜவான் பாரத் சபாவில் தானே வந்து இணைகிறார் . வயது மூத்தவர் என சிலர் அதை ஆட்சேபிக்க , சபாவில் சேர  வயது வரம்பென்ன என்று கேட்கிறார் . கேள்விக்கு 16 – 35 என பகத் சிங் பதில் சொன்னதும் ;  தன் வயது 34 தான் ஆகவே நானும் சேரலாம் என இணைகிறார் .

 

லாகூர் [Lahore ], அமிர்தசரஸ் [Amritsar] , லூதியானா [Ludhiana] ,[ ஜலந்தர்] [Jalandhar], மண்டகோமரி [Montgomery] மற்றும் குஜ்ரன்வாலா [ Gujranwala ] ஆகிய இடங்களில் நவ்ஜவான் பாரத் சபா செயல்பட்டது .

 

1922 செளரி செளரி போராட்டத்தை மகாத்மாகாந்தி திரும்பப் பெற்ற பின்னால் இளைஞர்களிடையே உருவான அதிருப்தியும் கோபமும் பல்வேறு தீவிரவாத இளைஞர் அமைப்புகள் தோன்ற  செயல்பட சமூக அரசியல் காரணியாயின . அந்த காலகட்டம் நெருப்பு பொறிகள் பறந்த காலம் .  நவ்ஜவான் பாரத் சபாவுக்கும் இது பொருந்தும் .

 

இளம் தோழர்களே ! என அழைக்கும் அதன் முதல் அறைகூவல் பகத்சிங் ,பகவதி சரண் வோரா இருவர் பெயரால் வெளியான போது அதன் முதல் பத்தியே இதனை தெளிவு படுத்தும் ;

 

இளம் தோழர்களே !

நம் நாடு மிகவும் குழப்பமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது . விரக்தியும் அவநம்பிக்கையும் எங்கும் சூழ்ந்துள்ளது . மிகப் பெரும் தலைவர்களும் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள் . மக்களும் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் .  நாட்டு விடுதலைக்காக உருப்படியான திட்டமோ , உற்சாகமோ , போராட்டமோ இல்லை . எங்கும் பெரும் குழப்பமே நிலவுகிறது . ஒரு நாட்டை தட்டி எழுப்பும் போராட்ட வரலாறுகளில் குழப்பமும் தவிர்க்க முடியாததே !இந்த சிக்கலான காலகட்டத்தில்  ஊழியர்களின் மன உறுதி சோதனைக்குள்ளாகிறது ! விழுமியங்கள் மறுகட்டமைக்கப்படுகிறது ! சரியான செயல்திட்டம் கருக்கொள்கிறது ! புதிய எழுச்சி முளைவிடுகிறது ! போராட்டம் தொடங்கிவிட்டால் புதிய எழுச்சி ! புதிய நம்பிக்கை ! மேலும் புதிய எழுச்சி ! மேலும் புதிய நம்பிக்கை !”

 

அந்த அறிக்கை ஒரிடத்தில் மிகத் தெளிவாகச் சொல்லும் , ” மதப் பித்து , மூடநம்பிக்கை  ,பாகுபாடு இவை எல்லாம் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்  . அவை நம் பாதையிலுள்ள தடையரண்கள் என்பது நிரூபனமாகிவிட்டவை ; உடைத்தெறிய வேண்டும் .சுதந்திரமான சிந்தனைக்கு எதிரான அனைத்தும் புதைந்து போகட்டும் !  இந்து பழமைவாதம் ,இஸ்லாமிய குறுகிய வாதம் , இதர சின்னத்தனமான மத வாதங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்துவிட்டு ;  நம்மை சுரண்டுகிற ஒடுக்குகிற அந்நியருக்கு எதிராகப் போராடும் வேளை இது . இதனை சாதிக்க எல்லா சமூகப் பிரிவிலிருந்தும் புரட்சிகர எண்ணங்கொண்ட இளைஞர்கள் திரள வேண்டும் .”

 

அந்த அறிக்கை ஒடுக்குமுறை ,பொருளாதாரச் சுரண்டல் , விவசாயி தொழிலாளர் வாழ்க்கை படும்பாடு இவற்றை துடைத்தெறிய அந்நியர் ஆட்சி ஒழிய வேண்டும் என வலியுறுத்தி இறுதியில் ,

 

“நேர்மையுடனும் உறுதியுடனும்  தொண்டு செய் ! பாடுபாடு! அர்ப்பணி!  !  என்ற மும்முழக்கம்  உங்களுக்கு ஒரே வழிகாட்டியாக ஆகட்டும்.” என முடியும் .

 

 

விழிப்புணர்வு கருத்தரங்குகள் ,விவாத மேடைகள் ,பொதுக்கூட்டம் , வெளியீடுகள் .போராட்டங்கள் , அணிவகுப்புகள் என செயல்படத்துவங்கினார்கள் .

 

தங்கள் மாநாட்டில் கத்தார் கட்சி [ புரட்சிக் கட்சி] யின் மாபெரும் வீரத்தியாகி கத்தார் சிங் சரபா வின் திரு உருவப்படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்தினர் . அது கண்டு வெகுண்ட  பிரிட்டிஸ் போலீஸ் எச்சரித்தது . கண்காணித்தது . உருவப்படத்தை பறிமுதல் செய்தது .

 

போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பகத்சிங் கைது செய்யப்பட்ட பின் நவ் ஜவான் பாரத் சபா இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது . சந்திர சேகர் ஆசாத் ,பகவதி சரண் போன்ற தீவிரவாதிகள் இந்த அமைப்போடு இருந்தனர்.

 

1926 மார்ச் 1 ஆம் தேதி நவ்ஜவான் பாரத் சபா அதிகாரபூர்வமாகத் துவக்கப்பட்டாலும் இதன் ஆரம்ப கட்டப் பணிகள் 1923 ன் இறுதியிலே துவங்கி விட்டதென தோழர் ராம் சந்திரா எழுதிய ‘ History of Naujawan Jawan Bharath Sabha’ எனும் ஆங்கில நூலில் தெரிவிக்கிறார் . வாய்ப்புள்ளோர் அந்நூலைத் தேடிப் படிக்கவும் . [கூகிளில் கிடைக்கிறது . ]

 

 

உண்மையில் ’இந்துஸ்தாஸ் சோஷலிஸ்ட் குடியரசுக் கழகம்’ என்கிற புரட்சிகர அரசியல் இயக்கத்தின் வெகுஜன முகமாகவே நவ் ஜவான் பாரத் சபா இருந்தது எனில் மிகை அல்ல . வாயிருந்தும் பேசமுடியாத ஊமைகளாய் ஆமைகளாய் அடங்கி ஒடுங்கிக் கிடந்த இளைய சமூகத்தை எழவைத்து உரிமை முழக்கமிட வைத்த மாபெரும் எழுச்சியின் தொடக்கமே நவ் ஜவான் பாரத் சபா.

 

மார்க்சியம் ,சோசலிசம் ஆகிய கருத்துகள் முழுமையாக பரவாத நிலையிலும் அதன் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தினர் . அதனையே தங்கள் இலக்காககவும் கொண்டனர் . ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு என்பதில் சோஷலிசம் இணைந்தே இருந்தது .

 

இந்த அமைப்பில் இருந்த பலர் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி முகமாயினர் . தொடங்கி மூன்றே ஆண்டுகளில்   1929 இல் நவ்ஜவான் பாரத் சபா தடை செய்யப்பட்டது . பின்னர் பல்வேறு முகங்களோடு இடதுசாரி இளைஞர்கள் செயல்பட்டனர் . பகத்சிங் ,ராஜ்குரு , சுகதேவ் மூவரும் மார்ச் 23 ,1931 இல் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டனர் . இந்திய விடுதலைப் போரின் மாபெரும் தியாகத்தின் உருவமானார்கள் . இளைஞர்களின் நம்பிக்கை ஒளி ஆனார்கள்.

 

போராட்டம் எங்களால் தொடங்கப்படவும் இல்லை ; எங்களோடு முடிவதுமில்லை என்பதுதானே புரட்சியாளர்கள் நமக்குச் சொல்வது .

 

1936 இல் அனைத்திந்திய மாணவர் சம்மேளனம் துவக்கப்பட்டது . நவ் ஜவான் பாரத் சபாவின் தொடர்ச்சிதான் இதுவும் . இளைஞர்களும் இதில் அங்கமாயிருந்தனர் . 1959 இல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் துவக்கப்பட்டது . நவ்ஜவான் பாரத் சபா செயல்பட்ட பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1980 இல் DYFI இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  தன் அமைப்பு மாநாட்டை நடத்தியது . இந்த 1926 இல் உருவாக்கப்பட்ட நவ் ஜவான் பாரத் சபாவின் தொடர்ச்சிதான் வாரிசுதான்  AISF ,AIYF ,1980 இல் கிளைத்த DYFI யும் அதன் தொடர்ச்சியே ஐயமில்லை . பகத்சிங்கின் வாரிசுகளே இடதுசாரிகள் !

 

45 வது அமைப்பு தினத்தைக் கொண்டாடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தம் தொப்புள்கொடி உறவான நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டை பகத்சிங் பிறந்த  பங்கா கிராமத்தில் [ பஞ்சாபில் லாயல்பூர் மாவட்டத்தில் உள்ளது பங்கா கிராமம் [ Banga in the Lyallpur district of the Punjab ] நவம்பர் 3 ஆம் தேதி கொண்டாடுகிறது .

 

ஆயிரம் ஆயிரம் பக்த்சிங்குகள் ராஜகுருக்கள் சுகதேவ்கள் அணி வகுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தேசம் இருக்கும் வேளையில் …

 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொண்டாடும் நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டு விழா மிகமிக முக்கியமான தேசபக்த அரசியல் எழுச்சியாகட்டும் ! என் தோழமை மிக்க வாழ்த்துகள் !!!

 

[ நவ் ஜவான் பாரத் சபா படம்   Sikh Encyclopedia  விலிருந்து எடுக்கப்பட்டது ]

 

முன்னாள் வாலிபர்

சு.பொ.அகத்தியலிங்கம்.

31/10/25.

 

 

 


 


Boomer uncle பூமர் அங்கிள்

Posted by அகத்தீ Labels:

 




கொஞ்சம் தலைநரைச்சா போச்சு , வார்த்தைக்கு வார்த்தை பூமர் அங்கிள்ன்னு சொல்றாங்களே ! அப்படின்னா என்ன அர்த்தம் ? தெரியாமலே ரொம்ப காலமா ஓடுது ! சரி தெரிஞ்சுக்குவோம்….

 

Boomer uncle பூமர் அங்கிள்  என்பவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946 ம் ஆண்டுக்கும் 1964 ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களாம் .  ‘பழமையில் ஊறிய மட்டைகள்’ எனச் சொல்லாமல் சொல்லுகின்றனர் .

 

Gen X ஜென் எக்ஸ் தலைமுறை என்பவர்கள் 1965 -1980 ஆண்டுகளில் பிறந்தவர்களாம் . எந்த சலசலப்பும் இல்லாமல் சிவனேன்னு வாழ்ந்து முடிபவர்களாம்… உடனே அவர்களெல்லாம் சைவர்கள் என ரீல் விட வேண்டாம்…

 

Gen Y ஜென் ஒய் தலைமுறை  என்பவர்கள் 1981- 96 காலகட்டத்தில் பிறந்தவர்களாம் . 90 கிட்ஸ் என்றும் அழைப்பார்களாம் . இரு நூற்றாண்டு மாற்றங்களைக் கண்டவர்களாம் ….

 

Gen Z ஜென் இசட்  தலைமுறை என்பவர்கள்  1997 -2012 இல் பிறந்தவர்களாம் இவர்கள் தமக்கு முன்வந்த எல்லோரையும் பூமர்கள் எனச் சொல்லித் திரிபவர்கள் … கிட்டத்தட்ட உலகமய தாராளமய டிஜிட்டல் உலகத்தில் பிறந்தவர்கள் … ஏடிஎம்மில் கார்டை சொருகினால் பணம் வருவதுபோல் . ’போண் பே’ போல் எல்லாம் சட்டுப்புட்டுன்னு நடக்கணும்னு நினைக்கிற தலைமுறை .. ரீலுக்கும் ரியலுக்கும் வித்தியாசம் தெரிய முயலாதவர்களாம் .. டிஜிட்டல் தகவல்கள் கொட்டி வைக்கப்பட்ட குடுவை .. அதை அலசி உண்மையறிய தேவை பொறுமை … அது இல்லாத தலைமுறை … அனுபவம் கற்றுக்கொடுக்கும் …

 

 

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது. ” [ குறள் : 68 ]

 

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். [கலைஞர் மு.கருணாநிதி விளக்கம் ]

 

ஆகவே ,Gen Z தலைமுறை  பகுத்தறிவுத் தலைமுறையாய் வளர்ந்தால் அதுதான் மகிழ்ச்சி .

 

பெரியாரை ,அம்பேத்கரை ,மார்க்ஸை தூக்கிப் பிடிக்கிறவங்கள பூமர் அங்கிள்ன்னு கேலி பேசிகிட்டு அரதப் பழசான சனாதனத்தை மநு அந்தீதியை தூக்கிச் சுமப்பவரை எந்த Gen ஜென்னில் சேர்ப்பது ? Barbarian Gen பார்பாரியன் ஜென் காட்டுமிராண்டி  என்றா ?

 

அடுத்து AI என்னென்ன கூத்து பண்ணப்போகுதோ ?

 

 இது அரசியல் பதிவல்ல பொது அறிவுப் பதிவு நம்புங்க…

 

சுபொஅ.

24/10/25.


ரசவடை

Posted by அகத்தீ Labels:

 





ரசவடையை விரும்பாத குமரி மாவட்டக்காரன் உண்டோ ? இட்லி- ரசவடை , தோசை- ரசவடை அந்த மாவட்ட ஸ்பெஷல் கூட . என் அம்மாவு கூட அடிக்கடி ரசவடை செய்வார் . எப்போதாவது இப்போதும் என் வீட்டில் ரசவடை தயார் ஆகும் .ஆமவடை கட்டன் சாயா எப்போதுமே ஸ்பெஷல்தான்…   சோறு ,தீயல் , ரசவடை கூட நல்ல காம்பினேஷன்தான் . வற்றக்குழம்பு / காரக்குழம்பு வகையறாதான் தீயல்  ஆனால் தனித்துவமானது அதுவும் அந்த மாவட்ட ஸ்பெஷல்தான். வாழைக்காய் பொடிமாசும் தீயலுக்கு காம்பினேஷந்தான்.

 

ஒரு நாள் ஒரு ஹோட்டல் மெனுவில் ரசவடையைப் பார்த்ததும் வாயில் எச்சில் ஊற ஆர்டர் போட்டுவிட்டேன் . மெதுவடையை ரசத்தின் ஊறவைத்து கொடுத்ததும் நொந்து போனேன் .  இது ரசவடைன்னு சொன்னா ரசம்கூட நம்பாதுடா ! சாம்பார்வடை தயிர் வடைக்கு மெதுவடை பொருத்தமானது , மேலே காரப்பூந்தி தூவினா ஒகே . ரசவடைக்கு ஆமவடை [ மசால் வடை /பருப்பு வடை ] தானே பொருத்தம் . இப்படி சொன்னா பூமர் அங்கிள்ன்னு சொல்லிருவாங்களோ !

 

இப்போதெல்லாம் சாப்பட்டைப் பற்றி பதிவு போடவில்லை என்றால் முகநூலில் இருந்து நீக்கிவிடுவாங்களாமே ! எதுக்கு வம்பு நானும் போட்டுட்டேன்…. சரியா ?

 

சுபொஅ.

23/10/25

 

குறிப்பு : தொடர்ந்து இரண்டாவது நாளாக அரசியல் இல்லாமல் பதிவு போட்டுட்டேன் … நண்பரோடு போட்ட சவாலில் வெற்றி !


கேள்வி நியாயந்தான் கத்தி

Posted by அகத்தீ Labels:

 

எதிர்காலம் கொஞ்சம்

இருட்டாகத்தான் தெரிகிறது

 

அறிவியலின் பாய்ச்சல் வேகம்

பிரமிக்க வைக்கிறது

 

அப்புறம் ஏன்

எதிர்கால பயம் ?

 

கேள்வி நியாயந்தான்

கத்தி

யார் கையில் இருக்கிறது

எதற்குப் பயன்படுகிறது

என்பதுதானே கேள்வி

 

லாபவெறி போதையில்

தலைதெறிக்க ஓடும்

சுரண்டும் வர்க்கம்

மனிதனை

மறந்து போகுமோ ?

 

உற்பத்தி செய்ய

மனிதனுக்கு மாற்றாய்

AI செயற்கை நுண்ணறிவு

சரிதான் ! சரிதான் !

இனி நுகர்வோராகவும்

AI போதுமோ !

 

வாங்கும் கரங்கள் இல்லாமல்

எதனை யாரிடம் விற்பீர்கள் ?

 

உலகமே சுடுகாடாயின்

நீங்கள் மட்டுமா

பிழைத்துக் கிடப்பீர்கள் !

 

லாபவெறி போதை

உச்சத்தில் கொண்டோரே

சொல்லுங்கள் !

 

மதமும் சாதியும் இனமும்

மனிதத்தைக் கூறுபோடும்

ஒரு போதும் வாழவிடாது !

 

மார்க்சியம் தழைக்காமல்

எதிர்காலம் இல்லை

மனித குலத்துக்கு!

 

சுபொஅ.

21/10/25.

 

வருணன் , வாயு , பூமாதேவி

Posted by அகத்தீ Labels:

 


நேற்று இனிப்பு காரம் பஜ்ஜி வடை எல்லாம் சாப்பிட்டதால் இன்னும் சோம்பேறித்தனம் தொற்றிக்கொண்டிருக்கிறது . ஊரெங்கும் பட்டாசு வெடிப்பதால் நடை பயிற்சி

யும் இல்லை . காலை உணவு முடிந்ததுமே கண்ணை மூடி சாய்ந்துவிட்டேன் .

 

வருணன் , வாயு , பூமாதேவி மூவரும் கனவில் வந்தனர் .

 

   மிஸ்டர் ! எனக்கொரு நல்ல வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுங்கள் ..” என என்னை உசுப்பினார்கள் .

 

“ நல்ல வழக்கறிஞர்ன்னா யாருன்னு புரியலையே ?  கட்சி வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , நீதியை விலைக்கு வாங்கித் தரும் வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , மத வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , சாதி வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , விலை போகும் வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் , நல்ல நீதிபதிகளோ நிதி மன்றமோ எங்கே இருக்கு ? நீங்க நல்ல வழக்கறிஞரைக் கேட்கிறீங்க…”

 

“ மிஸ்டர் ! தூக்கத்திலகூட இப்படித்தான் பேசுவீங்களா ? ஏற்பாடு செய்ய முடியுமா ? முடியாதா ?”

 

“ நல்ல … நல்ல … உங்க கேசு என்னண்ணு முதல்ல சொல்லுங்க … அப்புறம் .. நல்ல…”

 

“ சரி ! சரி ! விஷயத்துக்கு வர்றோம்… நான் வருணன் மழை சுத்தமாகத்தான் பெஞ்சுகிட்டு இருந்தேன் . இப்போ ஊரை நாசமாக்கி என்னை அமில மழை பெய்ய வச்சிட்டாங்க … நான் பெய்ற கொஞ்ச நஞ்ச மழை நீரு தேங்குற குளம் ,குட்டை ,கம்மாய் .சமுத்திரம் எங்கும் புள்ளையாரை தூக்கிப் போட்டு என் சுத்தத்தை நாசமாக்குறாங்க …  நாங்க விநாயகரைக் கேட்டோம் … நான் அப்படிச் செய்யச் சொல்லலைன்னு சத்தியம் பண்றார்… மனுஷங்கதான் இதுக்கு காரணம் அவங்க மேல வழக்குப் போடணும் …”

 

“ உங்க கேசு !”

 

“ நான் வாயு ! சுத்தமான காற்றாக வீசி உயிர்களை வாழவைத்தேன் … இப்போ நான் மாசுபட்டுட்டேன் … நாம் மகாவிஷ்ணுவைக் கேட்டேன்  ஊரெங்கும் பட்டாசு வெடிக்க நீங்கதான் சொன்னீங்களான்னு … அவரு சொல்றாரு எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை எல்லாம் இந்த மனுஷாள் பண்ற அட்டகாசம் … அவாளத்தான் தண்டிக்கணும்…”

 

“ நீங்க ! சொல்லுங்க…”

 

“ நான் பூமாதேவி … நான் எல்லா உயிரும் வாழ இடம் தந்தேன் … தீபாவளி ,ஆயுத பூஜை , விநாயகர் சதுர்த்தின்னு என்னைக் குப்பைக்காடாக்கிறாங்க .. நானும் எல்லா சாமிகிட்டேயும் கேட்டுட்டேன் … சத்தியமா நாங்க சொல்லவே இல்லைன்னு தலையில் அடிச்சு சத்தியம் பண்றாங்க … மனுஷங்கதான் குற்றவாளி அவங்க மேல வழக்குப் போடணும் …”

 

“ உங்க மூணு பேருக்கும் வருணன் ,வாயு ,பூமாதேவி மூவருக்கும் மனுஷங்கதான் எதிரியா ?”

 

“ ஆமாம்…ஆமாம்…”

 

“ உச்சி மன்றம் போனா மனுஷாள இல்லாத பேய் பூதம்தான் விசாரிக்குன்னு சொல்லிருவாங்களே…”

 

“ அப்படியா ?”

 

 சரி !சரி ! அவங்க வெளிநாட்டுக்காரங்களா..”

 

“ இல்லை … இல்லை…”

 

“ இவங்களா  ?”

 

 “இல்லை…”

 

“ அவங்களா ?”

 

“ இல்லை …”

 

“ எந்த நாட்டுக் காரங்க … எந்த ஊரு காரங்க … என்ன மதம் … என்ன  சாதி…”

 

காதைக்கொடு ரகசியமாகச் சொல்றேன் .சத்தமாச் சொன்னால் தேசவிரோதின்னு சொல்லி ஜெயில்ல போட்டிருவாங்க …”

 

[ காதில் மூவரும் கிசிகிசுத்தனர்…]

 

 “ஐயையோ …. ஐயையோ …. வாயு .வருணன் ,வாயு ,பூமாதேவி மூவரும் இந்து விரோதியாகிட்டீங்க….” நான் அலற….

 

[ மூவரும் தலைதெறிக்க ஓடினார்கள் ]

 

தூக்கம் கலைந்தது .

 

சுபொஅ.

21/10/25.

 


'பரோட்டா கோமியம்’

Posted by அகத்தீ Labels:

 


 


நேற்று ஓர் பழைய நண்பன் . அலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்துச் சொன்னான் . ’நன்றி ! உங்களுக்கும் வாழ்த்துகள்’ என்றேன் . கொஞ்சம் கடந்த காலத்தை அசை போட்டோம் . அப்போதே நாங்கள் எதிர் எதிர் முகாம்தான் . இப்போது தான் மாறிவிட்டதாகச் சொன்னான் .

 

“ மார்க்சின் பொருளாதாரமும் அரசியலும் தேவை . அப்போதுதான் உலகம் தப்பிப் பிழைக்கும் .” என்றான் . நான் எழுதியமார்க்சியம் என்றால் என்ன ?” நூலை வாசித்துவிட்டதாகச் சொன்னான்...

 

அடடா ! அடடா ! மாற்றம் ரொம்பத் தெரியுதே என மலைத்துப் போனேன் .

 

ஆனால் , அவன் அடுத்து சொன்னதும் நான் அவசரப்பட்டது புரிந்தது .

 

“ ஆனால் மார்க்சிய தத்துவம் தனிமனித வாழ்க்கையை வறட்டு சூத்திரமாக்கிவிடும் .அர்த்தமுள்ளதாக்க இந்து ஆன்மீகமே ஆத்ம விடுதலை தரும். நீரிஸ்வர வாதமும் அதாவது கடவுள் மறுப்பும் இந்துமதத்தின் ஒரு கூறுதான்.ஆனால்...” என நீட்டி முழக்கினான் . செவிமடுத்த பின் , மீண்டும் வாழ்த்து சொல்லிவிட்டு …..

 

நான் சொன்னேன் , “ நண்பா ! ஒண்ணு ’இட்லி சட்னி சாம்பார் / பரோட்டா சால்னா சாப்பிடு’ இல்லை எனில் ’கோமியம் குடி’  .  நீ சொல்லும் ‘கோமிய இட்லி /பரோட்டா கோமியம்’ சாத்தியமில்லை …”

 

நாளை பேசுவோம் என உரையாடலைத் துண்டித்துவிட்டான். இனியும் பேசுவோம்...

நான் இரவு முழுவதும் அந்த உரையாடலையே அசை போட்டேன் . தனிமனித வாழ்க்கைக்கும் மார்க்சிய தத்துவத்துக்கும் இடையிலான உயிரோட்டத்தை நாம் ஏன் எடுத்துச் சொல்லக் கூடாது .

 

வாழ்வின் அனுபவங்களோடும் பிரச்சனைகளோடும் மார்க்சிய தத்துவ வழிகாட்டலை பொருத்தி சொன்னால் என்ன ? 

 

அது ஓர் தேவைதான் ,ஆயின் நுட்பமாக வாழ்வையும் மார்க்சியத்தையும் பேச வேண்டும் . கடும் பணிதான் . முயன்றால் முடியாததில்லை. செய்வோம் . பொறுமையாக … ’மார்க்சியம் என்றால் என்ன ?” நூலில் போகிற போக்கில் இதைச் செய்திருப்பேன் … ஆனால் ’வாழ்வியல் தத்துவம் மார்க்சியம்’ என தனித்தே முயற்சி செய்ய வேண்டும்தான்…

 

சுபொஅ.

19/10/25.


பிணவாடையும் கண்ணீர் உப்புக் கரிப்பும் : நடுநிசி எல்லைகள்

Posted by அகத்தீ Labels:

 

 

 

 


 

 “’தேசபக்தி’ , ‘தேச எல்லைபேச்சுகளின் ஆரவாரத்தில் நசுக்குண்டு கதறும் மனிதமும்  நாகரீகமும் நம்மைக் கலங்க வைக்கிறது …. “

 

பிணவாடையும் கண்ணீர் உப்புக் கரிப்பும் : நடுநிசி எல்லைகள்

 

ரொமிலா தாப்பரின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கும் சுசித்திரா விஜயன் எழுதிய  ‘நடுநிசி எல்லைகள்’ எனும் நூலை வாசித்து முடித்த போது நெஞ்சில் அப்படி ஒரு கனம் . மூளையில் அப்படி ஒரு கொந்தளிப்பு . தேசபக்தி’ , ‘தேச எல்லைபேச்சுகளின் ஆரவாரத்தில் நசுக்குண்டு கதறும் மனிதமும்  நாகரீகமும் நம்மைக் கலங்க வைக்கிறது .

 

இந்த நூல் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு கடும் உழைப்பின் விளைச்சல் . சவால் மிக்க எல்லையோர கிராமங்களில் பயணித்து கண்டும் ,கேட்டும் ,படித்தும்  உரையாடியும் சேகரித்த செய்திகள் அனுபவங்களின் பிழிவு .

 

“ ஆக ,ஒரு காலத்தில் , எல்லைப் பகுதிகள் வேறுபட்ட கலாச்சாரங்களின் ஒருங்கிணைவு உருவாகும் இடங்களாகவோ,சந்திப்பு மையங்களாகவோ ,கலாச்சார பரிமாற்றம் நிகழும் இடங்களாகவோ இருந்தன .எல்லைக் கோடுகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட நவீன எல்லைகள் , தீவிரவாதமும் வன்முறையும் செழிக்கும் குறுகிய பாதைகளாகி விட்டன.” என முன்னுரையில் ரொமிலா தாபர் சொல்கிற வரிகள் கவனத்துக்கு உரியன .

 

பொதுவாக எல்லைக் கோடுகளை வரைந்தவர்கள் எவருக்குமே அங்குள்ள மனிதர்கள் , கலாச்சாரம் ,புவியியல் உள்ளிட்ட எந்த அறிவும் புரிதலும் இல்லை. பைத்தியக்காரன் கிழித்த கோடுகள் போல் எல்லைகளை மனம் போல் அவர்கள் வரைந்தனர் என்பதை இயல்பாய் புரிய வைக்கிறார் சுசித்திரா .

 

1] ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை , 2] இந்திய வங்க தேச எல்லை , 3] இந்திய –சீன எல்லை , 4]இந்தியா – மியான்மர் எல்லை , 5] இந்தியா – பாகிஸ்தான் எல்லை . என ஐந்து எல்லைகளில் நரக வேதனையோடு வாழ்கிற மனிதர்களின் கதை . அநீதியாய் கொல்லப்பட்ட மனிதர்களின் கதை , இவற்றினூடே சீழ் ஒழுகும் மனிதமும் உண்மையும் தான் இந்நூல் எனில் மிகை அல்ல.

 

“ ஒரு சாலையின் சிறு துண்டொன்றைக் கைப்பற்றப் போராடிய நெடிய ,கொடிய பத்து வருடங்களுக்குப் பிறகு .மடிந்த உடல்களும் வெடிக்காத குண்டுகளும் தவிர வேறெதும் இல்லை .”- என்கிறார் ஆப்கன் எல்லையில் முகாம் அதிகாரி .

 

 “ இது மரித்த ராஜ்ஜியங்களின் இடுகாடு” எனச் சொல்லும் ஏகாதிபத்திய நாடுகளை நோக்கி , - ” ஆப்கானியர்களுக்கு அவர்களின் இடுகாடு திரும்ப வேண்டுமாம் . வரைந்த கோடுகளை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொல்கிறார்கள்.” என நூலாசிரியர் சொல்வது ஆழ்ந்த பொருளுடையது .

 

“ அவர்களில் சிலர் தத்தம் வீடுகளின் வாசலில் இருந்து கொல்லைப்புறம் சென்றாலே சர்வதேச எல்லையைத் தாண்டிவிடுகிறார்கள் .” – இந்திய வங்க தேச எல்லையில் லட்சணம் இதுதான். “ ஆற்றை ரெண்டா பொளாக்கவா முடியும் ?” என்றார் காஸி .  சாமதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் போல் சில அடிகள் தள்ளி வெறொரு நாட்டில் அவர் குடும்பம் இருந்தது . “ பிரிவினையாவட்டும் ,சண்டையாவட்டும் வெறுமே நடந்து முடிஞ்சிடலீங்க .அது முடிவில்லாமல் நடந்துகீட்டே இருக்கு.” எவ்வளவு அனுபவச் செறிவான வார்த்தைகள் .

 

 “ காட்டுமிராண்டிகளை காட்டுமிராண்டித்தனமாகத்தான்” நடத்த முடியும் என்கிற சமூக உளவியல் ஊடுருவி இருப்பதை  கேட்கும் போது ;  நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்கிற அச்சம் தொற்றிக்கொள்கிறது .

 

எல்லை தாண்டும் போது துணியின் முனை கம்பி வேலியில் மாட்டிக்கொள்ள ,எல்லை காவல் ராணுவத் துப்பாக்கி மார்பைத் துளைத்தது .இது ஃபெலானியின் கதை ; எல்லை வேலிகளின் வன்முறைக்கு சாட்சி . உறவுகள் அங்கும் இங்குமாய் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட எல்லைகளில் கூப்பிடு தூரத்தில் இருக்கும் உறவு வழி திருமணங்கள் சர்வசாதாரணம் .அதில் ஒரு பெண்தான் ஃபெலானி . எல்லை தாண்டி தன் வீட்டுக்கு போக முயன்றபோது இப்படி உயிர் இழக்கிறார் . ’சட்டவிரோத பங்களாதேஷிகள்’ என்ற சொல் தேர்தல் அரசியலின் துருப்புச் சீட்டாகிவிட்டது . வெறுப்பு அரசியலின் விதையாகிவிட்டது . மனிதர்கள் ’ஆவணங்களற்றவர்களாக’ இருக்கலாம் ; ’புலம்பெயர்ந்தவர்களாக’ இருக்கலாம் ; முறைகேடானவர் என்று எப்படிச் சொல்ல முடியும் ?

 

எல்லைகளில் நடக்கும் போது சற்று வேகமாக காலை எட்டிப் போட்டால் அடுத்த நாட்டுக்குள் கால்வைக்க நேரிடும் .தாமும் அப்படிச் சிக்கிய அனுபவத்தை சொல்கிறார் நூலாசிரியர் சுசித்திரா .எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கும் இது நேர்கிறது .ஆனாலும் எல்லை தாண்டிய பயங்கரவாதியாக அப்பாவிகளை சித்தரிப்பது தொடர்கிறது .

 

 “அந்த குளத்துக்கு நடுவில தானுங்க ஜீரோ பாயிண்ட் ஓடுது.” என்றார் ஜம்ஷீது . அவர் நண்பர் அலியின் கதை மிகவும் வித்தியாசமானது . ஜிரோ பாயிண்டுக்கும் வேலிக்கும் இடையிலுள்ள பகுதி சட்டப்படி இந்தியாவுக்கு சொந்தமானது. ஆனால் அரசு எழுப்பிய வேலியோ இந்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள்ளேயே ஒரு ’யாருமற்ற நிலப்பரப்பு’ நிலப்பரப்பு உருவாகக் காரணமாக இருந்தது . அலியின் வீடு அங்குதான் .அவன் மனைவி ’கே’ எல்லையின் அந்தப்புறத்தவள் . அரசு கணக்கில் வங்கதேசிகள் . அவளை அவர் இழந்த சோகம் ஒரு புறம் . இவர் வீட்டில் மேல் பயங்கர  வெளிச்சம் பாய்ச்சும் எல்லை விளக்குகள் . அந்த வெளிச்சமே அவரை சித்திரவதை செய்தது .இண்டு இடுக்குவிடாமல் ஒளி புகாமல் காகிதம் துணி ஒட்டி அடைத்து இருட்டில் வாழும் கொடுமை . அவர் சொன்ன வார்த்தைதான், “என் கனவுகள் களவாடப்பட்டன.”

 

“ அதிகாரபூர்வ போர் அறிவிப்பு இல்லாமல் ,ஒரு படையையே அழித்த சம்பவத்தின் ஆவணம் இது.” எனச் சொல்லும் Himalayan blunders எனும் நூல் பற்றி சுசித்திரா , “ அர்த்தமற்ற அதிகாரப் போட்டியில் தொலையும் உயிர்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலை இல்லாமல் தன் அதிகாரத்தை நிறுவத் துடிக்கும் அதிகார பீடத்தின் நபர்களைப் பற்றி பேசுகிறது .”  “ஊமையாக்கப்பட்ட உண்மைகளின் இடத்தில் பொருந்த வைக்கப்படும் பொய்கள் அதனடிப்படையில் கட்டமைக்கப்படும் வரலாறு “ என அனைத்தையும் இந்நூல் பகர்வதாகச் சொல்கிறார் .

 

அதே போல் 1980 கருணாகர் குப்தா எழுதிய ஆய்வு நூல் குறித்த செய்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது . தேசிய வெறியும் திரிக்கப்பட்ட வரலாறும் எப்படி நம்மை உண்மையை நெருங்கவிடாமல் செய்கிறது என்பதன் சாட்சி அந்த ஆய்வு நூல் The Hidden History of the Sino – Indian Frontier . இந்தியாவில் குப்தா [ குஜராத்தியர்தாம் ] புறக்கணிக்கப்பட்டாலும் உலகெங்கும் மதிக்கப்படுகிறார் என்கிறார் சர் ஆர்லேஸ்டர் லாம்ப் . இதனை சுசித்திரா குறிப்பிட்டுள்ளது முக்கியமானது .

 

மியான்மர் எல்லையில் உள்ள நாகாக்கள் , “ நாங்கள் இந்தியர்கள் அல்ல.” என உரக்கச் சொல்கின்றனர் .போராடிக்கொண்டே இருக்கின்றனர் . வன்முறையோடுதான் வாழ்க்கை என பழகிப் போய்விட்டார்கள் .தங்கள் இனம் ,பண்பாடு அவர்களின் ஆதாரமாக இருக்கிறது . நாகா ,மணிப்பூர் , மேகாலயா ,அருணாச்சல பிரதேசம் என ஒவ்வொரு மாநிலமும் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் சோகக் கதைகள் எண்ணிலடங்கா .

 

“இப்பகுதியின் அழகை மட்டும் எழுதிப் பிரச்சனையை மாற்றிவிடாதீர்கள் .அழகும் வன்முறையும் தனித்திருப்பதில்லை.அவை ஈரிணைகள் .சேர்ந்தே வாழ்வன.” இவ்வரி களுக்குள் கனந்து கொண்டிருக்கும் யுகங்களின் வலியை உணர்ந்தால் நெஞ்சு வெடிக்கும்.

 

பர்மா எல்லையிலுள்ள கம்னியுன்கன் எனும் சிறு கிராமத்திலுள்ள எளிய கல்லறையொன்றின் வாசகம் ‘ இந்தியா கொன்று போட்ட என் மகன்.” . பழங்குடியினரும் பல்வேறு இனத்தினரும் வாழும் வடகிழக்கில் வாழும் மக்கள் தங்களை இந்தியர் என்கிற வட்டத்திற்குள் சுலபமாக இணைத்துக் கொள்ள முடியவில்லை . அவர்களின் பழங்குடியினரின் வரலாற்று வேரும் பண்பாட்டு வேரும் அப்படி . ஓர் அந்நியரோடு உரையாடுகையில்  நாகலாந்தைச் சார்ந்த ’என்’ என்பவர் சொல்கிறார் , ஏகாதிபத்தியம் ஏவிய போருக்காக கிறுத்துவ , இஸ்லாமிய , இந்து , பார்சி , சீக்கிய ,ஜெயின் ,யூத சகோதரர்கள் அந்நிய மண்ணில் உயிர் நீத்த இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறீர்கள் .”

 

எரிக்கப்பட்ட கிராமம் , கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட இயா என்ற பெண் [ ஒவ்வொரு ஊரிலும் இப்படி இயாக்கள் உண்டு ] இப்படி நாகலாந்து வடுக்களைத் தடவிப்பார்த்தாலே நெஞ்சு பதைக்கும் .

 

நெல்லி என்ற பெயரை மறக்கலாமா ? 1983 ல் 3000 இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்ட ஊர் . அசாம் – வங்க தேச எல்லையில் பிரம்மபுத்திரா கரையை ஒட்டி வெள்ளப் பெருக்கால் அடிக்கடி காணாமல் போவதும் மீள்வதுமாய் மிதவைத் தீவுகள் மிகுந்த ஊர் . அங்கு அரங்கேறிய கொடூரம்  3000 பேருக்கு மேல் பலி.அசாமில் தொடரும் வன்முறை வலி இவற்றால் நீளும் துயரக்கதைகள் . தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளும் கிராமங்கள் . இந்த அத்தியாயத்தைப் படிக்க மனதைக் கல்லாக்க வேண்டும் .

 

வங்கதேச இஸ்லாமியர் நாடு தோறும் வலி சுமந்து வாழ்பவர்களாகிவிட்டனர் ‘ரோகிங்கியா” எனும் மியான்மியர் அகதிகள் யார் ? பிழைக்க மியான்மருக்கு பலபல தலைமுறைக்கு முன்பே போன வங்க இஸ்லாமியர் .இப்போது அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள் .மொழி ,பண்பாடு ,மதம் ,இனம்  இவற்றால் ஒன்றாயினும் மியான்மர் , இந்தியா எங்கும் வெறுப்புக்கும் வந்தேறிகள் என வசவுக்கு தாக்குதலுக்கும் ஆளான சோகக்கதை சொல்லில் அடங்கா .

 

’அவங்கவங்களால் சுமக்க முடியற கதைகளைத்தான் சுமக்கணும்’என வருந்துகிற சுசித்திரா இந்நூலில் சொன்ன கதைகளையே திருப்பிச் சொல்ல முடியல அவ்வளவு வலி . அவ்வளவு கண்ணீர் . ஆனால் குடியுரிமை , எல்லை தாண்டி வந்த அந்நியர்கள் என்ற சொற்கள் வெறுப்பு அரசியலின் மூலதனம் . ஆனால் அடையாளம் காணப்படாமல் ஆட்சியாளர்களால் புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளும் அதில் ஒழுகும் பிணவாடையும் கண்ணீர் உப்புக் கரிப்பும் எத்தனை காலமாயினும் ஆறாது . இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பும் குரோதமும் ஆட்சியாளர்களால் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுவதை எவ்வளவு நாள் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

 

எல்லையோர கிராமங்கள் நெடுக கோயில்கள் முளைத்துள்ளன . வன்முறையில் ,போரில் கொல்லப்பட்டவர்களின் கல்லறையே கோயில்களாகி உள்ளன . ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை புனையப்பட்டு வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நூல் நெடுக சொல்கிறார் நூலாசிரியர் . சாமிகள் இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள் . வரலாறு புதைக்கப்பட்டு புராணங்கள் இப்படித்தான் உருவாக்கப்படுகின்றன .

 

“ காஷ்மீரில் அழிவு ,காணாமல் போவது ஆகியவை முடிவிலிக் காட்சிகளாக மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன .” வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அரச வன்முறை” வழக்கமாகிவிட்ட பூமி இது. “ முடக்கப்பட்ட நாகரீகம் அன்பு செலுத்துதலை சாத்தியம் இல்லாததாக்கிவிட்டிருக்கிறது” “ எங்கள் வீதிகளுக்குள்ளேயே நாங்கள் அந்நியமாகிவிட்டோம்.” என்று சொல்வது வேதனையின் வெடிப்பல்லவா ?

 

“ எங்களிடமிருந்து அனைத்தையும் பிடிங்கிக் கொள்வதில் அவர்கள் உறுதியாக இருக்கும் போது .போராடுவதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும் ?” கோவம் நியாயம்தானே !

 

ராஜஸ்தான் பஞ்சாப் எல்லையில் வயல்களை கிழித்துக் கொண்டு செல்லும் 1800 கி.மீ நீளம் அமைக்கப்பட்ட  கண்ணிவெடி மக்களை நிர்கதியாக்கிவிட்டது.

 

“ இந்திய வரலாற்றோடு இன்று என் அம்மா தன்னை அடையாளப் படுத்திக் கொண்டால் ,அவள் என்னவாக இருப்பாள் ? துரோகியாகவா ? என்னவாக முத்திரை குத்தப்படுவாள் ? பாகிஸ்தானின் துரோகி என்றா ?” கேட்கிறாள் நாடாஷா . இவர் யார் தெரியுமா ? ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்ட கொல்லப்பட்ட 23 வயது இளைஞனின் கொள்ளுப் பேத்திதான் இந்த நாடாஷா .

 

“ குணமடைவதற்குக்கூட அனுமதி கிடைக்காது “ என் வரலாறு எல்லைக் கோட்டின் இருபுறமும் உள்ளது என்கிற நாடாஷா இருபக்கமும் வரலாறு திருத்தப்படுகிறது என வேதனைப்படுகிறார் . “ சீசாவில் இருக்கும் பூதம் வெளியே வந்துவிட்டால் உள்ளே அடைக்க முடியாது” என மதவெறி அரசியலை குறித்து அனுபவச் சூட்டோடு வருந்துகிறார்.

 

இந்த நூலை நல்ல முறையில் தமிழாக்கம் செய்த ஞான.வித்யாவிற்கும் , நன்கு பதிப்பித்த சீர்மை வெளியீட்டகத்துக்கும் வாழ்த்துகள் கூறி நூலில் இருந்து ஒரு மேற்கோளோடு நூலறிமுகத்தை நிறைவு செய்கிறேன் .

 

“ ‘காட்சித் திரிபென்பது கூட்டுணர்வின் விடாப்பிடியான களை’ என்று அந்தோனியா கிராம்ஷி எழுதினார் .’வரலாறு கற்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. மாணவர்கள்தாம் எவருமே இல்லை .’நாம் வரையும் கோடுகள் எழுப்பிய வேலிகள், வலியுறுத்தும் எல்லைகள் அனைத்தும் காட்சித் திரிபுகள் . இவை எதுவும் உண்மை இல்லை என்றாலும் ,அவை ஏற்படுத்திய கொடிய பின் விளைவுகள் நம் கூட்டுணர்வின் ஒரு பகுதி ஆகிவிட்டன .இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் ஒழுக்கக் குலைவுகள் எல்லைக் கோடுகளை ஒட்டித்தான் தொடங்கின ..நம்மில் மிக நாகரீகமானவர்கள்கூட எல்லையில் நடைபெறும் ஒடுக்குமுறை ஈவிரக்கமற்ற வன்முறைச் செயல்களுக்கு சாக்குச் சொல்லத் தொடங்கிவிட்டனர் .சுதந்திரம் ,வளர்ச்சி ,உரிமை என நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் அனைத்து குறிக்கோள்களும் அவர்களிடமிருந்து விலக்கப் பட்டவை.வரலாற்றில் பாடங்களைக் கற்போமானால் மனிதர்களைக் கொன்று குவிக்கும் எல்லைகளற்ற சுதந்திர தேசம்ங்கள் குறித்து சாத்தியக் கூறுகளைச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.” நூலாசிரியரின் கனவு மெய்ப்பட யுகங்கள் காத்திருக்க வேண்டுமோ !

 

சுசித்திரா விஜயனின் இன்னொரு நூலான “இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவைக் கூண்டிலேயே அடைத்து வைக்க முடியும் ?”  [இந்திய அரசியல் கைதிகளின் குரல் ]   வாசித்து  ஜனவரியில் அறிமுகத்தை எழுதினேன் .அதிலிருந்து ஒரு சொல் , ““நம்பிக்கையையும் போராட்ட குணத்தையும் எந்த சர்வாதிகாரத்தாலும் கொன்றுவிட முடியாது .சில நேரம் அவை வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் வீரியம் குறைந்தது போலத் தெரியலாம் . ஆனால் நமது நம்பிக்கையும் போராட்ட குணமும் மீண்டும் மலர்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிடும்.”

 

நடுநிசி எல்லைகள் [ நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு ],

படைப்பு : சுசித்திரா விஜயன் , தமிழில் : ஞான.வித்யா

வெளியீடு : சீர்மை , தொடர்புக்கு : 91 80721 23326  /  seermainoolvali@gmail.com

பக்கங்கள் : 344 / ரூ.460 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

15/10/25.

சும்மா இரு

Posted by அகத்தீ Labels:

 



சும்மா இரு ! கொஞ்சநாட்கள்

வாயையும் கையையும்

பொத்திக்கொண்டு

மூளை கட்டளையிடுகிறது

அடுத்த நொடியே மீறுகிறது

 

நீ பேசி எழுதி

என்ன ஆகப் போகிறது ?

அதுவும் சரிதான்

சும்மா இருந்தால்

சரியாய் போய்விடுமா

 

உன் முணுமுணுப்பு

உனக்கேகூட கேட்காமல் இருக்கலாம்

எல்லா முணுமுணுப்புகளும்

நிச்சயம் பேரிரைச்சல் ஆகும்

நிறுத்தாதே தொடரு !

 

சுபொஅ.

01/10/25.


சாகசக்காரன்…

Posted by அகத்தீ Labels:

 


சாகசக்காரன்…

 

முதுமையிலும்

நானொரு ‘சாகசக்காரன்’

நம்பவில்லையா ?

உடைக்கப்பட்ட பூசனிக்காயும்

குங்குமமும் பொரியுமாய்

சிதறிக்கிடக்கும்

தெருக்களின் வழியே

ஒரு மணி நேரமாய்

வழுக்கி விழாமல்

ஆயுத பூஜை நாளில்

நடை பயிற்சி சென்று வந்த

நான் ‘சாகசக்காரன்’தானே !

 

சுபொஅ.

02/10/25.