ஏன் வாசிக்க வேண்டும் மணிமேகலையை ?

Posted by அகத்தீ Labels:

 





நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் :

 

 ஏன் வாசிக்க வேண்டும் மணிமேகலையை ?

 [ நன்றி : காக்கைச் சிறகினிலே , மே மாதம் , 2025.]

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

மணிமேகலை என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான காவியம் . இக்காவியம் குறித்து முதுபெரும் தோழர் கே.டி.கே .தங்கமணி , தோழர் .ஜீவபாரதி உள்ளிட்ட சிலரின் நூல்களை வாசித்துள்ளேன் . தீராநதியில் அ.மார்கஸ் தொடராக எழுதிய போது அவ்வப்போது வாசித்துள்ளேன் . மூலமும் உரையும் வாசித்துள்ளேன் . இதற்கு ஈடான இன்னொரு காவியம் இல்லை என்றே சொல்லுவேன் . அந்த அளவு என் மனதைக் கொள்ளை கொண்ட காவியம் இது . இம்முறை அ.மார்க்சின் மணுமேகலை வெளிவந்த சூட்டோடு வாங்கிவிட்டேன் . வெளிநாட்டில் இருந்தபடி வாசித்தேன் . இந்நூலை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன் .

 

மணிமேகலை காப்பியத்தின் தனித்துவங்களையும் சிறப்புகளையும் ஓர் இடதுசாரி கூர்நோக்கோடு இந்நூல் நெடுக கட்டுரைகளாகத் தந்துள்ளார் அ.மார்க்ஸ்  . முதல் பாகத்தில் 38 கட்டுரைகளும் , இரண்டாம் பாகத்தில் 22 கட்டுரைகளும் , மூன்றாம் பாகத்தில் [ இரண்டாம் பாகத் தொகுப்பில் அடங்கியது ] 17 கட்டுரைகளும் , முதல் பாகத் தொகுப்பின் இறுதியில் ‘ சாத்தனாரின் மணிமேகலை மூல காப்பியச்  சுருக்கமும்” இடம் பெற்றுள்ளது. .  ‘தீராநதி’யில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் அதற்குரிய பலமும் பலவீனமும் உள்ளடக்கியதே இத்தொகுப்பு நூல்.

 

 மணிமேகலை எவ்வளவு உயர்வான சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதில் ஐயமில்லை .அதனை எடுதுக்காட்டுவதையே  அ. மார்க்ஸின் இந்நூல் தன் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது . மணிமேகலை 30 அத்தியாயங்களைக் கொண்டது .மொத்தம் 4758 வரிகள் . 16 கிளைக்கதைகள் . ஒவ்வொரு கிளைக்கதையும் பெளத்த நெறி ஒன்றை வலியுறுத்தும் வண்ணம் அமையப் பெற்றது . எனவே மணிமேகலையின் நூல் கட்டுமானம் சற்று சிக்கலானது . அந்த சிக்கல்களை அறுத்து மணிமேகலை பேசும் அறத்தை படம் பிடிக்கிற சவாலான பணியைத்தான் அ.மார்க்ஸ் செய்துள்ளார்.

 

இரட்டைக் காப்பியங்கள் எனச் சொல்லப்படுகிற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்  கண்ணகி ,மணிமேகலை , மாதவி ,சித்திராபதி ,மாசாத்துவன் , அறவாணர் ,இளங்கோ ,சாத்தனார் என முக்கிய பாத்திரங்கள் ஒன்றாக இருப்பினும் பாத்திரங்களை வார்த்ததில் பாரிய வேறுபாடு உண்டு .இதனை இந்நூலில் பல இடங்களின் மார்க்ஸ் நிறுவுகிறார் . குறிப்பாக சிலம்பு சமண காவியமாக இருப்பினும் நூல் நெடுக ஒருவித சமய சமரசம் பேணப்படும் ; ஆனால் மணிமேகலை பெளத்த நெறியை ஓங்கி ஒலிக்கும் .

 

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கண்ணகியை கடைசியில் பத்தினி தெய்வமாக காட்சிப்படுத்த ஏதுவாக முதல் காண்டத்தில் வர்ணிக்கும் போதே உயர்வு நவிர்ச்சியை கையாள்வதாக ம.பொ.சி தன்  “விளக்கத் தெளிவுரை”யில் சுட்டிக்காட்டுவார் .

  

’மணிமேகலைத் துறவு’ என பெயர் பெற்ற இக்காவியத்தில் ஓர் இளம் பெண் துறவு நோக்கி பயணிக்கும் போதும் , இளம் பெண்ணுக்கே உரிய காதல் , உளவியல் போராட்டம் இவற்றை சாத்தனார் நேர்த்தியாய் சொல்லியிருப்பார் இப்பாங்கை அ.மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார் .

 

பத்தினி என்கிற கோட்பாட்டை மணிமேகலை போற்றவில்லை . மணிமேகலை பத்தினி தெய்வம் கண்ணகியை சந்திக்கும் போது , நீங்கள் “ கற்புக் கடன் பூண்டு  நுங்கடன்..” முடித்தது சரியா ? மதுரையை எரித்தது சரியா என வலுவாகக் கேள்வி எழுப்புகிறார் . பத்தினி கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் மணிமேகலை மக்களின் உளவியலில் ஆழப்பதிந்துள்ள பத்தினி கருத்தியலை முற்றாக எதிர்நிலையில் நிறுத்தாமல் சமரசமும் செய்கிறது . மணிமேகலை முதலில் அட்சய பாத்திரத்தில் பிச்சை ஏற்க ஆதிரை என்ற பத்தினியைத் தேர்ந்தெடுத்தார் என்பது இதானால்தான் என்கிறார் அ.மார்க்ஸ்  .

 

சைவ மரபினர் நெடுங்காலமாக சிலப்பதிகாரம் ,திருக்குறளை ஏற்றுக்கொண்ட போதிலும் மணிமேகலையை ஏற்க மறுத்தது ஏன் என்கிற கேள்வியை எழுப்பி விடைதேட முயன்றிருக்கிறார் அ.மார்க்ஸ் .

 

“மணிமேகலை அவர்களால் செரித்துக்கொள்ள இயலாத பல அம்சங்களைக் கொண்டிருந்ததுதான் இதன் அடிப்படை . ஒரு பெண்ணுக்கு காப்பிய மரபில் அளிக்கப்படும் பாத்திர இலக்கணங்களை முற்றிலும் மீறியவள் மணிமேகலை காதல் பிரிவு ,கணவனைத் தொழுதெழும்  கற்பு ,இல்வாழ்க்கை , தாய்மை என்கிற பாத்திர மரபு மணிமேகலையில் தலைகீழாகக் கவிழ்க்கப்படுகிறது . காப்பிய நாயகியின் லட்சியம் இல்லறம் அல்ல . இங்கு காப்பியத்தின் பெயரே மணிமேகலைத் துறவு என்பதுதான் “ என்கிறார் அ.மார்க்ஸ்.

 

சீதை ,சீதா என்கிற பெயர்கள் தமிழ்சமூகத்தில் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு சூட்டப்படுகிறது . சீதையும் ஓர் துயர காவியம்தான் ஆயினும் ஆணாதிக்க சிந்தனைக்கு ஏற்ற அடிமை என்பதால் சமூகம் ஏற்றுக் கொண்டாடுகிறது .ஆயின் ஆட்சிக்கு எதிராக சீறி எழுந்த கண்ணகி பெயரோ , ஊருக்கே பசிப்பிணி போக்கிய  உலக முன்மாதிரி  மணிமேகலை பெயரோ விதிவிலக்கவாகவே இங்கு புழங்குகிறது . இந்த சமூக உளவியலோடு நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டி இருக்கிறது என்பது என் கருத்து  .

 

” மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” [ மோசிக்கீரனார் .புறநானூறு 186 ] என்பதே சங்கம் தொட்டு தமிழ்ச் சமூக கருத்தாக்கமாக இருந்து வந்தது . “ மன்னனே உயிர் மக்கள் வெறும் உடல்தான் . மன்னன் நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும்” என்பது மோசிக்கீரனாரின் வாதம் .ஆனால் மணிமேகலையில்  ஜனநாயகம் சற்று மூச்சுவிடுகிறது . மணிமேகலை சொல்கிறது ,” மன்னவன் மகனே கேள் ! கோ [ அரசன் ] நிலை தவறினால் கோள்களும் நிலை தவறும் . கோள்கள் நிலை தவறினால்  மழை பொய்க்கும் ,மழை பொய்த்தால் மன்னுயிர் [மனிதர்கள் ] அழிவர் . மன்னுயிர் அழிந்தால் மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் எனக் கருத வேண்டிய மண்ணாள் வேந்தனின் தன்மையும் அழியும்.”[ மணி 7.7 -12] மக்கள்தான் உயிர் .மக்கள் நன்றாக இருந்தால்தான் மன்னன் நன்றாக இருக்க முடியும் “ என மோசிக்கீரனாருக்கு எதிர்நிலையை மணிமேகலை எடுப்பதை அ.மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார் .

 

“ பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் [மழையும்] வளனும் சுரக்க ” இந்திரவிழாவுக்கு அழைப்பு விடப்படுகிறது  முதல் அத்தியாயத்திலேயே . பசிப்பிணிக்கு எதிராக உரக்க ஒலித்த மானுடநேயக் குரலே மணிமேகலை . நூல் நெடுக பெளத்த அறம் ஓங்கி இருப்பினும் பசிப்பிணிக்கு எதிராக ‘அட்சய பாத்திரம்’ எனும் அழகிய கற்பனையைப் படைத்த சாத்தனார் , அதனை முதலில் ஆபுத்திரன் கையில் கொடுக்கிறார் ,பின்னர் அதை மணிமேகலை கையில் தருகிறார் . ஆபுத்திரனின் பிறப்பு என்பது தாய்க்கு தவறான வழியில் பிறந்தவன் , மணிமேகலை கணிகையர் குலத்தில் வந்தவர் . ஆக குல ஒழுக்க விதிகளை சுக்குநூறாக உடைத் தெறிந்து பசிப்பிணியை போக்கும் அட்சய பாத்திரத்தை அவர்கள் கையில் கொடுத்து வற்றா மானுட அன்பே உயர் ஒழுக்கமென நிறுவிய காப்பியம் இது . அ.மார்க்ஸ் தம் கட்டுரைகளில் பல இடங்களில் இதனை எடுத்துக் காட்டுகிறார்.   

 

“காணார் ,கேளார், கால்முடப்பட்டோர் , பேணுநர் இல்லார் ,பிணி நடுக்குற்றார் …” என யார் யாருக்கெல்லாம் பசிப்பிணி ஆற்ற வேண்டும்  என விரிந்து பரந்து  வழிகாட்டுகிறது .இங்கு இன்னொரு செய்தி , ”மாற்றுத் திறனாளி” என்ற சொல்லை இப்போது நாம் ஏற்றுள்ளோம். குருடர் ,செவிடர் ,நொண்டி போன்ற  சொற்களை இழிவெனச் சொல்கிறோம் . சிலப்பதிகாரம் உடபட பழந்தமிழ் இலக்கியங்களில் இச்சொற்களே விரவி இருக்க , மணிமேகலையே மாற்றுச் சொற்களைப் படைத்து முன்னத்தி ஏர் ஆகிறது என்பது என் அபிப்பிராயம் .அ.மார்க்ஸ் இதனைக் கருதில் கொள்ளவில்லை .  அரும்பசி களைய எல்லையற்ற வெளியை உருவாக்கி  இல்லை எனாது வழங்கிய அட்சய பாத்திரக் கற்பனை கூட ஒரு வகை உட்டோபியன் சோஷலிசம் என நான் கருதுவது உண்டு . ஓர் நூலில் எழுதியும் இருக்கிறேன்.  பசிப்பிணி ஆற்ற வேண்டிய மக்கள் தொகுதியாக  காணார் கேளார் என நீளும் பட்டியலில் விலங்கினங்களையும்  சேர்த்த சாத்தனார் ஓரிடத்தில் ‘மடிநல்கூர்த்த மக்கள்’ எனச் சொல்லிச் செல்கிறார் .அது யாரைக் குறிக்கும் என அ. மார்க்ஸ் கேள்வி எழுப்பிச் செல்கிறார் .

 

போரில் வென்று சிறைபிடிக்கப்பட்ட எதிரிநாட்டுக் கைதிகளை இந்திரவிழாவின் போது  விடுதலை செய்ததாக ம.பொ.சி தன் சிலப்பதிகார விளக்கக்கத் தெளிவுரையில் எடுதுக்காட்டுவார் . ஆனால்  “சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாக்கி” மனித உரிமையின் பெருங் குரலாக மணிமேகலை ஒலித்ததை ,மனித உரிமைப் போராளியான அ.மார்க்ஸ் உளம் தோய்ந்து எடுத்துரைத்துள்ளார் .

 

பல்வேறு சமயத்தாருடன் உரையாடி அவர்கள் சமயநெறி அறிந்தாய்ந்து பெளத்தம் சேர்கிறார் மணிமேகலை .அளவைவாதி ,சைவவாதி ,பிரம்மவாதி , வைணவவாதி ,வேதவாதி ,ஆசிகவாதி என எல்லோரிடம் பாடம் கேட்கிறார் . ஆயினும் இறுதியில் பெளத்தமே  உயர்வென சொல்லி முடிக்கிறார் . நீலகேசி பிற சமயத்தை வாதில் வென்று சமணத்தை நிறுவியதுபோல் மணிமேகலை செய்யவில்லை .எல்லா சமய நெறிகளையும் அறிந்து ; பெளத்தமே மேலானது என முடிவுக்கு வருகிறார் . அப்பாத்திரத்தின் வழி வாசகனையும் வரச்செய்யும் காவிய நுட்பம் மணிகேலைக்குரியது , அதே சமயம் சமய பகையை விசிறாமல் பல்வேறு சமயங்களின் இருப்பையும் அங்கீகரிக்கிறது  . அ. மார்க்ஸ் இதனை எடுத்துக் காட்டத் தவறவில்லை .

 

 பட்டினிக்கு எதிரான மாபெரும் மானுட பேரெழுச்சியாகவும் ; பத்தினி கோட்பாடு ,குலதர்மம் இவற்றை மீறி உயர் ஒழுக்கத்தை பறை சாற்றுவதாகவும்  ; ஓர் இளம் பெண் துறவு பூணுவதை மையம் கொண்டதாகவும் அமையப்பெற்ற மணிமேகலையில் , கிளைக்கதைகள் மூலம் பொளத்த அறமே உரைக்கப்படுவதால் இந்நூல் நெடுக தத்துவமும் அறபோதனையும் பிணைந்திருப்பதை அறிவோம் .அதனை  எடுத்துக்காட்ட அ.மார்க்ஸ் தவறவில்லை . அதன் தத்துவப் புலம் குறித்து நான் இங்கு பேசப்புகவில்லை .நூலை வாசித்தறிக !

 

 

இப்படி இந்நூலில் எடுத்துரைக்கப்பட்ட கருத்துகளை சொல்லச் சொல்ல நீளும் ; இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் . நீங்கள் வாசித்து அறிவது மிகவும் நன்று !

 

குறிப்பாக இரண்டு செய்திகளை சுட்டிக்காட்டுவது அவசியமென்று கருதுகிறேன் .

 

1] எழுத்துப் பிழைகள் உறுத்துகின்றன . தத்துவ வாதம் மிகுந்த பகுதியில் வாசிப்புக்கு இடையூறு செய்கிறது .அடுத்த பதிப்பில் சரி செய்க ! 134 ஆம் பக்கத்தில் 17 வது அத்தியாயத் தலைப்பே “பட்டினி வழிபாடு” என்றிருக்கிறது . ’பத்தினி வழிபாடு’என்றல்லவா இருந்திருக்க வேண்டும் . அத்தியாய உட்பொருளிலும் அப்படியே உள்ளது .

2] கூறியது கூறல் வாரந்தோறும் எழுதும் போது கட்டாயம் தேவைப்படும் ஏனெனில் வாசகர் நினைவுத் தொடர்ச்சிக்காக . ஆனால் நூலாக்கும் போது பத்தி பத்தியாக பக்கம் பக்கமாகக் கூறியது கூறல் மீண்டும் மீண்டும் வருவது வாசிப்புக்கு இடையூறு செய்யும் . எடிட் செய்தால் பக்கங்களின் எண்ணிக்கையும் நிச்சயம் குறையும் .

 

அடுத்த பதிப்பில் இவ்விரண்டையும்  சரி செய்வாரென தோழமையோடு எதிர்பார்க்கிறேன்.

 

இடதுசாரி மற்றும் முற்போக்கு பக்கம் நிற்போர் ,கம்யூனிஸ்ட் கட்சியோடு ஏதோ ஓர்வகையில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வோர் ,பாசிச எதிர்ப்பில் தன்னை முன்நிறுத்துவோர் வாசிக்க வேண்டிய காப்பியம்‘  “மணிமேகலை” . அதனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார் இந்நூல் வழி அ.மார்க்ஸ் .

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் : மணிமேகலை  [ இரண்டு பாகங்கள் ] , ஆசிரியர் : அ.மார்கஸ் ,வெளியீடு : எழுத்து பிரசுரம் , தொடர்புக்கு : மின்னஞ்சல் : zerodegreepublishing@gmail.com   / 89250 61999 பக்கங்கள் : 350 + 240  / விலை :  ரூ .420 + 290

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

05/05/25

வர்ஜீனியா , அமெரிக்கா ,

 

 

 

 

 

 

.

 

 

                                                     

 

 

 

 


0 comments :

Post a Comment