அண்மையில்
படுக்கை அறை ,அடுக்களை ,கழிப்பிடம் ,வரவேற்பறை
உள்ளடங்கிய நகரும் கார் ஒன்றில் என் நண்பர் கதை சொல்லி பவா செல்லதுரை அமெரிக்காவில்
8000 கி.மீ சாலை வழிப் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பி இருக்கிறார் . அவர் ஒரு நிகழ்வில்
பேசியது யூ டியூப்பில் காணக் கிடைக்கிறது .
அதில் அமெரிக்காவில்
விரும்பிய போது டீ காபி குடிக்க தெருவோர டீக்கடைகள் இல்லாததையும் , இங்கு வழங்கப்படும்
உணவில் காரசாரம் இல்லாமை குறித்தும் சொந்த ஊர் பெருமிதத்தையும் பேசியுள்ளார் . இது
பொதுவானது . நான் இங்கு மகனுடன் சாதா காரில் பயணிக்கும் போதும் இதே உணர்வு எனக்கும்
ஏற்பட்டது . அது பிழையில்லை .
ஆனால் அவரது
பதிவினை சிலர் வன்மத்தோடு விமர்சிப்பதை ஏற்க முடியவில்லை .
புதிய சூழல்
எல்லோருக்கும் ஒரேப் போல் இருக்காது .
அதே நேரம்
ஒரு நாட்டில் சில நாட்கள் பயணித்துவிட்டு ஒரு சில இடங்களை பார்த்துவிட்டு இதுதான் அந்த
நாடு என சொல்லிவிடக்கூடாது . ஒரு நாட்டை பற்றி அறிய அங்கேயே தங்கி மனம்போல் பயணித்து
மக்களிடம் ஊடாடி வரலாறு பண்பாட்டை படித்தறிந்தே முடிவுக்கு வர வேண்டும் .
பொதுப்பார்வையில்
ஒவ்வொரு நாட்டிலும் பயணிக்கும் போது சில நல்ல அம்சங்கள் பளிச்செனக் கண்ணில் படும்
.அதுபோல் சில அம்சங்கள் பளிச்சென உறுத்தவும் செய்யும் . இரண்டும் கலந்ததுதான் எல்லா
நாடும். அமெரிக்காவும் அப்படித்தான் .
இந்த ஊரின்
தூய்மையும் , அகலமான சாலை வசதியும் , பசுமைச் சூழலும் போக்குவரத்து விதிகளை மதிக்கும்
மாண்பும் வியக்க வைக்கிறது. அவர்களுக்கு விரிந்த நிலப்பரப்பும் , மக்கள் தொகை அடர்த்தி
மிகக் குறைவாக இருப்பதும் நல் வாய்ப்பு . அது வந்தேறிகளின் நாடு என்பதால் சொந்தப் பண்பாடு
எனக் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை . அதன் சொந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை
லட்சக் கணக்கில் அழித்து அதன் இரத்தச் சகதியில்
எழுப்ப்பட்ட நாடல்லவா அது ? அதன் வரலாறும் சில நூறு ஆண்டுகள் தாமே ! ஆகவே ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட
நவீன நகர நாகரீகம் வேருன்ற முடிந்தது . அதன் ஒழுங்கமைப்பு உங்களை நிச்சயம் கவரவே செய்யும்
.
பெரும்பாலும்
“இயந்திர வாழ்க்கைதான்” இங்கு என்பது என் தனிப்பட்ட
கருத்து . இங்கே தனிமனித சுதந்திரம் அதிகம் பேசப்படுவதற்கும் மனிதன் தனித்தனி தீவுபோல்
தாமரை இலைத் தண்ணீராய் வாழ்வதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா ? சமூக உளவியல் ஆய்வாளர்கள்
விடை யிறுக்க வேண்டிய கேள்வி .
கருக்கலைப்பு
இங்கு சட்டவிரோதமானது . கிறுத்துவ மதப் பழமைவாதக்
கண்ணோட்டம் . இதனால் இங்கு பெண்கள் சுமக்கும் வலி அளவிட முடியாது . இதன் விளைவான ஆணாதிக்கமும்
இங்கு மிகப்பெரும் சாபக்கேடாய் பெண்கள் வாழ்வில் இடியாய் விழுகிறது . அன்றாடம் பெருகும்
தனித்துவாழும் பெண்களின் போராட்ட வாழ்வும் வலியும் இச்சமூகத்தின் பெருமையா ? கண்ணீரா ?
குழந்தைகள்
உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியக்க வைக்கிறது . ஆயினும் நம் பண்பாட்டு வழியில்
சிலவற்றோடு உடன்பட சிரமமாக இருக்கிறது . குழந்தைகளை அடிப்பது மட்டுமல்ல கண்டிப்பதுகூட
விசாரணைக்கு உள்ளாகிவிடும் . குழந்தைகள் தனித்து தூங்க வேண்டும் , சாப்பிடுவது குளிப்பது
எல்லாம் சுயமாக செய்ய பழக்க வேண்டும் .சுயசார்பு நல்லதுதான் .ஆயின் அது இயந்திரத்தனமாக
செய்யப்படுகிறதோ ! அல்லது நாம் செக்குமாட்டுத் தனத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறோமா
? அங்கு வாழும் இந்தியர்கள் பிரச்சனை இது .
அங்கு பள்ளிப்பாடங்களில்
குடும்பத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது . ஃபேமிலி ட்டிரி [ family
tree ] எனும் குடும்பப் பாரம்பரியம் குறித்த சிந்தனை செய்முறைத் தேர்வு வழி தேடி கண்டுபிடிக்க
படம் வரைய நிர்ப்பந்திக்கிறது . நம் நாட்டில் தந்தை வழிப் பாரம்பரியம் மட்டுமே பேசப்படும்
சூழலில் இங்கு இருபக்க பாரம்பரியமும் தேடப்படுவது நல்லது . அதுபோல் வேற்றுமை பாராட்டக்
கூடாது என்கிற ஜனநாயக மாண்பு பள்ளி பாடத்திட்டத்திலேயே ஒரு பகுதி .ஆயினும் வெள்ளை ஆதிக்க
மனோபாவமும் ஆணாதிக்க உணர்வும் சமூக உளவியலில் இங்கு இன்னும் வலுவாக நிலவுவது முரண்.
இங்கு கல்வியில்
சீன மாணவர்களும் இந்திய மாணவர்களுமே முதலிடத்தில் இருக்கிறார்கள் . சீனர்கள் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெறத் துவங்கிவிட்டனர் .இனி இந்தியர்களின் வேலைவாய்ப்பு சவாலாகும் என்பது
இங்கு பொதுக்கருத்து .இங்கு சங்கிகளின் செயல்பாட்டால் இந்தியர்களின் மீதான ஒவ்வாமை
அதிகரித்து வருகிறது . இவை எல்லாம் பலரோடு உரையாடிய போது வெளிப்பட்டவையே !
மருத்துவ
வசதி என்பது இங்கு பெரும்பாலோருக்கு எட்டாத உயரத்தில் .. அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல்
எதுவும் நடக்காது . காப்பீடும் பெருமளவு கைகொடுக்காது . இதன் எதிரொலியாக அண்மையில்
நியூயார்க் ஹோட்டல் முகப்பில் ஓர் தனியார் மருத்துவக் காப்பீட்டு உயரதிகாரியை ஓர் இளைஞன்
சுட்டுக்கொன்றான் .அவனைக் காப்பாற்ற அமெரிக்க இளையர் உலகமே கைகோர்த்து நிதி திரட்டி
எழுந்தது கண்டோம். இங்கு வழக்கைச் சந்திக்கப்
பயந்து பெரும்பாலன மருத்துவர்கள் அனைத்து சோதனை முடிவும் வராமல் ஒரு பாரசிட்டமால் மாத்திரைக்கூட
தரமாட்டார்கள் . மருத்துவ பில் மிகமிகமிக அதிகம். கனடாவில் மருத்துவம் இலவசம் . ஆனால்
மருத்துவ சேவையில் அதிருப்தி அதிகம் . இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மருத்துவ
வசதி மிகச் சிறப்பு . அரசு ஆரம்ப சுகாதார மையங்களும் , அரசு மருத்துவ மனைகளும் மிக
நன்று .நிழலின் அருமை வெயிலில்தான் தெரிகிறது
இங்குள்ள
தட்டவெப்ப சூழ்நிலை ஆண்டில் பெரும்பகுதி பொது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது .
எனவே உள்ளரங்கம் , வீடு என கூடடடைந்த வாழ்க்கையாகிவிடுகிறது
. அதன் எதிரொலி வசந்த காலம் , கோடை காலத்தில் குடும்ப இன்பச்சுற்றுலா ,பிக்னிக் பண்பாட்டின்
கூறாகிவிட்டது .
நுகர்வு கலாச்சாரமும்
கணிணி யுகமும் இவர்கள் வாழ்வை ஒரு கையடக்க வட்டமாக்கிவிட்டது . இது உலக விதி .இங்கு
கூடுதல் விதி .என் செய்ய ?
நல்லதும்
கெட்டதுமாக நான் அரைகுறையாய் புரிந்து கொண்டது மட்டுமே அமெரிக்கா அல்ல ; நான் இங்கு
பேசுவது மக்களைப் பற்றிதான் ; ஏகாதிபத்திய அரசியலைப் பற்றியது அல்ல .
சுபொஅ.
21/05/25,
வர்ஜீனியா.
0 comments :
Post a Comment