அறிந்த தாகூரைவிட அறியாத தாகூரே அதிகம்

Posted by அகத்தீ Labels:

 

 


அறிந்த தாகூரைவிட அறியாத தாகூரே அதிகம்

 

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் பற்றி நமக்கு நன்கு நிறைய தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் .ஏனெனில் தேசிய கீதம் எழுதியது அவர்தான் .கீதாஞ்சலி நூலுக்காக நோபல் பரிசு வாங்கி இருக்கிறார் .சாந்திநிகேதன் எனும் கல்விக்கூடம் நடத்தினார் .தேச விடுதலைப் போரில் ஈடுபட்டார் .அவரின் சில கவிதைகளும் நமக்குத் தெரியும் . ஆனால் வீ.பா.கணேசன் எழுதிய ” தாகூர் :  வங்கத்து மீகாமனின் வாழ்க்கைச் சித்திரம் ” நூலைப் படித்து முடித்த பின்தான் , ‘ஓர் வியத்தகு ஆளுமையை’ முழுமையாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோமே என உறைக்கிறது .

 

காந்தியின் ஆளுமையை , நேருவின் ஆளுமையை , பெரியாரின் ஆளுமையை நேற்று நாம் புரிந்திருந்ததைவிட இன்று ஒவ்வொரு நாளும் அதிகமாகப் புரிந்து கொள்கிறோம்.காலத்தின் கட்டளை அது . இச்சூழலில் தாகூர் பற்றிய ஒரு விரிந்த சித்திரம் நிச்சயம் நமக்குத் தேவைப்படுகிறது . ஏனெனில்  ‘பாரடா உன் மானுடப் பரப்பை’ என்று முழங்கி  ‘விசாலாப் பார்வையால் மக்களை விழுங்கி’ புத்துலகம் சமைக்கும் லட்சியக் கனவுக்கு தாகூரின் பார்வையும் அவசியம் தேவைப்படுகிறது .

 

42 அத்தியாயங்கள் . ஒவ்வொரு அத்தியாயமும் கவித்துவம்மிகு தலைப்போடும் ஆழந்த தகவல் செறிவோடும் அமைக்கப்பட்டிருக்கிறது .தாகூரின் ஜொரசங்கோ குடும்பம் வேர்விட்ட கதை முதல் ஐந்து அத்தியாயங்களில் குடும்ப விருட்சத்தை வரைந்து காட்டுகிறது . ஆறாவது அத்தியாயத்தில்தான் கதிரவன் இரவீந்திரநாத் தாகூர் உதிக்கிறான் .அது தொடங்கி கடைசி வரை அவரின் நிழல் போல் தொடர்ந்து ஒவ்வொரு அசைவையும் நல்லதை கெட்டதை அனைத்தையும் தக்க ஆதாரங்களோடு வடித்துக் கொடுத்து தாகூர் என்கிற பேராளுமையை ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டாக நமக்குள் பதிய வைக்கிறார் நூலாசிரியர் .

 

தாகூர் குறித்து சத்யஜித் ரே உருவாக்கிய ஆவணப்படத்தில் அவர் விவரித்த வரிகள் , “ 1941 ஆகஸ்ட் 7 ஆம் நாள் , கல்கத்தா நகரத்தில் மகத்தான மனிதர் உயிர் நீத்தார் .இப்போது பூத உடல் காற்றில் கலந்துவிட்டது ,என்றாலும் அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை ,எந்தவொரு தீயினாலும் அழித்துவிட முடியாது. வார்த்தைகளாலும் .இசையாலும்,கவிதைகளாலும்,கருத்துகளாலும் ,புனித நோக்கங்களாலும் நிரம்பி வழியும் அந்த பாரம்பரியம்தான் நம்மை வழி நடத்திச் செல்கிறது .நமக்கு இன்றளவும் உத்வேகம் அளிக்கிறது ; வரும் நாட்களிலும் அவ்வாறேதான் இருக்கும் …..”

 

காந்தி ,தாகூர் இரண்டு மகத்தான ஆளுமைகள் சமகாலத்தில் இந்திய வரலாற்றில் தனித்த தடம் பதித்துள்ளனர் . இருவரும் இணைந்து நின்ற களமும் உண்டு ; கருத்து மாறுபட்ட களமும் உண்டு . கருத்து வேறுபாடுகளை இருவரும் மறைத்ததில்லை ; இன்னும் சொல்லப் போனால் அவரவர் கருத்தில் உறுதியாக நின்றுகொண்டே பரஸ்பரம் அங்கீகரிக்கவும் தேசத்தொண்டாற்றவும் முன்நின்றனர் . இந்த விரிந்த சித்திரம் இந்நூல் நெடுக வியாபித்துள்ளது . அது நம்மை வியக்கவைக்கிறது .இத்தகு பார்வையும் செயலும் இந்தத் தலைமுறையில் காணக் கிடைக்குமா என்கிற ஏக்கமும் தலைதூக்குகிறது .

 

தாகூர் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் .பிரம்ம சமாஜத்தோடு நெருங்கிய குடும்பத்தினர் .இந்திய பாரம்பரியத்தின் நற்கூறுகளையும் மேற்குலகின் அறிவியல் மற்றும் புதிய பார்வையினையும் இணைக்கும் பாலமாக சொல்லும் செயலுமாக வாழ்ந்தவர் . உயர்ந்த மானுடத்தை ஓர் உலக சகோதரத்துவத்தை குறுகிய தேசிய இன மத பிராந்திய வேலிகளைத் தாண்டிய மனிதனை கருவில் சுமந்தவர் .கவிதையில் நாடகத்தில் ,நாவலில் ,சிறுகதையில் ,ஓவியத்தில் ,உரையில் இதனை தந்துகொண்டே இருந்தால் இந்நூல் நெடுக இதன் அழுத்தமான சுவடுகளே !

 

அவர் வாழ்வும் செயலும் ராஜபாட்டையில் கம்பீரநடை போட்டிருக்கும் என்றுதான் நானும் இந்நூலைப் படிக்கிறவரை நினைத்திருந்தேன். ஆனால் கடும் எதிர்ப்புகளையும் சூறாவழிகளையும்  தாண்டி உறுதியுடன் தன் கருத்துப் போரை நடத்தியபடியே உலகெங்கும் பயணித்ததை நூல் முழுவதும் காண முடிகிறது . எதிர்ப்புகளுக்கு மண்டியிடாமல் சோதனைகளில் துவண்டுவிடாமல் தடைகளைத் தாண்டிப் பயணம் போகும் நெஞ்சுரம் அவருக்கு கொண்ட கொள்கையால் வாய்த்தது .

 

மக்கள் கவிஞர் காஸி நஸ்ருக் இஸ்லாம் மீது வங்க மொழிப் பண்டிட்டுகள் அவர் வங்க மொழிக்கும் பண்பாட்டுக்கும் கேடு விளைவிக்கிறார் என வசை மாரி பொழிந்த காலத்தில் தாகூர் தன் கவிதை நூல் ஒன்றை அவருக்கு காணிக்கையாக்கி அவரின் மாபெரும் பங்களிப்புக்கு உரிய மரியாதை வழங்கினார் .இது ஒன்றும் சாதாரணச் செய்தி அல்ல .

 

நோபல் பரிசு என்பது தற்செயலாய்க் கிடைத்து அல்ல . தாகூரின் அகன்ற பார்வைக்கும் ஆழந்த கவித்துவத்துக்கும் விரிந்த உலக ஞானத்துக்கும் தொடர்புக்கும் கிடைத்த அங்கீகாரம். அது மேலும் உலகம் முழுவதுமுள்ள மாபெரும் கவிஞர்களோடும் ஆளுமைகளோடும் அவரை நெருக்கி உறவாட உரையாட வைத்தது . அதன் பன்முகங்கள் இந்நூலில் பொருத்தமாய் விரவப்பட்டுள்ளது .

 

இந்தியா ,வங்கதேசம் ஆகிய இரண்டு நாட்டுக்கும் தேசிய கீதத்தை யாத்தவர் தாகூரே .இப்பெருமையாருக்கு கிடைக்கும் ? தாகூரின் சாந்திநிகேதன் முயற்சியும் ,கிராமப்புற மேம்பாட்டுப் பணியும் அவரின் இன்னொரு மாபெரும் பங்களிப்பு . மத ,மொழி ,இன ,பிரதேச எல்லை கடந்த அவரின் பண்பாட்டுத் தொடர்பு சொல்லில் அடங்கா பெருமிதம் ஆகும் . ரவீந்திர சங்கீதம் அவரின் மாபெரும் கொடை .இன்னும் இன்னும் இந்நூலை வாசிக்க வாசிக்க விரியும் .

 

மரணத்தின் கடைசி நொடிவரை கவிதை யாத்தவர் தாகூர் .அவர் இறுதி நாட்களை விவரிக்கும் 40 வது அத்தியாயம் “ காற்றில் கலந்த கீதம் “. இந்த அத்தியாயத்தை கண்ணீரும் கோபமும் இல்லாமல் கடந்துபோகவே முடியாது . அடுத்த அத்தியாயத்தை வாசிக்கும் போது தன் அஞ்சலிக் கவிதையையும் அவரே எழுதி சென்றிருப்பது நச்சென்று மண்டையில் குட்டுகிறது .

 

இந்த நூலை எழுதிய வீ.பா.கணேசனுக்கும் எனக்குமான உறவு 1974 -75 களில் கிண்டியில்  தொடங்கியது. இன்று வரை இருவரும் ஒரே கோட்பாட்டினைப் பற்றிப் பயணிக்கிறோம்.

 

ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து தாகூர் எழுதிய கவிதையை “ இளைஞர் முழக்கம்” இதழுக்கு மொழியாக்கம் செய்து தந்தார் .  பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ நாவலோடு உடன்பட முடியாமல் அதற்கு மறுமுகமாய் தாகூர் எழுதிய நாவல் ஒன்றை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . அதில் கதாநாயகன் பெயர் நிகில் .ஆயினும் அச்செய்தி இந்நூலில் உரிய முறையில் இடம் பெறவில்லை .கோரா எனும் நாவல்தான் அதுவா ? அவர்தான் விளக்க வேண்டும்.

 

இந்நூலுக்காக வீ.பா.கணேசன் கடும் உழைப்பை நல்கி இருப்பதும் தேடி அலைந்திருப்பதும் பாராட்டுக்குரிய முயற்சிகள் .நூலில் சில இடங்களில் வேலை அறிக்கைபோல் தோன்றினும் அதனைத் தொடர்ந்துவரும் செய்தியின் கனமும் களமும் அதை மீறிவிடுகிறது ; பெரும் செய்தியாக்கிவிடுகிறது .

 

எங்கே அச்சமற்று தலை நிமிர்கிறதோ எனத் தொடங்கும் கவிதையை அறியாதோர் தாகூரையே அறியாதவராகத்தான் இருப்பார் . இந்நூலில் இருந்து மேற்கோள் காட்டத் தொடங்கின் நூலறிமுகம் பெரிதாகிவிடும் .

 

நீங்கள் அறிந்த தாகூரைவிட அறியாத தாகூரே அதிகம் ; அக்குறையை ஓரளவு நிறைவு செய்ய இந்நூலை வாசியுங்கள் !

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , மகாத்மா காந்தி போன்றோரை மீண்டும் மீண்டும் பாடவைத்த  “ஏக்லா சலோ ரே “ எனும் கவிதையோடு விடை பெறுவோம்.

 

“உன் அறைகூவலுக்கு யாரும் செவிசாய்க்காது

அச்சமற்று ஓடிப் போனாலும்

சுவரைப் பார்த்தபடி அச்சத்தோடு

நடுங்கிக் கொண்டிருந்த போதிலும்

அதிர்ஷ்டமற்றவரே கவலை வேண்டாம்!

உன் இதயத்தை மேலும் விரித்துக் கொண்டு !

தனியாகவே குரல் எழுப்பு

இருளடைந்த காட்டைக்

கடக்க வேண்டிய தருணத்தில்

உன்னைக் கைவிட்டுவிட்டு

அவர்கள் காணாமல் போனாலும்

அதிர்ஷ்டமற்றவரே கவலை வேண்டாம் !

முட்கள் நிரம்பிய அந்தப் பாதையில்

உறுதியாக நடைபோடு ! தனியாக நடைபோடு !

சுழல் காற்று சுழன்றடிக்கும் இரவில் தீபமேற்றி வழிகாட்ட

யாரும் முன்வரவில்லையெனில்

அதிர்ஷ்டமற்றவரே கவலை வேண்டாம் !

துன்பம் தன் தீபத்தை உன் இதயத்தில் ஏற்றட்டும்!

அதுவே உனக்கு வழிகாட்டும் !

 

தாகூர் :  வங்கத்து மீகாமனின் வாழ்க்கைச் சித்திரம் ,

ஆசிரியர் : வீ.பா.கணேசன் ,

வெளியீடு : கிழக்கு பதிப்பகம் , தொடர்புக்கு : 91 44 4200 9603 ,

E mail : support@nhm.in    Web : www.nhm.in

பக்கங்கள் : 336 , விலை : ரூ.400/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

19/10/24.

 


0 comments :

Post a Comment