சும்மா கிடந்த சொல்லை எடுத்து - [ 9 ]
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்....
சு.பொ.அகத்தியலிங்கம்
“ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் - தேதி ஒண்ணிலே இருந்து -
சம்பள தேதிஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் -
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் -
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும்
திண்டாட்டம்திண்டாட்டம் திண்டாட்டம் -
சம்பளத் தேதிஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம்கொண்டாட்டம் கொண்டாட்டம் ..”
இப்படித் தொடங்கும் பாடலைக் கேட்டு நம்ம வாழ்க்கையும் அதுபோல் இருக்கே என எண்ணாத நெஞ்சுண்டோ ?
“ சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே /தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும் / சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே /அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் / அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத் தொண்ணிலே – ஆமா / தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்../ “ கிண்டல் செய்வது நம்ம வாழ்க்கையை மட்டுமல்ல அந்த சாமியையும்தான். 1955 ஆம் ஆண்டு “ முதல் தேதி ” படத்தில் என் . எஸ் . கிருஷ்ணன் பாடிய பாடல் இது . இயற்றியவரும் அவரே !2014 லிலும் நிலைமை மாறவில்லையே ! இன்னும் மோச மடைந்திருக்கிறது .
கடன் வாழ்க்கையாய் போயிருக்கிறது . கவிஞர் ஜீ.வி “ நொம்பளம்தான் எம் பொழப்பு ” என்ற கவிதையில் பாடுவார் ,
“ சம்பளத் தேதி வந்தா / சங்கடமும் கூட வரும் / நொம்பளந்தான் எம் பொழப்பு / நோகுறத எங்க சொல்ல ? / ஆபிசில் கடனுக்கு / அங்க இங்க குடுத்த பின்னால் / எண்ணூறு ரூபாய / எங்கிட்ட / தருவாக ” அதனால் என்ன ஆகும் ? “ கவரப் பிரிக்கையிலே / கைகாலில் நடுக்கம் வரும் / கடன் பாக்கி நெனச்சாலோ / செலவழிக்க தயக்கம் வரும் / எதைக் கொடுக்க எதை மறுக்க / விடுகதைக்கும் பதில் கிடைக்கும் / இதற்கு விடை கிடையாது ” இப்படிச் செல்லும் கவிதை இன்றைய கடன்கார வாழ்க்கையையும் வாழ்க்கை நெருக்கடியையும் உரக்கப் பேசும் .
என். எஸ் .கிருஷ்ணன் கொண்டாட்டத்தையும் திண்டாட்டத்தையும் பட்டியல் போட்டு ஐந்து வருடங்களுக்குப் பின்னால் “ இரும்புத் திரை” ( 1960) படத்தில் பட்டுக்கோட்டை பாடிய பாடல் இன்றைய உலகமயச் சூழலிலும் கனகச்சிதமாக நம் வாழ்க்கையை அச்சுஅசலாய் பிரதிபலிக்கிறதை என்னென்று சொல்ல .
அவர் பாடுவார் , “ கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே /காசு போன இடம் தெரியலே - என் / காதலிப் பாப்பா காரணம் கேப்பா / ஏது சொல்வ தென்றும் புரியல்லே / ஏழைக்கு காலம் சரியில்லே ” அது சரி ‘ ஏழைக்கு காலம் சரியில்லே ’ன்னு கவிஞர் புலம்பலாமா ? நம்ம மக்கள் கவிஞர் காரணம் இல்லாமல் எதையும் சொல்லமாட்டார் . கொஞ்சம் நிதானமாய் பாடலை மொத்தமாய் கேட்டால் விளங்கிவிடும் . நாமும் பார்ப்போம் .
உழைக்கிறவன் பிழைப்பு எப்படி நாறுதுன்னு முதல்லே சொல்லு கிறார் , “ மாசம் முப்பது நாளும் ஒளைச்சு / வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு / காசை வாங்கினாக் கடன்காரனெல்லாம் / கணக்கு நோட்டோட நிக்குறான் - வந்து / எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் ” உழைக்கிறவன் இப்படி நொந்து நொம்பலமாகும் போது என்ன நடக்குது ? பட்டுக்கோட்டைத் தொடர்கிறார் .
“ சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா / பட்டினியால் பாடுபட்டா / கட்டுக் கட்டா நோட்டுச் சேருது / கெட்டிக்காரன் பொட்டியிலே - அது / குட்டியும் போடுது வட்டியிலே ” இப்படி இன்னொரு பக்கம் இருப்பதைக் காட்டிய பட்டுக்கோட்டை சாதாரண மனிதன் பொருட்களை வாங்க முடியாமல் பார்த்துப் பார்த்து ஏங்குவதை அனுபவித்துப் பாடினாரோ என்னவோ ? இப்பவும் நம்ம மனநிலையை அந்த வரிகள் அப்படியே எதிரொலிக்கின்றன .
“ விதவிதமாய்த் துணிகள் இருக்கு / விலையைக் கேட்டா நடுக்கம் வருது / வகைவகையா நகைகள் இருக்கு / மடியைப் பார்த்தா மயக்கம் வருது / எதை எதையோ வாங்கணுமின்னு / எண்ணமிருக்கு வழியில்லே - இதை / எண்ணாமலிருக்கவும் முடியல்லே ” . இந்த வரிகளில் மிரட்டும் உவமைகளோ உவமேயங்களோ படிமங்களோ இல்லை . ஆனால் உண்மை இருக்கிறது . வாழ்க்கை இருக்கிறது . கேட்கிறவன் நெஞ்சுக்குள் மின்சாரமாய் ஊடுருவுகிறது . அதுதான் பட்டுக்கோட்டையின் தனித்துவம் . காலத்தை வென்று நிற்கும் கவித்துவம் .
இந்தப்பாடல் இந்த ஏக்கதோடு முடியவில்லை .தொடரும் , “ கண்ணுக்கு அழகா பெண்ணைப் படைச்சான் / பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான் / ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான் / என்னைப் போலவே பலரையும் படைச்சான் / என்னைப் போலவே பலரையும் படைச்சு - அண்ணே / என்னைப் போலே பலரையும் படைச்சு / இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான் / ஏழையை கடவுள் ஏன் படைச்சான் ? ” அடேயப்பா ! நெற்றியடிக் கேள்வி . ஆண், பெண் , செல்வம் எல்லாவற்றையும் படைச்சது கடவுள்ங்கிறீய அப்படின்னா ‘ ஏழையை கடவுள் ஏன் படைச்சான் ’ வக்கிரமா ? பழிவாங்கலா ? விளையாட்டா ? கொடுமை அல்லவா ? இப்படி கோபச்சிந்தனையைக் கிளறிவிட்டான் பட்டுக்கோட்டை .
அதுவும் சினிமாவில் என்பதுதான் விசேஷம் . ஜோ கொர்ரி என்ற ஸ்காட்லாந்து கவிஞன் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது ,
“ ‘ நிறையச் சாப்பிடுங்கள் ’-
கோஷங்கள் சொல்கின்றன ‘ நிறைய மீன்கள் ’
‘ நிறைய இறைச்சி ’ ‘ நிறைய சோறு ’
சாப்பிடுங்கள்..- கோஷங்கள் வற்புறுத்துகின்றன..
ஆனால்.... ... நானோ
சம்சாரிவேலையில்லாத
மூன்றாவது வருடத்தில் இருக்கிறேன் ..
எனக்கு
இந்த கோஷங்கள்
இப்படித்தான் பொருந்துகின்றன ..
‘ நிறைய புல்லைச் சாப்பிடுங்கள் ’..”
எதுக்கும் ஒரு முடிவிருக்கா ? இல்லையா ? பட்டுக்கோட்டை நம்பிக்கையோடிருந்தான் . அவனின் பன்முகத்தை நம்பிக்கையைத் தொடர்ந்து பார்ப்போம்...
நன்றி : தீக்கதிர் 30 ஜூன் 2014 இலக்கியச் சோலை
0 comments :
Post a Comment