சும்மா கிடந்த சொல்லை எடுத்து ....[ 8 ]

Posted by அகத்தீ Labels:


 
சும்மா கிடந்த சொல்லை எடுத்து ..[ 8 ]

புரட்சி நண்டு உங்கள் ஊரிலும் உண்டு

சு.பொ.அகத்தியலிங்கம்

“ கடலோரத்தில் நண்டு நடந்து கொண்டிருந்தது . மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக்கொண்டே இருந்தது .நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒரு நாள் நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது .

வளைக்குள் இருந்து ஓரக்கண் ணால் எட்டிப்பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவா னது .

அலையின் நட்பை அடிமனதால் போற்றியது .தமக்குள்ளே அது சொல்லிக் கொண்டது ;

‘ முன்பே காப்பான்
அன்பு நட்பு,…”

காசி அனந்தனின் இந்தக்குட்டி கதைக்கவிதை அசைபோட அசை போட ஆயிரம் சேதி சொல்லும் .

“நண்டூ ருது நரி யூருது ” என குழந்தைகளுக்கு பாட்டுப்பாடி கிசுகிசு ஊட்டும் வழக்கம் இன்னும் உள்ளது . “ நண்டின் காலை ஒடிக் காதே / நாயைக் கல்லா லடிக்காதே /வண்டைப் பிடித்து வருத்தாதே /வாயில்லாப் பிராணியை வதைக் காதே” என்ற மழலைப்பாடலை மறக்க முடியுமா ? நண்டையும் மனிதனையும் இணைத்துப் பார்ப்பது பாரம் பரியமாகத் தொடர்கிறது .

கவிஞர்களின் பாடு பொருளிலும் உவமான உவமேயத்திலும் இடம் பெறும் உயிரினங்கள் பட்டியலைப் பரிசோதித்தால் அதில் வண்ணத்துப் பூச்சியும் குயிலும் முதலிடம் பெற லாம். நண்டு போன்றவை விதிவிலக் காகவே இடம் பெறும் . எனினும் பெரும் சேதியைச் சொல்வதாகவே இருக்கும் .நாளும் பேசப்படும் .

பட்டுக்கோட்டையை திரைப் படத்துறைக்கு அறிமுகம் செய்ய முதல் அடியெடுத்துக் கொடுத்தவர் பாரதிதாசன் என்பர் . தன் முன்னத்தி ஏராக பாரதியையும் பாரதி தாசனை யுமே பட்டுக்கோட்டை ஏற்றார் என்பதை அனைவரும் அறிவர். அந்த பாரதிதாசன் கவிதையில் நண்டு வரும்.

“வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வ தைப்போல
துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்!
வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுப்
பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரிய தோர் வியப்பைச் செய்யும்.”

என்று “ அழகின் சிரிப்பு ” எனும் பெரும் கவிதையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வியந்து நிற்பார்.

“நண்டுப்பிள்ளை” என குழந்தை யோடு ஒப்பிட்டு அக்குழந்தை ஓடி ஆடி விளையாடுவதாய் கற்பனை செய்து மகிழ்ந்தார் பாரதிதாசன் எனில் அவரது சீடன் பட்டுக் கோட்டை நண்டு ஒரு சமூகப்புரட்சியே செய் வதாகக் கனவு காண்கிறார் .ஏழைவிவசாயியான நாகனையும் அவன் மனைவியையும் கொண்டு பின்னப்பட்ட கதைப்பாடல் அது .

“ ஊரையடுத்த ஓடைக்கரையில் / ஓட்டை நிறைந்த ஒரு சிறுகுடிசை / நாற்புறம் வயல்கள் நல்ல விளைச்சல் / நாகனும் வள்ளியும் வசிக்கும் இட மது ” என முதலில் கதைக்களத்தை யும் நம் கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்கிறார் .

சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில் வள்ளியுரைக்கிறாளாம் மச்சான் நாகனிடம் , “…… வாரக்குத் தகை தர்ரதாச் சொல்லி வாம்பலில் கொஞ்சம் நட்டுவச்சோமே ” .வள்ளி முடிக்கும் முன் நாகன் இடைமறித்து , “ ஆமா அதுக்கென்ன இப்போது..” என வினவ உரையாடலாய் தொட ரும் அதில் கொஞ்சம் தண்ணி இருந் தால் பத்துநாளில் கதிர் முற்றி தலை சாயும் நிலையில் உள்ளதையும் , ஆனால் நீர் பாய்ச்ச விடாமல் பக்கத்து வயல் பெருந்தனக்காரர் தடுப்பதை யும்; அவர் வயலுக்கு மட்டுமே பாயும் படி மடை மாற்றியதையும் ; யாராவது தடுத்தால் அடிப்பேன் உதைப்பேன் என மிரட்டுவதையும் விவரிக்கிறாள் வள்ளி . அதுவரை சாதாக்கதைதான் ; அப்புறம் தான் பட்டுக் கோட்டையின் முகம் பளிச்சிடும்.

“பொழுது விடிஞ்சுப் போய்ப் பார்த்தா / பொங்கித் ததும்புது நம்ம வயலும் / வாய்க்காலும் வெட்டலே மடையும் திறக்கலே / வழியும் அளவுக்குத் தண்ணி ஏது ? ” புதிர் போட்ட வள்ளியே பதிலும் சொல்லலானாள் :“நண்டு செஞ்ச தொண்டு மச் சான் /நாட்டு நிலைமையை நல்லாப் பார்த்து / ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில் / போட்டது வளையில் புரட்சி நண்டு / பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே / காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின ”இதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவு உண்டோ ! “ ஆகா ஆகா அருமை நண்டே / உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம் / உலக மனிதர்க்கு உண்டோ நண்டே / பெருநிலக்காரன் வரப்பைக் குடைந்து / சிறு நிலங் காத்த சிறந்த நண்டே!” என இருவரும் நன்றி கூறி கூத்திட்டனர் .

அங்கே செழித்து பூரித்து நின்ற கதிர்களை பட்டுக்கோட்டை விவரிக்கும் பாங்கே தனி . அவரின் வியர்வை பாசம் அதில் ஓங்கி ஒலித்தது . அவர் விவரிப்பார். “ படுத்திருந்த பசுந்தரை அடியில் /வெடித்த கிளையிலும் விஷயமிருந்தது / உழைப்பாளர் பலனை ஒட்ட உறிஞ்சி / ஒதுக்கிப் பதுக்கும் உல்லாச மனிதரின் / கள்ளத் துணிவையும் கருங்காலிச் செயலையும் / கொல் லும் ஈட்டிபோல் குருத்துகள் நின்றன ” .இந்தக் காட்சியைக் கண்டு சந் தோஷம் பொங்க வாளை மீன்போல் வள்ளி வரப்பில் குதித்தாளாம் .

கம்யூனிஸ்ட் கட்சி ஏடான “ ஜனசக்தி” யில் 17 -7 -1955 ல் இது வெளிவந்தது . இதுதான் ஜனசக் தியில் வெளிவந்த கவிஞரின் முதல் கவிதை என தீக்கதிர் , செம்மலர் ஆசிரியராக இருந்த கே.முத்தையா வும் , ஆய்வாளர் வீரமணியும் பதிவு செய்துள்ளனர் . ஆனால் இதற்கு முன் 1954 ல் ஜனசக்தி நவம்பர் புரட்சி மலரில் “புதிய ஒளி வீசுது பார் இமயம் தாண்டி ..” எனத் தொடங்கும் ரஷ்யப்புரட்சி பற்றிய கவிதையே முதலில் பிரசுரமானதென்று கே . ஜீவபாரதி சுட்டிக்காட்டி இந்த ‘நண்டு செய்த தொண்டு’ கவிதை இரண்டாவதென நிறுவுகிறார் .

என்.ராமகிருஷ்ணன் தொகுப்பும் இதையே உறுதி செய்கிறது .எத்தனையாவது என்பதைவிட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நண்டு செய்த புரட்சியை நாம் பேசுகிறோமே அதுவே வெற்றி

. " ஏலேயேலோ....... தந்தையாம் 
ஏலேயேலோ.......ஏலேயேலோ.......
தந்தையாம்ஏலேயேலோ.......

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்;
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

எறிகின்ற கடல் என்று
மனிதர்கள் அஞ்சார்
எது வந்த தெனின் என்ன?
அதை வென்று செல்வார்.

ஏலேயேலோ...... தத்தைதாம்
ஏலேயேலோ......ஏலேயேலோ......
தத்தைதாம்ஏலேயேலோ......”

என்கிற ஈழக்கவிஞர் மகாகவியின் மீனவர் பாடல் நம்பிக்கை ஊட்டும் . நம் கவிஞர் பட்டுக்கோட்டையின் சமூகப்பார்வை விரிவும் ஆழமும் கொண்டவை அன்றோ அதைத் தொடர்ந்து பார்ப்போம்

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 23 -06-2014

0 comments :

Post a Comment