சும்மா கிடந்த சொல்லை எடுத்து [ 7 ]

Posted by அகத்தீ Labels:

சும்மா கிடந்த சொல்லை எடுத்து  [ 7 ]


மந்திரம் இல்லை வசியம் இல்லை தாயத்து..

சு.பொ.அகத்தியலிங்கம்

“எது மனிதனைப் படுகுழியி லிருந்து கைதூக்கி விடுகிறதோ / எது பொன்னைப் போலவே மண்ணை யும் மதிக்கிறதோ / எது உழைத்துத் தேய்ந்தவனின் உடலிலும் மனதிலும் மெத்தென்ற மென்மையைப் பூக்க வைக்கிறதோ / எது ராஜ கம்பீரத்தை இகழ்ந்து மனித கம்பீரத்தை மதிக் கிறதோ / எது அரச ஆடைகளைப் புறக்கணித்து உழவனின் உடல்மேற் புழுதியை பூஜிக்கிறதோ / அதனை - அந்த சிந்தனைக்கு அடிப்படையான தத்துவத்தை - நான் வரவேற்கிறேன் வணங்குகிறேன் ” எனக் கம்பீரமாகத் தொடங்கும் “மனிதம் ”என்கிற நவகவியின் நெடுங்கவிதை . மனிதத்தைப் போற்றுபவனே வரலாற்றை மீறி வாழும் கவிஞனா வான். நவகவியின் முன்னத்தி ஏர் பட்டுக்கோட்டை. அவன் பாடல் களோ என்றும் மனிதம் பாடுபவை. அவனின் சமகாலக் கவிஞர்களும் மனிதம் பாடினர்.

மனிதனை போற் றிப் பாடுவது மட்டுமல்ல மனிதனி டம் மண்டிக்கிடக்கும் தீங்குகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் மானுடம் பாடுவோர் இயல்பே !இதனால் மருதகாசி பாடல்கள் , உடுமலை நாராயணகவிப் பாடல்கள் இவற்றை பட்டுக்கோட்டைப் பாடல்கள் என்று கருதுகிற மயக்கம் எப்போதும் ஏற்படுவதுண்டு.

“மனுஷனை மனுஷன் சாப்பிடு றாண்டா தம்பிப் பயலே - இது / மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை ”இப்படிக் கவலைப் பட்டவர் மருதகாசி .

“எத்தனைக் காலம்தான் ஏமாற்று வார் இந்த நாட்டிலே - இன்னும் / எத்தனை காலந்தான் / ஏமாற்றுவார் இந்த நாட்டிலே/ சொந்த நாட்டிலே நம் நாட்டிலே” என தஞ்சை ராமையாதாஸ் வருந்துவார் .

“மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது /அந்தக் காலம் /மடமை நீங்கிப் பொதுவுடைமை கோருவது /இந்தக் காலம்... ”இப்படி நம்பிக்கையூட்டுவார் உடுமலை நாராயண கவியார்.

இப்படி திரையுலகில் மனிதம் பூக்க ஏற்ற தட்பவெப்பம் நிலவிய காலம் அது . பொதுவுடமை இயக்க மும் திராவிட இயக்கமும் இளமை மிடுக்கோடு நடைபோட்ட காலச் சூழலின் விளைச்சல் அது .

பட்டுக் கோட்டையை கேட்கவா வேண் டும் ? தன் கருத்தை வலிமையாக எடுத்துவைத்தான் .

“ சூழ்ச்சியால் சுவரமைத்து / சுய நலத்தால் கோட்டைகட்டிச் / சுடர் விட்ட நீதிதன்னைத் தூக்கி எறிந்து விட்டுச் / சாட்சிகள் வேண்டாம் / சகலமும் நானென்று / சதிராடும் வீணர்களின் / அதிகார உலகமடா ” ( மகாதேவி - 1957 ) . இவை இன்றைய சமூக அரசியல் சூழலுக்கு எழுதிய வரிகள் போலிருக்கும்; ஆயின் எழுதியது 57 ஆண்டுகளுக்கு முன்பு.

இதைத் தொடர்ந்து அடுத்தவரிகள் சவுக்கடியென சுளீரெனப்பாயும். , “புதிரான உலகமடா /– உண்மைக்கு எதிரான உலகமடா/ – இதில் / பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா”இப்படி நொந்து வருந்தி முடிந்து விடாமல் அடுத்து பளாரென கன்னத் தில் அறையும் பட்டுக்கோட்டை யின் வார்த்தைகளும் அனுபவமும் , “ குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் / குருட்டு உலகமடா – இது / கொள் ளையடிப்பதில் வல்லமை காட்டும் / திருட்டு உலகமடா – தம்பி / தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம் திருந்த மருந்து சொல்லடா ” இத்தோடு நின்றாரா ? இல்லையே ! அறிவை மடமை மூடிய இருட்டு உலகம் , சண்டை ஓயாத முரட்டு உலகம் என்றெல்லாம் அடுக்கிவிட்டு இவ்வுலகம் என்னென்ன செய்யும் என்றும் பட்டியலிடுவார்.

“விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் ; அதனைக் கண்டு மனம் வெந்திடும் தோட்டக்காரனை மிரட்டும் ; அன்பு படர்ந்த கொம் பிலே அகந்தைக் குரங்கு தாவும்; அழகைக்குலைக்க மேவும் ; கொம் பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கு விழுந்து சாகும்”. இப்படிக் குறுகிப்போன கிறுக்கு உலகம் திருந்த மருந்து விற்பார். அந்தப் படத்தில் தாயத்து விற்பது போல் அமைந்தது இந்தப் பாடல் . தாயத்து என்பது மூடநம்பிக்கையின் குறியீடு. ஆனால் அதனை வைத்தே விழிப்புணர்வை விதைத்ததில்தான் பட்டுக்கோட்டையின் சாமர்த்தியம் அடங்கிக் கிடக்கிறது .

“ மந்திரம் வசியமில்லை / மாயா ஜாலமில்லை / வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் – இதில் / மறஞ் சிருக்கு அரிய பெரிய ரகசியம் ( தாயத்தோ)” ஒருவன் இப்படி முழக்கமிட மற்றவன் கேட்பான் ,

“ஏம்பா ! பணவருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா இதிலே ” இதற்கான பதில்தான் பட்டுக் கோட்டையின் தனித்துவம், “ஒடம்பை வளைச்சு நல்லா ஒழச்சுப் பாரு – அதில் / உனக்கும் உலகத்துக் கும் நன்மையிருக்கு / உக்கார்ந்து கிட்டு சேக்கிற பணத்துக்கு / ஆபத் திருக்கு அது உனக்கெதுக்கு ” அடேயப்பா !
இன்றும் பொருந்தும் பதில் அல்லவா இது ; அதுவும் பணக்கிறுக்கு பிடித்தலையும் இன்றைய உலகில் இது ஒரு கசப்பு மருந்து .

அடுத்து ஒருவன் கேட்பான், “ஏய்யா இதனாலே பொம்பளைகள மயக்க முடியுமா?” அன்று மட்டுமல்ல இன்றும் இப்படி தேடி அலைவோருண்டே . அவர்களுக்கு மண்டையில் குட்டிச் சொல்லுகிறார் பட்டுக்கோட்டை , “ கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும் / காதம் வாழ்வு தொடர்ந்திடும் / கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா / கையும் காலும் வாழ்வும் துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும் ”! ஆமாம் காதல் வாழ்வே இனிக்கும் .உயர்வா னது. கண்டபடி மேய எண்ணுவது தப்பானது. ஆபத்தானது.கூடவே கூடாது. என்றைக்கும் அதுதானே சரி !

இந்த நெடிய பாடல் சமூக வாழ் வில் குறுக்கிடும் தீமைகளை மிகச் சரியாகப் பட்டியலிட்டு எச்சரித்து நல்வழிப்படுத்துகிறது . இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக் காது . தெவிட்டாது . இசையும் கருத் தும் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும் . ஏனெனில் மானுடமே இதன் பாடுபொருள் .

“ வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா ” என கம்பனும் “ மனிதன் என்பதினும் உயர் சொல்லில்லை ” என மயா கோவஸ்கியும் சொன்னதன் உட் பொருளை உள்வாங்கிய பட்டுக் கோட்டையின் மானுடநேசத்தைத் தொடர்ந்து பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 16 ஜூன் 2014

0 comments :

Post a Comment