விவசாயத்தைக் காக்க அக்கறைகொள்ளும் அனைவரும் படிக்க –விவாதிக்க ஒரு நாவல்….
Posted by Labels: நூல் மதிப்புரை
விவசாயத்தைக் காக்க அக்கறைகொள்ளும்
அனைவரும் படிக்க –விவாதிக்க ஒரு நாவல்….
-சு.பொ.அகத்தியலிங்கம்.
“விவசாயிகள் என்னும் சபிக்கப்பட்ட தெய்வங்களுக்கு
” சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள நாவல் “மூன்றாம் உலகப் போர்”. அதனாலேயே இது அதிக முக்கியத்துவம்
பெறுகிறது.
முன்னுரையில் நாவலாசிரியர் வைரமுத்து
தந்துள்ள தன்னிலை விளக்கத்தில், “இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக
எப்படிச் செய்ய முடியும்?மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன் ; பத்துமாதங்கள்
எழுதினேன் . எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன் .”என்கிறார்.
மேலும்
“ இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால்
பேசப்படும் உலகக் குரல் ; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக
வேண்டும் . வாசிப்பு - ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி , தீர்வுகளையே பரிசாகக்
கேட்கிறது இந்தப் படைப்பு என்கிறார். “ அதுமட்டுமல்ல, “இந்தப் படைப்பின் உள்ளடக்கம்
பேசப்பட வேண்டும் . விவசாயத்தின் வீழ்ச்சி
குறித்தும் மீட்சி குறித்தும் ஐ.நா வில் உலக நாடுகள் விவாதிக்க வேண்டும்.”என அறைகூவல் விடுத்து - அதைத் தொடர்ந்து
கோரிக்கை சாசனத்தையும் முன் வைத்து - “ வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை.அந்த உலகக் கடமையின்
தமிழ்ப் பங்குதான்
இந்த மூன்றாம்
உலகப் போர் “என முன்னுரையில் ‘யதார்த்தக்
கனவுகளோடு’ என கையொப்பமிட்டுள்ளார் வைரமுத்து.அவரின் இந்த அளவுகோலோடு இந்நாவலை
அலசலாம்.
மெக்சிக்கோ வளைகுடாவில் லூய்சியானா கடற்கரையில்
நாவல் காலெடுத்துவைக்கும்
போதே சுற்றுச்
சூழலை மனிதன் எப்படி துவம்சம்
செய்துவருகிறான் என்கிற கோரப்பதிவோடு துவங்குகிறது. அடுத்து ஜப்பானில்
செண்டாய் நகரில் சுனாமிப் பேரலையின்
ஊழிகூத்து நம்மை உறைய வைக்கிறது.எமிலியும்,இஷிமுரா இந்தத் துயரங்களூடேதான்
நம்முடன் பரிச்சயம்
ஆகிறார்கள்.இப்படியே
நாவல் அட்டணம் பட்டிக்குள் அடியெடுத்துவைத்ததுமே
விவசாயியின் அவலக்குரல்
நம்மை பிசையத் துவங்கிவிடுகிறது.
“பாவக்கணக்குப் பண்ணுனவ எண்ணிக்கை கூடிப்போச்சு ; எடமில்ல நரகத்திலே ; என்ன பண்றதுன்னு
“ யோசிக்கிற
எமதர்மனுக்கு நாரதர் வழிகாட்டுகிறார் , “அட,நீங்க ஒண்ணு.. இவுகள நரகத்துல
தள்ளணும் அவ்வளவு தான
? நான் பறந்து பறந்து பார்த்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகள பூரா அங்க விவசாயம்
பண்ண அனுப்பி வச்சீங்கன்னு வச்சுக்குங்க
வேலை முடுஞ்சது.” நாவலின் ஊடாக இப்படியொரு குட்டிக்கதையைச்
சொல்லி இங்கே விவசாயியின் பொழைப்பு
நரகமாக நசிந்து கிடப்பதை நச்சென்று
பதிவு செய்துவிடுகிறார்.
இந்த நாவல் நெடுக விவசாயம் நொடிந்து
வருவதை வேதனையோடும், விவரங்களோடும் பாத்திரங்கள்
மூலமாகவும் நேரடியாகவும்
வைரமுத்து பேசுகிறார்.இந்த நாவலின் பலம் அதுவே.இதையே பலவீனமாக
இலக்கிய விமர்சன நக்கீரன்கள் நெற்றிக்கண்ணைத்
திறக்கலாம்.குத்திக்
காட்டலாம்.
ஒரு கட்டத்தில் கவிஞர் வைரமுத்துவே நேரில் வந்துவிடுகிறார்.நாவலின் காதாநாயகன் சின்னப்பாண்டியும்,எமிலியும்,இஷிமுராவும்
கவிஞரோடு உரையாடும்
காட்சி இடம் பெறுகிறது. “ சின்னப்பாண்டி!நீ கொடுத்துவைத்தவன்.நீ செயல் ; காட்டுத்தீ ...காட்டுத் தீயைத் தூரிதப்படுத்தும் காற்றாகும்
இவர்கள் அறிவாற்றல்
…
திரட்டு மக்களை ; செயல்படு . விளைநிலங்களை
விற்க விடாதே ; விவசாயத்தை இயற்கைப்
படுத்து. காடுமலைகளை
காவல்கொள் ; கன்று மரங்களை நடு. என் எளிய துணை தேவைப்பட்டால்
எப்போதும் வா.”ஆக நாவலின் நோக்கம் விவசாய நெருக்கடி குறித்து
வெறுமே கவலைப் படாமல்,களத்தில்
இறங்கவேண்டும் என்பதாகவும்
ஆகியுள்ளது தெளிவு.
கதை மிக எளிமையான
திரைக்கதை. அட்டணம் பட்டியில் விவசாய கடன் தொல்லை தாளாமல் மனைவி மகளுடன் தற்கொலை செய்து கொன்ட விவசாயி சீனிச்சாமி.தந்தை சாவுக்குக்
காரணமான கந்துவட்டிக்காரனை
துண்டு துண்டாக வெட்டி எறிந்து விட்டு ஜெயிலுக்குப்போய்
திரும்பும் கருத்தமாயி.அவர் மனைவி சிட்டம்மா இருவரும்
பாடுபட்டும் கடனிலிருந்து
மீளமுடியவில்லை. இவரது
மூத்தமகன் முத்துமணியோ
சுயநலத்தின் மொத்த உரு.கிராமத்தைச் சூறையாடும்
கழுகுகளின் கையாள்.இளைய மகன் சின்னப்பாண்டி விவசாய மாணவன் . சுயநலம் அற்றவன். புத்திசாலி.கல்லூரி கருத்தரங்கு
மூலமாக அறிமுகமாகும் சுற்றுச்சூழல்
ஆர்வலரும் இளம் அறிவுஜீவியுமான எமிலியையும்,இயற்கை விவசாய ஆர்வலரும் இந்திய மற்றும் புத்தமத நேசரும் சுனாமியில்
பெற்றோரைப் பறிகொடுத்தவருமான
இஷிமுராவையும் அழைத்துக் கொண்டு அட்டணம்பட்டி வருகிறான்.அவர்கள் வழிகாட்டுதலுடன்
ஊரைத் தூய்மைப்
படுத்துகிறான்.இரசாயண உரத்தினால் மலடாகப் போயிருக்கும் நிலத்தை மீடக இயற்கை விவசாயத்தை நோக்கி அவர்களைத் திருப்புகிறான்.
முத்துமணி விவசாய நிலத்தை ஆலைக்கு வாங்கிக்
கொடுக்க முயற்சிக்க - முதலில் சிலர் அதற்கு இரையாக - பெரும் முயற்சியில்
கருத்தமாயியும் சின்னப்பாண்டியும்
அதை தடுக்க முயற்சிக்கின்றனர். “ ஒரு
விவசாயிக்கு நிலம் என்பது நிலம் மட்டுமல்ல ; அடையாளம் ; பிடிமானம் . ஊரில் ஒரு மனிதனை இருத்திவைக்கும் வேர் .
”என்பதில் விவசாயிகளிடையே எப்போதும்
ஒத்த கருத்துதான்.ஆனால் கட்டுப்படியாகாத
விவசாயமும் கடன்தொல்லையும்
அவர்களை நிலத்தைவிட்டு
படணம் போகத்துத்
துரத்துகிறது.அப்படி திருப்பூருக்கு போயும்
பிரச்சனை தீராமல் . வலியோடு ஊர்திரும்பும்
சொள்ளையனும் அவன் மனைவியும் ,இனி வெள்ளமை செய்து தேற முடியாது
என்பதால் வசதியாக பட்டணத்தில் இருக்கும்
பிள்ளைகளோடு போகும் கோவிந்த நாயக்கர்
குடும்பத்தினரின் ஊர்பிரியும்
வலி,கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட பரமனாண்டி,இப்படிஅட்டணம்
பட்டியின் விவசாயிகள்
வாழ்க்கைப்பாடு விரிகிறது.
“ அந்தக் காலத்துல
வெள்ளாமை நல்லாயிருந்துச்சு . மனிதனுக்குச் சீக்கு வந்துச்சு. இந்தக்காலத்துல
மனுசனுக்கு மருந்து இருக்கு : வெள்ளாமைக்கு
சீக்கு வந்துச்சு.” இப்படி நொந்து புலம்பும் அவர்களுக்கு மாற்றுவழி
சின்னப்பாண்டி,எமிலி,இஷிமுரா வழியே வந்தது. ஆம், “போதிக்காதே ; செய் . உங்கள் நாட்டில்
குவித்துவைத்த போதனைகளின்
குப்பையில் சிக்கி மூச்சுத் திணறி செத்துவிட்டது செயல். இனி போதனை மொழியில் செயல் பேசப்படவேண்டாம் ; செயலின்
மொழியில் போதனை பேசப்படட்டும்.”என
இமிலி முன் மொழிந்ததை இஷிமுரா வழிமொழிந்தான். சின்னப்பாண்டி
களத்தில் இறங்கி செயல்பட்ட விதம் ஒரு தொண்டு நிறுவன செயல்பாட்டை
ஒத்திருந்தது.ஆனால் ரியல் எஸ்டேட் சூதாடிகளை எதிர் கொள்ள அது போதுமானதாய் இருக்கவில்லையே. முத்துமணி ரூபத்தில்
வெடித்தது கொடுமை.இதற்கிடையில் எமிலி துணையோடு வெளிநாடு
சென்று படிக்க சின்னப்பாண்டி வாய்ப்புபெற்று
விமானம் ஏறுகிறான்.
தமிழ் திரைப்பட இலக்கணப்படி
கடைசிக் காட்சியில்
கதாநாயகியோ கதாநாயகனோ
ஓடுகிறவண்டியிலிருந்து இறங்கிவரவேண்டும். இங்கும்
சின்னப்பாண்டி விமானத்திலிருந்து
இறங்கவேண்டிய சூழல் உருவாக்கப்படுகிறது. இதற்கிடையில்
கருத்தமாயி மண்ணைக் காக்க மகன் முத்து மணியை கொலைசெய்துவிட்டு மீண்டும்
ஜெயிலுக்குப் போகிறார்.பலவருடங்களாக அவருடன் பேசாமலிருந்த மனைவி பேசுகிறார். சின்னப்பாண்டி
மண்ணில் இறங்குகிறார்.கதை முடிகிறது.
கள்ளிக்காட்டு இதிகாசத்தில் கடைசி காட்சியில் பேயத்தேவர்
தண்ணீரில் மிதந்தபோது
என் கண்ணிலிருந்து
இரண்டு சொட்டு நீர்த்திவலைகள் வெளியேறின.அந்த நாவலின்வெற்றி அது. “இதிகாசமெனில்
இனி இதுவெனக்
கொள்க” என தீக்கதிரில் அந்த நாவலுக்கு மதிப்புரை
எழுதினேன். ஆனால் இந்த நாவலில் விவசாய வாழ்வின்
துயரம் பக்கம் பக்கமாகப் பேசப்பட்டும்
அடுத்தடுத்து பல சோக நிகழ்வுகள்
சித்தரிக்கப்பட்டும் ; எனோ
அந்த இறுக்கம்
வரவில்லை. ஒருவேளை அந்த நாவல் கவிஞரின் சொந்த வாழ்விலிருந்து பிறந்தது
என்பதும். இந்த நாவல் அறிவுபூர்வமான
அக்கறையிலிருந்து பிறந்தது
என்பதும் காரணமாயிருக்கலாமோ?. வாசகன் என்கிற முறையில் இக்கேள்வி
எழுகிறது.
விமர்சகனாக நோக்குகையில் கதைபாணியை
கட்டுரைபாணியையும் இணைத்து
நாவல் நெய்கிற யுத்தி மேற்குலகில்
எப்போதோ வந்துவிட்டது. வெற்றியும் பெற்றுவிட்டது.தமிழில் அம்முயற்சிகள்
ஏற்கெனவே துவங்கப்பட்டுவிட்டது.அதன் வாசகர்பரப்பு
மிகவும் சொற்பம்.ஆனால் ஒரு வெகுஜன வியாபாரப் பத்திரிகையில்
தொடராக எழுதும்போது
அதைக் கையாண்டிருப்பதுதான்
வைரமுத்துவின் தனித்துவம்.இவரின் தண்ணீர்தேசமும்
இத்தகைய முயற்சியே.
இவரின் கவித்துமான நடை சில இடங்களில்
நறுக்கென்று விழுகிறது. “எரியும் மூங்கில்
காட்டில் சிறகு கருகும் ஒரு பட்டாம் பூச்சியை
எந்தப்பறவை விசாரிக்கும்?”,
என்றும், “மேட்டுக்குடி
மக்கள் மது அருந்துகிறார்கள்.ஆனால் உழைக்கும் மக்களை மது அருந்துகிறது”என்றும் , “இந்திய நதிகளை இணைப்பது இருக்கட்டும் ; முதலில் நதிகளை வாழ விடுங்கள்’’,என்றும்,“உள்ளங்கை
மாதிரி நிலம் ; அதில் சரிபாதி அரிவாள் வெட்டு. உழக்கு மாதிரி ஒரு வீடு ; இன்று உழக்குக்குள்
ஒரு சுவரு” இவ்வாறெல்லாம்
மொழிநடை கதைக்கு வலு சேர்த்த இடங்கள் உண்டு.அலுப்புத்தட்டும் இடங்களும்
உண்டு.இந்த நாவல் இன்னும் விரிந்திருக்கவேண்டும் என்று சொல்வோரும்
உண்டு.என்னைப் பொறுத்தவரைக்கும் இன்னும்
சுண்டக்காய்ச்சியிருக்கவேண்டும் என்பதே என் கருத்து.
காட்சிச் சித்தரிப்பில் நூலாசிரியர்
பல இடங்களில்
வியக்க வைக்கிறார்.இன்னும் சொல்லபோனால்
நாவல் ஆரம்பமே அப்படித்தான்.அது பலத்த எதிர்பார்ப்பை
உருவாக்கியுள்ளது.உள்ளேயும்
ஆடு மேய்த்தல் ,பன்றி மேய்த்தல் ,முயல்கறி சமைத்தல்,நாவால் உருட்டிய
வெற்றிலையை நாக்கு படாமலெடுத்தல் என பலபல.
கருத்தமாயி-சிட்டம்மா காதல் சிறை சந்திப்பில்
உருவாகி திருமணத்தில்
முடிந்தது.அந்த திருமணக்காட்சியைப் பாருங்கள். “ஒரு ஆவணி மாசம் ;தேவதானப்பட்டி
காமாட்சி அம்மன் கோயிலு ; எண்ணி ஏழே பேரு ; ரெண்டே சம்பங்கி
மால
;அதுல அங்கங்க ரெண்டு மூணு ரோசாப் பூவு ஒரு ஆடம்பரத்துக்கு …. மஞ்சக்
கெழங்கு கட்டின ஒரு தாலிக் கயிறு. பொண்ணும்
மாப்பிளையும் சேத்து ஒம்பது பேருக்கு
காப்பிகடையில் கல்யாணப்
பலகாரம். முடுஞ்சது
முகூர்த்தம்.ஒரு ஆணும் பெண்ணும்
கூடிவாழ இம்புட்டே
போதும். இதுக்கு மேலே அவன் அவன் பவுசு காட்டறதெல்லாம் திமிரு – தெனாவட்டு- வீம்பு-விறைப்பு. வேறென்ன.” இதைவிட நெற்றியடி
வேண்டுமா?
புவிவெப்பமாதல் , காடுகள் அழிக்கப்படுதல், சுற்றுச் சூழல் மாசுபடுதல், இரசாயண உரங்களால் நிலம் சக்தியை இழற்றல், நகரமயமாதல்,ரியல் எஸ்டேட் கொள்ளை என கிராமத்தை
நசுக்கி நாசப்படுத்தும்
போக்குகளை இந்நாவலில்
சொல்லுகிறபோது பிரச்சாரவாடை
அடிப்பதாக சில விமர்சகர்கள் கூறக்கூடும்.அவர்கள் கூச்சலிடட்டும்.ஆனால் அதைப் பேசியாகவேண்டிய காலகட்டத்தில்
பேசித்தானே ஆகவேண்டும்.அதே சமயம் கதை நகரும் காலம் கதைப்போக்கில்
பதிவு செய்யப்பட்டிருக்க
வேண்டாமா?
தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது
இந்தப் படைப்பு என்று முதலிலேயே
வைரமுத்து சொல்லிவிட்டார்.ஆகவே இலக்கியவாதியினும்
களப்போராளியே இந்நாவலை
அதிகம் வாசிக்க வேண்டும். விவாதிக்கவேண்டும்
இல்லையா?.
மூன்றாம் உலகப் போர் தண்ணீரால்த்தான்
மூளும் என்கிற கருத்து மேலைநாட்டு தொண்டு நிறுவனங்களின் மூலமே விதைக்கப்பட்டது.மறுபுறம்
தண்ணீரை விற்பனைப்
பண்டமாக்கிவிட்டது பன்னாட்டு
நிறுவனங்கள். தொண்டு
நிறுவனங்களின் வழிகாட்டுதல்
பேரியக்கமாக பேரெழுச்சியாக
வளர வேண்டிய மக்கள் சக்தியை சின்னச் சின்னப் பாத்திகளுக்குள் அடைத்துவைப்பதே
ஆகும்.
அப்படியிருக்க வைரமுத்து வழிமொழியும்
பொத்தாம் பொதுவான கோரிக்கைகளும் தீர்வுகளும்
யதார்த்தத்துடன் சரியாகப்
பொருந்துமா?அரைகிணறு
தாண்டும் நிலையல்லவா? என்சால்படான் பாதிப்புக்கெதிராக
கேரள அனுபவம் கற்கப்பட்டதா?இந்தியாவின்
நிலக்குவியலும் நிலவிநியோகமும்
ஏன் கவனத்தில்
கொள்ளப்படவில்லை?எல்லாவற்றையும்
இறுதியாகத் தீர்மானிப்பது
அரசியல் அன்றோ?அது ஏன் புறக்கணிக்கப்பட்டது?இப்படி எழும் எண்ணற்றக்
கேள்விகளோடு விவசாய இயக்கங்கள் இந்த நூலை முன்வைத்து
வலுவான விவாதத்தை
பரவலாக முன்னெடுத்துச்
செல்ல முடியமாயின்
இந்நூலின் இலக்கு நிறைவேறும்.அது காலத்தின் தேவையாக இருக்கிறது .
களப்போராளிகளிடம் இந்நாவல்
போய்ச் சேர மலிவுப்பதிப்பு கொண்டுவரப்படவேண்டும்.விவசாய இயக்கங்களைச்
சார்ந்தவர்கள் கூட்டங்களில்
இந்நூல் பேசப்படவேண்டும்.அதில் வைரமுத்து
பங்கேற்க வேண்டும்.
தலித்தியம்.பெண்ணியம் என சில இலக்கியக்
கோட்பாடுகளும் போக்குகளும்
எப்படிக் காலத்தின்
தேவையாக இருக்கிறதோ
அதுபோல மண்ணை நம்பி வாழும் விவசாயிகள் குறித்த “மண்ணிய இலக்கியம்” அல்லது “”வேளாண்மை
இலக்கியம் ”பேசப்படவேண்டாமா?
முற்போக்காளர்களே ! உங்களுக்கொரு கேள்வி.விவசாயத்தை மையமாக வைத்து எத்தனை நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளன?செல்வராஜின் மலரும் சருகும், சின்னப்பபாரதியின்
தாகம்,சர்க்கரை,சோலை சந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல், ராஜம் கிருஷ்ணனின்
சேற்றில் மனிதர்கள்,கோலங்களும் கோடுகளும்,மணச்சநல்லூர் மணியம்மை
வாழ்வைப் பேசும் உன் பாதையில்
பதிந்த அடிகள்,மேலாண்மை பொன்னுச்சாமியின்
இனி,
உயிர்நிலம்,சூரியகாந்தனின்
மானாவரி மனிதர்கள்,அழியாச் சுவடுகள்,பூமணியின் பிறகு,நெய்வேத்தியம்,சு.தமிழ்ச்செல்வியின் ஒரு
நாவல்,முருகவேல்
மொழியாக்கத்தில்
எரியும்பனிக் காடுகள், பாவைச் சந்திரனின்
நல்லை நிலம் [இவை என் நினைவில் உள்ளவை.நண்பர்கள் சொன்னவை.இன்னும் சில இருக்கலாம்].இது போதுமா?
விவசாயிகள் மிகுந்த நாட்டில்-வேளாண்மை
நெருக்கடி முற்றியுள்ள
நாட்டில் இவ்வளவு போதுமா? மனச்சாட்சியைத்
தொட்டுச் சொல்லுங்கள்.ஊடகங்கள் விவசாயிகள்
தற்கொலையையைவிட பங்குச்
சந்தைச் சரிவைப் பற்றித்தான்
கவலைப்படுகின்றன என்று
விமர்சிக்கிறோம். ஆனால்
படைப்புத்துறையில் நாம்
நியாயம் வழங்கியுள்ளோமா ? இத்தகு நாவல்களைத்
திரட்டி ஒரு ஆய்வரங்கு நடத்த முற்போக்காளர்கள் ஏன்
முயலக்கூடாது.அது மண்ணியம் அல்லது வேளாண் இலக்கியம்
என்றொருபோக்காக ஏன்
காலப்போக்கில் மாறக்கூடாது ?
இங்கேதான் விவசாய நெருக்கடியை
நாவலாக - அதுவும் வெகுஜன இதழில் எழுதத்துணிந்த
வைரமுத்து பாரட்டுக்குரியவர்
ஆகிறார்.ஆகவே இந்த நாவலை படிப்பதும்,விமர்சிப்பதும்,களம் காண்பதும்
விவசாயத்தில் அக்கறையுள்ள
ஒவ்வொருவரின் கடமையாகும்.
மூன்றாம் உலகப் போர்,
ஆசிரியர் : வைரமுத்து,
வெளியிடு :
சூர்யா லிட்ரேச்சர் [பி]
லிட்.,
சென்னை – 600 024.
தொலைபேசி :91-44-24914747.
விற்பனையாளர்கள் ;
திருமகள் விற்பனை நிலையம்.
தொலைபேசி : 91-44-24342899.
கிழக்கு பதிப்பகம்,
தொலைபேசி :91-44-42009601/3/4
பக்கங்கள் ;400, விலை
: ரூ.300.
நன்றி; புதிய புத்தகம் பேசுது / நவம்பர் 2012
5 comments :
1)/வைரமுத்து வழிமொழியும் பொத்தாம் பொதுவான கோரிக்கைகளும் தீர்வுகளும்யதார்த்தத்துடன் சரியாகப் பொருந்துமா?அரைகிணறு தாண்டும் நிலையல்லவா? என்சால்படான்பாதிப்புக்கெதிராக கேரள அனுபவம் கற்கப்பட்டதா?இந்தியாவின் நிலக்குவியலும் நிலவிநியோகமும்ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?எல்லாவற்றையும் இறுதியாகத் தீர்மானிப்பது அரசியல்அன்றோ?அது ஏன் புறக்கணிக்கப்பட்டது?இப்படி எழும் எண்ணற்றக் கேள்விகளோடு …./
2)வைரமுத்து திறம்பட எழுதும் திறமை உள்ளவர்தான், மறுப்பேதும் இல்லை. உங்கள் கேள்விகளும் நியாயமானவைதான். உங்கள் தரப்பு அரசியல் கொள்கையில் இருந்து நீங்கள் இக்கேள்விகளை எழுப்பியது நியாயம் எனில் இக்கேள்விகளுக்கு பதில்சொல்லும் தகுதியில் வைரமுத்துவின் அரசியல் கொள்கை இல்லை; வைரமுத்து முன்வைக்கின்ற அரசியல் கொள்கை என்ன என்ற கேள்வி இருக்கின்றது; மேலும் வைரமுத்து சிரம்மேல் வைத்து பூஜிக்கின்ற மு.கருணாநிதியும், அவரைத்தலைவராகக் கொண்ட கட்சியின் கொள்கையும் இந்தியாவில், தமிழகத்தில் நிலக்குவியலுக்கு ஆதரவானவர்கள், நில வினியோகத்துக்கு எதிரானவர்கள்; உலகமயத்துக்கும் தாராளமயத்துக்கும் ஆதரவானவர்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோதும் அல்லது மத்தியில் ஆட்சிகளில் பங்கு பெற்றிருந்த போதும் நிலக்குவியலுக்கும் சொத்துக்குவியலுக்கும் ஆதரவான உலகமய தனியார்மயக் கொள்கைகளுக்கு ஆதரவாகவே இருந்த்து, இருக்கின்றது, நாளையும் இருக்கும்.
3) /விவசாயிகள் மிகுந்த நாட்டில் வேளாண்மை நெருக்கடி முற்றியுள்ள நாட்டில் இவ்வளவு போதுமா? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.ஊடகங்கள் விவசாயிகள் தற்கொலையையைவிட பங்குச்சந்தைச் சரிவைப் பற்றித்தான் கவலைப்படுகின்றன என்று விமர்சிக்கிறோம். ஆனால்படைப்புத்துறையில் நாம் நியாயம் வழங்கியுள்ளோமா ? .....இங்கேதான் விவசாய நெருக்கடியை நாவலாக - அதுவும் வெகுஜன இதழில் எழுதத்துணிந்தவைரமுத்து பாரட்டுக்குரியவர் ஆகிறார்/
4) உண்மைதான். ஊடகங்கள் மட்டும் அல்ல, வைரமுத்துவின் அபிமானத்துக்கு உரிய மு.கருணாநிதி அவர்களும் அவரது குடும்பத்தாரும் கூட பங்குச்சந்தை சரிவைப்பற்றியேதான் கவலைப்படுகின்றார்கள்; சன் டிவி குழும்ம், கலைஞர் டிவி குழும்ம், ஹூண்டாய்...இவற்றின் பங்குகளில் சரிவு ஏற்பட்டால் கருணாநிதி குடும்பம் கவலைப்பட்த்தான் செய்கின்றது. வைரமுத்து பொத்தாம் பொதுவாக கண்ணீர் கசியும் நாவல்களை எழுதுவது மிக எளிது; அவர் நாளை வரும் மூன்றாம் உலகப்போர் குறித்து புனைவிலக்கியம் எழுதுவது இருக்கட்டும்; நேற்று நடந்த கீழ்வெண்மணி சம்பவத்தில் அவரது அபிமானத்துக்கு உரிய திமுகவும் ‘பேரறிஞர்’ அண்ணாவும் ‘முத்தமிழ் அறிஞர்’ கருணாநிதியும் யார் பக்கம் நின்றார்கள் என்பது குறித்து கண்ணீர் கசியும் ஒரு நாவலை வைரமுத்து எழுதவேண்டும்.
5) தோழர், சு.பொ.அ.வின் எழுத்துக்களை சுபொஅவின் எழுத்துக்களாக நான் பார்ப்பதில்லை; அவரது எழுத்துக்கள் அவர் கொண்ட கொள்கையிலிருந்தும் சார்ந்துள்ள இயக்கத்தின் லட்சியங்களில் இருந்தும் பிறப்பவை, இப்படித்தான் உங்கள் எழுத்துக்களை நான் அணுக முடியும்; எனில் வைரமுத்துவின் எழுத்துக்களை எப்படி அணுகுவது? ‘அப்படி எல்லாம் எதுவும் பார்க்க அவசியம் இல்லை, சும்மா படித்து வையுங்கள்’ என்று சொல்வீர்களா? செருப்பு என்பது கால்களில் அழுக்கு ஏறாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு சாதனம், ஆனால் செருப்பில் அழுக்குப்படியும்; ஆனால் செருப்பிலும் அழுக்குப்படியாத வெள்ளை செருப்பை அணிந்துகொண்டு காரில் பவனி வந்து ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு விவசாயிகளுக்காக கண்ணீர் வடிப்பவர்களின் கண்களில் வடிவது உண்மையில் கண்ணீர்தான் என்று நாம் நம்ப வேண்டுமா? நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டுமா? ‘எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்....’ ‘கலகக் குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப்பிரச்னையையும் தீர்த்துவிடாது’ என்ற அர்ஜூன் டாங்ளேயின் உரையாடல்தான் நினைவுக்கு வருகின்றது.
இக்பால்
வேளாண்மை இலக்கியம் என்ற புது வகை இலக்கிய வகைமையை (genre) எடுத்துவைத்து விவாதிக்கிறார் தோழர் சு. பொ ,அ. "மூன்றாம் உலகப்போரின்" நுட்பமான பகுதிகளை தனது அனுபவ அறிவின் அடிப்படையில் உரசிப்பார்க்கிறார் விமரிசகர். தலையணை போன்ற நாவல்களைப் படிக்க நேரமின்றி உழலும் உழைக்கும் மக்களை படிக்கத் தூண்ட, நாவல் களம் , கருத்து பற்றி நம்முடன் பரிமாறிக் கொள்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு சு.போ.அ.பார்க்கும் ஒவ்வொருவரிடம் "ஆயிஷா" படித்தீர்களா என்று கேள்வியைக் கேட்டு வைப்பார்... அவர் 'நொச்சு தாங்காமல்' படித்த போதுதான் அந்த சிறு நாவலின் தாக்கம் பிருமாண்டமாகத் தெரிந்தது.எதையும் கேள்வி கேட்கும் குழந்தை உலகின் உன்னதம் புரிந்தது. உலகம் முழுதும் பேசப்படும் குழந்தை இலக்கியமானது. வங்கியில் கவுண்டரில் சேவை செய்துகொண்டே அதை இடையிடையே படித்து அழுது கண்ணீர்விட்டு விம்மவைத்த என் அனுபவம் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். நெடுநாள் மனதைத் 'தொந்தரவு' செய்த குறுநாவல்! இன்றும் 'ஆயிஷா' நடராசன் என்றால் தெரியாதோர் யார்? இந்த முறை 'உலகப்போரை' உடனேயே எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. - இரா. குமரகுருபரன், சென்னை-47
மிகவும் சரியான - சுண்டக்காய்ச்சிய பகுப்பாய்வு...
தோழர் இக்பால்
வணக்கம்
எனது நூல் விமர்சனம் மீது தாங்கள் கருத்து பதிவீடு செய்திருப்பதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1]எனது கேள்விகள் மறைமுகமாக வைரமுத்துவின் அரசியலை விமர்சனம் செய்திருக்கிறது.ஒரு படைப்பிலக்கியத்தின் மீது விமர்சனம் செய்யும் போது நேரடி அரசியல் விமர்சனம் பொதுவாகத் தேவை இல்லை விதிவிலக்குகளைத் தவிர.வைரமுத்துவுக்கு என் அணுகுமுறை போதும் என்பது என்கருத்து.
2] கீழ்வெண்மணி குறித்து சோலைசுந்தரப் பெருமாள் தவிர்த்து வேறு யார் நாவல் படைத்தனர்? தமிழ்ச் செல்வனா?மேலாண்மையா?சு.வெங்கடேசனா? இப்படி இருக்க வைரமுத்துவை நோக்கி அப்படியொரு கேள்வியை வீசத் தேவை இல்லை?
3]நான் ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன் . 2006 சட்டமன்றத் தேர்தலின் போது “குட்டுக் கதைகள்”என்ற தலைப்பில் ஒரு சித்தர் சொல்வதுபோல் அன்றாடம் ஒரு மக்கள் பிரச்சனையை சொல்ல முயன்றேன்.தினசரி ஒரு குட்டிக்கதைவீதம் 45 நாட்கள் சொன்னேன்.ஆனால் அதற்காக நான் கதைகளைத் தேடத் தொடங்கிய போது நமது முகாமிலுள்ள எழுத்தாளர்கள் எழுதிய கதை மிகச் சொற்பமாகவே கிடைத்தது.மாறாக குமுதம்,ஆனந்த விகடன் கதைகளைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது.விவசாயிகளைத் திரட்டாமல் மக்கள் ஜனநாயகப் புரட்சி இல்லை.ஆனால் நம் படைப்பாளிகள் எங்கே இருக்கிறார்கள்? இதச் சுட்டவும் சற்று ரோஷத்தை ஊட்டவும் முயல்கிறேன். அவ்வளவே.
4] வைரமுத்து குறித்து அருணன் எழுதிய “சிகரம் தொட்ட கவிஞர்”, மற்றும் இதய கீதன் எழுதிய “மார்க்சிய பார்வையில் வைரமுத்து” இரண்டும் படித்தீர்களா? நம் முகாமிலிருந்து அப்படியொரு நயந்துரை வந்து கொண்டிருக்கும் சூழலில்: நான் அவ்வாறு செய்யாமல் இந்நாவலை சரியான கோணத்தில் விமர்சித்திரிப்பதாவே உணர்கிறேன்.
மீண்டும் பேசுவோம்,
நன்றி
சுபொ
சிறந்த எழுத்தாளார் சோலை சுந்தரபெருமாள் எழுதிய “ செந்நெல் “ நான் சுட்டிக்காட்டிய வேளான் இலக்கிய பட்டியலில் இடம் பெறாதது குறித்து வருந்தி அவர் கடிதம் எழுதி இருந்தார். என் நினைவில் இருந்தும் எப்படியோ விடுபட்டுவிட்டது. இது பெரும் தவறே. இதற்காக வருந்தி அவருக்கு பதில் எழுதியுள்ளேன். மனப்பூர்வமாக மன்னிப்பைக் கோருகிறேன். மேலும் சி.எம்.முத்து எழுதிய “நெஞ்சின் நடுவே”, “கறிச்சோறு “ இரண்டும் விடுபட்டது குறித்தும் எழுதியிருந்தார். ஏற்றுக்கொள்கிறேன்.-சு.பொ.அகத்தியலிங்கம்.
Post a Comment