திருமணநாளில் திரும்பிப்பார்க்கிறேண்..
இன்று எமக்கு இனிய நாள். ஆம். 1981 அக்டோபர் 25 - தீபாவளிக்கு முதல் நாள் - ஞாயிற்றுக்கிழமை மலை 5.15 மணிக்கு தோழர் வி.பி.சிந்தன் தலைமையில் சி.கலாவதியை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்டேன்.
தோழர்கள்பி.ஆர்.பரமேஸ்வரன்,வே.மீனாட்சி சுந்தரம், மைதிலிசிவராமன்,கே.எம்.ஹரிபட்,
என்.நன்மாறன்,து.ராஜா உட்பட பலர் வாழ்த்துரைக்க மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டோம்.
அது முகூர்த்த நாளுமல்ல தேர்ந்தெடுத்த நேரமும் ராகுகாலம் எனவே இருவர் வீட்டிலும் பெரியவர்கள் சற்று வருந்தவே செய்தனர். ஆயினும் மீறி செய்தோம். யார் மனமும் நோகாமல் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமல்ல அல்லவா?
காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்ய எனக்கு ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு கூடவில்லை. தோழர்கள் ஏற்பாடு செய்த திருமணமே.இருவருக்கும் ஏறத்தாழ சமவயது.அது பிரச்சனையே அல்ல.
எங்களுக்கு வாய்க்காவிடினும் எங்கள் பிள்ளைகள் எம் நெஞ்சில் பால்வார்த்துவிட்டனர்.ஆம், என் மகள் காதல் திருமணம் கலப்புத் திருமணம் செய்து கொண்டது எனக்கு மனநிறைவான நிகழ்வாகும். தற்போது என் மகனும் அப்பாதையில் செலவது கூடுதல் மகிழ்ச்சி . விரைவில் திருமணம் நடக்கும்.
இடையில் ஒரு குறுந்தகவல் : திருமணத்திற்குப் பிறகு எம்.சி.சி வங்கியில் கடன் வாங்கி மின்விசிறி, அலாரம். ரேடியோ வாங்கியதும்..மாதா மாதம் ரூ.27 தவணை கட்டத் திணறியதும் - 36 மாதத்தில் முடிய வேண்டிய கடன் 48 மாதமாக நீண்டதும் நினைவில் நிற்கிறது.பணவீக்கம் எப்படிப் போகிறது என்பதை வாழ்க்கை உணர்த்துகிறது.
கடன் வாங்காமல் வருவாய்க்குள் சிக்கனமாக வாழவேண்டும் என்கிற போதனை சரிதான்.ஆனால் வாழ்க்கை யதார்த்தம் வேறாக அல்லவா இருக்கிறது ? வருவாய் எப்போதாவது சொற்பமாக உயர்கிறது. ஆனால் விலைவாசி அன்றாடம் தாவித்தாவி ஏறுகிறது.குடும்ப பட்ஜெட்டில் மாதாமாதம் பற்றாக்குறை உயர்கிறது.என்ன செய்ய ? கடன் புதைகுழிதான். ஆயினும் அதில் சிக்காதார் யார் ? நாங்களும் விதிவிலக்கல்ல. எது ஆசை ? எது தேவை ? நேற்று டிவியும்,கம்யூட்டரும் ஆடம்பரப் பொருள். இன்று அத்தியாவசியப் பொருள். இன்று இன்வெட்டர் கூடத் தேவைப்படுகிறதே..
எங்கள் திருமண வாழ்வு நிச்சயம் வெற்றிகரமானதுதான்.பண நெருக்கடி மட்டுமே இருவருக்கும் இடையில் பலநேரங்களில் தற்காலிக உரசலை உருவாக்கியுள்ளது.ஆயினும் அந்த நெருக்கடியை எதிர்த்து சேர்ந்து போராடியே இதுவரை சமாளித்திருக்கிறோம்.இப்போதும் அப்படித்தான்.கடனோடும் கவலையோடும் தொடரும் வாழ்க்கை. ஆயினும் ஆறுதலாய் மகனின் செயல்பாடுகள். மீள்வோம் இந்த இக்கட்டிலிருந்தும்.
அவளின் கடவுள் நம்பிக்கையை நான் இயன்றவரை மதித்துள்ளேன்.எனது கருத்துகளை அவளும் எமது பிள்ளைகளும் நன்கு மதிக்கின்றனர்.வீட்டிற்குள் ஆரோக்கியமான கருத்து விவாதம் அவ்வப்போது நடைபெறும்.எனது கருத்துகளை தொடர்ந்து பேசிவருகிறேன்.மூட நம்பிக்கைகள்,சடங்குகள் பெரும்பகுதி தவிர்க்க முடிந்திருக்கிறது.சொந்த [கடன்] இல்லத்திறப்பு விழாவை - பெரியோர்கள் விரும்பாத பாட்டிமை அன்று சடங்குகள் இன்றி நடத்த முடிந்தது.அனைத்தும் வீட்டில் நாங்கள் கூடிப்பேசி எடுக்கிற முடிவாக அமைகிறது.
எனது அறிவியல் பார்வையை அவள் அங்கீகரித்தே என்னோடு தோள் சேர்ந்து நிற்கிறாள்.கடவுள் மீதான லேசான நம்பிக்கை மட்டும் [மதநம்பிக்கை சாதிப்பிடிமானம் கிஞ்சிற்றும் இல்லை]அவளுக்கு உள்ளது.இன்றுகூட மாலை திருவள்ளூர் பெருமாள் கோவிலுக்குப் போக விரும்புகிறாள். செல்வோம் ,ஆனால் வழக்கம் போல் நான் வெளியே காத்திருக்க அவள் உள்ளே சென்று வருவாள்.புதிய இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்தே செல்வோம்.அவள் சாமி கும்பிட நான் சிற்பம்,கட்டிடக்கலை,ஓவியம், தலபுராணம் இவற்றை தெரிந்துகொள்வேன்.பிறகு இருவரும் அது பற்றி பேசுவோம்.தலபுராணங்களுக்குப் பின் ஒளிந்துள்ள சாதியத்தை .பெண்ணடிமைத்தனத்தை ,மூடநம்பிக்கைகளை அவளும் பொதுவாக ஏற்பதில்லை.வாழ்க்கைச் சக்கரம் இப்படித்தான் ஓடுகிறது.
இசையிலும் பாட்டிலும் அவளின் ஆர்வம் அளவற்றது. அவள் திறமைக்கு சில வடிகால்களே கிடைத்தது. முழுவாய்ப்பு அமையவில்லை.நான் கல்லூரி பக்கம் சென்றதில்லை. எனினும் திருமணத்திற்குப் பிறகு அவள் முதுகலை பட்டம் பெறத் துணைநின்றது மட்டுமே நான் உருப்படியாகச் செய்தது என நினைக்கிறேன்.என் எழுத்துப் பணியிலும் இயக்கப்பணியிலும் அவள் எப்போதும் தோள்கொடுத்தே வந்துள்ளாள்.
ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து முற்றாக விடுபட்ட ஆணோ பெண்ணோ இங்கு இல்லை.நாங்களும் அப்படியே.ஆணாதிக்கச் சிந்தனையை எதிர்த்து நிற்க தொடர்ந்து முயல்கிறேன். தோற்ற இடம் பல. ஆனாலும் மீண்டெழுந்து தொடர்ந்து முயல்கிறேன்.மனைவி உடல்நலம் பாதிக்கப்படும்போதுதான் கணவன் கண்விழிக்கிறான் என்று சொல்வதுண்டு. நானும் அதில் விதிவிலக்கல்லவே..
வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டேன் என துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பேன்.அன்றைய புரிதல் அவ்வளவே.வாழ்க்கை இணையர் என்கிற சரியான கண்ணோட்டம் எம்முள் மெல்ல வேர்பிடித்து வருகிறது.அவரவர்களின் நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்கிற ஜனநாயகப் பண்பாடே வாழ்வின் அடித்தளம்.காயங்களும் வலிகளும் எங்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.காலம் எங்களை பக்குவப் படுத்தி இருக்கிறது.கனிய வைத்திருக்கிறது.
காதல் மட்டும் இன்றும் என்றும் அன்றுபோலவே.எங்கள் வாழ்க்கை வெற்றிதானே.
குறிப்பு : முதலில் பெண்பார்க்கச் சென்ற போது கலர் பூந்தி வைத்திருந்தார்கள்.இன்று மீண்டும் கலர் பூந்தி வாங்கிவந்து பழைய கணக்கை நேர்செய்து விட்டேன்.காத்திருந்து பழிவாங்கிவிட்டீர்களே என்கிறாள் மனைவி.இது எப்படி இருக்கு..?
6 comments :
குடும்ப ஜனநாயகம்-ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் -ஆன்மிகம்-காதல் திருமணம் -பிள்ளைகளின் கலப்பு திருமணம் என இதுநாள் வரை தாங்கள் கற்றுணர்ந்த/கற்றுக்கொண்டிருக்கிற ஒட்டுமொத்த அனுபவத்தையும் அழகுற பதிந்திருக்கிறீர்கள் தோழர்... அற்புதம்! உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள அதிகம் இருக்கிறது... அனுபவங்கள் தானே வாழ்வின் அதிசயம்!
அழகான குடும்பச் சித்திரம். தொடர்ந்த போராட்டம் தானே வாழ்க்கை. உங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!
நேற்று பார்க்கவில்லை...ஆனாலுமென்ன, வாழ்த்துக்களை எப்போதும் சொல்லலாம் தானே...
உங்கள் இருவரையும் அறிவேன்...உங்களை மிகவும் கூடுதலாக...
சொந்த வாழ்க்கையை ஒரு முறை திரும்ப நோக்கல் யாருக்கும் சுகமான தருணமாகவே இருக்கும்..
சமூகப் பங்களிப்பில் எத்தனையோ சிறு சிறு சமரசங்களை, ஏன் பல நேரம் பெரிய அளவில் கருத்துக்களை நமக்குள் வைத்துக் கொண்டு ஒத்திசைவாக இயங்கும் வேளையில், அந்த திருவள்ளூர் கோவிலுக்குள் போய் வந்தால் தான் என்னவாம்..மோசமான கருத்துக்களைச் சொல்லும் திரைப்படங்களை ஒன்றாக உட்கார்ந்து பார்க்கிறோம்..பிறகு விமர்சிக்கிறோம்..
வீட்டுத் திருமணங்கள், புகுமனை புகு விழாக்கள் உள்பட சாத்திர சம்பிரதாயங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் என்றாலும், எல்லோரும் அமர்ந்து பேசி செய்யும் அளவு மாற்றத்தை நோக்கிய திசையில் நீங்கள் குறிப்பிடும் வெற்றிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன..
இருவரும் உடல் நலமும், உள நலனும் சிறப்புற அமையபெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..
எஸ் வி வேணுகோபாலன்
su.po..very wonderful description of the momentary and memorable life;long live the ideal couple..udayakumar
அன்புள்ள தோழர், வணக்கம். திருமண நினைவு நாளை ஒட்டி நீங்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் அருமையானவை. தன்னையே தோலுரிக்கும் குணத்தை நடைமுறைபடுத்தி வருகிறீர்கள். உங்கள் அளவுக்குத் தோலுரித்துக் கொண்டால் என்னிடம் எலும்புக் கூடுதான் மிஞ்சும். நல்ல மனம் வாழ்க...இரு மனம் சேர்ந்து. திருமணம் நினைந்து... நன்றி.
நா வே அருள்
full timers life is full of problems/economical problems/ disappointments...Movement has to discuss and do more to them...
Post a Comment