மதுவிலக்கு சாத்தியமற்றது

Posted by அகத்தீ Labels:






மதுவிலக்கு சாத்தியமற்றது.. ஏன்
சு.பொ.அகத்தியலிங்கம்.

துவிலக்கு பற்றி இங்கு சிலர் உரக்கப் பேசுகின்றனர். அது வெறும் கற்பனாவாதப் பேச்சு. உலகத்தில் மதுப் பழக்கம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. இங்கு மட்டும் உள்ளதல்ல. இதன் வேர் ஆழமானது.பரவலானது. தட்பவெப்பம் சார்ந்தது. பண்பாட்டோடு பிணைந்தது. வெறுமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதனை விவாதிக்க முடியாது. பொறுமையும் அறிவார்ந்த விவாதமும் தேவை.


முதலில்,ஒன்றைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன் போதைப்பழக்கத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடுகிறவன் நான். அதே சமயம் மதுவிலக்கு விரும்பிய பலனைத்தராது என உறுதியாக நம்புகிறவன். ஏனிந்த முரண்பாடு எனக்கேட்பீர்கள். என் வாதங்களை முழுமையாகக் கேட்டபின் முடிவுக்கு வருவீர்.

முதலில் போதையை எடுத்துக் கொள்ளுங்கள்  அது உலகெங்கும் தடை செய்யப்பட்டதுதான்.  ஆயினும் போதைவியாபாரிகளின் சர்வதேச சாம்ராஜ்யமும் வலைப்பின்னல் போன்ற அதன் தொடர்பும் நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன. அமெரிக்கவில் சுமார் ஐநூறு பில்லியன் கோடி டாலருக்குமேல் சட்டவிரோத போதை வியாபாரம் ஆண்டுதோறும் நடக்கிறதாம். பல அமெரிக்க வங்கிகளின் முதுகெலும்பே இப்பணம் தானாம். உலகெங்கும் சில ஆயிரம் பில்லியன் கோடி டாலர் இந்த சட்டவிரோதத் தொழிலில் புழங்குகிறது. அவற்றின் அரசியல் தொடர்பு நுட்பமானது. ஆபத்தானது. தீவாரவாதிகள் நிதி மூலமாகவும் உள்ளது. குட்டித் தீவுகளில்-குட்டி நாடுகளில் மூக்கை நுழைக்கவும் கபளீகரம் செய்யவும் அமெரிக்கவுக்கும் வல்லரசுகளுக்கும் போதை ஒரு சாக்காகவும் உள்ளது. போதைக் கடத்தல் கும்பலுக்கும் பெண்டகனுக்கும் உள்ள உறவு ரகசியமானதல்ல.

போதையை எந்தச் சட்டமும் அங்கீகரிக்கவில்லை. எந்த சமூகமும் அங்கீகரிக்கவில்லை. ஆயினும் தங்குதடையின்றி போதைபொருட்கள் நடமாடுவது எப்படி? ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்,ஆசிரமங்கள்,அதிகாரவர்க்கம்,ஆட்சியாளர்கள்,போதையுலகத் தாதாக்கள், இவர்களின் புனிதக்கூட்டணியை எல்லோரும் அறிவர்.  ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார்? கேள்வி இதுதான்.

இப்போது மதுவுக்கு வருவோம்.மதுவும் போதைதான். ஆயினும் குஜராத் தவிர அது எங்கும் தடை செய்யப்படவில்லை. குஜராத்திலும் பெர்மிட் பெற்று குடிப்பவர்கள் அதிகம்.மேலும் கள்ளச்சாராயம் அங்கு செல்வங்கொழிக்கும் தொழிலாக விளங்குகிறது. அத்துடன் பா.. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நிதியை அள்ளி வழங்குவதில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உள்ள பெரும்பங்கை இங்குள்ள ஊடகங்கள் சொல்லாமல் விட்டாலும் அங்குள்ள மக்கள் நன்கறிவார்கள்.

அது போல் குஜராத்தில் டாஸ்மாக் பணம் இல்லாமலே பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது எனச் சொல்வது மகாபொய்.நவீனஹிட்லர் மோடியை தூக்கிப்பிடிக்கத் திட்டமிட்டு பொய்பரப்புரை செய்கிறார்கள்.சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு. அதைவைத்துக் கொண்டு தமிழகமே அப்படித்தான் என்று சோ வகையறாக்கள் சொல்லும் புளுகு போன்றதே அது.மனித வளர்ச்சி குறியீட்டில் குஜராத்தைவிட தமிழகம் பலமடங்கு மேல்.திராவிடக் கட்சிகளின் மீதுள்ள கோபத்தால் உண்மையை மறைக்கக் கூடாது.குஜராத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்பதே உண்மை.கள்ளச்சாராயம் அங்கு ஆறாக ஓடுகிறது என்பதும் அதைவிட உண்மை.

மது ஏதோ ஒரு வகையில் மக்கள் வாழ்வோடு உலகெங்கும் பிணந்தே உள்ளது. சோஷியல் டிரிங்கிங் என்றழைக்கப்படுகிற எப்போதாவது மது அருந்துபவர்கள் ஒருவகை. மதுவுக்கு அடிமையாகிப்போனவர்கள் ஒருவகை.பின்னதின் தொடக்கமாக முன்னது அமைந்துவிடுவதும் உண்டு. ஆயினும் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவும் வேண்டும்.

மதுவுக்கு அடிமையாதல் என்பதை தனிமனித ஒழுக்கச்சிதைவாக மட்டும் பார்த்தால் போதாது.அது ஒரு வகை நோயென அறிதல் வேண்டும்.அப்படித்தான் இன்றைய மருத்துவ அறிவியல் சொல்கிறது.
மது அடிமைகளில் வசதிபடைத்தவர்கள் மதுவிலக்கு  அமலுக்குவரின் பாதிப்பு அடையமாட்டார்கள். நட்சத்திர விடுதிகளும்,பெர்மிட்டுகளும் இவர்கள் மது அருந்த தாராளமாய் வழிசெய்யும். ஏழை குடிமகன்கள்தான் கள்ளச்சாராயத்தில் கூட்டம்கூட்டமாகச் சாவார்கள். பல அரசியல் கட்சிகளின் வி..பி.களாக கள்ளச்சாராய தாதாக்கள் வலம் வருவார்கள்.மதுவிலக்கால் வேறெந்தப் பயனும் விளையாது.

அப்படியானால் குடியைக் கெடுக்கும் குடியை அப்படியே விடலாமா? வேண்டாம் வலுவான மனதைக் கவ்வும் பிரச்சாரம் மூலம் மக்களை வென்றெடுக்கவேண்டும். இதில் குடும்பத்தின் பங்கே அதிகம். குடி என்ற ஒற்றை அளவுகோலை வைத்து ஒருவன் நல்லவனா கெட்டவனா என முத்திரை குத்துவது தவறு. வீட்டில்வைத்தே மது அருந்தலாம்,வீட்டிலுள்ளோர் அதனை தப்பாகக் கொள்ளார் என்கிற நிலையில் குடியின் அளவு மட்டுப்படும்.படிப்படியே மருத்துவர்கள் துணையோடு வென்றெடுக்கமுடியும்.கடினமான சவாலான பாதைதான். வேறுவழியில்லை.

பான்பாரக்கை முதலில் முழுவதுமாக தடை செய்யாமல் ஊரின் தூய்மையைப் பாதுகாக்கவே இயலாது.சிகரெட் மீதான கட்டுப்பாடுகள் ஒரளவு பயன் தந்துள்ளது அலவா? அந்த வெளிச்சத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதன் மூலம் மது பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கலாம்.அதே சமயம் பூரண மதுவிலக்கு நடைமுறை சாத்தியமற்றது என்பதை உணரவேண்டும்.

மதுவிலக்கு பற்றி கூச்சலிடும்கட்சிகளின் மாநாடு பேரணிகளின்போது டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பதைக் காணலாம். குடிப்பவர்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை என தலைவர்கள் மேடையில் சவால் விடலாம். யதார்த்தம் அதற்கு வெகுதூரம் என்பதை அனைவரும் அறிவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குடிகாரர்கள் உறுப்பினராக முடியாது என்று அமைப்பு விதியில் சொல்லப்பட்டுள்ளது. உலகின் வேறெந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படி ஒரு விதி இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் தனித்துவமான சூழலில்காந்தியின் தாக்கம் கம்யூனிஸ்ட் கட்சியிலும் வ்வலுவாக இருந்த பின்னணியில் இவ்விதி செய்யப்பட்டது. அப்போதும் பெரும் விவாதம் நடைபெற்றுள்ளது இது உழைப்பாளர்களின் கட்சி பெரும்பாலான உழைப்பாளி மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் மதுவை பயன்படுத்துவோரேஅது சில பண்பாட்டு நிகழ்வுகளில் ஒரு கூறாகவும் உள்ளது. ஆகவே பொதுவாக மது குடிப்பவருக்கு கட்சியில் இடமில்லைஎன்று சொல்லாமல், குடிக்கு அடிமையானோருக்கு இடமில்லை என்றே விதி அமைக்கப்பட்டது. ஆம்,அதுதான் நடைமுறை சாத்தியமும்கூட.

சோமபானம்,சுராபானம் வேதவழிபாட்டு மரபெனில்,கள்ளும் சாராயமும் நாட்டார் வழிபாட்டு மரபு.அவ்வைக்கு அதியமான் கள்ளு வழங்கியதும் நம் மரபே. வீக் எண்ட் பார்ட்டி வாரக்கடைசி கொடாட்டம் என்பது தாரளமய வழ்க்கம். எனவே மதுவுக்கு எதிரான போர் கடினமானது மட்டுமல்ல நெடுங்காலம் பிடிப்பதும் ஆகும். நம் பார்வையும் மனசும் விசாலப்படாமல்அறிவியல் பார்வை பரவலாகாமல்சமூக சிந்தனை வளப்படாமல் இதில் எளிதில் மாற்றம் காணமுடியாது.






5 comments :

  1. Paa Krishnan

    தோழர், உங்களைப் போன்றவர்களை மிகவும் மதிப்பவன். நரேந்திர மோடி என்பவரை ஹிந்துத்துவா வெறியராக மட்டுமே.. பார்க்கத் தெரிகிறது. அவர் பல நெருக்கடி, நிர்பந்தம் இருந்தபோதும், மதுவிலக்கைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாரே.. நம்மால் முடியாதா என்ன.. முடியும். இன்னொன்று, மதுக் கடைகளைத் திறந்தால், உங்களது கொள்கைக்கு விரோதமாக ஏகாதிபத்ய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு ஏழைகளை மது கொடுத்து சுரண்டிவிடுமே. அனுமதிக்கிறீர்களா..

  1. Unknown

    வரலாற்று சான்றுகளோடும் கட்சி திட்டத்தோடும் ஒன்றிணைத்து மது விளக்கு பற்றிய தெளிவை கொடுத்திருப்பது சிறப்பு....

  1. அகத்தீ


    மதுவிலக்கு மதுவை முற்றிலும் ஒழிக்க முடியாது எனினும் கட்டுப்படுத்தத் முடியும். இன்று போல் பள்ளி மாணவர் முதல் அனைவரும் குடிக்க முற்படுவதைக் குறைக்கும். மது அருந்தல் வெட்கப்பட வேண்டிய ஓன்று என்று ஆகிவிட்ட நிலையை மாற்ற முடியும். புதிய குடிகாரர்கள் உருவாவதைத் தவிர்க்க இயலும். நான் ஆறு வயதில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டேன். மதுவினால் ஏழைகள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை பாதிக்கப்பட்டதைக் கண்ணால் கண்டிருக்கின்றேன். மதுவிலக்கு ஏழைகள் வாழ்வில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தியதையும் கண்டுள்ளேன். ஏற்கனவே மதுப் பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் தான் கள்ளச் சாராயத்திற்குத் தாவினர். மீறப்படும், நடைமுறைப் படுத்த இயலாது என்ற காரணங்களால் மதுவிலக்கு வேண்டாம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அரசியல் சட்டமே தீண்டாமையை ஒழித்தும் இன்னும் தொடர்கின்றது என்று அச்சரத்தை நீக்குவது சரியாகுமா? எவ்வாறு அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பதே நமது சிந்தனையாக இருக்க வேண்டும். தோற்போம் என்று அஞ்சுவதற்கு மாறாக வெல்வோம் என்று தான் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.-ச.சீ.இரா

  1. kumaresan

    மதுக்கடைகள் அனுமதிக்கப்படுகிறபோது சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குவதில் வரும்படி. மதுவிலக்கு அறிவிக்கப்பட்டால் கள்ளமதுச் சந்தை அதிபர்கள் மூலம் வரும்படி.

    மதுவிலக்கு கோரி போராடுகிற தனிமனிதர்கள், அமைப்புகள், கட்சிகள் மதுப்பழக்கம் தொற்றுவதற்கும் தொடர்வதற்கும் காரணமான சமூகப் பொருளாதார அரசியல் நிலைகளை மாற்றுவது பற்றிக் கவலைப்படுவதில்லை. அவற்றை மாற்றுவதற்குக் குரல்கொடுப்பதுமில்லை, மாற்றுவதற்காகப் போராடுகிறவர்களுக்குத் தோள்கொடுப்பதுமில்லை.

    அதற்கு இவர்கள் தயாராகிறவரையில் மதுவிலக்கு கோரிக்கை என்பது, உன்னதமான நோக்கம் போலக் காட்சியளிக்கிற திசைதிருப்பல் கவர்ச்சியே. மதுவுக்கு எதிரான வலுவான, விரிவான விழிப்புணர்வுப் பிரச்சாரமே உடனடித் தேவை.

  1. hariharan

    Good analysis.

Post a Comment