சமூகவலைதளங்கள் நோக்கி எல்லோர் பார்வையும்..

Posted by அகத்தீ Labels:







தந்தி எப்போதும் வேகமாகப் பரவும். அதையே ஒரு நோக்கத்தோடு திட்டமிட்டு  ஒரு குழுவினர் பயன்படுத்தும்போது மிகவும் நுட்பமான விளைவுகளை உருவாக்கிவிடும்.

இணையதள வசதி ஆரம்ப நிலையிலிருந்த 1995 செப்டம்பர் மாதம் பிள்ளையார் சிலைகள் பால குடிக்கின்றன என்கிற வதந்தி லடககணக்கான மக்களை உண்மை என நம்பவைத்தது.ஆயிரக்கணக்கான கோயில்களில் மணிக்கணக்கில் மக்கள் கீயூவில் நின்றனர்.மெத்தப்படித்தவர்களும் இதில் விதிவிலக்கல்ல.மக்களை தெளியவைக்க அறிவியலாளர்கள் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.
.
வதந்தியை உருவாக்கிப் பரப்பியது இந்துத்துவ மதவெறிக்கூடாரமே.இந்து முன்னணியினர் இது எங்கள் மத நம்பிக்கை,இதனை கேலி செய்யக்கூடாது என வாதிட்டனர்.உண்மையை அம்பலப்படுத்திய அறிவியலாளர்கள் மீது அவதூறு பொழிந்தனர்.பிள்ளையாரை வைத்து கலவரம் தூண்டவும் மதவெறி அரசியல் நடத்தவும் அவர்களுக்கு மூடபக்தியை உருவாக்கும் வதந்தி தேவையாக இருந்தது.

வதந்தியின் வலிவை ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் உணரத்தலைப்பட்டனர். மூடநம்பிக் கைகளை வலுப்படுத்தும் வதந்திகள் அடிக்கடி வலம்வருவதின் பின்னால் இந்துத்துவ மதவெறிக் கூட்டத்தின் கரசேவை உள்ளதை அறியவேண்டும்.

சமீபத்தில்,வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கபடக் கூடும் என்ற வதந்தி பரவ தென்மாநிலங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு கூட்டம்கூட்டமாக திரும்ப - ரயில் நிலையங்கள் கிட்டத்தட்ட அகதி முகாம்கள் போலாயின.ஆனால் இந்த வதந்தி பாகிஸ்தானில் இருந்து சமூகவலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டதாக கண்டுபிடித்துக்கூறி அதற்கு அரசு முற்றுபுள்ளி வைத்தது.அது உண்மையில் பாகிஸ்தானில் இருந்துதான் பரப்பப்பட்டதா?யாரும் உறுதி செய்யவில்லை.ஆயினும் இந்திய பொதுபுத்தியில் பதியம் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய துவேஷம் மேலும் வலுப்படுத்தப் பட்டது.மருதாணியால் அரிப்பு என்ற வதந்தி ரம்ஜான் நெருக்கத்தில் பரவ பதட்டம் அதிகமானது.இப்போதும் ஒரு முஸ்லீம் பெண்ணை கைது செய்து பிரச்சனை முடிக்கப்பட்டது.இங்கேயும் நஞ்சாகிப்போன இந்திய பொதுபுத்தி சுயரூபம் காட்டியது.முஸ்லீம் அல்லாத வடகிழக்கு மாநிலத்தவர் பாதிக்கப்பட்ட போதும் பழி இஸ்லாமியர் மீதே,இஸ்லாமியர்கள் பாதிக்கும்போதும் பழி இஸ்லாமியர்கள் மீதே.எங்கோ உண்மை இடிக்கிறதே!

சமூகவலைதளங்கள் விஷம் பரப்புவதாக அரசே கூறி அவற்றுக்கு தடைவிதிக்கப் போவதாகக் கூறின.சில நாட்கள் மொத்தமாகக் குறுஞ் செய்தி அனுப்பத் தடையும் விதிக்கப்பட்டது.தொழில் நுட்பரீதியாக இவை எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது ஒருபுறம் இருக்க - இன்றைய ஊடகங்களும் தகவல் தொழில் நுட்ப சாதனங்களும் எவ்வளவு வலுவாகவும் விரைவாகவும் செயல்படுகின்றன என்பது பிரமிக்க வைக்கிறது.

வதந்திக்கும் செய்திக்கும் பல நேரங்களில் வித்தியாசம் காண்பது சிரமமாக இருக்கிறது. கருத்துத் திணிப்பே செய்திவழியாக அரங்கேறுகிறது.அச்சு ஊடகங்கள்,தொலைகாட்சிஅலைவரிசைகள்,சமூகவலைதளங்கள்,வலைப்பூக்கள்,மின்னஞ்சல்கள்  இன்றைய பிரச்சார முறை மாறிவிட்டத.

ஃபேஸ்புக், டுவிட்டர் மூலமே சமீபத்திய அரபு வசந்தம் எனப்படும் எழுச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் எந்த அளவு உண்மை உள்ளதென்பது இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.மக்களிடம் தலைமறைவாக ஊடுருவிய இயக்கங்கள் ஃபேஸ்புக்,டுவிட்டர்களை பயன்படுத்திக் கொண்டன என்பதைச் சொல்ல இன்னும் தயக்கம் உள்ளது.
எது எப்படியோ மக்களோடு வீட்டுக்குள் நுழைந்து நேரடியாகப் பேசுகிறது இந்த சமூகவலைதளங்களும், தொலைகாட்சிகளும்,பத்திரிகைகளும்
.இது குரங்கு கை கொள்ளியா? இருட்டில் தடுமாறாமல் வழிகாட்டும் தீப்பந்தமா?விவாதிக்க வேண்டும்தான்.அதைவிட முக்கியம் அதைப் பயன்படுத்தவேண்டும்.

முன்னாள் மத்தியஅமைச்சரும்,அரசியல் விமர்சகருமான அருண்நேரு அண்மையில் தினமணியில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் “புள்ளிவிவரங்களில் நான் கெட்டிக்காரன் அல்ல என்றாலும் 2014 பொதுத் தேர்தலில் செய்தி ஊடகங்களுக்காகக் கட்சிகள் செய்யும் செலவு 200 விழுக்காடு ஆக உயர்ந்துவிடும் என்று கணிக்கிறேன்.” என்கிறார்.

மேலும் அவர் சொல்கிறார்,“பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியம், சமூக வலைதளங்களின் பயன்பாடு ஆகியவை குறித்து லட்சக்கணக்கான வார்த்தைகள் இனி அச்சிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து இடம் பெறும்...  தவறான தகவல்களை வேண்டுமென்றே வெளியிடும் வலைதளங்களைத் தடை செய்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் உலகின் எந்தப் பகுதியிலாவது, யாராவது அதை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்களா? ....நாட்டின் நிர்வாக விதிகள் அனைத்தும் மாறிவிட்டன; அது 24 மணி நேர செய்தி சேகரிப்பாக இருந்தாலும், சமூக வலைதளங்களாக இருந்தாலும், தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடாக இருந்தாலும், நம்மை நிர்வகிக்கும் அரசுமுறையாக இருந்தாலும், நீதிவழங்கும் தீர்ப்பாக இருந்தாலும் - எல்லாமும் - மாறிவிட்டன. பதவியில் இருப்பவர்கள்தான் ஏதும் மாறாததைப்போல மறுத்துப் பேசிவருகின்றனர். இப்போதைய சூழலில் எது சரி, எது தவறு என்று நமக்குத் தெரியவில்லை. கழுத்து வெட்டப்பட்ட கோழியைப்போல நாம் வட்டமடித்துச் சுற்றிசுற்றி வருகிறோம்.”

எது எபடியானாலும் சமூகவலைதளங்கள் கருத்துப்போரில் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகின்றது அதை தடுத்து நிறுத்த இயலாது. ஆகவேதான் ராகுல்காந்தி, லல்லு,அத்வானி,மோடி,  மம்தா, கருணாநிதி,என ஒவ்வொருவரும் சமூகவலை தளங்களுக்கு வருகின்றனர்.
மக்கள் மீது யுத்தம் தொடுத்துவிட்டு டுவிட்டரில் அதனை நியாயப்படுத்தி எழுதுதுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுவாக எடுத்துச் செல்லவேண்டும் என்று சோனியா காந்தி தம்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டளையிடுகிறார்.

திருணாமுள் காங்கிரஸின் பெருமைகளை சமூகவலைதளங்களில் உயர்த்திப் பிடிப்பது உங்கள் பணியாகட்டும் என்று மம்தா தன் கட்சி இளைஞர்களுக்கு அறைகூவல்விடுகிறார்.

பத்திரிகைகளில் ஆசிரியர் கடிதம் எழுதுவது முதல் சமூகவலைதளங்களில் பொதுமனிதத் தோரணையில் முகமூடியணிந்து கருத்துபரப்புதல்வரை அனைத்தையும் திட்டமிட்டு செய்ய தன் பரிவாரங்களுக்குப் பயிற்சி அளித்து வழிகாட்டடுகிறது ஆர்.எஸ்.எஸ்.

சமீபகாலமாக சில இஸ்லாமிய அமைப்புகளும் அன்பர்களும் வலைதளத்தில் செயல்படுகின்றனர்.ரம்ஜான் நேரத்தில் நோண்பின் பெருமை,நோண்புகால சமையல்,குரான் மேன்மை,இஸ்லாமிய வாழ்வியல் என குவித்த மின்னஞ்சல்களும் வலைதள செய்திகளும் அவர்கள் இவற்றைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் என உணர்த்துகின்றன.அதே சமயம் இவர்களின் வலைதளங்கள் குறிவைக்கப்படுகின்றன.

தமிழில் வலைதள செயல்பாடு பெரிதும் தமிழீழம் சார்ந்தே உள்ளது.அவதூறும்,குழாயடிச் சண்டையும் நிரம்பி வழிகிறது.உணர்ச்சியைக் கொம்பு சீவுவதில் காட்டும் அக்கறையில் - தனிமனிதர்களைத் துதிபாடவும் அல்லது சிறுமைப்படுத்தவும் காட்டுகிற அக்கறையில் பத்தில் ஒருபாகம்கூட அறிவுபூர்வமான விவாதங்களுக்கோ விவரங்களுக்கோ ஒதுக்கப்படுவதில்லை.

இந்துத்துவ சக்திகள் சந்தடிசாக்கில்  திராவிட கட்சிகளை,தலைவர்களை விமர்சிக்கிற போக்கில் மொத்த சமூகசீர்திருத்த கருத்துகளையும் இழிவு செய்கிறது.

அதிதீவிர குழுக்கள் சகட்டுமேனிக்கு எல்லோரையும் திட்டித் தீர்க்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சிறுமைப்படுத்த-கொச்சைப்படுத்த ஒரு படையே செயல்படுகிறது.

இவற்றுக்கு மத்தியிலும் சிலர் இடதுசாரிக் கருத்துகளை முன்னிறுத்த மாற்றுப் பாதையை முன்னிறுத்த விடாது முயல்வது பாராட்டுக் குரியது.ஆனால் போதாது.

இந்த சமூகவலைதளங்கள் ஆகப்பெருவாரியான மக்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை என்பது தற்போதைய யதார்த்தமே.எனினும்,பாட்டாளி மக்களிடம்,சாதாரண மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் வாகனம் மத்தியதர வர்க்கம் என மார்க்ஸ் சரியாகக் கணித்ததை மறந்துவிடக்கூடாது.இந்த மத்தியதர வர்க்க்த்தை தன்பக்கம் வென்றெடுக்க சுரண்டும் வர்க்கம் இந்தவலைதளங்களைத் திறமையாகப் பயன்படுத்துகின்றன.சமூக கருத்துருவாக்கத்தில் இப்படி தலையிடுகின்றன.எனவே சமூகவலைதளங்கள் குறித்து நாம் கவலை கொண்டாக வேண்டும்.

இஸ்கரா பத்திரிகை பற்றி லெனின் கூறும்போது உலகிலேயே அதிக நிருபர்களைக் கொண்டது இஸ்கரா என்றார்.ஏனெனில் ஒவ்வொரு தொழிலாளியும் வாசகர் மட்டுமல்ல,செய்தியைத் தரும் நிருபரும் என்றார்.இப்போது எல்லாதுறையிலும் எல்லாவெளியிலும் இடதுசாரி சிந்தனை கொண்ட படித்த தோழர்கள் உண்டு.வங்கி,இன்சுரன்ஸ்,ஆசிரியர்,அரசு ஊழியர்,மத்திய அரசு ஊழியர்,பொதுத்துறை ஊழியர் ,மாணவர்கள்,இளைஞர்கள் எனக் கணினியோடு இயங்குகிற எண்ணற்றத் தோழர்கள் உண்டு.இவர்கள் எல்லோரும் சமூகவலைதளங்களின் தேவை உணர்ந்து,வீச்சை புரிந்து களத்தில் இறங்கினால் இடதுசாரிக் கருத்துகள் வேகம் பெறுமே.

இந்த இடத்தில் ஒரு செய்தியைப் பதிவு செய்வது அவசியம்.ஒரு முறை ஒரு பிரபல வார இதழின் ஆசிரியரோடு ஒரு நிகழ்வில் பங்கேற்க நேர்ந்தது.அப்போது அவரிடம் நீங்கள் நேரில் பேசுகிறபோது தெரிவிக்கிற இடதுசாரி சாய்வுகூட உங்கள் ஏடுகளில் பிரதிபலிப்பதில்லையே ஏன் எனக் கேட்டேன். அவர் சொன்னார் பாஜக சார்பக ஒரு கட்டுரைவந்தால் பாராட்டி நூறு கடிதம் வரும்.நூறு தொலைபேசி வாழ்த்து வரும்.தலைவர்களே  அழைத்துப் பாராட்டுவர்.அது போல் அவர்களை விமர்சிக்கிறபோதும் எதிர்வினையிருக்கும்.ஆனால் இடதுசாரிகளான நீங்களோ பாரட்டுவதே இல்லை.விமர்சனக் கடிதங்களும் கிட்டத்தட்ட வராது.கிணற்றில் போட்ட கல்லாட்ட்ம் இருக்கும் .நாங்கள் வியாபாரிகள். உங்கள் வாசகர் பரப்பை நாங்கள் எப்படி அறிவோம் பின் எப்படி உங்களை சுமப்போம். என்றார்.அவரின் பதில் நம் சிந்தனைக் குரியது.

ஆர்,எஸ்.எஸ்.ஊடகத்துறையில் திட்டமிட்டு ஊடுருவுகிறது.வாசகர் கடிதம்,வலைதளங்களில் பின்னூட்டம் என எல்லாவகையிலும் கால்பரப்புகின்றனர்.அது தவறென்று குற்றம் சாட்ட முடியாது..ஆனால் இடது சாரிகருத்துடையோர் மவுனம்தான் தவறானது.இனியும் வேண்டாம் அந்த மவுனம்.

கணினி பொத்தான்களில் உங்கள் விரல்கள் தாளமிடட்டும். கோடிக்கால் பூதமாக எல்லோரும் இறங்குங்கள்.பாராட்ட வேண்டியதை பாராட்டுங்கள்.எதிர்வினை ஆற்றவேண்டிய இடத்தில் எதிர்வினை ஆற்றுங்கள்.குழாயடி சண்டை, எள்ளல், ஏகடியம்,அவதூறு, கொச்சைப் படுத்தல்,கொள்கைப்போர் அனைத்திலும் கச்சைகட்டி களத் தில்-வலைதளத்தில் நிற்காமல் சமூகமாற்றத்துக்கான கருத்துப்போர் முடிவுறாது.நம்மால் முடியும்.நம்மால்தான் முடியும்.நாம் கோடிக்கால் பூதம் அல்லவா?

சு.பொ.அகத்தியலிங்கம்.

[28-08-2012 அன்று எழுதிய கட்டுரை இது.இதுவரை  பிரசுரமாகவில்லை.இன்று 16-09-2012 அன்று வெளியிடும்போது மன்மோகன் குறித்து ஒருவரி சேர்த்துள்ளேன்.]

1 comments :

  1. kannanpavel

    சரியாக சொன்னீர்கள்.தயக்கமின்றி இனி செய்வோம்.

Post a Comment