நேற்று பயணத்தில் ஓர் காட்சி .சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

Posted by அகத்தீ Labels:

 

நேற்று பயணத்தில் ஓர் காட்சி .

சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

 

நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன் . என் அருகில் நடுத்தர வயதை எல்லாம் கடந்துவிட்ட ஊழியர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் .  அநேகமாக பணிஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கலாம் .நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை . நடுவில் சந்தனம் . கையில் இருக்கும் பை அவர் ஓர் அரசு ஊழியர் எனச் சொல்லாமல் சொன்னது . ஒன்றரை  மணி நேரம் அவரோடு பயணம் .

 

 ஒவ்வொரு நூறடிக்கும் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பி கன்னத்தில் போட்டுக் கும்பிடுகிறார் . ‘ வெளியூரா ?’ என என்னிடம் கேட்டுவிட்டு , என் பக்கம் திரும்பி கும்பிட்ட சாமியின் பெயரைச் சொல்கிறார் . நாலய்ந்து கும்பிடு முடிந்த பின் அடுத்து வருகிற சாமி குறித்து முன் தகவல் தரத் தொடங்கிவிட்டார் .

 

அவர் நம்பிக்கை .அவர் உரிமை . நான் சொல்ல என்ன இருக்கிறது . ஆனாலும் நான் எங்கேயும் கும்பிடாமல் இருப்பது அவருக்கு உறுத்தலாகிறது .

 

“ சார் ! கிறிஷ்டியனா ? ”

 

இல்லை என தலையாட்டினேன் . இதுவரை நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை .

 

“ நீங்க முஸ்லீமா இருக்க முடியாது , தொப்பியோ தாடியோ இல்லை.”

 

“ தலையாட்டி .புன்னகைத்தேன்…” ; வேறென்ன செய்வது ?

 

“ எல்லாமே பகவான்தான் சார் ! அவங்க அவங்க நம்பிக்கை அவங்கஅவங்களுக்கு…” இப்படி அவர் சொன்னதும் லேசாக சிரித்து வைத்தேன் . அப்போதும் பேசவில்லை .

 

“ சார் ! அடுத்து அந்த எடத்தில இரண்டு நிமிஷம் நிக்கும் சார்… அங்க உயரமான சாமி  சிலை இருக்கு சார் ! பஸ்லில் இருந்து பார்த்தாலே சாமி தெரியும் … எல்லோரும் கும்பிடுவாங்க … ரொம்ப சக்தி உள்ள சாமி …. ரொம்ப பவர் ஃபுள்…  வேண்டிக்கிட்டா நிச்சயம் நிறைவேறும்…”

 

இதுவரை பேசாமல் இருந்த நான் மெல்ல வாய் திறந்தேன் , “ அப்போ நீங்க இதுவரை கும்பிட்டது எல்லாமே சக்தி குறைவாக உள்ள சாமிகளோ….”

 

நான் கேட்டதும் , “ அப்படி இல்லை சார் ! ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கு, ஆனால் இவருக்கு ’ஃபுள் பவர்’ [அழுத்திச் சொன்னார்] இருக்கு… அதத்தான் சொன்னேன் … நான் ஒரு சாமிய விடமாட்டேன் … சிறுதுரும்பும் பல்குத்த உதவும் … சார் … ஒண்ணையும் விடக்கூடாது..”

 

அவரின் அப்பிராணித்தனத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன் .

 

அவர்  , “ சார் ! சிரிக்காதீங்க … ஆபத்துக்கு ஒரு சாமி இல்லாட்டா ஒரு சாமி உதவுவாரு சார் !”

 

தொடர்ந்து வழிநெடுக பல ’சிறுதுரும்புகளை’ கும்பிட்டுக் கொண்டே  சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார் … நான் பேசாமல் மனதுக்குள் சிரித்தபடி பயணித்தேன் .

 

வழியில் ஒரு தர்க்காவையும் மேரிமாதாவையும்கூட கும்பிட்டார் . அதுவும் அந்த ’சிறு துரும்பு’ கணக்காக இருக்கும் போலும் …

 

ஓய்வு காலக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும் ஒத்துப் போகாமல் ; பிரச்சனைகளின் கனம் தாங்காமல் தத்தளிக்கும் அவர் ஏதேனும் துரும்பைப் பிடித்தாவது கரையேறிவிடலாம் என எண்ணுகிறாரோ என்னவோ ! பலர் அப்படித்தான் .

 

இவர்களைப் போன்றோரோடு உரையாட அறிவு மட்டும் போதாது கொஞ்சம் பாச உணர்ச்சியும் தேவை அல்லவா ?

 

[ சேலம் ஆத்தூர் பயண அனுபவம் ]

 

சுபொஅ.

11 /12 /25 .

 

 

 

 


தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

Posted by அகத்தீ Labels:

 

தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

 

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதா ? இல்லவே இல்லை . நேரு தேசபக்தியே இல்லாதவர் . விடுதலைப் போரில் சிறையில் வாடிய கம்யூனிஸ்டுகள் தேச பக்தி அற்றவர்கள் . அப்போது காட்டிக் கொடுத்ததுதான் மாபெரும் தேசபக்தி .வாஜ்பாய் ,சாவர்க்கர் வழிதான் தேசபக்தி . பிரிட்டிஷாரின் ஷூவை நக்கியதுதான் தேசபக்தி . இன்னும் புரியலையா ?

 

கிரிக்கெட்டில் விளையாட்டு என்பதை மறந்து வெறுப்பை உமிழ்வதுதான் தேசபக்தி . தேசபக்தியும் மதவெறியும் ஒன்றுதான் .மதவெறியும் வெறுப்பு அரசியலும் ஒன்றுதான் . வெறுப்பு அரசியலும் மோடி பஜனையும் ஒன்றுதான் .ஆக , மோடி பஜனையே தேசபக்தி .

 

தேசபக்தி என்பது இந்து பக்திதான் .இந்து பக்தி என்பது பிராமணிய பக்திதான்.பிராமணிய பக்தி என்பது மனுஸ்மிருதி பக்திதான் . மனுஸ்மிருதி பக்தி என்பது ஆர் எஸ் எஸ் சொற்படி ஆடுவதுதான் . கலவர பக்திதான் . ஆக தேசபக்தி என்பது கலவர பக்தியே . அது கார்ப்பரேட்டை காக்கும் பக்தியே . அம்பானி அதானி நலமே தேசநலம் .கார்ப்பரேட் நலமே தேசநலம் .கார்ப்பரேட் பக்தியும் பிராமணிய பக்தியுமே தேசபக்தி .பொய்களையும் புராணங்களையும் கொண்டாடுவதே தேசபக்த அறிவு என்பதறிக !

 

இன்னும் தேசபக்தி என்பது இந்த மண்ணை ,மக்களை ,பன்மைப் பண்பாட்டை , பல்வேறு மொழிகளை , பல்வேறு மதங்களை ,வனத்தை ,கடலை , விவசாயிகளை ,உழைப்பாளிகளை நேசிப்பது என விளக்கம் சொல்லலாமோ ? அது முழுக்க முழுக்க தேசவிரோதம் என்பதறிக ! ஜனநாயகம் ,மதச்சார்பின்மை , சமத்துவம் ,சகோதரத்துவம் என்பதெல்லாம் தேசவிரோதச் சொல்களென அறிக ! வறுமை ,வேலையின்மை பற்றி கூப்பாடு போடுவது தேசவிரோதம் என்பதறிக !

 

இப்போது சொல் நீ தேச பக்தனா ? தேஷ்விரோதியா ?

 

சுபொஅ.

09/12/25.


ஏன் நினைக்கிறாய்

Posted by அகத்தீ Labels:

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

உன் காலம் வேறு !

உன் அனுபவம் வேறு !

இன்று எல்லாம் மாறிப்போனது

இன்றைய வேகமான வாழ்க்கைக்கு

ஈடுகொடுக்க நாடே திணறுகிறது !

உன்னை நினைக்க கொண்டாட

அவர்களுக்கு ஏது நேரம் ?

பாஸ்ட் புட்

பாஸ்ட் டிராக்

எல்லாம் ரெடி மேட்

எல்லாம் ஆண் லைன்

எல்லாம் கையடக்க மொபைலில்

வாழ்க்கை முழுவதும்

அப்படித்தான்…

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

[ நேற்று நடை பயிற்சியில் என்னோடு வந்தவருக்கு ஆறுதலாகச் சொன்னது ]

 

சுபொஅ.

08/12/25.

 

 

தோழர் டி.ராமன் நூல்

Posted by அகத்தீ Labels:

 




ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் எப்படிப் போராட்ட நெருப்பில் புடம் போடப்படுகிறார் என்பதன் உயிர் சாட்சி தோழர் டி.ராமன் . எம் ஜி ஆர் ரசிகராய் இருந்து ஓர் கிராமப்புற விவசாயக் குடும்பத்து இளைஞன் வேலைதேடி சென்னைக்கு வந்து தொழிலாளிவர்க்க அரசியலைப் படிப்படியாக உள்வாங்கிய அனுபவம் எளிமையாய் ஆனால் வலுவாய் சொல்லப்பட்டிருக்கிறது .

 

தோழர் டி.ராமன் எழுதிய “ ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம்” எனும் நூல் ஒரு தொழிலாளியின் ஐம்பதாண்டு கால பிசிறற்ற அரசியல் பயணத்தை நமக்குச் சொல்லுகிறது . அதில் உழைக்கும் வர்க்க நலன் மட்டுமே மைய இழை . போராட்டம் ,அடி ,உதை ,சிறை எதுவும் அவர் உறுதியைக் குலைக்கவில்லை . புடம் போட்டது என்பதுதான் செய்தி . திருவான்மியூர் பகுதியின் உழைக்கும் வர்க்கப் போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத ஓர் அங்கம் தோழர் .டி .ராமன் . உழைக்கும் வர்க்கத் தலைவர்கள் தோழர்கள் வி.பி.சிந்தன் ,பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றோர் வார்த்தெடுத்த அன்புத் தோழர் டி .ராமன் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சிய உறுதி மிக்கப் போராளித் தோழன் .

 

சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கிய காலத்தில் எம்மோடு தோள் இணைந்தவர் டி.ராமன் . அன்று தொட்டு எனக்கும் அவருக்குமான தோழமை உறவு தொடர்கிறது . ஆட்டோ சங்கர் வழக்கு , தோழர் பிரதீப் குமார் கொலை வழக்கு , கல்லுக்குட்டை குடியிருப்பு மக்கள் போராட்டம் , பெத்தேல் நகர் வழக்கு , காலவாய் கரையோர மக்கள் போராட்டம் ,பர்மா காலனி போராட்டம் இப்படி ஒடுக்கப்பட்ட மக்களோடு இவர் நின்ற உரிமைப் போராட்டங்கள்தாம் இவர் வாழ்க்கை .

 

கம்யூனிஸ்டுகளை கீழ்த்தரமாய் விமர்சிக்கும் ’குபீர் அறிவாளிகளுக்கு’ தோழர் ராமன் போன்ற உழைப்பாளி மக்களின் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க வாழ்க்கைதான் பதிலடி .

 

 “வகித்த பதவிகள் அல்ல போரட்டத் தழும்புகள் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அடையாளம்” என்பதன் சாட்சியே தோழர் டி.ராமன் . பேரன் தூண்டிவிட்ட தாத்தாவின் எழுத்து இந்நூல் .

 

ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம் , டி.ராமன் , தூவல் கிரியேஷன்ஸ் , 90945 74500 , vedhaperumal@gmail.com , பக்கங்கள் : 112.


ஜெயிக்கணும் பகவானே

Posted by அகத்தீ Labels:

 

பூரி ஜெகநாதா !

ஒரிசா தேர்தல் முடிந்துவிட்டது .

ஆஞ்சநேயா !

கர்நாடக தேர்தல் இப்போது இல்லை        

துர்க்கா

மேற்கு வங்க தேர்தல் நெருங்குகிறது

முருகா

தமிழ்நாடு தேர்தல் வந்து கொண்டிருக்கிறது

சீத்தா

பீகார் தேர்தல் முடிந்துவிட்டது

ராமா                                                                                                                  

உத்திரபிரதேச தேர்தல் வரப்போகிறது

ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்போம்

ஒரே சாமி ! ஒரே பூஜை என்று சொல்ல மாட்டோம் !

தேர்தலில் ஜெயிப்பது முக்கியம் பகவானே !

 

[ இது தெய்வக் குழந்தை மோஷா தெய்வத்தோடு உரையாடியவை ]

 

சுபொஅ.

30/11/25.

 

 

நீ நீயும்

Posted by அகத்தீ Labels:

 

நீ ஏமாந்திருக்கிறாய்

நீயும் ஏமாற்றி இருக்கிறாய்

நீ அவமானப்பட்டிருக்கிறாய்

நீயும் அவமானப்படுத்தியிருக்கிறாய்

நீ கடன் வாங்கியிருக்கிறாய்

நீயும் கடன் கொடுத்திருக்கிறாய்

நீ விபத்தில் சிக்கியிருக்கிறாய்

நீயும் விபத்தை உண்டாக்கி இருக்கிறாய்

ஆனால் என்ன

உனக்கு நேர்ந்தது எதையும் நீ மறக்கவில்லை

உன்னால் பிறருக்கு நேர்ந்தது எதுவும் உன் நினைவில் இல்லை.

உன்னை ’ஞாபகப் புலி’ என்பதா ? அல்ல

இதைத்தான் ’காரியமறதி’ என்பதா ?

 

சுபொஅ.

30/11/25

சாலையே ! தெருக்களே ! நன்றி !

Posted by அகத்தீ Labels:

 

சாலையே ! தெருக்களே !
நன்றி ! நன்றி !
எம் முதியோர்களை
தினசரி
அஷ்டாவதானியாகவும்
தசாவதானியாகவும்
மாற்றுகிறாயே !
உனக்கு
கோடான கோடி நன்றி !
கண்கள் குனிந்து
சாலை மேடு பள்ளங்களைப் பார்க்க
கண்கள் நிமிர்ந்து
சாலை விதிகளை மதிக்காமல்
எதிர்வரும் வாகனங்களை கவனிக்க
காதும் கண்ணும்
பின் தொடர்ந்து முந்த எத்தணிக்கும்
வாகனங்களை கவனித்து வழிவிட
சுற்றுப்போடும் தெருநாய்களை
சாமர்த்தியமாய் விரட்ட
ஹெட் ஷெட்டில் பாட்டு கேட்டபடியும்
செல்போணை நோண்டியபடியும்
குறுக்கே ஓடும் இளைஞரை
இடிக்காமல் கடக்க
உடன் நடப்பவரோடு
உரையாடல் அறாமல் தொடர
வழியில் கடையில்
வாங்க வேண்டியதை
ஞாபகமாய் வாங்கி நகர
அடடா ! எத்தனை எத்தனை
கவனக் குவிப்புகள் ஒரே நேரத்தில்
முதியோரை இப்படி எல்லாம்
அஷ்டாவதானியாகவோ
தசாவதானியாகவோ
மாற்றிக்கொண்டே இருக்கும்
சாலையே தெருவே
நன்றி !நன்றி !

சுபொஅ.
26/11/25.

குறிப்பு : ’அஷ்டாவதானி’ எனில் எட்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர். ’தசாவதானி’ எனில் பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர் .அக்காலத்தில் இதனை பாராட்டி பட்டம் பட்டம் வழங்குவர் .