தலைமுறை தலைமுறையாய்

Posted by அகத்தீ Labels:



தலைமுறை தலைமுறையாய்

சு.பொ.அகத்தியலிங்கம் .

என்அம்மா வழி தாத்தா
தன் தாத்தா அப்பாவைப் போல்
குடுமி வைக்காமல்
சுசீந்திரம் தெருவெங்கும்
முறுக்கு மீசையுடன் திரிந்தார் .

 “நம் சாதிக்கு அடுக்குமா ?
குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக் காம்பு”
என அவர் தாத்தாவும்  ,அப்பாவும்
சதா திட்டிக்கொண்டே இருந்தனர் .

அவர் மகன் என் மாமா
தெற்கு முக்குக் கடையில்
அப்பமும் ஆமைவடையும் சாப்பிட்டு
கண்ணாடி டம்ளரில் டீ வாங்கிக் குடித்தார்.

 “ இவன் நம் மானத்தை வாங்குகிறான்.
கண்ட சாதி பசங்க குடிச்ச எச்சை கிளாசில்
டீ வாங்கி குடிக்கிறான்
வெளிய தல காட்ட முடியலை
நேற்று கூட மூத்தபிள்ளை
கோவில் முகப்பில் நிற்கவச்சு
நாக்கப் புடுங்கிறாப்பில கேள்வி கேட்கிறான்.”
என என் தாத்தா புலம்பித் தீர்த்தார் .

என் அப்பா வழி தாத்தா
நாலு மனைவி மேலும் இரண்டு வைப்பாட்டி
என வாழ்ந்த கதை  பெருமிதம் அல்ல

நான்காவது மனைவியாய்
16 வயதில் 60 வயது கிழவனுக்கு வாக்கப்பட்ட
ஆச்சி வளர்ப்பில்  என் அப்பா
சாதியைத் துறக்கவும் இல்லை
கட்டி அழவும் இல்லை.

வாழ்க்கை பெருமழையில்
சென்னை குடிசையில் ஒதுங்கி
வாழ்க்கைப் பாட்டை நொந்து அனுபவித்த
என் தந்தையும் தாயும்
என்னோடு சாதி மத பேதமற்று
தோழர்களோடு அன்பால் நெருங்கினர்
ஆயினும்,
என் அண்ணன்
ஓர் முஸ்லீம் பெண்ணைமணந்ததை
தள்ளவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல்
கடைசிவரை தத்தளித்தனர் .

நானும் என் மனைவியும்
ரொம்ப முற்போக்கு என
நினைத்துக் கொண்டிருக்கிறோம்..
எங்களின் குறைகளை, போதாமையை
அறிந்த எம் பிள்ளைகள்
எம்மிலும் நுட்பமாய்
எம்மிலும் வலுவாய் முன்செல்வர் !!!

மெல்ல ஆனால் உறுதியாக
தவறு களைந்து தலைமுறை
முன் செல்லும் .
இது திண்ணம் .



‘சுபம் லாபம்’

Posted by அகத்தீ Labels:




‘சுபம் லாபம்’

சந்நியாசியோ
சந்நியாசினியோ
சாபம் கொடுத்தால்
எதிரிகள்  
எரிந்து பஸ்பமாகி விடுவார்களே!
பின் எதற்கு சட்டங்கள்
அரசு இயந்திரங்கள் ?


சத்ரு சம்ஹார யாகம்
செய்வித்தால்
எதிரிகள்
அழிந்தே போய்விவிடுவார்களே!
அப்புறம் ஏன்
ராணுவம்
போர்த்தளவாடங்கள்
பெரும் செலவு ?

தியானம் செய்தாலே
எல்லாம் சித்திக்குமே !
அப்புறம் ஏன்
ஹெலிகாப்டரில்
பறந்து பறந்து பிரச்சாரம் ?

தர்மம் தலை காக்குமாம்
ஊருக்கே சோறுபோட்ட
விவசாயி
தூக்கில் தொங்குவது ஏன் ?
கேள்வி கேட்காதே !
நீ
இந்து விரோதி ஆகாதே !
ஆண்டி இண்டியன் ஆகாதே !

சாபம் கொடு!
சத்ரு சம்ஹார யாகம் செய் !
தியானம் செய் !
கார்ப்பரேட்டுகளும்
கார்ப்பரேட் சாமியார்களும்
கார்ப்பரேட் சவுக்கிதார்களும்
மேலே மேலே ஏற
குனிந்து
படிக்கட்டாகு !
 ‘சுபம் லாபம்’
அவர்களுக்கும் !

சுபொஅ.

ஓர் வேண்டுதல்

Posted by அகத்தீ Labels:


ஓர் வேண்டுதல்



இறைவா !
அப்படி ஒருவனாக நீ இருந்தால்
இறைவா !


அருள்கூர்ந்து
கொஞ்சகாலம்
தலைமறைவாய்ப் போய்விடு !


இல்லையேல் !
நீ
அண்டை அயலானை நேசி என்றால்
உன்னைக் கொன்றுவிடுவார்கள் !


உன்னை
அந்நியக் கைக்கூலி தேசவிரோதி
என
முத்திரை குத்திவிடுவார்கள் ..


நீ
அவர்கள்பேசுவதைக்
கேட்டுக்கொண்டே இருந்தால்
உன்னையும் விஷமாக்கிவிடுவார்கள்...




உன்னிடம் இருப்பதாய் நம்பப்படும்
கருணை ,அன்பு ,மன்னிக்கும் அருங்குணம்
அனைத்தும்
பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விடும்..


குரோதம் ,வெறுப்பு ,பழிவாங்கல் மிகுந்த
சூப்பர் சைத்தானாய் பிசாசாய்மாறிப் போவாய் உன்
குடும்பத்துக்குள்ளும் வெட்டுகுத்தாகிப்போகும்


இறைவா !
அப்படி ஒருவனாக நீ இருந்தால்
இறைவா !


அருள்கூர்ந்து
கொஞ்சகாலம்
தலைமறைவாய்ப் போய்விடு !



சு.பொ.அகத்தியலிங்கம் .







அரேபிய பயணத்தினூடே அனுபவ நாவல்

Posted by அகத்தீ Labels:



அரேபிய பயணத்தினூடே அனுபவ நாவல் 



சு.பொ.அகத்தியலிங்கம்

“அரேபியாவில் நல்ல நல்ல பேரிச்சம் பழம்கிடைக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா தயிர் மோர் நல்லா இருக்குன்னு இப்போதுதான் கேள்விப்படுறேன்” என சரவணனிடம் நாவலின் நாயகன் அனீஸ் சொல்லும் போதே ஒட்டகப் பாலில்தான் டீ கிடைக்குன்னு வடிவேலு மூலமா சினிமா நமக்குள் திணிச்ச பிம்பம் அடிபட்டு விழுது. இன்னொரு அத்தியாயத்தில் ஒட்டகப் பால் எப்படி ருசியானது என்பதும் வருகிறது .

கூழாங்கற்கள், சுமையா ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகள் மூலம் தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கனவுப்பிரியன், அவர் இயற் பெயர் முஹமது யூசுஃப். “மணல் பூத்த காடு” நாவலை இயற்பெயரோடும் தன் பயண அனுபவம் சார்ந்தும் எழுதியுள்ளார் .

 ‘தகிக்கும் மணல் வெளியும் நாகரீக முதிர்ச்சியற்ற ஒரு கூட்டமும்’என்றே நம் பொது புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள அரேபிய பிம்பத்தை சுவையான தகவல்களின் மூலம் சுக்கல் சுக்கலாய் நொறுக்குகிறார் நூலாசிரியர். பரந்த வாசிப்பனுபவமும் கூர்மையான பார்வையும் நூலாசிரியரின் அருங்குணம் என முந்தைய இரு சிறுகதைத் தொகுப்பும் நிறுவியுள்ளது. இந்நாவல் அதனை மேலும் வலுவாக்குகிறது.

இந்நாவலின் நாயகனான அனீஸ் ஒரு பயோ என்ஜினியர். நூலாசிரியர் முஹமது யூசுப்பும் அப்படியே. ஆக இது சுய பயண அனுபவ நூல் போல் விரிகிறது. தொழில் நிமித்தம்அரேபியா முழுவதும் காரிலேயே பயணிக்கும் வாய்ப்பு கிடைத்த நாயகன் அனீஸின் பார்வையூடே அரேபியாவின் புவியியல், வரலாறு,ஆன்மிகச் செழுமை, சிக்கல், பிழைக்க வந்தோரின் உறவுகள், கசக்கும் வாழ்நிலை என நூலாசிரியர் கோர்க்கும் ஒவ்வொரு செய்தியும் உயிர்ப்போடு நம்மிடம் பேசுகிறது.

கடனில் சிக்கும் மனிதர் அந்தக் கடன் கடலில் இருந்து வெளியேற குடும்பம் பிள்ளை குட்டிகளை விட்டு கடல் கடப்பது சுகமான அனுபவமல்ல. “கண்ணில் பட்ட அயல்வாசிமனிதர்கள் பலரின் முதுகிலும் ஒட்டகத்திற்கு இருக்கும் குன்று போன்ற திமில் இருந்தது. திமிலில் ஒட்டகம் உணவினைச் சேகரித்துவைக்குமாம். இங்குள்ள மனிதர்கள் நினைவுகளைச் சேமித்து வைத்திருப்பார்கள் போல..” என அரேபியாவில் நுழைந்ததும் எண்ணுகிற அனீஸ் மூலம் நாவல் நெடுக 40 திமில்களில் ‘அத்தியாயங்களில்’ எண்ண எண்ணகுறையாத செய்திகளை மனிதப்பாடுகளை பொதிந்து தந்துள்ளார் யூசுஃப்.

நாவலை நுட்பமாக வாசித்துநெடுக விரவியுள்ள அரபி உரையாடலை ‘தமிழ் அர்த்தத்தோடு தந்திருப்பதையும்’, அத்துடன் நூலாசிரியர் குறிப்பிடும் வரலாற்று மற்றும் புவியியல் தகவல்களையும் தொகுத்தால் அது சுற்றுலா வழிகாட்டி ஆகிவிடலாம்!

பிழைக்கப் போன இடத்தில் கிடைக்கும் நம் நாடு நம் மொழி சார்ந்தவர்களின் தொடர்பும் உறவும் மிகவும் வலுவானது. அனீஸ்பழக நேர்கிற சுலைமான், இப்ரா`ஹிம்பாய், ஜார்ஜ், சரவணன், சித்ரா,முசிப், சுபைதா, காசிம் என ஒவ்வொருவருக்கும் துயரக் கதை இருந்தது. அந்த சோகம் எல்லோரையும் ஒருபுள்ளியில் இணைக்கும்; பிரச்சனைகளும் முளைக்கும். ஆனாலும் பணத்தின் அவசியம் ஒவ்வொருவரையும் ஒரு வித துறவுக்கு நிர்பந்திக்கும். இடுப்பின் கீழே ஆன பசி ஒவ்வொருவரையும் வதைக்கும். இதற்கிடையில் பயணம்,ஆட்டம், பாட்டம், சந்தோஷம் எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவமே தனி.

இண்டர் நெட் கூகுள் வேலைசெய்யாத இடத்திலும் ஒருமலையாளி டீக்கடை இருப்பதும்;அவரே வழிகாட்டும் கூகுளாவதும்நல்ல அவதானிப்பு. பாகிஸ்தானியருடன் இணைந்து பணியாற்றும் சூழலை மிக லாவகமாக வெறுப்பின் விதை வீழாமலும்; அடுத்த கோடிக்குநகர்ந்துவிடாமலும் சொல்லிச் செல்வது வெகுஜோர். ஏமாற்று, கள்ளச்சாரயம், காலைவாருதல் இப்படி எல்லாம் எங்கும் இருப்பதை சொல்லுவது சித்திரத்தை முழுமையாக்குகிறது.

அரேபிய தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றத் தலைப்பு “நிச்சயிக்கப்பட்ட திருமணமா ? காதல் திருமணமா ?” என்பதும், அனீஸ்காதல் திருமணமே என வாதிட்டதும் அடேயப்பா எவ்வளவு நுட்பமான காட்சிச் சொருகல்.

தன் தந்தையைப் போல் அசப்பில்இருந்த - ‘தோளப்பா’ என அனீஸால் பாசம் பொங்க அழைக்கப்பட்ட மீராசா காக்கா உறவு அனீஸை செப்பம் செய்வதில் ஒரு நடமாடும் நூலகமாகவே அமைந்து போனது. அரேபிய தொன்மை, வரலாற்றுச் செழுமை, புவியியல் மேன்மை, இஸ்லாமிய பண்பாட்டின் ஆணிவேர் என தோளப்பா மூலம் அறிந்ததும்; அதனை அனீஸ் நேரில் அனுபவித்து உணர்ந்ததும் நூல் நெடுக விரவி நூலை முன் நகர்த்திச்செல்கிறது.

இஸ்லாமில் தலைதூக்கும் வஹாபிசம் எப்படி பன்முக ஜனநாயகத் தன்மைக்கு எதிரானது; பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாய் இருக்கிறது. ஏகாதிபத்தியம் இஸ்லாமிய வரலாற்று வேரை வெட்டி எறிய எப்படி எப்படி முனைகிறது என எல்லாம் கதைப் போக்கில் தோளப்பா வாய்வழி சொல்லிச் செல்வதால் பிரச்சார வாடை இல்லாமல் ஆக்கிவிட்டது.

மதவெறியும் பயங்கரவாதமும் இந்தியாவையும் உலகையும் மிரட்டும் சூழலில் மதத்துக்குள் ஜனநாயகக் காற்றை வீச எடுக்கும் முயற்சி நிச்சயம் முற்போக்கானதே! பாராட்டத் தக்கதே!. இந்நூல் அந்த வகையில் இஸ்லாமிய சமூகத்துள் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். இஸ்லாம் அல்லாதோரும் உள்ளுக்குள் நடக்கும் தத்துவ நடைமுறை மோதலை அறிந்தால் இஸ்லாம் எதிர்ப்பு என்கிற முரட்டு பார்வை அகலும்.

அதே நேரம் மதத்துக்குள் ஜனநாயகம் என்பதையும் தாண்டி மனித சமூகம் முன் செல்ல வேண்டுமே முஹமது யூசுஃப் எனக் கேடகவும் எனக்குத் தோன்றுவது தவறா? நூலை வாசிப்போர் முடிவு செய்க!

“உலகில் பகலைக் காட்டிலும் இரவுக்குத்தான் பழமொழிகள் அதிகம். அனுபவம் தோய்ந்த வயதுமுதிர்ந்த வயோதிகன் போல அல்லது அப்பா போல, ஒன்றுமே தெரியாதது போல ஒன்றுமே நடக்காதது போல காட்சி அளிக்கும் இந்த இரவுகள் அனீசுக்கு பிடித்திருந்தது அவனும் அப்பாவாகி விட்டதால்.” என அனீஷ் உணரும் தருணம் அலுவலகச் சிக்கல், நோய் எல்லாம் ஒன்று சேர தோளப்பா வழிகாட்ட திடீரென வேலையை உதறாமல் உதறி ஊருக்கு ஓடுவது வாழ்வின் கசப்பான யதார்த்தம்;அப்புறம் ஊரில் வஹாபி எதிர்ப்பாளனாக என ஒரு புது திருப்பத்துடன் நாவல்முடிகிறது.

அரேபியா பாலை மட்டுமல்ல அங்கு மருதம், நெய்தல், முல்லை,குறிஞ்சி எல்லாம் உண்டு.அதெல்லாம் சரி! அரேபியா முழுக்க பெரும் பான்மையாக பிழைக்க வந்தேறிகளே செயல்படுவது போலும், அரேபியர்கள் பொதுவாய் பார்வையாளர் அல்லது எஜமானர் போல் இருப்பதாகவும் இந்நூல் எனக்குச் சொல்லுவதாக நான் கொள்ளலாமா ? அப்படியாயின் அங்கு அரேபிய மக்கள் வாழ்நிலைஎப்படி உள்ளது. இந்நூலில் சரியாகப் பதிவாகாத பதிவாகியிருக்க வேண்டிய பகுதி இது என நான் கருதுகிறேன்.

நிறைய செய்திகளை அறிந்து கொள்ளவும், ஆழமான விவாதத்துக்கு சமூகத்தை உந்தவும் களமாகிவிட்டது “மணல் பூத்த காடு”எனில் மிகை அல்ல.
மணல் பூத்த காடு ,[நாவல்]
ஆசிரியர் : முஹமது யூசுஃப் ,
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் ,
பக்கங்கள் : 448 . விலை : ரூ.500 /
தொடர்புக்கு : 9042461472 ,9841643380.

நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை . 18/03/2019.