தலைமுறை தலைமுறையாய்

Posted by அகத்தீ Labels:



தலைமுறை தலைமுறையாய்

சு.பொ.அகத்தியலிங்கம் .

என்அம்மா வழி தாத்தா
தன் தாத்தா அப்பாவைப் போல்
குடுமி வைக்காமல்
சுசீந்திரம் தெருவெங்கும்
முறுக்கு மீசையுடன் திரிந்தார் .

 “நம் சாதிக்கு அடுக்குமா ?
குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக் காம்பு”
என அவர் தாத்தாவும்  ,அப்பாவும்
சதா திட்டிக்கொண்டே இருந்தனர் .

அவர் மகன் என் மாமா
தெற்கு முக்குக் கடையில்
அப்பமும் ஆமைவடையும் சாப்பிட்டு
கண்ணாடி டம்ளரில் டீ வாங்கிக் குடித்தார்.

 “ இவன் நம் மானத்தை வாங்குகிறான்.
கண்ட சாதி பசங்க குடிச்ச எச்சை கிளாசில்
டீ வாங்கி குடிக்கிறான்
வெளிய தல காட்ட முடியலை
நேற்று கூட மூத்தபிள்ளை
கோவில் முகப்பில் நிற்கவச்சு
நாக்கப் புடுங்கிறாப்பில கேள்வி கேட்கிறான்.”
என என் தாத்தா புலம்பித் தீர்த்தார் .

என் அப்பா வழி தாத்தா
நாலு மனைவி மேலும் இரண்டு வைப்பாட்டி
என வாழ்ந்த கதை  பெருமிதம் அல்ல

நான்காவது மனைவியாய்
16 வயதில் 60 வயது கிழவனுக்கு வாக்கப்பட்ட
ஆச்சி வளர்ப்பில்  என் அப்பா
சாதியைத் துறக்கவும் இல்லை
கட்டி அழவும் இல்லை.

வாழ்க்கை பெருமழையில்
சென்னை குடிசையில் ஒதுங்கி
வாழ்க்கைப் பாட்டை நொந்து அனுபவித்த
என் தந்தையும் தாயும்
என்னோடு சாதி மத பேதமற்று
தோழர்களோடு அன்பால் நெருங்கினர்
ஆயினும்,
என் அண்ணன்
ஓர் முஸ்லீம் பெண்ணைமணந்ததை
தள்ளவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல்
கடைசிவரை தத்தளித்தனர் .

நானும் என் மனைவியும்
ரொம்ப முற்போக்கு என
நினைத்துக் கொண்டிருக்கிறோம்..
எங்களின் குறைகளை, போதாமையை
அறிந்த எம் பிள்ளைகள்
எம்மிலும் நுட்பமாய்
எம்மிலும் வலுவாய் முன்செல்வர் !!!

மெல்ல ஆனால் உறுதியாக
தவறு களைந்து தலைமுறை
முன் செல்லும் .
இது திண்ணம் .



0 comments :

Post a Comment