நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 10.

Posted by அகத்தீ Labels:

 

சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் குறியாக இருந்தார் .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 10.

 

 

சங்கராபரணம் எனும் திரைப்படம் வந்த பொழுது நடந்த ஓர் நிகழ்வு இங்கு நினைவுக்கு வருகிறது . நான் அப்போது ஒரு சினிமா விடாது பார்க்கும் டைப் . சின்னையாவும் நானும் படம் பார்க்க கிளம்பிவிடுவோம். அதே போல் அப்படத்தையும் பார்த்துவிட்டோம் . மறுநாள் தீக்கதிரில் ஓர் விமர்சனம் .அதைப் படித்ததும் கடுப்பாகி நானும் சின்னையாவும் பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது பெரம்பூர் கட்சி அலுவலகத்தில்தான் மாநிலக்குழுவும் தற்காலிகமாக இயங்கி வந்தது .எங்கள் பேச்சினூடே தோழர் ஆர் ராமராஜ்  வந்தார் . நாங்கள் சொல்வதைக் கேட்டார் . அங்கே வந்த தோழர் ஏ பாலசுப்பிரமணியத்தை அழைத்து விஷயத்தைச் சொல்லி கோர்த்துவிட்டார் தோழர் ஆர் ஆர் .

 

உடனே ஏபி சொன்னார் , “ இண்ணைக்கு இரவுக் காட்சியில் அந்தப்படத்தை நாம் நாலுபேர் பார்க்கிறோம் . சின்னையா !  டிக்கெட் புக் பண்ணு !” எனச் சொல்லி காசை எடுத்துக் கொடுத்தார் .இரவு படம் பார்த்தோம்.

 

மறுநாள் சொன்னார் , “ ஒடுக்கப்பட்ட ஓர் சாதியில் பிறந்த ஒரு சிறுவன் கர்நாடக இசையில் மேலெழுந்து வருவது ஓர் பாராட்ட வேண்டிய ஜனநாயகச் செய்தியே ! சினிமா மசாலாவில் நாம் எதிர்பார்க்கிற எல்லாமுமா கிடைக்கும் ? உங்க விமர்சனம் சரியே !” என்றவர் தீக்கதிருக்கு போண் செய்து பேசி இரண்டொரு நாளில் இன்னொரு தோழர் [ எஸ் ஏ பி  என நினைவு ] எழுதிய விமர்சனம் வரச் செய்தார் . சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் குறியாக இருந்தார் .

 

தோழர் உ.ரா .வரதராசன் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய போது அவருக்கு ஓர் கடுமையான நெருக்கடி . கட்சிக்குள்ளும் வங்கி அரங்கிற்குள்ளும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார் . அப்போது ஓர் நாள் இரவு சுமார் 10 மணிக்கு பழவந்தங்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள எம்ஜிஆர் நகரிலுள்ள என் குடிசைக்கு உ .ரா. வந்தார் .வழக்கம் போல் நான் ,கந்தன் , ரிசர்வ் வங்கித் தோழன் முண்டன் ,ஆர்பிஐ கேண்டின் பத்மநாபன் அவருடன் புறப்பட்டு மீனாம்பாக்கம் விமானநிலையத்திற்கு எதிரே உள்ள தெரு ஓர டீ கடைக்கு சென்றோம் . வறுத்த மீனும் கட்டன் சாயாவும் அங்கே ஸ்பெஷல் .  நாங்கள் போகும் போது அரட்டையில் உரா பங்கேற்காமல் சிகெரெட்டை மாறி மாறி புகைத்தவாறே வந்தார் .இரவு மூன்று மணிவரை அங்கிட்டும் இங்கிட்டும் அலைவதும் டீ சாப்பிடுவதும் . புகைப்பதுமாக நேரம் கடந்தது . ஒன்றரைப் பாக்கெட் சிகெரெட்டையாவது உரா காலி செய்திருப்பார்.

 

வீட்டிற்கு புறப்படத் தயாரானார் . தலைவர் டென்ஷனில் இருக்கார் நாம் வீட்டில் கொண்டுவிட்டுவிட்டு வருவோம் என்றார் தோழர் முண்டன் . வீட்டை நெருங்கியதும் சொன்னார் , “ காம்ரேட் முண்டன்! காம்ரேட் ஏபி சொன்னதை ஏற்கிறேன் .இரண்டொரு நாளில் என் திருமணம் என்றார் .

 

அதன்படி கோகலே மண்டபத்தில் மிக எளிமையாய் சடங்கு சம்பிரதாயம் அனைத்தையும் புறந்தள்ளி வெறும் கற்கண்டோடு வரதராசன் –சரஸ்வதி திருமணம் நடைபெற்றது . தோழர்களைப் பாதுகாப்பதிலும் வழிநடத்துவதிலும் கறார்தன்மையோடும் உறுதியோடும் செயல்பட்ட தோழர் ஏபியின் ஆளுமையும் , பழமையை அடித்து நொறுக்கும் வேகமும் என்னை வியக்க வைத்தது .

 

வாலிபர் சங்கம் சார்பில் இளம் தோழர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் பழநியில் நடைபெற்றது . நான் அதில் பங்கேற்றேன் .அதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் “கட்சித் திட்டம்” குறித்த வகுப்பு எடுக்கிறார் .தோழர் ஏபி ஓர் நாற்காலியில் உடகார்ந்து பேசுகிறார் .எல்லோரும் தரையில் ஜமுக்காளத்தில் இருக்கிறோம் . நான் கல்யாண மண்டப தூணில் சாய்ந்து கொண்டு வகுப்பைக் கேட்கிறேன் .கூட்டம் துவங்கி பத்தாவது நிமிடம் நான் தூங்கிவிட்டேன் . என்னோடு ஐந்தாறு பேர் நிலையும் அதுவே ! ஏபி என்னை அழைத்து எழுப்புகிறார் ,

” நேற்று நைட்டு சினிமாவுக்கு போனீங்களா ?”

“ஆமாம்” என நாங்க தலையாட்ட ,

“ டீக்கடையில் அரட்டை அடிச்சிட்டு எப்போ தூங்குனீங்க ?”

“ மூன்று மணிக்கு மேல்..”

 “ இங்க காலையில பொங்கல வேற போட்டுட்டு தூங்க வச்சிட்டானுக …இவங்க டீ தர இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் .எல்லோரும் வெளியே போய் டீ குடிச்சு ஃபிரஷ் ஆகி வாங்க” ன்னு  அனுப்பிச்சிட்டாரு .

 

அப்புறம் அரை மணி நேரத்துக்குபின் வகுப்பு ஆரம்பிச்சிருச்சு ,வகுப்பு முடிந்ததும் .கேள்வி பதில் நேரம். விருதுநகர் பாலதண்டாயுதம் ஓர் கேள்வியை வீசுகிறார் .

 

 “ காம்ரேட் பாலத்தண்டாயுதம் நாலஞ்சு வருஷமா எல்லா வகுப்பிலேயும் இதே கேள்வியைக் கேட்குற நானு ஒரே பதிலை சொல்லுறேன் . இப்பவும் உனக்காகச் சொல்லல இங்க இருக்கிற மற்றவங்களுக்காகச் சொல்லுறேன் “னு ச்சொல்லி பதில் சொன்னார் .

 

அதைத் தொடர்ந்து சொன்னார் ,” பாலதண்டாயுதம் நீ ஒழுங்கா வக்கீல் வேலையைப் பாரு ! [ எங்கள காமிச்சு] இந்த மாதிரி யூத்துக்கு வழிவிடு ! யூத்துன்னா யாரு ? ஸ்போர்ட்ஸ் ,சினிமா, சயின்ஸ், பாலிட்டிக்ஸ் ,சோஷியல் ரிஃபார்ம் ,சோஷியல் சர்வீஸ் ,காதல் , துணிவு ,எதிர்ப்பு .புரட்சி,தேடல் , இன்னும் ஆயிரம் இருக்கு…. எல்லாம் இருக்கும் .. அதுதான் யூத் .அப்படி எல்லாவற்றுக்கும் இடம் இருந்தால்தான் வாலிபர் சங்கம் . இருபத்தி நாலு மணி நேரமும் மீசையை முறுக்கிக்கிட்டே இருக்கிறது புரட்சி அல்ல ; யூத்தோட கலந்து சமூக உணர்வை மெல்ல ஊட்டணும் … நிச்சயம் இந்தப் பிள்ளைகள் அதைச் செய்வாங்கன்னு நம்பிக்கை இந்தக் கிழவனுக்கு இருக்கு !” [ நினைவில் பதிந்த படி எழுதியுள்ளேன் .முன் பின் இருக்கலாம் ].

 

இதைவிட வாலிபர் சங்கத்துக்கு யார் வழிகாட்ட முடியும் ?

 

” ஓர் வாலிபர் சங்கம் முற்போக்கானதா பிற்போக்கானதா என்பதை அளக்கும் கருவி எது ? அந்த வாலிபர் சங்கம் தொழிலாளி விவசாயி வர்க்க உரிமைப் போராட்டங்களோடு தோள் இணைகிறதா ? இல்லையா ? என்பதுதான்.” என்கிற மாசேதுங் மேற்கோளை மிகச் சரியாக அறிவுறுத்துவார் .

 

அதே சமயம் வாலிபர் சங்கம் கட்சியின் வாலாக அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி கட்சி சொல்வதை திருப்பிச் சொல்வதும் செய்வதுமாக இருக்கக்கூடாது … இளைஞர்களை வென்றெடுக்குமாறு கிரியேட்டிவிட்டியோட சுயமாகச் செயல்படணும்..ஜனநாயகபூர்வமாகச் செயல்படணும் ..துடிப்பாக இருக்கணும் …என உணர்வுபூர்வகாக வழிகாட்டியவர் .

 

 “தப்பு வந்திடுமோ எனத் தயங்காதீங்க  ! நாங்களும் தப்பு செய்திருக்கோம் .திருந்தி இருக்கோம் . பயப்படாமல் வேலை செய்ங்கோ ! தப்பு வந்தால் ஒப்புக்கொள்ளுங்க ! திருத்திக்கோங்க ! அவ்வளவுதான் ….. அதுதான் வளர்ச்சியின் சூத்திரம்” என்பார் .

 

தோள் அணைத்து நம்பிக்கை ஊட்டிய தோழர் ஏபி குறித்து சொல்ல இன்னும் நிறைய உண்டு ! தொடர்ந்து பேசுவோம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

16 ஆகஸ்ட் 2021.

 

இந்தியாவை வெள்ளை அரக்கன் திருடிட்டு போய்

Posted by அகத்தீ Labels:

 


இந்தியாவை வெள்ளை அரக்கன் திருடிட்டு போய் கடலுக்கடியில் ஓழிச்சு வச்சுட்டாரம்.

இந்தியாவைத் தேடி ஒரு ரிஷி ஆயிரம் ஆண்டுகள் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல் தவம் இருந்தாராம். 

தவத்தில் மனம் உருகிய பரசுராமர் கடலை நோக்கி அம்புவிட்டாராம். கடல் கிழிந்து இந்தியா வெளியே தெரிஞ்சுதாம்.  

கிருஷ்ண பருந்து தூக்கிட்டு வந்து இங்க போட்டிச்சாம். 

அப்போ அங்கே நேரு குடும்பம் ஒரு நாற்காலியில ஏறி உட்கார்ந்துகிச்சாம். இதனால் பீடை புடிச்சுகிச்சாம். 

மோடின்னு ஒரு மந்திரவாதி கோமியத்தை தெளிச்சு பீடையை விரட்டிக்கிட்டு அங்கே உட்கார்ந்தாரம். 

இதனால் மனம் மகிழ்ந்த ஏழரைச் சனி ஆரம்பம் ஆச்சாம். வாக்குச்சனி போக்குச்சனி மூக்குச்சனி அழுக்குச்சனின்னு காலம் ஓடிக்கிட்டே இருந்திச்சாம்.

மாட்டுச்சாணியை சாப்பிட்டு மாட்டு மூத்திரம் குடிச்சு மக்களெல்லாம் சந்தோஷமாக இருந்தாங்களாம்.

சுபம்.

( மக்கள் கேட்டுக் கொண்டதால் இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை புளுகுனி புராணத்திலிருந்து எடுத்து பாட புத்தகத்தில் சேர்த்தார்களாம்.)

சிரிக்காதீங்க!!!!   நாளை இதை ஆராய்ந்து பிஎச்டி வாங்கப் பாருங்க!!!! 

சுபொஅ.
13/8/21

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 9.

Posted by அகத்தீ Labels:

 

“ தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்” என்ற தலைப்பு இன்றைக்கும் தேவைப்படுகிற ஒரு களமே . அன்றைகே தோழர் கே .முத்தையா அது குறித்து எழுதினார் என்பது அடிக்கோடிட்டு பதிய வேண்டிய தகவல் .

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 9.

 

[ தோழர்கள் கே எம் , ஏபி ,ஏஎன் , ஆர்யு என நான்கு பேரைச் சுற்றியே நினைவலைகள் சுழல்வது ஏன் என தோழர்கள் சிலர் கேட்கின்றனர் . நூற்றாண்டு நாயகர் என கட்சி அறிவித்த நான்கு பேரையே இப்போதைக்கு நினைவுகூர்கிறேன்  . தோழர் விபிசி ,பி ஆர் பரமேஸ்வரன் ,அப்துவஹாப் ,பி ராமச்சந்திரன் , கே எம் ஹரிபட் , கே.ரமணி , டி ஜனகிராமன் ,உரா வரதராஜன் ,மைதிலிசிவராமன் ,ஜானகி அம்மாள் ,பாப்பா உமாநாத் , கஜபதி ,பிஜிகே கிருஷ்ணன் , செல்லமுத்து ,தனுஷ்கோடி ,ஹேமச்சந்திரன் ,எஸ் கே சீனிவாசன் ,சி.பி.தாமோதரன்  என நான் நினைவுகூர வேண்டிய  பெரும்பட்டியல் உண்டு .காலமும் களமும் பின்னர் அனுமதித்தால் பார்க்கலாம்.]

 

 “ தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்” என்ற தலைப்பு இன்றைக்கும் தேவைப்படுகிற ஒரு களமே . அன்றைகே தோழர் கே .முத்தையா அது குறித்து எழுதினார் என்பது அடிக்கோடிட்டு பதிய வேண்டிய தகவல் . அப்போது அவர் பெரிதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவராய் ஒரு சாராரால் பார்க்கப்பட்டனர் . அவரின் ஆய்வு எல்லை போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் ; இன்னும் ஆழமாக சொல்ல வேண்டியதாய் இருக்கலாம் ; ஆயின் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே இது குறித்து பேசத்துவங்கியவர் என்பதுதான் முக்கியம் .இன்றைக்கு மேலும் அப்பார்வை ஆழமாக அகலமாகச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

மேலும் தோழர் ஏ பியின் தந்தை அமிர்தலிங்கய்யார் ,பரமேஸ்வரய்யர் செய்த ராமாயண ஆராய்ச்சியை சார்ந்து [ அதை அப்படியே மொழியாக்கம் செய்யாமல்] “ ராமாயணம் உண்மையும் புரட்டும் “ தொடரை கே எம் செம்மலரில் எழுதிய போது அது தேவையா எனக் கேள்வி எழுப்பியோரில் நானும் உண்டு .

 

ஆயின் இன்றைக்கு அது எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது .இராமாயணத்துக்கோ ,மகாபாரத்ததுக்கோ தென்இந்தியாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை , எங்கோ வட இந்தியாவில் ஓர் மூலையில் இனக்குழுக்களிடேயே நடந்த மோதலில் முகிழ்த்த கதையை ஊதி ஊதி இப்படி ஆக்கிவிட்டார்கள் என்கிற உண்மை எவ்வளவு முக்கியமானது இன்றைக்கு .

 

இராமாயணம் ,மகாபாரதத்தை வெட்டியும் ஒட்டியும் மாறுபட்ட பலகோணங்களில் மீண்டும் மீண்டும் நாவல்கள் எழுதப்படும்போது சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்றவை அவ்வாறு பெரிய அளவு செய்யப்படாதது ஏன் ? [ ஒரு சில முயற்சிகள் உண்டு ] “ சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்” என தோழர் கே.எம் எழுதியத் தொடர் இக்கோணத்தில் முக்கியத்துவம் பெறுகிறதே . ஆயின் இராமயண ஆய்வுத் தொடரை கே எம் எழுதிய போது சந்தித்தது போன்றே  இத்தொடரின் போதும் விமர்சனத்தைச் சந்திதார் .

 

கவிஞர் இளவேனில் அளவு கே .முத்தையாவை கேலியும் கிண்டலும் செய்தவர் இல்லை ; ஆனால் அந்த இளவேனிலுக்கு பெண் கேட்டு ஓர் தந்தையின் இடத்தில் தன்னை நிறுத்தி வேளச்சேரிக்கு கே எம் போனபோது நானும் செந்தில்நாதனும் உடன் இருந்தோம் .அத்திருமணத்தை முடிக்க எல்லாவகையிலும் துணைநின்றார் . அப்போது அவரிடம் ஓர் கேள்வி கேட்டோம் , “ இளவேனில் உங்களைக் கடினமாக விமர்சிப்பவர் .நீங்கள் அவருக்காக இப்படி அலைகிறீர்களே ?” ஓர் சிரிப்பை உதிர்த்துவிட்டு சொன்னார் , “ இளவேனில் திறமையான நல்ல எழுத்தாளர் ,பல்வேறு திறன் கொண்டவர் .இளம் தோழர் .அவரை காப்பாற்றுவது நம் பொறுப்பு.” இதுதான் தோழர் கே.எம் இயல்பு.

 

தமிழ் – தமிழர் – தமிழ்ப்பண்பாடு – தமிழர் உரிமை என்கிற கோணத்தில் சிந்தித்தவர் தோழர் கே .எம் ; அதற்காக செயல்பட்ட்டவர் . அவரது முயற்சியும் உழைப்பும் பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டும் . திறமையான இளம் தோழர்களை இனங்கண்டு [நான் உட்பட] அரவணைத்து அழைத்துச் செல்வதில் தோழர் கே.எம் பெரும் முனைப்பு காட்டியவர் .

 

தீக்கதிர் மட்டுமல்ல செம்மலரும் அவர் அரவணைப்பில் வேர்பிடித்து வளர்ந்ததுதான் . தமுஎகசவும் அவரின் வியர்வையிலும் இரத்ததிலும் நாற்றாகி பயிராகி செழித்து வளர்ந்ததே !

 

கையால் அச்சுக்கோர்த்து டிரெடில் மிஷினில் அச்சிட்டு வெளிவந்த காலத்திலிருந்து கணினி ,நவீன அச்சு இயந்திரம் ,நவீனத் தகவல் தொடர்பு என படிப்படியான வளர்ச்சியில் தானும் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நிற்பது பெரும் சவாலே .அதனை கே எம் எதிர்கொண்டார் .

 

இப்போது இனி நாளேடு அச்சுப்பத்திரிகை தேவையா ? எல்லாம் இண்டர்நெட் , சமூக வலைதளம் என பாயும் உலகில் நாம் இன்னும் பத்தாம் பசலியாய் இருக்கலாமா ?கேள்வி எழுகிறது . கூடாது .

 

நவீனமான எதையும் நாம் புறக்கணிக்கக்கூடாது . கால ஓட்டத்தில் எங்கேயும் நம் பின்தங்கிவிடக்கூடாது .ஆயின் சுரண்டும் வர்க்கம் எவ்வளவுநாள் நம்மை அனுமதிக்கும் ?

 

“தேஷ்டைஷீ “ எனும் கட்சியின் வங்காள வார ஏட்டின் பொன்விழாவில் 2012 ல் பேசும்போது இன்றைக்கும் கட்சி ஏடுகள் தேவையா எனும் கேள்விக்கு பதில் அளித்து தோழர் சீத்தாராம் யெச்சூரி சொன்னவற்றை இங்கு அசைபோடல் தேவைப்படுகிறது ..

 

 “கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் தொடர்கிறது என்பது மட்டுமல்ல, மிகவும் சரியாகச் சொல்வதென்றால் இன்றையதினம் எவ்வளவுதான் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதிலும்,  நம் முன் உள்ள சவால்களை எதிர்கொண்டிட கட்சி ஏடுகளின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

 

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆளும் வர்க்கங்கள்  தங்கள்  சமூகத்தின் மீது அவர்களுடைய தத்துவார்த்த மேலாதிக்கத்தை செலுத்திக்கொண்டே எப்போதும் தங்கள் வர்க்க ஆட்சியை கெட்டிப்படுத்திக்கொள்வார்கள். 

 

மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் கூறியிருப்பது போல, ’’ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் ஒவ்வொரு சகாப்தத்தின்போதும் ஆளுகின்ற சிந்தனைகள்தான். அதாவது, பொருளாய சக்திகளை ஆளுகின்ற வர்க்கம், அதே சமயத்தில்  தன் நாட்டில் உள்ள அறிவுஜீவிகளையும் ஆண்டுகொண்டிருக்கிறது. பொருளாய உற்பத்திச் சாதனைகளைப் பெற்றிருக்கும் வர்க்கம் தன் கட்டுப்பாட்டில் சிந்தனாவாதிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறது.’’

 

ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளின் மேலாதிக்கம்தான், கிராம்சி விளக்குவதைப்போன்று, அரசால் மட்டும் அமல்படுத்தப் படுவதில்லை,  அதன் பின்னணியில் இருந்து வலுவானதோர் அமைப்பு அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னல் அதனைச் செய்து கொண்டிருக்கிறது.”

 

மேலும் விளக்குகிறார் , “இவ்வாறாக மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலாச்சாரம் இருப்பதில்லை. மாறாக, முதலாளித்துவம்  “தாம் விரும்பக்கூடிய விஷயங்களை ,மக்கள் விரும்பக்கூடிய விஷயமாக’  தங்கள் விளம்பரங்களின் மூலம் கட்டமைத்துவிடுகிறார்கள்.

 

இவ்வாறு இவர்கள் நம் கலாச்சாரத்தின் மீது தொடுக்கும் தாக்குதலை நாம் சமாளித்து முறிய்டிப்பது எப்படி? முதல் கட்டமாக, உலகமயம் மற்றும் வகுப்புவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கலாச்சாரப் படையெடுப்புகளினால் மதிமயங்கி மழுங்கிக் கிடக்கும் மக்களிடம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஒரு கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் உருவாக்க வேண்டியது அவசியம். அவர்களின் கலாச்சார மேலாதிக்கத்தை எதிர்கொண்டு முறியடித்திட இது மிகவும் அவசியம்.”

 

இவற்றை  கட்சி ஏடும் கட்சி அமைப்பும் இல்லாமல் சாதிக்க முடியுமா ? கட்சி அமைப்பு ,கட்சி ஏடு தீக்கதிர் ,செம்மலர் ,தமுஎகச , தமிழ்பண்பாடு என்கிற வட்டத்துக்குள் தன்னை ஒப்புகொடுத்த  தோழர் கே எம் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து பேசுவோம்.

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10 ஆகஸ்ட் 2021.

 

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 8

Posted by அகத்தீ Labels:

 

கொடைக்கானல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை நாங்கள் கீழே இறங்கினோம் . அதிர்ச்சி காத்திருந்தது .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 8.

 

ஒரு பொய்ச்செய்தியை அதிகார பீடத்தில் உள்ளவர் கசியவிடும்போது அச்செய்தி , எப்படி இறக்கை கட்டி வேகமாகப் பறந்து உண்மைச் செய்தியாகவே நம்பும் அளவுக்கு பதிந்துபோகும் என்பதற்கான ஓர் சாட்சி நான் . இப்படி செய்திகளை கசியவிட்டு ஆட்டம் காட்டுவதில் எம் ஜி ஆர் வல்லவர் .

 

சரி ! நடந்ததைச் சொல்கிறேன் . 1982 பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் . சிபிஎம் கட்சியானது திமுக ,அதிமுக இரண்டு அணியிலும் இல்லை . சில குட்டிக் கட்சிகளோடு தனி அணி . ஜக்கையன் [ அதிமுக ] , இராமகிருட்டினன் [திமுக] , அப்துல் வஹாப் [சிபிஎம்] உட்பட 22 பேர் போட்டி . அன்றைய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் கொடைக்கானலும் அடக்கம் . நான் கிட்டத்தட்ட மூன்றுவாரம் அங்கே தங்கி இருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் .

 

கடைசி நாள் பிரச்சாரத்திற்கு தோழர் ஆர் உமாநாத்தும் நானும் ஓர் காரில் கொடைக்கானல் மலையேறிக்கொண்டிருக்கிறோம் . மேலும் இரண்டு தோழரும் உண்டு . ஓர் போலீஸ் ஜீப் எங்களைத் தடுத்து முதலமைச்சர் எம் ஜி ஆர் கொடைக்கானல் பிரச்சாரம் முடித்து கீழே வந்து கொண்டிருக்கிறார் . ஆகவே கொஞ்சம் ஓரம் கட்டி நில்லுங்கள் என்றார் . நின்றோம் . உமாநாத்தும் நானும் கீழே இறங்கி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம் . முதல்வர் வண்டிவரும் ஓசை கேட்டது . சட்டென்று எங்கள் முன் எம் ஜி ஆர் வண்டி நின்றது . எம் ஜி ஆர் கீழே இறங்கினார் . வேறு யாரையும் கிட்டே அனுமதிக்கவில்லை .

 

 “ காம்ரேட் ஆர்யு சவுக்கியமா ? காம்ரேட் பாப்பா பிரச்சாரத்துக்கு வரவில்லையா ? காம்ரேட் பாப்பாவுக்கு ஒடம்பு சவுரியம் இல்லேன்னு கேள்விப்பட்டேன் . ”என சடசடன்னு கேட்டார் .

 

உமாநாத் . “ ஆம் .அவருக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லை..”என்றார் . “ ஒடம்ப நல்லா கவனிச்சுக்குங்க , வேணும்னா சொல்லுங்க ஸ்பெஷல் டாக்டரை ஏற்பாடு செய்யுறேன் …” என சொல்லியவாறே எம் ஜி ஆர் கிளம்பிவிட்டார் .

 

எல்லாம் இரண்டு நிமிடத்தில் முடிந்தது .

 

எம்ஜிஆரைத் தொடர்ந்து கே.ஏ.கிருஷணசாமியும் ,ராகவானந்தமும் வேறொரு காரில் இருந்தபடியே கையை ஆட்டிவிட்டுச் சென்றனர் .

 

கொடைக்கானல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை நாங்கள் கீழே இறங்கினோம் . அதிர்ச்சி காத்திருந்தது .

 

 “ கொடைக்கானலில் எம்ஜிஆர் –உமாநாத் திடீர்

 சந்திப்பு ; அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் ரகசிய ஆதரவா ?” என்பது போன்ற செய்திகள் இறக்கை கட்டி பறந்தன . கலைஞர் கடும் விமர்சன அறிக்கை .

அதிமுக ஜெயித்தது .திமுக தோற்றது .பழி சிபிஎம் மேல் விழுந்தது . கலைஞர் சிபிஎம் – அதிமுக ரகசிய உறவென கடிதம் தீட்டினார் . தேர்தல் முடிவைத் தொடர்ந்த விமர்சனங்களில் இந்தப் பொய்யே ஓங்கி நின்றது .

 

நண்பர்களும் தோழர்கள் சிலரும் கூட இந்நேரத்தில் ஆர்யூ ஏன் எம்ஜிஆரைச் சந்தித்தார் எனக் கேள்வி எழுப்பினர் .

 

எம்ஜிஆர் தன் நம்பிக்கைகுரிய மக்கள் குரல் பத்திரிகையாளர் மூலம் கசியவிட்ட பொய் உண்மைபோல் இன்றும் வரலாற்றின் இருண்ட பக்கத்தில் நிலைக்கிறதே ! ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல் நடந்ததை சிபிஎம் எவ்வளவு விளக்கியும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை . உமாநாத்தோடு அந்த நொடியில் நின்ற நான் மட்டுமே சாட்சி !! என் செய்ய ? எம் ஜி ஆர் இது போன்ற செய்திகளை பரப்புவதில் வல்லவர்.அவர் வாய்திறந்து இவற்றை வெளியே பேசவே மாட்டார் ! அதுதான் அவரின் சாமர்த்தியம் !!!

 

இப்போதும் சிபிஎம் கட்சிக்கு எதிராய் வதந்திகளும் பொய்களும்  ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்து இப்படித்தான் பரப்பப்படுகிறது .உண்மையைவிட இந்த போலிச் செய்திகள் வலுவாய் பேசப்படுகிறதே ! அதுவே வேதனை ! தோழர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் !

 

CCAU – CAMPAIGN COMMITTEE AGAINST UNEMPLOYMENT வேனையின்மை எதிர்ப்பு நடவடிக்கைக்குழு : 1990 பிப்ரவரி முதல் ஜூன் வரை நடத்திய பிரச்சார இயக்கம் , நிறைவாக குமரி ,நாகை ,ராமேஸ்வரம் , நீலகிரி என நான்கு முனையிலிருந்து பிரச்சாரப் பயணம் , சென்னைக் கடற்கரையில் பேரணி என உத்வேகம் ஊட்டிய நிகழ்வு . சிஐடியு ,வாலிபர் சங்கம் , மாணவர் சங்கம் , மாதர் சங்கம் ,அரசு ஊழியர் சங்கம் , இன்சுரன்ஸ் ,மத்திய , மாநில ஊழியர் அமைப்புகள் என விரிவாக ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பு .

 

இவ்வமைப்பு உருவாக்கத்திலும் ஆர் .உமாநாத் காட்டிய அக்கறையும் வழிகாட்டலும் முக்கியமானது .ஏ.கே .பத்மநாபனும் நானும் இதில் கூடுதல் பங்காற்றினோம் . ஒரு கூட்டத்தில் பிரச்சாரத்தை ஒட்டி ஒரு சிறுபிரசுரம் கொண்டுவர யோசிக்கப்பட்டது .எல்லோரும் காம்ரேட் ஆர்யூ அந்த பிரசுரத்தை எழுதலாம் என்றனர் .டக்கென்று ஆர்யூ தலையிட்டு சு.பொ.அகத்தியலிங்கம் எழுதட்டும் ,பின் எல்லோருக்கும் சுற்றுக்கு விடட்டும் .எல்லோரின் யோசனைக்கு பிறகு அதனை நான் பார்த்துக் கொடுக்கிறேன் என்றார் .நான் “ வேலை இனியும் கனவல்ல…” என்ற பிரசுரத்தை எழுதினேன் .சுற்றுக்கு விட்டேன் . சில திருத்தங்களுக்குப் பின் இறுதியாக உமாநாத் பார்வைக்கு கொண்டு போனேன் . முழுதாக வாசித்தார் . இப்படியே இருக்கட்டும் என்றார் .பிரசுரம் வெளிவந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது .

 

அதன் பின் ஓர் நிகழ்வில் பேசிய ஒர் மத்தியதர ஊழியர் தலைவர் இப்பிரசுரத்தை எழுதிய உமாநாத் என குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார் . பிரசுரம் சிசிஎயு சார்பில் வந்ததே தவிர யார் பெயரிலும் அல்ல.நான் அந்த கூட்டத்தில் இல்லை . இறுதியில் பேசிய உமாநாத் இப்பிரசுரத்தை எழுதியது சு.பொ.அகத்தியலிங்கம்தான் நானல்ல எனக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியுள்ளார் . பின்னர் ஓர் முறை வாலிபர் சங்க நிகழச்சிக்கு அங்கு சென்ற போது தோழர்கள் இந்நிகழ்வைச் சொன்னார்கள் . ஊழியர்களின் திறமையை பங்களிப்பை உரிய முறையில் அங்கீகரித்து மதிப்பளிக்கும் குணம் ஆகப்பெரியது . அது உமாநாத்திடம் நிரம்ப உண்டு .

 

வேலையின்மை உச்சத்தை எட்டும் இக்காலகட்டத்தில் மீண்டும் CCAU போன்ற முயற்சிகள் பெரிதும் தேவை அல்லவா ?

 

தோழர் என் .சங்கரய்யா சாதி மறுப்பு காதல் திருமணம் எனில் முன்னுரிமை கொடுத்து பங்கேற்பார் . ஆர்யுவுக்கு அத்துடன் சடங்கு மறுப்பும் சேர்ந்தாக வேண்டும் . தாலி எடுத்துக் கொடுக்கும் புரோகிதராக நான் வரமாட்டேன் என விடாப்பிடியாக ஆர்யு சொல்லிவிடுவார் . வந்துவிட்டாலும் அதனை தான் செய்யமாட்டார் .வேறு யாரையாவது பணித்துவிடுவார் .அப்போதும் பேசும்போது தாலி தேவை இல்லை என பேசுவார் . பாலின சமத்துவத்தில் அதிக அக்கறை காட்டினார் . அது குறித்து பேச நிறைய உண்டு . பேசுவோம் தொடர்ந்து .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

8 ஆகஸ்ட் 2021.

 

 

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 7.

Posted by அகத்தீ Labels:

 அவர்கள் சொன்னார்களாம் உடை உங்கள் விருப்பம் .அவரவர் உரிமை .” ஏஎன் சாரத்துடன் ஓர் நிகழ்வில் கியூபாவில் பங்கேற்றதை அவ்வளவு மகிழ்வுடன் சொன்னார் .



நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 7.
“ தந்தியென்றால் / முன்பெல்லாம் / பட்டிக்காட்டார் பதறிப்போய் / அது என்னவென்று அறிவதற்கு /துடியாய்த் துடிப்பார்.” என கலைஞர் கருணாநிதி ஓர் கவியரங்கக் கவிதையில் பாடியிருப்பார் .
பிறப்பு செய்தியோ இறப்புச் செய்தியோ தந்தி மூலமே அறிய முடியும் ; வேறு தகவல் தொடர்பு கிடையாது .இந்தத் தந்தியோ ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப முடியும் . ஆகவே தந்தி வந்தாலே கிராமப்புறத்தில் அறிய பெரும் பதட்டம் நிலவும்.
இந்த நினைவலையில் முதல் பகுதியில் செய்திகளை ARPPAATTAM என தங்கிளீஸில்தான் அனுப்ப வேண்டும் என்றிருந்த அன்றைய செய்தியாளர் அனுபவத்தை சுட்டி இருந்தேன்.
இந்தச் சூழலில் மாநிலங்களவை உறுப்பினராயிருந்த அன்புத் தோழர் ஏ .நல்லசிவன் இதற்கானப் போராட்டத்தை துவக்கினார் . தமிழில் தந்தி அடிக்க முடியும் என தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கப்பட்ட சான்றாதாரங்களோடு வாதிட்டார் .வென்றார் . அதுவும் உடனே கிடைத்துவிடவில்லை கடும் போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது .
தமிழில் தந்தி கொடுக்கும் வசதியை பெற்றுத் தந்தார் . அதற்காக மாநிலம் முழுவதும் பல மையங்களில் பாராட்டு விழா நடந்தது . மாவட்டம் நினைவில் இல்லை . குமரியோ /புதுவையோ பாராட்டு விழாவில் நானும் பேசினேன் .
“ தமிழில் தந்தி கொண்டு வந்துவிட்டோம் , ஆனால் இப்போதும் போலீஸ் ஸ்டேஷன் போனால் நாலு வார்த்தை தாட்டுப்பூட்டுண்ணு இங்கிளீஸ்ல பேசினால் சார்னு கூப்பிட்டு மரியாதையாக உட்காரவைக்கிறானுக தமிழில் பேசினால் விரட்டுறானுக… “என நான் பேசினேன்.
அடுத்து வந்த தோழர் ஏ என் என் பேச்சைத் தொட்டு பேசினார் , “ போலீஸ் ஸ்டேஷன் மட்டுமா தாலுகா ஆபிஸ் ,கலெக்டர் ஆபீஸ் எங்கும் இதே லட்சணம்தான் .நம்மாளு கோர்ட்டுக்கு போறான் .வக்கீலுக்கு பீஸை அள்ளிக் கொடுக்கிறான் . எங்க வக்கீலு இங்கிளீஸ்ல பிச்சு வாங்கிறாருன்னு பெருமையா நாலு பேருட்ட சொல்லிக்கிறான் .ஆனா கேஸ் தோற்றுப் போகுது .வக்கீலு சரியா பேசினாரா ? தப்பாப் பேசினாரா ?நமக்காகப் பேசினாரா ? எதிரிக்காக பேசுனாரா ? நமக்குத் தெரியாது . .கோர்ட் தமிழில் நடந்தால் இதெல்லாத்தையும் நாமள கண்காணிக்கலாமே . கோர்ட் ,போலீஸ் , தாலுகா ஆபீஸ் ,கலெக்டர் ஆபீஸ், படிப்பு எல்லாம் தமிழில் வேண்டும்.” என்றார் .
தோழர் ஏஎன் பேச்சில் அடுக்குமொழி இருக்காது . சாதாரண பாமர மொழிதான் இருக்கும் .ஆனால் வாதம் வலுவாக இருக்கும் . தமிழ் மக்களுக்கா உழைப்பாளி தமிழ் மக்களுக்காக வலுவாக வாதிடுவார் ஆனால் ,குரல்தான் அவர் எதிரி !
அவர் அந்த பேச்சினூடே சொன்ன இன்னொரு செய்தி , “ டிரான்ஸ்போர்ட் ,இபி , மில் , பேக்டிரி எங்கும் தொழிலாளிக்கு மெம்மோ கொடுக்கிறாங்க . இங்கிளீஸ்லதான் கொடுக்கிறாங்க . ‘ எனக்கு இங்கிளீஸ் தெரியாது ,தமிழில் கொடுங்கன்னுன்னு ‘ நம்ம தொழிலாளி பதில் கொடுக்கிறான் .போராடித்தான் எங்கும் தமிழைக் கொண்டுவர வேண்டியுள்ளது .”
இதே காலகட்டத்தில் மாணியாடர் படிவம் , வங்கிப் படிவம் எல்லாம் தமிழில் வேண்டுமென குமரி அனந்தன் போராடி வென்றார் . கூகுள் பே , டிஜிட்டல் மணி இல்லாத காலம் , போதுமான வங்கிக் கணக்கு எல்லாம் இல்லை .பெரும்பாலோருக்கு மணியாடர் மூலமே மகனோ கணவரோ அனுப்பும் பணம் , முதியோர் பென்ஷன் உட்பட கிடைக்கும் நிலை . இச்சூழலில் இந்தப் படிவங்களெல்லாம் ஆங்கிலத்தில் என்பது எவ்வளவு கொடுமை .
இப்போது தந்தி அலுவலகங்களே மூடப்பட்டுவிட்டது .தொழில் நுட்பம் மாறியாச்சு . ஆனால் ,மொபைலுக்கு மெஜேஸ் கூட இந்தியில் அனுப்பும் கொடுமை ; எந்த மொழியிலும் தகவல் அனுப்ப தொழில் நுட்பத் தடை இல்லாத காலத்தில் எல்லாம் இந்தித் திணிப்பு என்பது மமதையின் உச்சம் ;இந்துத்துவத்தை நோக்கிய முயற்சி . இதை எதிர்க்க பழசை எல்லாம் நினைவூட்டினேன் . ஆம் எல்லா முனையிலும் இந்தி திணிக்கப்படுவதை சகிக்க முடியாது . முறியடித்தாக வேண்டும் .
தோழர் ஏஎன் ஐ பெரும்பாலும் அலுவலகத்தில் சாரத்தில்தான் பார்க்க முடியும் . லுங்கி ,கைலி என பலபெயர் இருப்பினும் குமரி ,நெல்லையில் சாரம் என்றே சொல்லுவார் . அதுவும் மூட்டித் தைக்கபடாமல் கட்டும் வழக்கம் .தோழர் ஏஎன்னுக்கு அதுவே மிகவும் பிடித்தமான உடை .
தோழர் ஏ.என் கியூப புரட்சி தின நிகழ்ச்சிக்கு போய்வந்த அனுபவத்தை நான் உட்பட சில தோழர்கள் கேட்டுக்கொண்ட போது பல செய்திகளைச் சொன்னார் இடையிலே மகிழ்ச்சியாகச் சொன்னார் , “ ஏதோ ஒரு நிகழ்வுக்கு போகும் நெரம் நெருங்கிவிட்டதாம் ,இவர் உடன் இருந்த கியூப தோழரிடம் பேசிக்கொண்டே இருந்தாராம் . நேரம் ஆகிவிட்டது புறப்பட வேண்டிய நேரம் ஏஎன் கேட்டாராம் லுங்கியில் பொது நிகழ்வில் பங்கேற்கலாமா ? அவர்கள் சொன்னார்களாம் உடை உங்கள் விருப்பம் .அவரவர் உரிமை .” ஏஎன் சாரத்துடன் ஓர் நிகழ்வில் கியூபாவில் பங்கேற்றதை அவ்வளவு மகிழ்வுடன் சொன்னார் .
இங்கே இன்னொன்றை சுட்டுவதும் பொருந்தும் , சென்னை வியாசர்பாடி ,பக்தவச்சலம் நகர் ,சாஸ்திரி நகர் பகுதிகளில் வாலிபர் சங்கம் சிறப்பாக செயல்பட்ட காலம் ; அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரி வம்பு இழுத்தார் . சாலையில் வாலிபர் சங்கத்தவர் லுங்கியோடு நிற்பதை எதிர்த்தார் .கைது செய்து மிரட்டினார் .லுங்கியை ரவுடி உடையாக சினிமா சித்தரிப்பது போலவே அவரும் சித்தரித்தார் . இதைக் கண்டித்து அங்கு வாலிபர் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினோம் .நான் பங்கேற்று கடுமையாக பேசினேன் .
கூட்டத்திற்கு பின் ஓர் பழைய தோழர் நான் பேசியது சரியல்ல என கட்சிக்கு புகார் செய்துவிட்டார் . தோழர் ஏ என் ஓர் நாள் என்னை அழைத்து இது பற்றிக் கேட்டார் .நானும் நடந்ததைச் சொன்னேன் . பின் ஏ என் சொன்னார் , “ புகார் கொடுத்த தோழரிடம் அவர் பார்வை தவறு என அப்போதே சொல்லிவிட்டேன் . நானே சாரம்தானே விரும்பிக் கட்டுகிறேன் என அவரிடம் சொன்னேன் . பொது புத்தியில் உறைந்துள்ள இந்த பார்வையை மாற்ற நாம் முனைய வேண்டும்,” என்றார் .
தந்தைப் பெரியார் பொது வெளியில் லுங்கியோடு உலவினார் . கலைஞரும் ,ஸ்டாலினும் ,வைகோவும் லுங்கியோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர் . தோழர் ஏ என் , ஆர் .உமாநாத் போன்றோர் லுங்கியை விரும்பி அணிவர் .
லுங்கிக்கு இவ்வளவு பெரிய பதிவு ஏன் என சிலர் கேட்கலாம் . நாம் என்ன உடை உடுக்க வேண்டும் என இந்துத்துவ மதவெறிபினரும் பிற மத அடிப்படை வாதிகளும் உத்தரவிடும் காலம் இது இப்போது , “ எனது உடை எனது தேர்வு “ எனச் சொல்ல வேண்டும் அல்லவா ?
தோழர் ஏ என் பற்றி பேச நிறைய நிறைய உண்டு தொடர்ந்து பேசுவோம் !
சு.பொ.அகத்தியலிங்கம்.
7 ஆகஸ்ட் 2021.

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 6.

Posted by அகத்தீ Labels:

 

“ கடவுள் உண்டா ?இல்லையா ?” “ மார்க்சியத்திற்கு குருபீடம் எங்கும் இல்லை” போன்ற தோழர் ஏபியின் பிரசுரங்கள் என்னை மிகவும் ஈர்த்தவை .  “ கடவுள் உண்டா ? இல்லையா ?” பிரசுரம் இன்றைக்கும் புதிய இளைஞர்களுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டிய ஒன்று எனில் மிகை அல்ல .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 6.

 

1979 -80 காலகட்டத்தில் நான் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி இணைச் செயலாளர் என்கிற முறையில் மாநிலம் முழுவதும் பயணிக்கத் துவங்கிவிட்டேன் . மாவட்டச் செயலாளர் பணியுடன் அதுவும் இணைந்தது .

 

1980 ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாக மாறும் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கும் வேளை . தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திண்டுக்கல்லில் முகாமிட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதம் பணியாற்றிக் கொண்டிருந்தேன் .

 

சென்னைக்கு இடையில் ஓர் நாள் வந்தபோது தோழர் .பி.ஆர்.பரமேஸ்வரன் என்னை அழைத்துக் கொண்டு மெரினா பீச்சுக்குப் போனார் . பட்டாணி சுண்டலைக் கொறித்தபடி பேசத்துவங்கினோம் .அப்போது மெல்ல சொன்னார் , “ உன்னை வாலிபர் சங்க மாநிலப் பொறுப்புக்கு கொண்டுபோக முடிவெடுத்திருக்கிறோம் . நீங்கள் தயங்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும் . நீங்கள் கடைசி நேரத்தில் மறுத்துவிடக்கூடும் எனவே தோழர் ஏபி முன்கூட்டியே உங்களிடம் பேசச்சொன்னார் …”

 

நான் அப்போதும் உடன்படவில்லை . பின்னர் தோழர் விபிசியும் பேசினார் .கடைசியாக தோழர் ஏபி பேசினார் ,” எதுக்கு பயப்படுகிறாய் ? துணிஞ்சு இறங்கி அடி .. உனக்கு முழு சப்போர்ட் நான் தறேன் . நீதான் பொறுப்பேற்கிறாய் …” கட்டளையே இட்டுவிட்டார் . மீற இயலுமா ? அதுவும் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவனல்லவா நான் ?

 

இதற்கு முன் நடந்த ஒரு சம்பத்தைச் சொன்னால் என் தயக்கம் புரியும் ? ஏற்கெனவே மாநிலம் முழுவதும் சுற்றி வந்த போது மதுரைப் பேரவையில் நான் பேசியதை ஒருவரி விடாமல் எழுதி தோழர் ஏபிக்கு அனுப்பி ,” இதுதான் கட்சி கோட்பாடா ? தி .க மேடை போல் ஆகிவிட்டதே !” என ஆதங்கப்பட்டிருந்தார் ஓர் மூத்த தோழர் .

 

தோழர் ஏ.பி என்னை அழைத்து அதைப் படிக்கச் சொன்னார் . இதற்கு என்ன சொல்லுகிறாய் எனக் கேட்டார் . “ நான் பேசியதைத்தான் எழுதி இருக்கிறார் .எதுவும் தப்பாகப் பேசவில்லையே ?” என்றேன்.

 

 “ சபாஷ் ! சிங்கக் குட்டி ! தொடர்ந்து இதைப்போல் வாலிபர் சங்கக் கூட்டங்களில் பேசு ! அது இப்போதையத் தேவையே ! யாராவது கேட்டால் ஏபிதான் இப்படி பேசச் சொன்னார்னு சொல்லு “ என சொல்லியத்தோடு . என் எதிரிலேயே அந்தத் தோழருக்கு கடிதமும் எழுதினார் .

 

மேலும் சொன்னார் , “ வாலிபர் சங்கம் ,மாணவர் சங்கம் ,எழுத்தாளர் சங்கம் மூன்றிலும் அழுத்தமாகச் சமூகசீர்திருத்தக் கருத்துகளை பேசியாக வேண்டும் . மாதர்கள் மத்தியிலும் பேசவேண்டும் ஆனால் கொஞ்சம் நிதானமாக எச்சரிக்கையோடு பேசவேண்டும் . தொழிற் சங்கம் , விவசாயிகள் சங்கம் போன்ற வர்க்க அமைப்புகளில் வர்க்க அரசியல் ஓங்கி இருக்க வேண்டும் .கட்சி இவற்றை ஒருங்கிணைத்து இடது அரசியலை முன்னெடுக்க வேண்டும்.”

 

அவர் சொன்னதின் சாரத்தை நினைவில் இருந்தபடி எழுதியிருக்கிறேன் . இந்த சம்பவம் எனக்குக் கொடுத்த உத்வேகம் கொஞ்சமல்ல .இப்பின்னணியிதான் தோழர் ஏபியின் கட்டளையை ஏற்றுக் கொண்டேன் .தோழர் ஏபியின் வழிகாட்டல் இன்றைக்கும் பொருந்தும்தானே ?

 

தோழர் ஏ.பி. மறைவுக்கு பின் ஓர் நாள்  தனியாக உரையாடிக்கொண்டிருந்த போது தோழர் பிஆர்சி என அன்போடு அழைக்கும் பி.ராமச்சந்திரன் சொன்னார் ,” கட்சி மாநிலச் செயற்குழுவில் வாலிபர் சங்கப் பொறுப்புக்கு உங்களைப் போட வேண்டும் என்பதில் தோழர் ஏபி பிடிவாதமாக இருந்தார் .  “அவன் [ என்னைத்தான் ] சுயமாகச் சிந்திப்பான் , கிரியேட்டிவிட்டியாக இருப்பான் .சில வேளை தன்னிச்சையாகச் செயல்பட்டுவிடுவான் .கொஞ்சம் அடம் அதிகம் . பரவாயில்லை .திருத்திக்கொள்ளலாம் . .நமக்குத் தேவை தலையாட்டி பொம்மை அல்ல .” என்று ஏபி சொன்னார் . பிஆர்சி இதைச் சொன்னபோது நான் சிலிர்த்துப் போனேன்.

 

தோழர் ஏபி ஊழியர்களை நம்பிக்கையோடு அணுகுவார் . அவருக்கு செயல்படுபவரையே பிடிக்கும் .ஜால்ராக்களை அல்ல . வேலைசெய்தால் தப்பு வரும் . வேலையே செய்யாவிட்டால் முன் முயற்சியே இல்லாவிட்டால் தப்பே நடக்காது . தப்பை சரி செய்யலாம் . செயல்படும் ஊழியர் தேவை என ஏபி வலியுறுத்துவார் .ஜால்ரா அவருக்கு பிடிக்காது .கருவறையில் இருக்கும் குழந்தையும் , செத்த பிணமும்தான் தப்பு செய்யாதவை எனும் மேற்கோளை அடிக்கடி சுட்டுவார் . “ தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக !” எனும் லியோசோச்சி பிரசுரத்தை மொழியாக்கி கட்சி அணிகளிடம் கொண்டு சென்றவர் ஏபி. இவை எல்லாம் பிஆர்சி என்னுடன் பகிர்ந்தவை .

  “ கடவுள் உண்டா ?இல்லையா ?” “ மார்க்சியத்திற்கு குருபீடம் எங்கும் இல்லை” போன்ற தோழர் ஏபியின் பிரசுரங்கள் என்னை மிகவும் ஈர்த்தவை .  “ கடவுள் உண்டா ? இல்லையா ?” பிரசுரம் இன்றைக்கும் புதிய இளைஞர்களுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டிய ஒன்று எனில் மிகை அல்ல .

 

இந்த இடத்தில் தோழர் ஏபி மொழிப்பிரச்சனை குறித்து பேசியதை சுட்டுவது பொருத்தமாக இருக்கும் ,

 

 “அவசரமாக நமது அரசு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன . ஆங்கிலத்தை அகற்றி எல்லா துறைகளிலும் தமிழ் வந்துவிட வேண்டும் .அதற்கு வேண்டிய அவசர நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும் .நீதி ,நிர்வாகம் ,கல்வி என்ற மூன்று நாற்காலிகள்தான் . அந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழை அமர்த்திட வேண்டும் .அந்த மூன்று நாற்காலிகளிலும் வேறுமொழி அமர இடம் கொடுக்கக்கூடாது .மற்ற மொழிகள் தனி இடத்தில் உட்காரலாமே தவிர ,இந்த மூன்று நாற்காலிகளிலும் மற்ற மொழிகளுக்கு இடம் இல்லை .இந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டால் தமிழ் மக்களுக்கு பயம் இருக்காது .பீதி இருக்காது .நமது மாநிலத்திற்குள் வேறு எந்த மொழிக்கும் தனி இடம் கிடையாது என்று உத்திரவாதம் செய்துவிட்டால் பெரிய அளவு கலக்கம் போய்விடும் .பீதி குறைந்துவிடும்.துரிதமாக தமிழை அரியாசனத்தில் அமர்த்த வேண்டும்.”

 

என சட்டமன்றத்தில் தோழர் ஏபி பேசினார் . முதல்வர் பேரறிஞர்அண்ணா பதில் சொன்னார் .”திரு பாலசுப்பிரமணியம் ,திரு சங்கரய்யா அவர்கள் சொன்னது போல் இந்திய அரசு இந்திக்கு மட்டும்  சலுகை காட்டுகிற அந்த திட்டத்தை மாற்றி எல்லா மொழிக்கும் சம அந்தஸ்த்து கொடுத்து வளரச் செய்வார்களேயானால் நாம் அந்த நிலைக்கு வர முடியும் .அதுவரை கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு [ ஆங்கிலத்தைப் ] பொறுத்துக் கொள்ள வேண்டும் .”

 

இன்றும் மொழிசிக்கல் மேலும் வலுவடைந்துள்ளது . நாம் தாய்மொழியைத்தான் உயர்த்திப்பிடிக்க வேண்டும் அல்லவா ? தொடர்ந்து பேசுவோம் .

 

தோழர் ஏபியிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு . தொடர்ந்து கற்போம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

5 ஆகஸ்ட் 2021.