நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 6.

Posted by அகத்தீ Labels:

 

“ கடவுள் உண்டா ?இல்லையா ?” “ மார்க்சியத்திற்கு குருபீடம் எங்கும் இல்லை” போன்ற தோழர் ஏபியின் பிரசுரங்கள் என்னை மிகவும் ஈர்த்தவை .  “ கடவுள் உண்டா ? இல்லையா ?” பிரசுரம் இன்றைக்கும் புதிய இளைஞர்களுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டிய ஒன்று எனில் மிகை அல்ல .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 6.

 

1979 -80 காலகட்டத்தில் நான் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி இணைச் செயலாளர் என்கிற முறையில் மாநிலம் முழுவதும் பயணிக்கத் துவங்கிவிட்டேன் . மாவட்டச் செயலாளர் பணியுடன் அதுவும் இணைந்தது .

 

1980 ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாக மாறும் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கும் வேளை . தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திண்டுக்கல்லில் முகாமிட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதம் பணியாற்றிக் கொண்டிருந்தேன் .

 

சென்னைக்கு இடையில் ஓர் நாள் வந்தபோது தோழர் .பி.ஆர்.பரமேஸ்வரன் என்னை அழைத்துக் கொண்டு மெரினா பீச்சுக்குப் போனார் . பட்டாணி சுண்டலைக் கொறித்தபடி பேசத்துவங்கினோம் .அப்போது மெல்ல சொன்னார் , “ உன்னை வாலிபர் சங்க மாநிலப் பொறுப்புக்கு கொண்டுபோக முடிவெடுத்திருக்கிறோம் . நீங்கள் தயங்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும் . நீங்கள் கடைசி நேரத்தில் மறுத்துவிடக்கூடும் எனவே தோழர் ஏபி முன்கூட்டியே உங்களிடம் பேசச்சொன்னார் …”

 

நான் அப்போதும் உடன்படவில்லை . பின்னர் தோழர் விபிசியும் பேசினார் .கடைசியாக தோழர் ஏபி பேசினார் ,” எதுக்கு பயப்படுகிறாய் ? துணிஞ்சு இறங்கி அடி .. உனக்கு முழு சப்போர்ட் நான் தறேன் . நீதான் பொறுப்பேற்கிறாய் …” கட்டளையே இட்டுவிட்டார் . மீற இயலுமா ? அதுவும் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவனல்லவா நான் ?

 

இதற்கு முன் நடந்த ஒரு சம்பத்தைச் சொன்னால் என் தயக்கம் புரியும் ? ஏற்கெனவே மாநிலம் முழுவதும் சுற்றி வந்த போது மதுரைப் பேரவையில் நான் பேசியதை ஒருவரி விடாமல் எழுதி தோழர் ஏபிக்கு அனுப்பி ,” இதுதான் கட்சி கோட்பாடா ? தி .க மேடை போல் ஆகிவிட்டதே !” என ஆதங்கப்பட்டிருந்தார் ஓர் மூத்த தோழர் .

 

தோழர் ஏ.பி என்னை அழைத்து அதைப் படிக்கச் சொன்னார் . இதற்கு என்ன சொல்லுகிறாய் எனக் கேட்டார் . “ நான் பேசியதைத்தான் எழுதி இருக்கிறார் .எதுவும் தப்பாகப் பேசவில்லையே ?” என்றேன்.

 

 “ சபாஷ் ! சிங்கக் குட்டி ! தொடர்ந்து இதைப்போல் வாலிபர் சங்கக் கூட்டங்களில் பேசு ! அது இப்போதையத் தேவையே ! யாராவது கேட்டால் ஏபிதான் இப்படி பேசச் சொன்னார்னு சொல்லு “ என சொல்லியத்தோடு . என் எதிரிலேயே அந்தத் தோழருக்கு கடிதமும் எழுதினார் .

 

மேலும் சொன்னார் , “ வாலிபர் சங்கம் ,மாணவர் சங்கம் ,எழுத்தாளர் சங்கம் மூன்றிலும் அழுத்தமாகச் சமூகசீர்திருத்தக் கருத்துகளை பேசியாக வேண்டும் . மாதர்கள் மத்தியிலும் பேசவேண்டும் ஆனால் கொஞ்சம் நிதானமாக எச்சரிக்கையோடு பேசவேண்டும் . தொழிற் சங்கம் , விவசாயிகள் சங்கம் போன்ற வர்க்க அமைப்புகளில் வர்க்க அரசியல் ஓங்கி இருக்க வேண்டும் .கட்சி இவற்றை ஒருங்கிணைத்து இடது அரசியலை முன்னெடுக்க வேண்டும்.”

 

அவர் சொன்னதின் சாரத்தை நினைவில் இருந்தபடி எழுதியிருக்கிறேன் . இந்த சம்பவம் எனக்குக் கொடுத்த உத்வேகம் கொஞ்சமல்ல .இப்பின்னணியிதான் தோழர் ஏபியின் கட்டளையை ஏற்றுக் கொண்டேன் .தோழர் ஏபியின் வழிகாட்டல் இன்றைக்கும் பொருந்தும்தானே ?

 

தோழர் ஏ.பி. மறைவுக்கு பின் ஓர் நாள்  தனியாக உரையாடிக்கொண்டிருந்த போது தோழர் பிஆர்சி என அன்போடு அழைக்கும் பி.ராமச்சந்திரன் சொன்னார் ,” கட்சி மாநிலச் செயற்குழுவில் வாலிபர் சங்கப் பொறுப்புக்கு உங்களைப் போட வேண்டும் என்பதில் தோழர் ஏபி பிடிவாதமாக இருந்தார் .  “அவன் [ என்னைத்தான் ] சுயமாகச் சிந்திப்பான் , கிரியேட்டிவிட்டியாக இருப்பான் .சில வேளை தன்னிச்சையாகச் செயல்பட்டுவிடுவான் .கொஞ்சம் அடம் அதிகம் . பரவாயில்லை .திருத்திக்கொள்ளலாம் . .நமக்குத் தேவை தலையாட்டி பொம்மை அல்ல .” என்று ஏபி சொன்னார் . பிஆர்சி இதைச் சொன்னபோது நான் சிலிர்த்துப் போனேன்.

 

தோழர் ஏபி ஊழியர்களை நம்பிக்கையோடு அணுகுவார் . அவருக்கு செயல்படுபவரையே பிடிக்கும் .ஜால்ராக்களை அல்ல . வேலைசெய்தால் தப்பு வரும் . வேலையே செய்யாவிட்டால் முன் முயற்சியே இல்லாவிட்டால் தப்பே நடக்காது . தப்பை சரி செய்யலாம் . செயல்படும் ஊழியர் தேவை என ஏபி வலியுறுத்துவார் .ஜால்ரா அவருக்கு பிடிக்காது .கருவறையில் இருக்கும் குழந்தையும் , செத்த பிணமும்தான் தப்பு செய்யாதவை எனும் மேற்கோளை அடிக்கடி சுட்டுவார் . “ தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக !” எனும் லியோசோச்சி பிரசுரத்தை மொழியாக்கி கட்சி அணிகளிடம் கொண்டு சென்றவர் ஏபி. இவை எல்லாம் பிஆர்சி என்னுடன் பகிர்ந்தவை .

  “ கடவுள் உண்டா ?இல்லையா ?” “ மார்க்சியத்திற்கு குருபீடம் எங்கும் இல்லை” போன்ற தோழர் ஏபியின் பிரசுரங்கள் என்னை மிகவும் ஈர்த்தவை .  “ கடவுள் உண்டா ? இல்லையா ?” பிரசுரம் இன்றைக்கும் புதிய இளைஞர்களுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டிய ஒன்று எனில் மிகை அல்ல .

 

இந்த இடத்தில் தோழர் ஏபி மொழிப்பிரச்சனை குறித்து பேசியதை சுட்டுவது பொருத்தமாக இருக்கும் ,

 

 “அவசரமாக நமது அரசு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன . ஆங்கிலத்தை அகற்றி எல்லா துறைகளிலும் தமிழ் வந்துவிட வேண்டும் .அதற்கு வேண்டிய அவசர நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும் .நீதி ,நிர்வாகம் ,கல்வி என்ற மூன்று நாற்காலிகள்தான் . அந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழை அமர்த்திட வேண்டும் .அந்த மூன்று நாற்காலிகளிலும் வேறுமொழி அமர இடம் கொடுக்கக்கூடாது .மற்ற மொழிகள் தனி இடத்தில் உட்காரலாமே தவிர ,இந்த மூன்று நாற்காலிகளிலும் மற்ற மொழிகளுக்கு இடம் இல்லை .இந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டால் தமிழ் மக்களுக்கு பயம் இருக்காது .பீதி இருக்காது .நமது மாநிலத்திற்குள் வேறு எந்த மொழிக்கும் தனி இடம் கிடையாது என்று உத்திரவாதம் செய்துவிட்டால் பெரிய அளவு கலக்கம் போய்விடும் .பீதி குறைந்துவிடும்.துரிதமாக தமிழை அரியாசனத்தில் அமர்த்த வேண்டும்.”

 

என சட்டமன்றத்தில் தோழர் ஏபி பேசினார் . முதல்வர் பேரறிஞர்அண்ணா பதில் சொன்னார் .”திரு பாலசுப்பிரமணியம் ,திரு சங்கரய்யா அவர்கள் சொன்னது போல் இந்திய அரசு இந்திக்கு மட்டும்  சலுகை காட்டுகிற அந்த திட்டத்தை மாற்றி எல்லா மொழிக்கும் சம அந்தஸ்த்து கொடுத்து வளரச் செய்வார்களேயானால் நாம் அந்த நிலைக்கு வர முடியும் .அதுவரை கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு [ ஆங்கிலத்தைப் ] பொறுத்துக் கொள்ள வேண்டும் .”

 

இன்றும் மொழிசிக்கல் மேலும் வலுவடைந்துள்ளது . நாம் தாய்மொழியைத்தான் உயர்த்திப்பிடிக்க வேண்டும் அல்லவா ? தொடர்ந்து பேசுவோம் .

 

தோழர் ஏபியிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு . தொடர்ந்து கற்போம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

5 ஆகஸ்ட் 2021.

 

 

 


0 comments :

Post a Comment