தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 14 ] சோஷலிசம் என்ற சொல்லே நம் நாட்டுக்குரியது அல்லவே ….

Posted by அகத்தீ Labels: ,

 




தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 14 ] 

சோஷலிசம் என்ற சொல்லே நம் நாட்டுக்குரியது அல்லவே ….

 

 

கேள்வி :

சோஷலிசம் என்ற சொல்லே நம் நாட்டுக்குரியது அல்லவே ! அது எப்படி இந்த மண்ணோடு ஒட்டும் ? கைவிரல் ஐந்தும் சமமென்பது சாத்தியமா ? பயன் தருமா ?

 

பதில் :

 

மிகவும் பழமையான கேள்வி .ஆயின் , இப்போதும் கேட்போர் உண்டு ஆகவேதான்  சிபிஎம் பொதுச் செயலாளர் தோழர் எம் ஏ பேபி அண்மையில் ஒரு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

 

” சோசலிசம் ஓர் அந்நிய இறக்குமதி, 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தனை, 1991-இல் சோவியத் யூனியனோடு வீழ்ந்துவிட்டது என்ற பிரச்சாரத்தின் ஒவ்வொரு பகுதியும் தவறு. சமத்துவச் சமூகத்துக்கான ஏக்கம் என்பது, வர்க்கச் சமூகம் அளவுக்கு பழமையானது. மாவேலி நாடாண்டபோது மனிதர்கள் அனைவரும் சமமாக இருந்தனர் என்கிறது கேரளத்தின் ஓணப்பாட்டு. வர்க்கமற்ற லட்சியத்தைப் பொற்காலமாகக் காணும் மக்களின் கனவு அல்லாமல் வேறு என்ன இது? 1809-இல் திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த அய்யா வைகுண்ட சுவாமிகள், 1836-இல் “சமத்துவ சமாஜம்” அமைத்தார். அவர் கார்ல் மார்க்ஸை விட ஒன்பது வயது மூத்தவர்; அவரது அமைப்பு கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு 12 ஆண்டுகள் முந்தையது. ஒத்த ஒடுக்குமுறை நிலைமைகள், திருவிதாங்கூரிலும் ஜெர்மனியிலும் ஒத்த விடுதலை விருப்பங்களை உருவாக்குகின்றன. எனவே, சமத்துவப் போராட்டம் ஐரோப்பிய ஏற்றுமதி அல்ல.”

 [ நன்றி : தீக்கதிர் 23 /11/26 . ] அக்கட்டுரை வேறு தளத்தில் நுட்பமாகப் பதில் சொல்கிறது , வாசித்தறிக !

 

“ கனவிலிருந்து சோஷலிசம் : ஒரு எளிய முன்னோட்டம் - சு.பொ.அகத்தியலிங்கம்” [ பாரதி புத்தகாலயம் ] எனும் 56 பக்க நூலில் நம் தமிழ்க் கனவோடு சோஷலிச வரலாற்றையும் இணைத்துச் சொல்லி  இருக்கிறேன் நான். அதனையும் அவசியம் வாசித்தறிக!    “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் - ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்” [ Socialism: Utopian and Scientific - Frederick Engels ] எனும் அடிப்படை நூலை வாசிக்க  என் நூல் ஓர் திறவுகோலாகும்.

 

 “ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை ; சமமாய் இருந்தால் பயன்படுமா ?” இப்படி ஒரு கேள்வி காலங்காலமாகக் கேட்கப்படுகிறது . சமூக ஏற்ற தாழ்வு அப்படியே தொடர வேண்டும் என்பதே இதன் உள்ளுறை . கட்டை விரல் இல்லாமல் எதையும் உறுதியாய்ப் பற்ற முடியாதே , அப்படியாயின் கட்டை விரல் மட்டும் போதுமா ? ஒரு விரலுக்கு மட்டும்தான் மோதிர விரல் என்று ராஜ மரியாதை .அந்த விரல் மட்டும் போதுமா ? ஐந்து விரலுக்கும் சமமான தேவையான இரத்த ஓட்டமும் உயிர்த்துடிப்பும் இருக்கும் போதுதான் அது கை . இல்லை எனில் ஊனம் . அங்கே சமத்துவம்தான் வினையாற்றுகிறது என்பதறிக ! கூர்ந்து நோக்காமல் மேலோட்டமாகப் பேசுவோருக்கு இப்படித்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது . 

 

சரி ! சோஷலிசத்தின் வரலாற்றுக்கு போகு முன் சில அடிப்படை விளக்கங்கள் பார்ப்போம்  . சமத்துவம் ,சமதர்மம் , சமநீதி , சமூக நீதி  போன்ற சொற்களைப் பற்றி புரிதல் வேண்டும் .

 

 “சுதந்திரம் ,சமத்துவம் ,சகோதரத்துவம்” என்ற முழக்கம் பிரெஞ்சுப் புரட்சியின் கொடையாகும் . இதில் சமத்துவம் என்பது பொதுவாகப் பேசப்பட்ட காணப்பட்ட கனவு . இப்போதும் ‘ எல்லோரும் ஓர் நிறை’ எனப் பேசுகிறோம் .ஆனால் எதில் ,எப்படி ,ஏன் போன்ற கேள்விகளை எழுப்பினால்தான் விடை கிடைக்கும் . வர்க்க வர்ண சமூகத்தில் சமதர்மம் என்பதும் எல்லோருக்கும் ஒரே நீதி என்பதும் அலங்காரப் பேச்சே . தர்மம் ,அறம் என்ற சொற்கள் மதம் சார்ந்தும் நிலப்பிரபுத்துவம் சார்ந்தும் பொருள் தருவன . வர்ண பேதத்தை நியாயப்படுத்துவன .வர்க்கப் பார்வை இதில் கிடையாது . ஆகவே ஏற்க முடியாது . சமநீதி என்பது எல்லோருக்கும் ஒரே நீதி என்பது சாதி ஏற்றதாழ்வான சமூகத்தில் அது மேல்தட்டினருக்கே பலன் தரும் ஆகவேதான் சமநீதி அல்ல சமூகநீதி வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்தது . ஒடுக்கப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சலுகைகளும் வாய்ப்பில் முன்னுரிமையும் தவிர்க்க முடியாதது . இந்த சமூகநீதி கட்டாயம் வேண்டும் .சோஷலிசம் என்ற சொல் இவை எல்லாவற்றையும் விட மேலானது ; பொருளாதார சமத்துவமும் சமூக சமத்துவமும் இரண்டுக்குமான புதிய சமூகச் சிந்தனையே சோஷலிசம் .புதிய சிந்தனைக்கு புதிய சொல்தானே பொருத்தமாக இருக்கும் . எனவே சோஷலிசம் என்றே பெருமிதத்தோடு சொல்லுவோம். சோஷலிசம் என்பது தமிழ் அகராதிக்கு வந்த புதுச் சொல்லாகட்டும் !

 

 

சோஷலிசம் என்கிற கனவு திடீரென மலர்ந்தது அல்ல . ஆதி சமூகம் தொட்டு உலகெங்கும் வியாபித்திருந்த சமூக சமத்துவத் தேடலின் அறிவியல் வடிவம் . எப்படி பறவையைப் பார்த்து அது போல் பறக்க ஆசைப் பட்டு ; முதலில் மாயக் கம்பளம் ,புஷ்பகவிமானம் ,பறக்கும் தட்டு இப்படி பல கற்பனை செய்தானோ  ; அது போல் எல்லா நாட்டிலும் கற்பனை உண்டு . இடுப்பில் முறத்தைக் கட்டிக்கொண்டு மலையிலிருந்து குதித்தது போல் எண்ணற்ற முயற்சிகளும் உண்டு . இறுதியில் அறிவியல் உலகம் விமானத்தைக் கண்டு பிடித்தது . அது போல் சோஷலிசமும் முதலில் கனவாய் எல்லா நாட்டிலும் இருந்தது ; பல முயற்சிகளுக்குப் பின் அறிவியலாய்ப் பரிணாமம் பெற்றது .

 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய காலம் தொட்டு , மணிமேகலையின் அட்சய பாத்திர கற்பனை வழி ,பசிப்பிணி இல்லா உலகை காலந்தோறும் தமிழ்ச் சமூகமும் கற்பனையில் இலக்கியத்தில் படைத்தது உண்டு . நிறைய எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டே இருக்க முடியும் .அவை சோஷலிசக் கனவின் முதல்படி ;அதுவே சோஷலிசம் அல்ல .

 

ஆதிக் கவிஞர்கள் படைத்த காவியங்கள் தொடங்கி தாமஸ் மூர் , தொம்மாசோ காம்பெனெல்லா , வின்ஸ்டான்லி , ஜெயிண்ட் சைமன் ,சார்ல்ஸ் போரியர் , ராபர்ட் ஓவன் எனப்பலரும் கண்ட கனவில் புனைந்த  ‘கற்பனையில் மலர்ந்த சோஷலிசம்’ மார்க்ஸ் எங்கெல்ஸ் உழைப்பில்  ‘விஞ்ஞான சோஷலிசமாக’ உருப்பெற்றதை வரலாற்றின் வழி படித்தால் சோஷலிசம் ஒரு மண்ணுக்கு உரியதல்ல ; மானுடத்துக்கு உரியது ; பொதுச் சிந்தனை என்பது விளங்கும் .

 

தாமஸ் மூர் என்ற ஜெர்மானியர் எழுதிய ‘ கற்பனைத் தீவு”  ‘உட்டோபியன்’ என அழைக்கப்பட்டது . அங்கு நிலம் எல்லோருக்கும் பொதுவாக்கப்பட்டது .உழைப்பு கட்டாயமாகப்பட்டது . மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்த  ‘உட்டோபியன் சோஷலிசத்தை’  தம் படைப்பில் குறிப்பிட்டிருப்பார் .லெனின் ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் இவரையும் குறிப்பிடுவார் .

 

இத்தாலி நாட்டவரான தொம்மாசோ காம்பெனெல்லா எழுதிய “ சூரிய நகரம்” எனும் நூலும் சோஷலிசக் கனவை விரித்தது . சூரியக்கதிர் பாரபட்சமின்றி எல்லோரையும் முழுக்காட்டுவதுபோல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக் கனவு கண்டார் .

 

ஜெர்ராட்டு வின்ஸ்டான்லி  பிரிட்டனில் அரசு புறம்போக்கு நிலத்தைக் கைப்பற்றி பொதுச் சொத்தாக்கி கூட்டாக உழ ‘ தோண்டுவோர்” [ DIGGERS ] என பெயரிட்டு மக்களைத் திரட்டினார் .அவரின் எழுத்துகளும் சோஷலிச கனவைக் கொண்டிருந்தன .

 

பிரெஞ்சுப் புரட்சி சமத்துவக் கனவை விதைத்தது . ஆனால் ‘ இந்த சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பு முதலாளித்துவ சட்டமாகச் சுருங்கிவிட்டது.” என்றார் எங்கெல்ஸ் . “ அவர்களின் சகாப்தம் விதித்த வரம்புகளுக்கு அப்பால் அவர்களால் ஒரு போதும் வரமுடியாது ..”எனவும் தெளிவுபடுத்தினார் .

 

“ சித்தாந்த ரீதியான ஜெர்மன் நாட்டு சோஷலிசம் ஒரு போதும் அவர்களை மறவாது ; மாறாக அந்த மூவரின் தோளின் மீதுதான் அது நிற்கிறது என்றார் எங்கெல்ஸ் . அவர் புகழாரம் சூட்டிய மூவருள் செயிண்ட் சைமன் முதலில் இருப்பார் . ஃபோரியரும் ,ஓவனும் அடுத்து வருவார் .

 

சாமானியன் எனும் பொருள்படும் ‘பான் ஹோம்’ என தனக்குப் பெயர் சூட்டிக்கொண்ட செயிண்ட் சைமன் தன் நண்பருடன் இணைந்து  சோஷலிசக் கனவு கண்டார் ; ‘ புதிய கிறுத்துவம் ‘ எனும் நூலைப் படைத்தார் ;  நடை முறையிலும் சில பரிசோதனைகள் செய்தார். தோற்றுப்போனார் . அதைப் பற்றி எங்கெல்ஸ் , “ முதலாளித்துவ முறையிலான உற்பத்தி முறையிலான உற்பத்த்தியின் முதிர்ச்சியுறா நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறா வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாக் கொள்கைகளே முன்வைக்கப்பட்டன.” என்றார். ஃபோரியர் ,ஓவனைப் பார்க்கும் போது இன்னும் தெளிவாகும் .

 

சார்லஸ் ஃபோரியர் ஓர் பிரெஞ்சு சோஷலிஸ சிந்தனையாளர் . இவர் ‘ பாலன்கஸ்’ [ PHALANXES] என்ற கூட்டு வாழ்க்கை முறைக் கனவு கண்டார் .எழுதினார் . சிறிய அளவில் சோதனை முயற்சியாக ஓரிடத்தில் பாலன்கஸ் அமைத்து பார்த்தார் .தோல்வியில் முடிந்தது .இவரது மறைவுக்குப் பின் இவரது சீடர் விக்டர் கான்ஸிடெரண்ட் முயற்சியால் அமெரிக்காவில் டெக்ஸாஸ் , ஜெர்ஸி ஆகிய இடங்களில் ஃபோரியர் பண்ணைகள் உருவாக்கப்பட்டன .குறுகிய காலமே நீடித்தது .

 

“முதலாளித்துவச் சமூகத்தின் உள் முரண்பாடுகளைச் சொன்னாலும் சுரண்டலுக்கு அடிப்படைக் காரணத்தைச் சொல்ல இயலவில்லை .ஆயினும் முதலாளித்துவத்தைக் கண்டித்தவர்கள் என்கிற வகையில் ஃபோரியர் உள்ளிட்ட கற்பனா சோஷலிஸ்டுகளின் பங்கு மகத்தானது.” என்பார் மார்க்ஸ்.

 

பிரிட்டனின் ‘சோஷலிசத் தந்தை’ எனப் புகழப்பட்ட ராபர்ட் ஓவன் தொழிலாளி வர்க்கத்தின் தோழனாய் தோள்கொடுத்தார் . தான் நடத்திய பருத்தி ஆலையில் சீர்திருத்தம் கொணர்ந்தார் . ஸ்கார்ட்லாந்து  நீயு லானார்க்கில் அமைந்த பருத்தி ஆலை முன் மாதிரியாக நடத்திக் காட்டினார் . மாதிரி கூட்டுறவு குடியிருப்பை உருவாக்கினார் . தோல்விக்குப் பிறகும்  ஓய்ந்துவிடாமல் அமெரிக்காவில் இண்டியானா நகரில் வாபாஷ் நதி அருகே ‘ நியூ ஹர்மனி’ என்கிற தன்னிறைவு அமைப்பைத் தோற்றுவித்தார். அதுவும் ஆளும் வர்க்க சதியால் தோற்கடிக்கப்பட்டது . தொடர்ந்து தொழிலாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்டார் . “ அக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் தொழிலாளர் தரப்பிலான ஒவ்வொரு சமூக இயக்கமும் ,ஒவ்வொரு மெய்யான முன்னேற்றமும் ராபர்ட் ஓவன் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டன.” என்றார் எங்கெல்ஸ் .

 

இந்தப் பின்னணியில் இவற்றை எல்லாம் அறிவியல் பூர்வமாய் ஆய்வு செய்தனர் மார்க்சும் எங்கெல்சும். முந்தைய முயற்சிகள் தோற்ற காரணத்தை அலசினர் . உற்பதிக் கருவிகளும் நிலமும் சுரங்கமும் பெருமுதலாளிகள் கையில் இருப்பதும் , பரிமாற்றதையும் விநியோகத்தையும்  அவர்கள் கட்டுப்படுத்துவதுமே பெரும் தடை ஆகும் எனக் கண்டறிந்தனர் . தம் எழுத்துக்களில் இதனை நிறுவினர் ; அதன் வழி சோஷலிசத்தை மார்க்சும் எங்கெல்சும் அறிவியல் பூர்வமாக வரையறை செய்தனர் .

 

சோஷலிசம் என்றால் என்ன , சுருக்கமாகச் சொல்க  என வினவினால் , “"Socialism means social ownership of production, distribution and exchange." "சோசலிசம் என்பது உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் ஆகியவை சமூகத்தின் பொது உடைமையாக இருப்பதாகும்." என்பதே பதிலாகும் .

 

இதனை ஈயடிச்சான் காப்பி மாதிரி எங்கும் ஒரேப்போல் சொல்ல இயலுமா ? நாட்டுக்கு நாடு சூழலுக்கு ஏற்ப பொருத்துவது எப்படி ? இந்தியச் சூழலுக்கு என்ன செய்ய வேண்டும் ? “இந்திய நிலைமைகளில் சோசலிசம், 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் – இதுவே மாற்று. முன்னேறுவோம்!” என்கிற தோழர் எம் ஏ பேபியின் அறைகூவலை நோக்கி இன்னும் பேசுவோம்….

 

நவகவியின் கவிதை வரிகளோடு இப்போது விடை பெறலாம்...

 

“ ஆயிரம் காலம் மானிட விழிகள்

காண்கின்ற ஓர் கனவு

அத்தனை இமைகளும் பொத்தி வளர்த்திடும்

ஒற்றைப் பூங்கனவு

ஆழ நெஞ்சில் விழுதுவிட்டிறங்கிய

ஆதி நெடுங் கனவு

அதுதானே இங்கு பூக்கப் போகிற

நாளைய பொன்னுலகு.”

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

 

28 /11 /26.

 

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com    

 

 

 

 

 

 

 


 

   

0 comments :

Post a Comment