கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஏன் தத்துவம் படிக்க வேண்டும்?

Posted by அகத்தீ Labels: ,

 





தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 11 ]

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்  ஏன் தத்துவம் படிக்க வேண்டும்?

 

 

கேள்வி :

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்  ஏன் தத்துவம் படிக்க வேண்டும்? வேறெந்தக் கட்சியிலாவது இப்படி தத்துவம் படி , பொருளாதாரம் படி என்று சொல்லுகிறார்களா என்ன ? ஓட்டுப் போடத் தத்துவம் எதற்கு ?

 

 

பதில் :

 

நவம்பர் .7 - இன்று ரஷ்யப் புரட்சி தினம் . உலகைக் குலுக்கிய அந்த மாபெரும் மக்கள் எழுச்சியை இயக்கிய மூல தத்துவம் மார்க்சியம் .  வழிகாட்டிய ஆசான்  தோழர்  லெனின் . அந்நாளை அசைபோட்டபடி கேள்விக்குள் நுழைவோம்.

 

நண்பர் என்ன நோக்கத்தில்  கேள்வி கேட்டார் எனத் தெரியாது , ஆனால் , என் உறவினர் ஒருவர் சொன்னார் , ‘ அண்ணே ! ……. தங்கள் வழிகாட்டின்னு ஐந்து பேரு போட்டோவைத்தான் காட்டினாரு … அவங்களைப் பற்றி அவரும் பேசல … அவங்க கட்சிக்காரங்களுக்குத் தெரி்யுமான்னு தெரியலை … ஆனால் ஆட்சியை பிடிச்சிட்டாங்க … ரீல்ஸ்லேயே ஓட்டுறாங்க … நீங்களும் இருக்கீங்க தத்துவம்,பொருளாதாரம்னு புரியாமல் பேசி … நாசமாய்ப் போறீங்க….”

 

அரசியல் கட்சி என்றால் தேர்தலில் வெற்றி பெற ஏதாவது பேசினால்ப் போதும் என்கிற பொது புத்தி வலுவாக உள்ளது . கட்சி உறுப்பினர்கள் தம் கட்சித் தலைவன் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினால்ப் போதும் என்கிற  ‘நாயக வழிபாடு’ இங்கு ஆழமாக வேரூன்றி உள்ளது .ஆகவேதான் கட்சியில் இருப்பவர்கள் விபரமறிந்தவர்களாக மாறுவதை விரும்பாத போக்கு உள்ளது .கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு மாறாக ஒவ்வொரு உறுப்பினரும் அரசியல் சித்தாந்தத் தெளிவு பெற்றவராக இருக்க வேண்டும் என விரும்புகிறது .செயல்படுத்துகிறது .

 

இதன் பொருள் எல்லாம் கற்றுத் தேறியவர்தான் கட்சி உறுப்பினராக முடியும் என்பதா ? அல்ல .அல்லவே அல்ல . கட்சி உறுப்பினராக்கு முதலில் ,  தொடர்ந்து பயிற்சி அளித்து அறிவாயுதபாணியாய் மாற்று ! இதுவே நடைமுறை உத்தி .

 

தத்துவம் ,சித்தாந்தம் எனில் ஏதோ மனிதனுக்கு்ச் சம்மந்தமில்லாத விஷயம் அல்ல . வாழ்க்கை நெடுகிலும் உன்னை முடக்கிப் போடும்  வறட்டு வேதாந்தத்தை யார் கற்றுக் கொடுத்தது ?  “ எல்லாம் நம் தலைவிதி” , “ ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து வச்சிருக்கான்” “ உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” “ பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்னது மாதிரி , எதிர் கேள்வி கூடாது’ நம் மண்டையில் பழமொழியாக ,சொலவடையாக , புராணக் கதையாக ; ‘கேள்வி கேட்காமல் சரணடைந்து இருந்து தொலைக்க’ –  “வெந்ததைத் திண்று விதிவந்தால் சாக” யார் போதித்தார்கள் ? இப்படி இறுகிப் போயுள்ள பொது புத்தியை உடைக்க அறிவாயுதம் வழங்குவது தேவையா இல்லையா !

 

ஏனெனில் ,  ‘இவர் மாற்றுவார்’, ‘அவர் மாற்றுவர்’ என ஒவ்வொருவரையும் நம்பி நம்பி ஏமாறாமல் நம் பிரச்சனைகளுக்கு மூல காரணம் எது , அதை தலைகீழாய் மாற்றுவது எப்படி , என சமூக மாற்றத்துக்காக உழைப்பாளி வர்க்கத்தை தயார் செய்வதுதான் கம்யூனிஸ்ட் கட்சி .அதற்கு தத்துவ பலம் ஊட்டுவது  தொடர் பணி அல்லவா ?

 

நான் எழுதிய “ மார்க்சியம் என்றால் என்ன ? - ஒரு தொடக்க நிலைக் கையேடு” எனும் எளிய நூல் ஆரம்ப நிலை உறுப்பினருக்கு இதனை விளக்கும் .அதில் மூன்றாவது அத்தியாயத்தில் இக்கேள்விக்கு விடை இருக்கும் .  

 

 “…எந்தத் துறையில் பயின்றாலும் மனிதரோடு உரையாடவும் , உறவாடவும் வேண்டி இருக்கும் . அவரைச் சுற்றி இருக்கும் சமூகத்தின் நல்லதும் கெட்டதும் அவரிடம் தாக்கத்தை உருவாக்கவே செய்யும் . அப்படியாயின் அது குறித்து தெளிவான புரிதல் தேவையா , இல்லையா ?”

 

“ மனித குலத்தை நேசிக்கிறவர்கள் , முன்னேற்றத்தை விழைகிறவர்கள் தத்துவத்தைத் தேடாமல் இருக்க முடியாது.” சமூக மாற்றத்துக்கான ஒரு கட்சித் தத்துவ விழிப்புணர்வு இல்லாமல் எப்படி இருக்க முடியும் ?

 

ஏன் ஏழை ஏழையாகவே இருக்கிறான்? ஏன் பணக்காரன் பணக்காரனாகவே இருக்கிறான்? இது விதியா? கடவுள் செயலா? இல்லை, இதன் பின்னால் இருக்கும் சமூக விதிகள் என்ன என்பதை புரிய வைப்பதுதான் மார்க்சிய தத்துவம். வாழ்க்கை நெடுகிலும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் எண்ணற்ற சந்தேகங்களுக்கு விடைதேட ஒரு சமூக அறிவியல் பார்வை தேவை. அதைத் தருவதே இந்த சித்தாந்தம் .

 

மார்க்சியம் படிக்காதவன், ஒரு தொழிலாளியின் கஷ்டத்தை பார்த்து பரிதாபப்படுவான். மார்க்சியம் தெரிந்தவன்  கஷ்டத்திற்கான காரணம் முதலாளித்துவ சுரண்டல் என்று புரிந்து கொள்வான்.மாற்ற முனைவான்.

 

முதலாளித்துவம் தினமும் நமக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லும். "நீ கடுமையாக உழைத்தால் நீயும் முதலாளி ஆகலாம்", "இது எல்லாம் உன் தலைவிதி", "போட்டி இருந்தால் தான் முன்னேற்றம்" என்று.

 

இந்த கதைகளைக் கிழித்து எறிய தத்துவ ஆயுதம் வேண்டும். அதனைப் படிக்காவிட்டால், உனக்கு எதிராக நடக்கும் சுரண்டலைக் கூட நீ புரிந்து கொள்ள முடியாது. [ முன்னொரு கேள்வி பதிலில் இது குறித்து உரையாடி இருக்கிறோம்.]

 

மற்ற கட்சிக்காரன் ஓட்டு வாங்கினால் போதும். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அப்படி அல்ல,  நிலம் ஒரு சிலரிடம் எப்படிக் குவிந்தது? தொழிற்சாலையை எப்படி லாபம் ஈட்டுகிறது ?அந்த லாபத்தை எப்படி சமூகத்துக்குத் திருப்பித் தருவது ,கல்வியை  மருத்துவத்தை எப்படி எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது ,எல்லோருக்கும் வேலை ,வீடு ,மருத்துவம் வழங்குவது எப்படி என ஒவ்வொன்றுக்கும் சரியான இலக்கும் திட்டமும் வேண்டும். பாலின சமத்துவத்திற்கு என்ன செய்ய வேண்டும் , மூடத்தனங்களை அகற்ற செய்ய வேண்டியது என்ன ? அதற்கு சமூகம் ,அறிவியல் ,பொருளாதாரம் தெரிய வேண்டும், வரலாறு தெரிய வேண்டும்.தத்துவம் தெரியவேண்டும்.அதனால்தான் லெனின் சொன்னார்: "புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இல்லை"

 

மற்ற கட்சிகளுக்கு விபரமறிந்த உறுப்பினர்கள் தேவை இல்லை, ரசிகர் கூட்டம் அல்லது கூட்டத்தில் கோவிந்தா போடும் ஆட்கள் போதும்.ஆகவேதான் மிஸ்ட் காலில் உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள் . கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்படிப்பட்ட  ‘ஆமாம் சாமி’ நபர்கள் போதாது, சிந்திக்கத் தெரிந்த உறுப்பினர்கள் வேண்டும்.

 

"கற்றுக் கொள்ள வெட்கப்படாதே. நமக்கு தெரியாததைத் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். அறிவாளிகளிடம் மட்டுமல்ல, சாதாரண மக்களிடமும் கற்க வேண்டும்."என்பார் வியட்நாம் புரட்சிக்காரர் தோழர் ஹோ-சி-மின்.

 

"வரலாறு என்னை விடுதலை செய்யும் - History will absolve me" - இது கியூப புரட்சியின் தளநாயகன் தோழர் ஃபிடல் காஸ்டிரோ நீதிமன்றத்தில் பேசியது. தோற்றாலும் தத்துவம் வெல்லும் என்ற நம்பிக்கை மிக்கவர் அவர் . புரட்சி என்பது வெறுமே ஆட்சியைப் பிடிப்பது மட்டும் அல்ல ; மனிதர்களைத் தத்துவ அறிவு மிக்கவர்களாய் வளர்த்தெடுப்பது தம் தலையாயப் பணி என நம்பிச் செயல்பட்டவர் .

 

 நடைமுறையில் ஒரு சர்க்கரை நோயாளிக்கு வெறுமே மருந்தை மட்டும் பரிந்துரை செய்வதில்லை ; மாறாக ‘ சர்க்கரை வியாதி பற்றிய விழிப்புணர்வை’யும் சேர்த்தே வழங்குகிறார் நல்ல மருத்துவர் . சமூகத்தைப் பீடித்துள்ள வறுமை ,ஏற்றதாழ்வு ,சமூக அநீதி ,ஒடுக்குமுறை ,சுரண்டல் ,ஆதிக்கம் என எண்ணற்ற நோய்களின் மூல விஷவேரை அடையாளம் காட்டவும் , புரிந்து கொள்ளவும் தத்துவப் பயிற்சித் தவிர்க்க முடியாதது அல்லவா ?

 

வெறும் தத்துவம் பேசி காலத்தை ஓட்டுவது பிழை .  “தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டுத்தனமானது ; நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனமானது” [ "Theory without practice is sterile and practice without theory is blind."] என்றார் தோழர் லெனின் . ஆக தத்துவம் பயில்வது என்பது ஒருவரின்  ‘ஞான விலாசத்தை’ வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல ; போராட்டக் களத்தில் உயிரோட்டமாக வழிகாட்டவே .பின்பற்றவே .

 

அது சரி ! மார்க்சியத் தத்துவத்தை நெட்டுருப் போட்டுவிட்டால் ; களத்தில் வழிகாட்ட முடியுமா ? இப்படியும் கேள்வி எழலாம் . மார்க்சியம் வறட்டு சித்தாந்தமல்ல ; செயலுக்கு வழிகாட்டி . செயலுக்கு வழிகாட்டி என்கிற போது  , மார்க்சியம் சுட்டும் பொருளாதாரம் ,தத்துவம் ,வரலாறு பற்றி மட்டுமே தெரிந்தால் போதாது . எதிரியின் தத்துவம் ,வரலாறு எல்லாமும்தான் தெரிய வேண்டும் . தன் பலம் ,பலவீனம் மட்டுமல்ல ; எதிரியின் பலம் ,பலவீனம் இவற்றையும் தெரிய வேண்டும் .

 

இன்றைக்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிரி இந்துத்துவ பாசிசம் . அப்படி ஆயின் அதன் தத்துவ வரலாற்று வேர் கட்டாயம் தெரிய வேண்டும் . தோழர் விஜயசங்கர் மொழிபெயர்த்த  ஏ.ஜி .நுராணி எழுதிய “ ஆர் எஸ் எஸ் : இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல்” எனும் நூலை -அது போல் வெளிவந்துள்ள பிற நூல்களையும் பயில வேண்டும் . தமிழநாட்டில் திராவிட இயக்கம் வலுவானது அதற்கு ஓர் தத்துவப் பின்புலம் உண்டு .அதில் நல்ல கூறுகள் உண்டு ; பலவீனங்களும் உண்டு அதையும் கற்றுத் தேற வேண்டும். அம்பேத்கரின் பங்கை ,பெரியாரின் பங்கை  அறியாமல் இந்தியாவில் பாசிசத்தை எதிர்த்த போர் சரியான வியூகத்தில் அமையாது . அவற்றையும் கற்க வேண்டும் .

 

மார்க்சியம் என்பது சுயம்பாய் எழுந்த தத்துவம் அல்ல . நெடிய தேடலில் மார்க்ஸ் பலநாட்டு தத்துவம் ,பொருளாதாரம் ,அரசியலூடே கண்டடைந்தது . உருவாகும்போதே சர்வதேசத் தன்மையோடுதான் உருவானது . “ சுருக்கமாகச் சொல்வதெனில் ஜெர்மன் தத்துவம் ,பிரிட்டிஷ் பொருளாதாரம் , பிரெஞ்சு சோஷலிசம் என்கிற மூன்று தோற்றுவாய்களில் இருந்து மார்க்சியம் உருவானது.” [ பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசலாம்.]

 

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக அதன் உறுப்பு அமைப்புகள் தங்கள் ஊழியர்களுக்கு இடைவிடாமல் தம் அழுகிய சித்தாந்தத்தைப் போதித்துக் கொண்டே இருக்கிறார்கள் . அதை எதிர் கொள்ள நாமும் அறிவாயுதபாணி ஆக வேண்டும் . மார்க்சியம் என்பது சமூக அறிவியல் .அதனை கற்பது என்பது ஒரு தொடர் முயற்சியாகவே அமைய முடியும் .

 

மார்க்சியம் என்பது வெறுமே அரசியல் மாற்றத்துக்கானச் சித்தாந்தம் மட்டுமல்ல ; வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்விலும் தேடலிலும் வாழ்வியலுக்கு வழிகாட்டும் தத்துவமும் ஆகும் . இனி வரும் கேள்வி பதில்களில் வாய்ப்பு கிடைப்பின் அது பற்றியும் உரையாடுவோம்.

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

 

07 /11 /26.

 

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com    

 

 

 

 

 


 

 

 

 

 

 

0 comments :

Post a Comment