எத்தனை
எத்தனை கட்சிகள்? [தொடர்]
எத்தனை
எத்தனைக் கொடிகள் ? – 1
25 January 2026
நான்
பஸ்ஸில் பயணிக்கும் போது வழியில் விதவிதமான கட்சிக் கொடிகளைப் பார்க்கிறேன். பல நேரங்களில் அவை
எந்தெந்தக் கட்சிக் கொடி என அடையாளம் காண
முடியாமல் திணறுவதும் உண்டு. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்க் கட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அது போல் காணாமலும் போய்க்கொண்டே இருக்கின்றன. கட்சி என்பது என்ன வியாபாரமா? கடை திறப்பதும் மூடுவதுமாக இருக்கிறதே! இவ்வளவு கட்சிகள் தேவையா? ஏன்? எதற்கு? இது பற்றிக் கொஞ்சம் உரையாடலாமே!
தமிழ்நாட்டில்
44 கட்சிகளின் பதிவைத் தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. அவற்றில் ஓரிரு கட்சிகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர் உண்டு. ஆனால் வேறு கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டதால் இந்த இழப்பு. பல கட்சிகள் பெயரையே
கேள்விப்பட்டதில்லை. இந்தியா முழுவதும் 343 கட்சிகள் பதிவை இழந்துள்ளன.
தேசிய
மற்றும் மாநிலக் கட்சிகள்
தற்போது
இந்தியா முழுவதும் அகில இந்திய அளவில் சின்னம், கொடியோடு தேர்தல் ஆணையத்தால் ஏழு தேசியக் கட்சிகள் (National
Parties) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மாநில அளவில் 67 (State Parties) கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது போக 2854 கட்சிகளுக்கு நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் RUPP (Registered
Unrecognised Political Parties) என்கிற
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய
தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், என்சிபி எனப்படும் தேசிய காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய ஏழும்தான் தேசியக் கட்சிகள். நாடு தழுவிய முறையில் கொடி, சின்னம் இவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இவை. இதில் கடைசி இரண்டும் அத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததால் தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலை உள்ளது.
திமுக,
அஇஅதிமுக, விடுதலை சிறுத்தைகள், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரளா காங்கிரஸ், சிவசேனா, அகாலிதளம் போன்ற 67 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகள். இவற்றின் கொடி, சின்னம் போன்றவை மாநில எல்லைக்கு உட்பட்டவை. உதாரணம்: மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், என்.டி. ராமராவின் தெலுங்கு தேசம், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்குமே சைக்கிள் சின்னம்தான்.
ஒவ்வொரு
கூட்டணியிலும் டஜன் கணக்கில் கட்சிகள் இருக்கும். ஆனாலும் வேட்பாளரை நிறுத்திப் போட்டியிடும் கட்சிகள் குறைவே. இவ்வளவு கட்சிகள் ஏன்? கட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமா? இரு கட்சி ஆட்சிமுறை சாத்தியமா? இவ்வளவு கட்சிகள் இயங்க அல்லது உருவாக யார் செலவு செய்கிறார்கள்? எதிர்பார்ப்புகள் என்னென்ன? கேள்விகள் எழுகின்றன. தொடர்ந்து பார்ப்போம்.
அரசியல்
கட்சிகளின் தோற்றம்
அரசியல்
கட்சிகள் என்றால் என்ன? எப்போது தோன்றியவை இவை? முதலில் இக்கேள்வியிலிருந்து நம் அலசலைத் தொடங்குவோம்.
வேட்டைச்
சமூகத்தில் வேட்டைக்குழுக்களுக்குத் தலைவன் இருந்திருப்பான். அவன் உடல் வலிமையே அவனைத் தலைவனாக்கி இருக்கும். பின் அடிமைச் சமூகத்தில் எழுச்சிகளுக்குத் தலைமை தாங்கிய ஸ்பார்ட்டகஸ்களுக்கு அரசியல் கட்சி இருந்ததாகத் தெரியவில்லை; அவை தன்னெழுச்சிப் போராட்டங்கள்தாம்.
நிலப்பிரபுத்துவ
சமூகத்தில்தான் அரசு உருவாக்கம் பெற்றது. அப்போதே அரசியல் வந்து விட்டது. வள்ளுவன் கூட அரசியல் போதித்தான். சில அதிகாரங்களை அதற்காகவே ஒதுக்கினான். மன்னருக்கு எதிராகக் கலகங்கள் தோன்றின. ஆனால் அவை கட்சிகளாக வடிவம் கொள்ளவில்லை. அரசியல் முதலில் வந்து விட்டது; கட்சிகள் வரவில்லை.
தொழிற்புரட்சியின்
விளைவாகச் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. மறுமலர்ச்சி யுகம் தோன்றியது. கத்தோலிக்க மதம் புதிய சூழலுக்கு ஈடு கொடுக்கப் போதுமானதாக இல்லை என்கிற நிலையில் ஐரோப்பாவில் புராட்டஸ்டண்ட் மதம் உருவானது. ஆக, அரசியல், சமூக, பொருளாதார நிர்ப்பந்தங்கள் புதிய வழிகளைத் தேடின. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி எங்கும் அரசியல் தட்பவெப்பம் மாறியது; பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளும் எழுச்சியும் முளைவிட்டன.
தொழிற்புரட்சியைத்
தொடர்ந்து தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க மன்னராட்சி போதுமானதாக இல்லை. மன்னராட்சிக்கு எதிரான உணர்வு மக்களிடம் கொந்தளிக்கும் போது ஜனநாயகக் கருத்தோட்டம் கருக்கொள்கிறது. மன்னர் என்பவர் கடவுளின் பிரதிநிதி என்கிற பழைய கருத்தோட்டம் காலவதியாகத் தொடங்கியது.
இதன்
ஒரு முனையாகத் தங்கள் கோரிக்கைகளைத் தேவைகளைச் சொல்லத் தனித்தனியாக முயல்வதைக் காட்டிலும் நாலு பேராகச் சேர்ந்து கேட்டுச் செய்தால் நல்லது, நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலு பேர் அவசியம் என்கிற கூட்டுணர்வு காரணமாகப் பல்வேறு அமைப்புகளாகப் பல்வேறு பிரிவினர்களால் உருவாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் என்ற வடிவம் மெல்ல முகிழ்த்தது.
ஒரு
குழு அல்லது ஒரு சாரார் ஆட்சி அதிகாரத்தில் தம் பங்கைப் பெற ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பே கட்சி எனக் கொள்ளலாம். ஆரம்பத்தில் தெளிவான சித்தாந்த அடிப்படையிலோ கறாரான அமைப்பு வடிவிலோ கட்சிகள் உருப்பெற்றிருக்க வாய்ப்பில்லை. காலகதியில் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தின் முக்கியப் பங்காளிகள் ஆகத் தொடங்கின. கட்சி அமைப்பு ஒரு திட்டவட்டமான வடிவம் பெறலாயிற்று.
ஐரோப்பாவில்
கட்சிகளின் வளர்ச்சி
17-ஆம்
நூற்றாண்டின் இறுதியில், அரசியல் கட்சிகள் முழு வடிவம் பெறத் தொடங்கின எனில் மிகையல்ல. ஐரோப்பாதான் அவற்றின் பிறப்பிடம் எனில் பிழை இல்லை. லண்டனில் 1682-ல் தி டோரிக்
கட்சி (The Tory
Party) உருவானதாக ஒரு செய்தி உள்ளது. கிட்டத்தட்ட அதே ஆண்டு தி விக் கட்சி
(The Whig Party) உருவானதாகவும்
கூறப்படுகிறது.
1688-89 ஆம்
ஆண்டுகளில் இங்கிலாந்தில் புரட்சி ஏற்படுகிறது. கத்தோலிக்க அரசர் ஜேம்ஸ் என்பவர் கையில் இருந்த அதிகாரம் மகள் மேரி கைக்கு மாறியது. ஜேம்ஸின் மகள் மேரியோ டச்சுத் தேசத்தவரும் புரட்டஸ்டாண்ட் மதப்பிரிவைச் சார்ந்தவருமான வில்லியம் ஆரஞ்சைக் கணவராக ஏற்றுக் கொண்டவரே. இதுவே அன்றைக்குப் பெரிய செய்தி. மேரியின் மறைவைத் தொடர்ந்து 1694-ல் வில்லியம் இங்கிலாந்து,
ஸ்காட்லாந்து, அயர்லாந்து மூன்றுக்கும் மன்னராகிறார். அப்போது ’ஜாக்கோபிசம்’ எனும்
அரசியல் இயக்கம் பழைய மன்னர் ஜேம்ஸைக் கொணர முயற்சி மேற்கொள்கிறது.
இந்தப்
பின்னணியில்தான் ஒப்பீட்டளவில் புரட்சிகரக் கட்சி எனக் கருதப்படும் தி விக் கட்சி
(The Whig Party), பழமைவாதக்கட்சி
எனக் கருதப்படும் தி டோரிக் கட்சி
(The Tory Party) இரண்டும்
களத்துக்கு வந்தன. ஒப்பீட்டளவில் இரத்தம் சிந்தாப்புரட்சி எனப்படும் இங்கிலாந்து எழுச்சியில் மன்னராட்சியும் ஜனநாயக ஆட்சியும் சமரசம் செய்து கொண்டன. வலிமையான பாராளுமன்றமும் இருக்கும், மன்னராட்சியும் ஆட்சித் தலைமையாகத் தொடரும். இந்த ஏற்பாடு, அங்கு இன்று வரை தொடர்கிறது. மன்னரின் அதிகாரம் படிப்படியாக நீர்த்துப் போயினும் அதே பாணி அரசமைப்புத் தொடர்கிறது.
தி
விக் கட்சி, தி டோரிக் கட்சி
இரண்டும் ஒன்றாக இணைந்து 1859-ல் லிபரல் கட்சி
உதயமானது; பின்னர் இவை பிரிந்தன. கட்சிகள் இணைவதற்கும் பிரிவதற்கும் கூட அவர்களே முன்னோடிகள் போல. 19-ஆம் நூற்றாண்டில் கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி எனப் பல கட்சிகள் தோன்றின.
இடது, வலது என்கிற சிந்தனை ஓட்டம் பிரெஞ்சு தேசத்திலிருந்து இங்கிலாந்துக்குள் பரவியது.
அமெரிக்காவிலும்
தி பெடரலிஸ்ட் கட்சி (1789), தி டெமாகிரட்டிவ் ரிபப்ளிக்
கட்சி (1794), தி டெமாக்ரட்டிக் கட்சி
(1828), ஆண்டி மொசானிக் கட்சி (1882), தி விக் கட்சி
என பல கட்சிகள் உருவெடுத்தன.
அங்கு தற்போது ரிபப்ளிக்கன் கட்சி, குடியரசுக் கட்சி என இரண்டு கட்சிகளே
வலுவாக உள்ளன. அண்மையில் எலான் மஸ்க் ஒரு கட்சியைத் தொடங்கி உள்ளார். வேறு பல சிறிய கட்சிகளும்
உண்டு.
இப்படியே
ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இதே காலகட்டத்தில் முன்னும் பின்னுமாகப் பல அரசியல் கட்சிகள்
உருவெடுத்தன.
ஜனநாயகத்தின்
வருகை
ஜனநாயகக்
காற்று வீசத் தொடங்கியது. பல்வேறு அரசியல் கொந்தளிப்புகள் மையம் கொண்டன. சொல்லப் போனால் நாம் இன்று அனுபவிக்கும் ’வாக்குமுறை ஜனநாயகம்’
/ ‘தேர்தல் ஜனநாயகம்’
என்பது மேற்கின் கொடைதான். இதைச்சொன்னால் ’குடவோலை போட்ட நம் மரபு’ என உருட்ட வேண்டாம்.
அது குறுகிய எல்லைக்கு உட்பட்ட, அதிகாரமற்ற ஆலோசனைக் குழு, அவ்வளவே. மன்னராட்சிக்கு உட்பட்டதே அது. நாம் இன்று நடைமுறையில் அனுபவிக்கும் ஜனநாயகம் மன்னராட்சியில் கிடையாது; அது வேறு, இது வேறு. கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஜனநாயகம் என்ற கருத்தாக்கமே நவீன உலகுக்கு உரியது. கொடுங்கோல் ஆட்சி, செங்கோல் ஆட்சி என்பதுதான் பழைய பார்வை. இரண்டுமே மன்னர் ஆட்சி பற்றிய சொற்களாகவே அப்போது புழங்கின.
“நெல்லும்
உயிரன்றே; நீரும் உயிரன்றே
மன்னன்
உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால்,
யானுயிர் என்பது அறிகை
வேன்
மிகு தானை வேந்தற்குக் கடனே”
என்பார்
புலவர் மோசிகீரனார். “திறமையான படைபலம் மிக்க மன்னா! தானைத்தலைவா…! நீ
கேள். மக்களுக்கு உயிராக இருப்பது மன்னனாகிய நீ மட்டும்தான். நெல்லும்
வாழ்வளிக்காது. நீரும் உயிர் கொடுக்காது. அதை உணர்ந்து நல்லாட்சி கொடு! மன்னவா!” என்று பொருள் கூறுவார்கள். இந்த அரசனுக்கு ஆலோசனை சொல்ல அவை இருக்கலாம். அவை பெரும்பாலும் மன்னனின் பொம்மை மண்டபமே! ஆக, ஜனநாயகம் என்பது நவீன காலத்தின் ஆக்கமே!
எப்படித்
தொழில் புரட்சி முதலில் ஐரோப்பாவில் பரவி பின்னர் மெதுவாக சந்தை தேடி காலனி நாடுகளுக்கு வந்ததோ, அதே போல், அந்தத் தொழில் புரட்சி வழியும், வியாபாரம் வழியும், அவர்களின் ஆங்கிலமும் அதன் வழியுமாகவே ஜனநாயகச் சிந்தனையும் நம்மை எட்டின என்பதே வரலாறு. இந்த ஜனநாயகம் முழுமையானதா? யாருக்குச் சாதகமானது? ஜனநாயகம் ஏன் தொடர வேண்டும்? இந்த ஜனநாயகத்துக்கு மாற்று எது? இப்படி எழும் கேள்விகளுக்குள் நுழையும் முன்பு இந்தியாவில் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு பருந்துப் பார்வை செலுத்தலாம்.
தொடரும்…
-சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :
Post a Comment