அறிவியல் அறிவோம் . அறிவியலால் இணைவோம்.

Posted by அகத்தீ Labels:

 


அறிவியல் அறிவோம் . அறிவியலால் இணைவோம்.

 

 

[ 11 /01 /25 ஞாயிற்றுக் கிழமை ஓசூரில் நடை பெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு ‘ அறிவியல் அறிவோம் ; அறிவியலால் இணைவோம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரை .]

 

1]

நண்பர்களே ! அறிவியல் இயக்க செயல்வீரர்களே ! உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .

 

[ “ குடும்பம் நடத்தவும் அரசியல் நடத்தவும் அறிவியல் தேவை” என தொடர்ந்து நமக்கு அறிவுறுத்திய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை நினைவு கூர்ந்து உரையைத் துவக்கினார் . 1930 களில் தள்ளாத வயதில்  முழுக்க முழுக்க அறிவியலுக்காக ‘ புது உலகம்’ எனும் ஏடு தொடங்கிய சிங்காரவேலரை சுட்டிக்காட்டிப் பேச்சை ஆரம்பித்தார் .]

 

“ அறிவியல் அறிவோம்.அறிவியலால் இணைவோம்” என்பது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு . தலைப்பைப் பார்த்ததும் மிரண்டுவிடாதீங்க ! நான் சயின்ஸ் வாத்தியாரும் அல்ல . நான் சயின்ஸ் பாடம் நடத்தவும் வரவில்லை .

 

அறிவியல் துணையின்றி நம் வாழ்க்கையின் ஒரு நொடியேனும் நகர்கிறதா ? உங்களில் எத்தனை பேர் கையில் அலைபேசி [ mobile ] இருக்கிறது ? பார்த்தீர்களா அனைவரும் அறிவியலோடுதான் நக்ர்கிறோம் .ஆனால் அறிவியலாய் வாழ்கிறோமா ? இதுதான் கேள்வி .

 

என்ன சார் ! விசு மாதிரி குழப்ப ஆரம்பிச்சிட்டீங்க !

 

அறிவியல் என்பது நெட்டுருப் போட்ட சூத்திரங்களோ , மெத்தப் படித்த மேதாவித்தனமோ அல்ல ; வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நம் கையைப் பிடித்து வழி நடத்துவதாகும் . இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் துணையின்றி ஒரு நிமிடம்கூட நாம் நகரவில்லை . உங்கள் கைபேசி உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ? பிறகு பார்ப்போம் .

2]

முதலில் ,ஒரு கவிதை சொல்கிறேன் . புனிதா ஆறுமுகம் எழுதியது .

 

“ அக்னி மூலையில்

அழகான விறகடுப்பு

அம்மாச்சிக்கு…

 

அடுத்துவந்தது

 பாட்டிலை

நடுவில் வைத்த

மரத்தூளால்

அச்சமைக்கப்பட்ட

பொடி அடுப்பு …

 

அம்மா காலம்

சீமை எண்ணை

ஸ்டவ் அடுப்பு

 

பம்ப் ஸ்டவ்

அக்கா காலம்….

 

இண்டேன் பார்த்ததும்

இலவசங்களும்

இன்றே விநியோகமாச்சு

சிலிண்டரில்

எரிவாயு அடுப்பாக …

 

அடுப்புகள் மாறின

அடுக்களை நவீனமாச்சு

ஆனால்

சமைக்கிற ஆள் மட்டும்

அதே அம்மா…”

 

இந்தக் கவிதையில் கடைசி பத்தி தவிர மற்றவை அறிவியல் வளர்ச்சியின் தகவல்கள் . ஆம் அறிவியல் நம் அடுக்களையில் எரிவாயு அடுப்பாக , குக்கராக ,மிக்ஸியாக ,கிரைண்டராக ,குளிர் சாதனப் பெட்டியாக நுழைந்து கொண்டே இருக்கிறது. வீட்டின் மூலையில் இருண்ட சமையல் அறை இல்லை . நல்ல வெளிச்சமான மாடுலர் கிட்சன் வந்துவிட்டது .ஆனால் நம் மூளையில் பாலின சமத்துவத்தை வேர்விடச் செய்திருக்கிறதா ? வீட்டு வேலையை ஆணும் பெண்ணும் பகிரச் செய்திருக்கிறதா ? அது வரும் போதுதானே அறிவியலின் பலன் வந்து சேரும் . இதுதானே அறிவியல் பார்வை .

3]

சரி இப்போது அலைபேசி [ மொபைல் ]க்கு வருகிறேன் .

 

தினசரி நாலு சாவுச் செய்தியாவது கண்ணில் படாமல் விடியாது . நாலு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் பொழுது அடையாது . சரி ! உங்கள் கொள்ளுத் தாத்தா காலத்தில் சாவுச் செய்தியை எப்படிச் சொன்னார்கள் ? யாரோ ஒருவர் ஓடி ஓடி பல மைல் கடந்து பலநாடுகளுக்குப் பிறகுதான் சாவு செய்தியே தெரியும் .

 

ஊருக்கு நல்லது கெட்டது எப்படித் தெரியும் பறையடித்து செய்தி சொல்லுவார்கள் .

 

இதற்கென ஒரு சாதியையே உருவாக்கி இழிவு படுத்தி அடிமைப் படுத்தி அவமானப்படுத்தி வைத்திருந்தோமே நியாயமா ?

 

பின்னர் தபால் அட்டை வந்தது. 1836 இல் தந்தி வந்தது .

 

இன்று ஒவ்வொருவரும் சாவுச் செய்தியை பரிமாறுகிறோம் வாட்ஸ் அப்பில் . ஆனாலும் பழைய சாதி இழிவை தூக்கி எறிந்துவிட்டோமா ?

4]

அலைபேசி நமக்கு நல்லது செய்கிறதா தீமை செய்கிறதா ?

“இடும்பைகூர் அலைபேசி..” தலைப்பில் 2011 செப்டம்பரில் நான் எழுதிய கவிதை .

 

 “அலைபேசி,கைபேசி

செல்.மொபைல் - உன்

பெயர் எதுவானால் என்ன?

பிரச்சனை பிரச்சனைதான்

 

உன்னோடு

வாழவும் முடியவில்லை

நீ இன்றி

வாழவும் முடியவில்லை..

 

அரக்கப் பரக்கவேலைசெய்து

கொண்டிருக்கும்போதும்...

அவசரமாக கழிப்பறையில்

ஒதுங்கும்போதும்...

பசி பொறுக்காமல்

உணவுக் கவளத்தை

விழுங்கும்போதும்..

ஒலி எழுப்பி

நிம்மதி கெடுக்கிறாய்..

 

உரையாடலை முறிக்கிறது

உன் டயல் டோண்..

தொடர்புஎல்லைக்கு வெளியே

இருப்பதாய்க் கூறி

உறவையே முறிக்கிறாய்

 

நீ இன்றி

எந்த ரகசியமும் இல்லை

உன்னிடம்

எதுவும்

ரகசியமாய் இல்லை..

 

கடன்காரன்

அழைக்கும்போது

சட்டென இணைக்கிற நீ

தேவையான நேரத்தில்

கிட்டாமலே வெட்டியும் விடுகிறாய்..

 

படம் பிடிக்கிறாய்

பாட்டும் படிக்கிறாய்

போட்டும் கொடுக்கிறாய்

 

நீ கூட இருந்தால்

கூட்வே ஒரு ஆள்

துணை இருப்பதாய்

ஒரு ஐதீகம்..

ஆனால்

கூடவே ஒரு

ஒற்றன் இருப்பதை

அனுபவம் சொல்லும்

 

இடும்பை கூர்

அலைபேசி

உன்னோடு வாழ்வதரிது

நீஇன்றியும்

வாழ்க்கை அரிது..

என் செய்வேன்

நோக்கியோனே!”

 

இந்த அலைபேசியால் நொந்துபோனவர்கள் மேலைநாடுகளில்  ’ 0 போஸ்டிங்’ என ஒரு இயக்கம் தொடங்கிகின்றனர் . முகநூலில் ,இன்ஸ்ட்டா கிராமில் , வாட்ஸ் அப்பில் எதையும் பகிராத நாள் ,வாரம் ,மாதம் என கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர் .

 

இப்போதெல்லாம் அலைபேசி பணம் பரிவர்த்தனைக்கு மட்டுமா பயன்படுகிறது ; பணம் பறிக்கவும் ; ஏமாற்றவும் , மிரட்டவும் , பின் தொடரவும் பயன் படுகிறது . வாட்ஸ் அப்பில் வருவதெல்லாம் உண்மையா ? அறிவியலா ? சரியா ? எதையும் நம்பாதே . கேள்வி கேள் . வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் படிச்சு மேதையாக முடியாது . சொடக்குப் போடும் நேரத்தில் தகவல்கள் கொட்டும் ஆனால் அவற்றை கேள்விக்கு உட்படுத்தி உண்மையை சோதித்து அறிவதுதான் அறிவியல் பார்வை ஆகும் .

 

இது உணர்ச்சி வேக முடிவாக இருக்கலாம் . ஒரு போதும் தீர்வாகாது . அறிவியல் கருவியை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்வியே தவிர .கருவியே பிழை அல்ல . சமூக வலைதளமோ அலைபேசியோ பிழை அல்ல . பயன்படுத்தும் நம்மிடம்தான் கோளாறு உள்ளது .கத்தியே கூடாது என முடிவெடுக்க முடியுமா ?கத்தி வேண்டும் .அதன் பயன்பாட்டை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் .அறிவியலும் அப்படித்தான் .

 

“ விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று புரசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னாரே!  அந்த விசாலப் பார்வையை உன்னில் விதைக்கத்தானே அறிவியல் !

5]

என் பெயரன் இப்போது ஐந்தாவது படிக்கிறான் .அடிக்கடி என்னிடம் வானவியல் பற்றி கேள்வி கேட்பான் . பெரும்பாலும் தெரியாது .முழிப்பேன் .அவன் சொல்லுவான். அந்தக் கிரகத்துக்கு எத்தனை நிலா, இந்தக் கிரகத்துக்கு எத்தனை நிலா, அந்தக் கிரகம் என்ன நிறம் ,இந்தக் கிரகம் என்ன நிறம் ; எல்லாம் அவனுக்கு அத்துப்படி . துளிர் விநாடிவினாவில் பங்கேற்போருக்கும் இவை தெரியும் . இது அறிவியல் தகவல் ஞானம் . இதுவே அறிவியல் பார்வையாகாது .

 

செவ்வாய் [ mars] ஓர் அழகான கிரகம் . சூரியக் குடும்பத்தில் உள்ள ஓர் கிரகம் .சூரியனுக்கு நான்காவது உள்ள கிரகம் . இதன் மேல்பரப்பில் இரும்புத் தாது இருப்பதால் செந்நிறமாக இருக்கும் . சூரியனைச் சுற்றிவர கிட்டத்தட்ட 780 நாட்கள் ஆகும் . நீள்வட்டப் பாதையில் சுற்றும் செவ்வாய் பூமிக்கு அருகில் வரும் போது மூன்றரைக் கோடி மைல் தூரத்தில் இருக்கும் . விலகிப் போகும் போது 23.5 கோடி மைல் தூரத்தில் இருக்கும் .அது அதன் போக்கில்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது . நம்ம வீட்டில் கல்யாணம் ஆகாமல் ஒரு பெண் இருந்தால் , பழி செவ்வாய் மேலே . செவ்வாய் தோஷம் எனச் சொல்லிவிடுவோம் . சாதி ,மதம் , வரதட்சணை , ஆணாதிக்கம் , குடும்ப கவுரம் என்கிற வறட்டுத்தனம் ,விருப்பமின்மை , பொருளாதார நெருக்கடி இப்படி நம்மிடம் ஆயிரம் போலிக் காரணங்களை வைத்துக் கொண்டு பழியை செவ்வாய் மீது போடுவது என்ன நியாயம் ?இந்த செவ்வாய் தோஷம் சீனனை ,ஜப்பானியரை , ஐரோப்பியரை ஏன் பிடிப்பதில்லை ?

6]

சனி அழகான கிரகம் . சுற்றி ஓர் வட்ட வளையத்திற்குள் நடுவில் சுழலும் பந்துபோல் ரம்மியமாக இருக்கும் . பந்து மஞ்சள் நிறமாகவும் வளையம் வெள்ளையும் ஜொலிப்பும் கொண்டதாக இருக்கும் . பூமியைவிட ஒன்பது மடங்கு பெருசு . பூமியிலிருந்து சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது . சூரியனுக்கு ஏழாவதாக இருக்கும் . சூரியனை ஒரு முறை சுற்றிவர 29.5 வருடமாகும் . சனியைச் சுற்றி 61 நிலாக்கள் இருக்கும் மேலும் 200க்கும் மேற்பட்ட குட்டி நிலாக்களும் இருக்கும் .அது யார் வாழ்க்கையையும் எப்போதும் பாதிக்காது .

 

ஏழரைச் சனி ,அஷ்டமத்து சனி , பொங்கு சனி ,மங்கு சனி ,விரையச் சனி ,பாதச் சனி ,ஜென்மச் சனி இப்படி விதவிதமாய்  நாமம் இட்டு பயந்து சாகிறோம் . எந்தச் சனியும் நமக்கு கெட்டதும் செய்யாது . நல்லதும் செய்யாது .அது அதன் வேலையே அல்ல

 

வானில் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் .இயங்கிக் கொண்டே இருக்கும் . அதன் விண்வெளி வானவியல்  அறிவியலை அறிந்ததால்தான் . விமானம் இயக்குகிறோம் . ராக்கெட் விடுகிறோம் . பல அறிவியல் முயற்சிகளைச் செய்கிறோம் .

 சோதிடக் குடுவைக்குள் அடைத்தால் நம் முன்னேற்றம்தான் தடை படும் .செய்யலாமோ சொல்லுங்கள் !

7]

 “விடைகளைக் கண்டு பிடிப்பது மட்டுமல்ல ; வினாக்களை எழுப்புவதும் அறிவியல் பணியே !” என்றார் அறிவியல் அறிஞர் ஜன்ஸ்டின் .

 

அண்மையில் முட்டை சாப்பிட்டால் புற்று நோய் வரும் .  உணவு ஆராய்ச்சிக் கழகம் அதிர்ச்சித் தகவல் என சன் டிவியில் பரபரப்பு செய்தி ஓடியது .

 

உண்மை என்ன ? ஒரு பிராண்ட் கம்பெனி ”தாங்கள் விற்கும் முட்டை , “ முழுக்க முழுக்க இயற்கை உணவைக் கொடுத்து வளர்த்த கோழி முட்டை” என விளம்பரம் செய்தது .

 

அதை ஆராய்ந்த பின் அவர்கள் சொல்வது பொய் கோழித்தீவனம் போட்டிருக்கிறார்கள் . அதில் இன்னென்ன ரசாயணம் உள்ளது . புற்று நோயை உருவாக்கும் ரசயாணம் மிக மிகக் குறைந்த அளவு உள்ளது .அதுவும் எந்தப் பாதிப்பையும் உருவாக்காது . நாம் சாப்பிடும் பல உணவுகளில் இருப்பதுதான் . இந்த கம்பெனி முழுக்க முழுக்க இயற்கை உணவு ஊட்ட்டப்பட கோழியின் முட்டை என்று விளம்பரம் செய்ததுதான் பொய் . அந்த முட்டை தடை செய்யப்படவே இல்லை . மரச் செக்கு எண்ணை எனச் சொல்லி விற்கும்  மோசடி போல.

 

கோழி ,ஆடு ,மாடு , பன்றி ,முட்டை எல்லாம் மனிதர் சாப்பிடும் உணவே . தாவர உணவோ புலால் உணவோ எதைச் சாப்பிடுவது என்பது அவரவர் உரிமை .தேர்வு . இதில் மதப் புனிதம் காட்டி பழிப்பது அறிவியலற்றது .இந்தப் புனித கோஷ்டிதான் கோழிமுட்டைக்கு எதிராய் கூப்பாடு போட்ட கோஷ்டி .

 

தினசரி வாட்ஸ் அப்பில் அறிவியல் என்கிற பெயரில் வரும் போலி அறிவியல் செய்திகள் நம்மை மலைக்க வைக்கிறது . இதைச் சாப்பிடாதே! அதைச் சாப்பிடாதே! இப்படிச் செய் !அப்படிச் செய் !மருந்தே வேண்டாம் !இப்படி வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் . எல்லாவற்றையும் சந்தேகி . கேள்விக்கு உட்படுத்து ! அறிவியல் வழி அது ஒன்றுதான்.

8]

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்கிற மேலை தேசத்து மரபணு விஞ்ஞானி தம் பத்து வயது மகளுக்கு எழுதிய கடிதம் உலகப் புகழ் பெற்றது .கோடிக்கணக்கானோர் வாசித்துவிட்டனர் . இன்றும் கூகுளில் போய்

Richard Dawkins letter to his 10 years old daughter on Science and Faith என டைப் செய்தால்  எட்டு பக்கக் கடிதம் வாசிக்கக் கிடைக்கும் .தேடி வாசியுங்கள் .

 

அதில் அவர் சொல்கிறார் ,

” The way scientist use evidence to learn about the world is mauch cleverer and  more complicated than I can say in short letter . But now I want to move on from evidence , which is good reason for believing anything and warn you against three bad reasons for believing anything. They called ‘tradition’, ‘authority’,’revelation’.”

 “அறிவியலாளர்  இந்த உலகத்தைப் உரிந்து கொள்ள ஆதாரங்களைப் பற்றி நிற்பர் .  அது கடினமானதும் மிகவும் சிக்கலானதும் கூட . ஆதாரம் கோருவது என்பதிலிருந்து விலகி ஏதாவது ஒன்றை நம்புவதற்கு மூன்று தவறான காரணங்களை ஏற்கக்கூடாது என எச்சரிக்கிறேன் . அவையாவன ,’பாரம்பரியம்’ ,’ அதிகாரபீடம்’,’அருள்வாக்கு’.

9]

1 ]எதையும் சோதித்து அறியலாம் …

அதற்கு எப்போதும் எங்கும் போதிய வாய்ப்பு இல்லாத போது 

2 ]ஆதாரங்களைக் கேட்கலாம் .தேடலாம்.

அதற்கும் வாய்ப்பு அமையாத போது

3] திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால் . அதன் உண்மை வெளிப்பட்டுவிடும் .

அதற்கும் தயங்குகிற போது ,

4 ] நேர்மறை என நிரூபிக்க முயலுவது போல் எதிர் மறையாகத் தவறென நிரூபிக்க கேள்விகள் கேட்டு முயலலாம் .

ஆனால்

அடிப்படை இரண்டு நிபந்தனைகள்

அ]நேர்மையாக எதையும் அணுக வேண்டும்

ஆ] திறந்த மனதோடு [ open mind ] இருக்க வேண்டும் .

 

விடை கிடைக்காத போது

May be or May not be

‘இருக்கலாம் ; இல்லாமலும் இருக்கலாம்’ என்று கூறவும் தயங்கக் கூடாது .

10]

அண்மையில் கூட நியூயார்க் டைமஸில் வந்த ஓர் அறிவியல் கட்டுரையில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது .

 

 “So when should we trust science? The view that seems to emerge from Popper, Oreskes and other writers in the field is we have good, but fallible, reason to trust what scientists say when, despite their own best efforts to disprove an idea, there remains a consensus that it is true.”

 

”ஆக ,நாம் எப்போது அறிவியலை நம்புவது ? பாப்பர் ,ஒரஸ்கேஸ் போன்ற அறிவியல் அறிஞர்கள் சொல்வது என்ன ? அறிவியலில் சரியும் இருக்கும் பிழையும் இருக்கும் ; அது தவறானது என நிரூபிக்க முயன்று  முடியாது  போன பின்னும் உயர்ந்து நிற்கும் உண்மையே அறிவியல் .”

 

’அறிவியலை அறிவோம் . அறிவியலாய் இணைவோம்’ என நாம் உரக்கச் சொல்வோம் .அதன் வழி செல்வோம் .

 

11]

பண்டிட் ஜவஹர்லால் நேரு தன் அருமை மகள் இந்திரா காந்திக்கு பிரியதர்ஷினி என அழைத்து எழுதிய கடிதங்களின் தொகுப்பாய் இருக்கும் ‘உலக சரித்திரம்’ எனும் ஆழமான வரலாற்று நூலில் சொல்வதைச் சொல்லி முடிக்கிறேன்.

 

 “…. அறிவியல் தவறிழைக்காது என்று அர்த்தமில்லை .அடிக்கடி அது தவறிழைக்கிறது . அடிக்கடி அது சொன்னதை மாற்றிக் கொள்கிறது. ஆயினும் ஓர் பிரச்சனையை அணுக ‘அறிவியல் முறையே’ தகுந்தது என்று தோன்றுகிறது . தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று 19 ஆம் நூற்றாண்டில் அறிவியல் கொண்டிருந்த இறுமாப்பு போய்விட்டது .அது தன் சாதனைகளைப் பற்றிப் பெருமை கொள்கிறது .ஆனால் ,’ கற்றது கைமண் அளவு ; கல்லாதது உலக அளவு’ என்றறிந்து ‘ஆன்றவிந்து அடங்கி’ நிற்கிறது.அறிவுடையவன் அறிவின் போதாமையை உணர்கிறான் . அறிவில்லாதவனோ முற்றும் உணர்ந்த ஞானி என சுயதப்பட்டம் அடித்துக் கொள்கிறான் .’நிறைகுடம்’ தழும்புவதில்லை ; ’அரைகுடமே’ தளும்புகிறது .அறிவியலும் அப்படியே .

 

[ இதனிடயே சொல்லப்பட்ட இரு கதைகள் இங்கு தரப்படவில்லை ]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

19 /01 /26.


0 comments :

Post a Comment