நானும் உள்ளொளியும்

Posted by அகத்தீ




  “நானும்”  ”உள்ளொளியும்”…..

 

தூக்கம் தொலைத்த இரவுகளில்

”நானும்”  ”உள்ளொளியும்”…..

பின்னோக்கி

வெகுதூரம் பயணித்தோம்….

வழிஎங்கும் அசைபோட்டோம்

கடந்த பாதையினை எடை போட்டோம்!

 

 

நெஞ்சாரச் சொல்லுகிறேன்

ஒழுக்கம் தவறியதாய்

நேர்மை தடுமாறியதாய்

அநீதி இழைத்ததாய்

பேராசையில் புழுங்கியதாய்

யாரையேனும் பழிவாங்கியதாய்

நினைவுக்கு எட்டியவரை இல்லை

ஒரு  வேளை

என்னை அறிந்தவர்களுக்கு தெரியக்கூடும்

நான் அறியாமல் செய்த

ஏதேனும் அவர்களை உறுத்தி இருக்கலாம்

அதற்காகவும்

இப்போது வருந்துகிறேன்.

 

ஆனால் ,

அன்று

இப்படி பேசியிருக்கக் கூடாது

இப்படி ஒதுக்கி இருக்கக்கூடாது

இப்படி காயப்படுத்தி இருக்கக்கூடாது

 

 

அதை அப்படிச் செய்யாமல்

இப்படிச் செய்திருக்கலாமோ

அதை இன்னும் நிதானமாக அணுகி இருக்கலாமோ

ஏன் அந்த அவசரக்குடுக்கைத்தனம் ?

விட்டுக்கொடுப்பதில் என்ன பிரச்சனை

வீணாக சந்தேகப்பட்டுவிட்டோமோ !

எல்லாம் காலம் கடந்த ஞானம்தான்.

 

என்  “அகத்தாய்வு” முடிவற்றது

அது சுய இரங்கலும் அல்ல

சுயபச்சாதாபமும் அல்ல

விமர்சனங்களுக்கு

சரியாக செவிகொடுத்தேனோ இல்லையோ

சுயவிமர்சனம் உள்ளொளியாய் பரவுகிறது

முதுமை பக்குவப்படுத்திவிட்டதோ ?

 

ஜெயகாந்தன் சொல்லுவார்

 “வாழ்க்கை என்பது

அந்தந்த நேரத்து நியாயங்கள் !”

ஆம்

அது சரியும்தான் ; இல்லையும்தான்.

 

நேற்றைய நியாயங்கள்

இன்றைக்கு பல்லிளிக்கிறது …

இன்றைய நியாயங்கள்

நாளை பல்லிளிக்குமோ

தனி மனித ”அனுபக் காயங்கள்”

ஒருபோதும் ஆறாமல் எதையோ

சொல்லிக் கொண்டே இருக்கும் .

 

அனுபவம் என்பதும்

மாறிக்கொண்டே இருப்பதுதானே !

அனுபவம் படிக்கல்லாகும்

எப்போது ?

பார்வை ஆழமாகும் போது ; விசாலமாகும் போது !

சமூக அறிவியலை உள்வாங்கும் போது

ஞானத்தின் மெய்யான ஊற்று அதுதானே !

 

தூக்கம் தொலைத்த இரவுகளில்

”நானும்”  ”உள்ளொளியும்”…..

பின்னோக்கி

வெகுதூரம் பயணித்தோம்….

வழிஎங்கும் அசைபோட்டோம்

கடந்த பாதையினை எடை போட்டோம் !

 

 

 

சுபொஅ.

28/05/25.

 

 

 

  

RIP / BABY BIRD / MAY 19. 2025 . VERGINIA “

Posted by அகத்தீ Labels:

 


முதல் நாள் மாலை  மாலை நேரம் பள்ளி பஸ்ஸில் இருந்து திமுதிமுவென இறங்கிய குழ்ந்தைகள் இருபதடி தள்ளி நின்றனர் . உச்சுக்கொட்டினர் .சில குழந்தைகள் அழுதன . என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன். இரண்டு அங்குல நீளம்கூட இராத பிறந்த குட்டு குருவி ஒன்று இறந்து கிடந்தது. என் பேரனும் பேத்தியும் பாவம் என வருந்தினர். வீடு வந்துவிட்டோம்.

 

மறுநாள் பள்ளிக்கு போகும் போது அதே இடத்தில் குழந்தைகள் கூட்டம் . செடிகளில் இருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு அவ்விடம் நோக்கி ஓடுகின்றனர் .

 

ஆர்வத்தோடு நானும் சென்றேன் . ஒரு செடியோரம் மண்ணைக் குவித்து ஒரு குட்டி சமாதி .அதன் மீது ஒரு சிறிய அட்டை .அந்த அட்டையில்  “ RIP / BABY BIRD / MAY 19. 2025 . VERGINIA “ கறுப்பு மையால் எழுதி சொருகி இருக்கிறது . குழந்தைகள் அதன் மீது மலர்களைத் தூவி அஞ்சலி செய்கின்றனர்.

 

ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன் . என் பேரனும் பேத்தியும் மலர் பறித்து வந்து அஞ்சலி செய்தனர் .சிலிர்த்தேன்.

 

என்னுள் ஒரு கேள்வி விஸ்வரூபமெடுக்கிறது . ஓர் குட்டி குருவியின் மரணத்துக்கு வருந்தி கண்ணீர் விடும் குழந்தைகள் மனம் எங்கே ? ஆயிரக் கணக்கான குழந்தைகளுக்கு உணவை எடுத்துச் செல்லவும் வழிவிடாமல் காஸாவை முற்றுகையிட்டு குழந்தைகளைக் கொல்லும் இஸ்ரேலிய ஜியோனிச யூதவெறி எங்கே ?

 

சுபொஅ.

22/05/25.

வர்ஜீனியா .


Posted by அகத்தீ Labels:

 

குட்டிக் கதை

 

தாத்தா இறந்து விட்டார் . அவர் நினைவஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவரது போட்டோ சாமி படங்களின் நடுவே கூடத்தில் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது .  ஊதுபத்தியும் மணம் வீசத் தொடங்கிவிட்டது .

 

“ அப்பா ! ஏன்பா ! தாத்தா படத்துக்கு பூமாலை போடுறீங்க !”

 

“ தாத்தா சாமியாயிட்டாரும்மா ! அதுதான் மாலை எல்லாம் போட்டு கும்பிடுறோம்….”

 

“ அப்பா ! அந்த சாமி எல்லாம் கூட செத்துப் போச்சா ? அதுதான் மாலை போடுறோமா ?”

 

அப்பா திருதிருவென விழித்தார் .

 

சுபொஅ.

20/05/25.

Posted by அகத்தீ

 இளம் சாரல்

இதமான குளிர்
வருடும் காற்று
கைவீசி நடக்க
வெறிகொள்ளும் மனசு
முதுமை தடுக்கிறது
ஆசை அறுமின் !
அனுபவமா ? ஆன்மீகமா ?

சுபொஅ.
22/05/25.
வர்ஜீனியா.

அமெரிக்காவும் அப்படித்தான் .

Posted by அகத்தீ Labels:

 


அண்மையில்  படுக்கை அறை ,அடுக்களை ,கழிப்பிடம் ,வரவேற்பறை உள்ளடங்கிய நகரும் கார் ஒன்றில் என் நண்பர் கதை சொல்லி பவா செல்லதுரை அமெரிக்காவில் 8000 கி.மீ சாலை வழிப் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பி இருக்கிறார் . அவர் ஒரு நிகழ்வில் பேசியது யூ டியூப்பில் காணக் கிடைக்கிறது .

 

அதில் அமெரிக்காவில் விரும்பிய போது டீ காபி குடிக்க தெருவோர டீக்கடைகள் இல்லாததையும் , இங்கு வழங்கப்படும் உணவில் காரசாரம் இல்லாமை குறித்தும் சொந்த ஊர் பெருமிதத்தையும் பேசியுள்ளார் . இது பொதுவானது . நான் இங்கு மகனுடன் சாதா காரில் பயணிக்கும் போதும் இதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது . அது பிழையில்லை .

 

ஆனால் அவரது பதிவினை சிலர் வன்மத்தோடு விமர்சிப்பதை ஏற்க முடியவில்லை .

 

புதிய சூழல் எல்லோருக்கும் ஒரேப் போல் இருக்காது .

 

அதே நேரம் ஒரு நாட்டில் சில நாட்கள் பயணித்துவிட்டு ஒரு சில இடங்களை பார்த்துவிட்டு இதுதான் அந்த நாடு என சொல்லிவிடக்கூடாது . ஒரு நாட்டை பற்றி அறிய அங்கேயே தங்கி மனம்போல் பயணித்து மக்களிடம் ஊடாடி வரலாறு பண்பாட்டை படித்தறிந்தே முடிவுக்கு வர வேண்டும் .

 

பொதுப்பார்வையில் ஒவ்வொரு நாட்டிலும் பயணிக்கும் போது சில நல்ல அம்சங்கள் பளிச்செனக் கண்ணில் படும் .அதுபோல் சில அம்சங்கள் பளிச்சென உறுத்தவும் செய்யும் . இரண்டும் கலந்ததுதான் எல்லா நாடும். அமெரிக்காவும் அப்படித்தான் .

 

இந்த ஊரின் தூய்மையும் , அகலமான சாலை வசதியும் , பசுமைச் சூழலும் போக்குவரத்து விதிகளை மதிக்கும் மாண்பும் வியக்க வைக்கிறது. அவர்களுக்கு விரிந்த நிலப்பரப்பும் , மக்கள் தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருப்பதும் நல் வாய்ப்பு . அது வந்தேறிகளின் நாடு என்பதால் சொந்தப் பண்பாடு எனக் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை . அதன் சொந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை லட்சக்  கணக்கில் அழித்து அதன் இரத்தச் சகதியில் எழுப்ப்பட்ட நாடல்லவா அது ? அதன் வரலாறும் சில நூறு ஆண்டுகள் தாமே ! ஆகவே ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நவீன நகர நாகரீகம் வேருன்ற முடிந்தது . அதன் ஒழுங்கமைப்பு உங்களை நிச்சயம் கவரவே செய்யும் .

 

பெரும்பாலும்  “இயந்திர வாழ்க்கைதான்” இங்கு என்பது என் தனிப்பட்ட கருத்து . இங்கே தனிமனித சுதந்திரம் அதிகம் பேசப்படுவதற்கும் மனிதன் தனித்தனி தீவுபோல் தாமரை இலைத் தண்ணீராய் வாழ்வதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா ? சமூக உளவியல் ஆய்வாளர்கள் விடை யிறுக்க வேண்டிய கேள்வி .

 

கருக்கலைப்பு இங்கு சட்டவிரோதமானது .  கிறுத்துவ மதப் பழமைவாதக் கண்ணோட்டம் . இதனால் இங்கு பெண்கள் சுமக்கும் வலி அளவிட முடியாது . இதன் விளைவான ஆணாதிக்கமும் இங்கு மிகப்பெரும் சாபக்கேடாய் பெண்கள் வாழ்வில் இடியாய் விழுகிறது . அன்றாடம் பெருகும் தனித்துவாழும் பெண்களின் போராட்ட வாழ்வும் வலியும்  இச்சமூகத்தின் பெருமையா ? கண்ணீரா ?

 

குழந்தைகள் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியக்க வைக்கிறது . ஆயினும் நம் பண்பாட்டு வழியில் சிலவற்றோடு உடன்பட சிரமமாக இருக்கிறது . குழந்தைகளை அடிப்பது மட்டுமல்ல கண்டிப்பதுகூட விசாரணைக்கு உள்ளாகிவிடும் . குழந்தைகள் தனித்து தூங்க வேண்டும் , சாப்பிடுவது குளிப்பது எல்லாம் சுயமாக செய்ய பழக்க வேண்டும் .சுயசார்பு நல்லதுதான் .ஆயின் அது இயந்திரத்தனமாக செய்யப்படுகிறதோ ! அல்லது நாம் செக்குமாட்டுத் தனத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறோமா ? அங்கு வாழும் இந்தியர்கள் பிரச்சனை இது .

 

அங்கு பள்ளிப்பாடங்களில் குடும்பத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது . ஃபேமிலி ட்டிரி [ family tree ] எனும் குடும்பப் பாரம்பரியம் குறித்த சிந்தனை செய்முறைத் தேர்வு வழி தேடி கண்டுபிடிக்க படம் வரைய நிர்ப்பந்திக்கிறது . நம் நாட்டில் தந்தை வழிப் பாரம்பரியம் மட்டுமே பேசப்படும் சூழலில் இங்கு இருபக்க பாரம்பரியமும் தேடப்படுவது நல்லது . அதுபோல் வேற்றுமை பாராட்டக் கூடாது என்கிற ஜனநாயக மாண்பு பள்ளி பாடத்திட்டத்திலேயே ஒரு பகுதி .ஆயினும் வெள்ளை ஆதிக்க மனோபாவமும் ஆணாதிக்க உணர்வும் சமூக உளவியலில் இங்கு இன்னும் வலுவாக நிலவுவது முரண்.

 

இங்கு கல்வியில் சீன மாணவர்களும் இந்திய மாணவர்களுமே முதலிடத்தில் இருக்கிறார்கள் . சீனர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறத் துவங்கிவிட்டனர் .இனி இந்தியர்களின் வேலைவாய்ப்பு சவாலாகும் என்பது இங்கு பொதுக்கருத்து .இங்கு சங்கிகளின் செயல்பாட்டால் இந்தியர்களின் மீதான ஒவ்வாமை அதிகரித்து வருகிறது . இவை எல்லாம் பலரோடு உரையாடிய போது வெளிப்பட்டவையே !

 

மருத்துவ வசதி என்பது இங்கு பெரும்பாலோருக்கு எட்டாத உயரத்தில் .. அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் எதுவும் நடக்காது . காப்பீடும் பெருமளவு கைகொடுக்காது . இதன் எதிரொலியாக அண்மையில் நியூயார்க் ஹோட்டல் முகப்பில் ஓர் தனியார் மருத்துவக் காப்பீட்டு உயரதிகாரியை ஓர் இளைஞன் சுட்டுக்கொன்றான் .அவனைக் காப்பாற்ற அமெரிக்க இளையர் உலகமே கைகோர்த்து நிதி திரட்டி எழுந்தது கண்டோம்.  இங்கு வழக்கைச் சந்திக்கப் பயந்து பெரும்பாலன மருத்துவர்கள் அனைத்து சோதனை முடிவும் வராமல் ஒரு பாரசிட்டமால் மாத்திரைக்கூட தரமாட்டார்கள் . மருத்துவ பில் மிகமிகமிக அதிகம். கனடாவில் மருத்துவம் இலவசம் . ஆனால் மருத்துவ சேவையில் அதிருப்தி அதிகம் . இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மருத்துவ வசதி மிகச் சிறப்பு . அரசு ஆரம்ப சுகாதார மையங்களும் , அரசு மருத்துவ மனைகளும் மிக நன்று .நிழலின் அருமை வெயிலில்தான் தெரிகிறது

 

இங்குள்ள தட்டவெப்ப சூழ்நிலை ஆண்டில் பெரும்பகுதி பொது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது . எனவே உள்ளரங்கம் , வீடு  என கூடடடைந்த வாழ்க்கையாகிவிடுகிறது . அதன் எதிரொலி வசந்த காலம் , கோடை காலத்தில் குடும்ப இன்பச்சுற்றுலா ,பிக்னிக் பண்பாட்டின் கூறாகிவிட்டது .

 

நுகர்வு கலாச்சாரமும் கணிணி யுகமும் இவர்கள் வாழ்வை ஒரு கையடக்க வட்டமாக்கிவிட்டது . இது உலக விதி .இங்கு கூடுதல்  விதி .என் செய்ய ?

 

நல்லதும் கெட்டதுமாக நான் அரைகுறையாய் புரிந்து கொண்டது மட்டுமே அமெரிக்கா அல்ல ; நான் இங்கு பேசுவது மக்களைப் பற்றிதான் ; ஏகாதிபத்திய அரசியலைப் பற்றியது அல்ல .

 

சுபொஅ.

21/05/25,

வர்ஜீனியா.


போரானாலும் பூஜையானாலும் அவர்களுக்கு வர்த்தகமே….

Posted by அகத்தீ Labels:

 


போரானாலும் பூஜையானாலும் அவர்களுக்கு வர்த்தகமே….

நாலு துளசி இலை ஆயிரம் ரூபாய் . ஐந்து வேப்பிலை 500 ரூபாய் . ஐந்து வேப்பம் பூ 600 ரூபாய் . பத்து மாவிலை ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ? [டாலரின் ரூபாய் மதிப்பில் விலை பதிந்துள்ளேன். அங்கு டாலரில்தான் விற்பனை.]

மக்களின் நம்பிக்கை ,மூடநம்பிக்கை ,சடங்கு ,சம்பிரதாயம் இவற்றை எல்லாம் காசாக்குவதில் குஜராத் பனியாக்கள் பலே கில்லாடிகள் .

கடல் கடந்து போனாலும் இந்தியர்கள் மண்டையில் உறைந்து போயிருக்கும் பத்தாம்பசலி பழக்க வழக்கங்களை விடமுடியாமல் மல்லுக்கட்டுகிறார்கள் . அவர்கள்தாம் இந்த “சுபம் லாபம்” கோஷ்டிகளின் குறி.

ஆகவே அந்தந்த சீசனுக்கு ஏற்ப சில பூஜைப் பொருட்களையும் சம்பிரதாய பொருட்களையும் சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் போட்டு காசாக்குகிறது அமெரிக்காவில் ”பட்டேல் பிரதர்ஸ்” என்ற குஜராத்தி நிறுவனம் . போரானாலும் பூஜையானாலும் அவர்களுக்கு வர்த்தகமே . முதல் பத்தியிலே சொன்னது அதைத்தான் .விலை சீசன் பண்டிகைகளைப் பொறுத்து ஏறும் இறங்கும் .

பூஜைப் பொருட்களுக்கு என தனிப்பிரிவே உண்டு .அங்கு கடவுள் [ போட்டோ /சிலை ] வியாபாரமும் உண்டு . எல்லா ஆன்மீக உருட்டுகளுக்கும் தேவையான அனைத்தும் விற்பனைக்கு கிடைக்கும்

இந்தியாவில் கிடைக்கும் அனைத்தும் [ புலால் தவிர்த்து ] பட்டேல் பிரதர்ஸில் கிடைக்கும் . மளிகைப் பொருட்கள் ,காய்கறி ,பழங்கள் ,சமையல் சாமான்கள் ,சமூசா ,அல்வா எல்லாம் . இதில் மேலே சொன்னதும் அடக்கம்.

நாங்கள் அங்கே போன அன்று வாசலில் நின்று சில இளம் பெண்கள் ’காடு விழுங்கி’ ஜக்கி வசுதேவின் “மனோத்தத்துவ இஞ்ஜினியரிங்’ கட்டண வகுப்புக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர் .

ஆஹா ! எங்கு போனாலும் ஏமாறவும் ஏமாற்றவும்…. பேஷ் ! பேஷ் !

சுபொஅ.
15/05/25.

அந்த கொடிய மிருகம்

Posted by அகத்தீ Labels:

 

அந்த கொடிய மிருகம்

எந்த நூற்றாண்டைச் சார்ந்தது ?

 

நெருப்பை உமிழும் கண்கள்

இரத்தம் ஒழுகும் வாய்

விஷத்தைக் கக்கும் நாக்கு

மனிதத்தைக் கிழிக்கும் விரல்கள்

வீட்டில் வளர்ப்பரோ

அந்த கொடிய மிருகத்தை ?

நாட்டில் உலவ விடலாமோ

அந்த விஷ ஜந்தை !

 

அந்த மிருகம் வளர்ப்பு பிராணி அல்லவே அல்ல !

காட்டுப் பிராணியும் அல்ல

நாட்டுப் பிராணியும் அல்ல

ஈரமில்லா இதயமும்

மரத்துப்போன மூளையும்

அழுகிநாறும் ஆன்மாவும்

மொத்தமாய் கொண்ட

அந்த கேடுகெட்ட மிருகத்தை

வாரி அணைத்து ஊட்டி வளர்க்கும்

எவனும் எவளும் மனித ஜன்மம் அல்ல !

 

 

கண்டால் காறி உமிழுங்கள்

காலில் கிடப்பதைக் கழட்டி

விரட்டி அடியுங்கள்

’வெறுப்பு அரசியல்’ எனும்

விநோத ஜந்துவை !

அந்த கொடிய மிருகம்

எந்த நூற்றாண்டைச் சார்ந்தது ?

 

 “நிறுத்து ! நிறுத்து ! நீ சொல்லும்

’ஜந்து’ எதுவும் எம் மிருகராசியில் இல்லை !

இனியும் எம்மைக் கேவலப்படுத்தாதீர் !

மதிகெட்ட மனிதர் செயலைக் காட்டி !”

 

சுபொஅ.

08/05/25.

 

 

ஏன் வாசிக்க வேண்டும் மணிமேகலையை ?

Posted by அகத்தீ Labels:

 





நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் :

 

 ஏன் வாசிக்க வேண்டும் மணிமேகலையை ?

 [ நன்றி : காக்கைச் சிறகினிலே , மே மாதம் , 2025.]

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

மணிமேகலை என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான காவியம் . இக்காவியம் குறித்து முதுபெரும் தோழர் கே.டி.கே .தங்கமணி , தோழர் .ஜீவபாரதி உள்ளிட்ட சிலரின் நூல்களை வாசித்துள்ளேன் . தீராநதியில் அ.மார்கஸ் தொடராக எழுதிய போது அவ்வப்போது வாசித்துள்ளேன் . மூலமும் உரையும் வாசித்துள்ளேன் . இதற்கு ஈடான இன்னொரு காவியம் இல்லை என்றே சொல்லுவேன் . அந்த அளவு என் மனதைக் கொள்ளை கொண்ட காவியம் இது . இம்முறை அ.மார்க்சின் மணுமேகலை வெளிவந்த சூட்டோடு வாங்கிவிட்டேன் . வெளிநாட்டில் இருந்தபடி வாசித்தேன் . இந்நூலை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன் .

 

மணிமேகலை காப்பியத்தின் தனித்துவங்களையும் சிறப்புகளையும் ஓர் இடதுசாரி கூர்நோக்கோடு இந்நூல் நெடுக கட்டுரைகளாகத் தந்துள்ளார் அ.மார்க்ஸ்  . முதல் பாகத்தில் 38 கட்டுரைகளும் , இரண்டாம் பாகத்தில் 22 கட்டுரைகளும் , மூன்றாம் பாகத்தில் [ இரண்டாம் பாகத் தொகுப்பில் அடங்கியது ] 17 கட்டுரைகளும் , முதல் பாகத் தொகுப்பின் இறுதியில் ‘ சாத்தனாரின் மணிமேகலை மூல காப்பியச்  சுருக்கமும்” இடம் பெற்றுள்ளது. .  ‘தீராநதி’யில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் அதற்குரிய பலமும் பலவீனமும் உள்ளடக்கியதே இத்தொகுப்பு நூல்.

 

 மணிமேகலை எவ்வளவு உயர்வான சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதில் ஐயமில்லை .அதனை எடுதுக்காட்டுவதையே  அ. மார்க்ஸின் இந்நூல் தன் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது . மணிமேகலை 30 அத்தியாயங்களைக் கொண்டது .மொத்தம் 4758 வரிகள் . 16 கிளைக்கதைகள் . ஒவ்வொரு கிளைக்கதையும் பெளத்த நெறி ஒன்றை வலியுறுத்தும் வண்ணம் அமையப் பெற்றது . எனவே மணிமேகலையின் நூல் கட்டுமானம் சற்று சிக்கலானது . அந்த சிக்கல்களை அறுத்து மணிமேகலை பேசும் அறத்தை படம் பிடிக்கிற சவாலான பணியைத்தான் அ.மார்க்ஸ் செய்துள்ளார்.

 

இரட்டைக் காப்பியங்கள் எனச் சொல்லப்படுகிற சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்  கண்ணகி ,மணிமேகலை , மாதவி ,சித்திராபதி ,மாசாத்துவன் , அறவாணர் ,இளங்கோ ,சாத்தனார் என முக்கிய பாத்திரங்கள் ஒன்றாக இருப்பினும் பாத்திரங்களை வார்த்ததில் பாரிய வேறுபாடு உண்டு .இதனை இந்நூலில் பல இடங்களின் மார்க்ஸ் நிறுவுகிறார் . குறிப்பாக சிலம்பு சமண காவியமாக இருப்பினும் நூல் நெடுக ஒருவித சமய சமரசம் பேணப்படும் ; ஆனால் மணிமேகலை பெளத்த நெறியை ஓங்கி ஒலிக்கும் .

 

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கண்ணகியை கடைசியில் பத்தினி தெய்வமாக காட்சிப்படுத்த ஏதுவாக முதல் காண்டத்தில் வர்ணிக்கும் போதே உயர்வு நவிர்ச்சியை கையாள்வதாக ம.பொ.சி தன்  “விளக்கத் தெளிவுரை”யில் சுட்டிக்காட்டுவார் .

  

’மணிமேகலைத் துறவு’ என பெயர் பெற்ற இக்காவியத்தில் ஓர் இளம் பெண் துறவு நோக்கி பயணிக்கும் போதும் , இளம் பெண்ணுக்கே உரிய காதல் , உளவியல் போராட்டம் இவற்றை சாத்தனார் நேர்த்தியாய் சொல்லியிருப்பார் இப்பாங்கை அ.மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார் .

 

பத்தினி என்கிற கோட்பாட்டை மணிமேகலை போற்றவில்லை . மணிமேகலை பத்தினி தெய்வம் கண்ணகியை சந்திக்கும் போது , நீங்கள் “ கற்புக் கடன் பூண்டு  நுங்கடன்..” முடித்தது சரியா ? மதுரையை எரித்தது சரியா என வலுவாகக் கேள்வி எழுப்புகிறார் . பத்தினி கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் மணிமேகலை மக்களின் உளவியலில் ஆழப்பதிந்துள்ள பத்தினி கருத்தியலை முற்றாக எதிர்நிலையில் நிறுத்தாமல் சமரசமும் செய்கிறது . மணிமேகலை முதலில் அட்சய பாத்திரத்தில் பிச்சை ஏற்க ஆதிரை என்ற பத்தினியைத் தேர்ந்தெடுத்தார் என்பது இதானால்தான் என்கிறார் அ.மார்க்ஸ்  .

 

சைவ மரபினர் நெடுங்காலமாக சிலப்பதிகாரம் ,திருக்குறளை ஏற்றுக்கொண்ட போதிலும் மணிமேகலையை ஏற்க மறுத்தது ஏன் என்கிற கேள்வியை எழுப்பி விடைதேட முயன்றிருக்கிறார் அ.மார்க்ஸ் .

 

“மணிமேகலை அவர்களால் செரித்துக்கொள்ள இயலாத பல அம்சங்களைக் கொண்டிருந்ததுதான் இதன் அடிப்படை . ஒரு பெண்ணுக்கு காப்பிய மரபில் அளிக்கப்படும் பாத்திர இலக்கணங்களை முற்றிலும் மீறியவள் மணிமேகலை காதல் பிரிவு ,கணவனைத் தொழுதெழும்  கற்பு ,இல்வாழ்க்கை , தாய்மை என்கிற பாத்திர மரபு மணிமேகலையில் தலைகீழாகக் கவிழ்க்கப்படுகிறது . காப்பிய நாயகியின் லட்சியம் இல்லறம் அல்ல . இங்கு காப்பியத்தின் பெயரே மணிமேகலைத் துறவு என்பதுதான் “ என்கிறார் அ.மார்க்ஸ்.

 

சீதை ,சீதா என்கிற பெயர்கள் தமிழ்சமூகத்தில் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு சூட்டப்படுகிறது . சீதையும் ஓர் துயர காவியம்தான் ஆயினும் ஆணாதிக்க சிந்தனைக்கு ஏற்ற அடிமை என்பதால் சமூகம் ஏற்றுக் கொண்டாடுகிறது .ஆயின் ஆட்சிக்கு எதிராக சீறி எழுந்த கண்ணகி பெயரோ , ஊருக்கே பசிப்பிணி போக்கிய  உலக முன்மாதிரி  மணிமேகலை பெயரோ விதிவிலக்கவாகவே இங்கு புழங்குகிறது . இந்த சமூக உளவியலோடு நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டி இருக்கிறது என்பது என் கருத்து  .

 

” மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” [ மோசிக்கீரனார் .புறநானூறு 186 ] என்பதே சங்கம் தொட்டு தமிழ்ச் சமூக கருத்தாக்கமாக இருந்து வந்தது . “ மன்னனே உயிர் மக்கள் வெறும் உடல்தான் . மன்னன் நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும்” என்பது மோசிக்கீரனாரின் வாதம் .ஆனால் மணிமேகலையில்  ஜனநாயகம் சற்று மூச்சுவிடுகிறது . மணிமேகலை சொல்கிறது ,” மன்னவன் மகனே கேள் ! கோ [ அரசன் ] நிலை தவறினால் கோள்களும் நிலை தவறும் . கோள்கள் நிலை தவறினால்  மழை பொய்க்கும் ,மழை பொய்த்தால் மன்னுயிர் [மனிதர்கள் ] அழிவர் . மன்னுயிர் அழிந்தால் மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் எனக் கருத வேண்டிய மண்ணாள் வேந்தனின் தன்மையும் அழியும்.”[ மணி 7.7 -12] மக்கள்தான் உயிர் .மக்கள் நன்றாக இருந்தால்தான் மன்னன் நன்றாக இருக்க முடியும் “ என மோசிக்கீரனாருக்கு எதிர்நிலையை மணிமேகலை எடுப்பதை அ.மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார் .

 

“ பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் [மழையும்] வளனும் சுரக்க ” இந்திரவிழாவுக்கு அழைப்பு விடப்படுகிறது  முதல் அத்தியாயத்திலேயே . பசிப்பிணிக்கு எதிராக உரக்க ஒலித்த மானுடநேயக் குரலே மணிமேகலை . நூல் நெடுக பெளத்த அறம் ஓங்கி இருப்பினும் பசிப்பிணிக்கு எதிராக ‘அட்சய பாத்திரம்’ எனும் அழகிய கற்பனையைப் படைத்த சாத்தனார் , அதனை முதலில் ஆபுத்திரன் கையில் கொடுக்கிறார் ,பின்னர் அதை மணிமேகலை கையில் தருகிறார் . ஆபுத்திரனின் பிறப்பு என்பது தாய்க்கு தவறான வழியில் பிறந்தவன் , மணிமேகலை கணிகையர் குலத்தில் வந்தவர் . ஆக குல ஒழுக்க விதிகளை சுக்குநூறாக உடைத் தெறிந்து பசிப்பிணியை போக்கும் அட்சய பாத்திரத்தை அவர்கள் கையில் கொடுத்து வற்றா மானுட அன்பே உயர் ஒழுக்கமென நிறுவிய காப்பியம் இது . அ.மார்க்ஸ் தம் கட்டுரைகளில் பல இடங்களில் இதனை எடுத்துக் காட்டுகிறார்.   

 

“காணார் ,கேளார், கால்முடப்பட்டோர் , பேணுநர் இல்லார் ,பிணி நடுக்குற்றார் …” என யார் யாருக்கெல்லாம் பசிப்பிணி ஆற்ற வேண்டும்  என விரிந்து பரந்து  வழிகாட்டுகிறது .இங்கு இன்னொரு செய்தி , ”மாற்றுத் திறனாளி” என்ற சொல்லை இப்போது நாம் ஏற்றுள்ளோம். குருடர் ,செவிடர் ,நொண்டி போன்ற  சொற்களை இழிவெனச் சொல்கிறோம் . சிலப்பதிகாரம் உடபட பழந்தமிழ் இலக்கியங்களில் இச்சொற்களே விரவி இருக்க , மணிமேகலையே மாற்றுச் சொற்களைப் படைத்து முன்னத்தி ஏர் ஆகிறது என்பது என் அபிப்பிராயம் .அ.மார்க்ஸ் இதனைக் கருதில் கொள்ளவில்லை .  அரும்பசி களைய எல்லையற்ற வெளியை உருவாக்கி  இல்லை எனாது வழங்கிய அட்சய பாத்திரக் கற்பனை கூட ஒரு வகை உட்டோபியன் சோஷலிசம் என நான் கருதுவது உண்டு . ஓர் நூலில் எழுதியும் இருக்கிறேன்.  பசிப்பிணி ஆற்ற வேண்டிய மக்கள் தொகுதியாக  காணார் கேளார் என நீளும் பட்டியலில் விலங்கினங்களையும்  சேர்த்த சாத்தனார் ஓரிடத்தில் ‘மடிநல்கூர்த்த மக்கள்’ எனச் சொல்லிச் செல்கிறார் .அது யாரைக் குறிக்கும் என அ. மார்க்ஸ் கேள்வி எழுப்பிச் செல்கிறார் .

 

போரில் வென்று சிறைபிடிக்கப்பட்ட எதிரிநாட்டுக் கைதிகளை இந்திரவிழாவின் போது  விடுதலை செய்ததாக ம.பொ.சி தன் சிலப்பதிகார விளக்கக்கத் தெளிவுரையில் எடுதுக்காட்டுவார் . ஆனால்  “சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாக்கி” மனித உரிமையின் பெருங் குரலாக மணிமேகலை ஒலித்ததை ,மனித உரிமைப் போராளியான அ.மார்க்ஸ் உளம் தோய்ந்து எடுத்துரைத்துள்ளார் .

 

பல்வேறு சமயத்தாருடன் உரையாடி அவர்கள் சமயநெறி அறிந்தாய்ந்து பெளத்தம் சேர்கிறார் மணிமேகலை .அளவைவாதி ,சைவவாதி ,பிரம்மவாதி , வைணவவாதி ,வேதவாதி ,ஆசிகவாதி என எல்லோரிடம் பாடம் கேட்கிறார் . ஆயினும் இறுதியில் பெளத்தமே  உயர்வென சொல்லி முடிக்கிறார் . நீலகேசி பிற சமயத்தை வாதில் வென்று சமணத்தை நிறுவியதுபோல் மணிமேகலை செய்யவில்லை .எல்லா சமய நெறிகளையும் அறிந்து ; பெளத்தமே மேலானது என முடிவுக்கு வருகிறார் . அப்பாத்திரத்தின் வழி வாசகனையும் வரச்செய்யும் காவிய நுட்பம் மணிகேலைக்குரியது , அதே சமயம் சமய பகையை விசிறாமல் பல்வேறு சமயங்களின் இருப்பையும் அங்கீகரிக்கிறது  . அ. மார்க்ஸ் இதனை எடுத்துக் காட்டத் தவறவில்லை .

 

 பட்டினிக்கு எதிரான மாபெரும் மானுட பேரெழுச்சியாகவும் ; பத்தினி கோட்பாடு ,குலதர்மம் இவற்றை மீறி உயர் ஒழுக்கத்தை பறை சாற்றுவதாகவும்  ; ஓர் இளம் பெண் துறவு பூணுவதை மையம் கொண்டதாகவும் அமையப்பெற்ற மணிமேகலையில் , கிளைக்கதைகள் மூலம் பொளத்த அறமே உரைக்கப்படுவதால் இந்நூல் நெடுக தத்துவமும் அறபோதனையும் பிணைந்திருப்பதை அறிவோம் .அதனை  எடுத்துக்காட்ட அ.மார்க்ஸ் தவறவில்லை . அதன் தத்துவப் புலம் குறித்து நான் இங்கு பேசப்புகவில்லை .நூலை வாசித்தறிக !

 

 

இப்படி இந்நூலில் எடுத்துரைக்கப்பட்ட கருத்துகளை சொல்லச் சொல்ல நீளும் ; இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் . நீங்கள் வாசித்து அறிவது மிகவும் நன்று !

 

குறிப்பாக இரண்டு செய்திகளை சுட்டிக்காட்டுவது அவசியமென்று கருதுகிறேன் .

 

1] எழுத்துப் பிழைகள் உறுத்துகின்றன . தத்துவ வாதம் மிகுந்த பகுதியில் வாசிப்புக்கு இடையூறு செய்கிறது .அடுத்த பதிப்பில் சரி செய்க ! 134 ஆம் பக்கத்தில் 17 வது அத்தியாயத் தலைப்பே “பட்டினி வழிபாடு” என்றிருக்கிறது . ’பத்தினி வழிபாடு’என்றல்லவா இருந்திருக்க வேண்டும் . அத்தியாய உட்பொருளிலும் அப்படியே உள்ளது .

2] கூறியது கூறல் வாரந்தோறும் எழுதும் போது கட்டாயம் தேவைப்படும் ஏனெனில் வாசகர் நினைவுத் தொடர்ச்சிக்காக . ஆனால் நூலாக்கும் போது பத்தி பத்தியாக பக்கம் பக்கமாகக் கூறியது கூறல் மீண்டும் மீண்டும் வருவது வாசிப்புக்கு இடையூறு செய்யும் . எடிட் செய்தால் பக்கங்களின் எண்ணிக்கையும் நிச்சயம் குறையும் .

 

அடுத்த பதிப்பில் இவ்விரண்டையும்  சரி செய்வாரென தோழமையோடு எதிர்பார்க்கிறேன்.

 

இடதுசாரி மற்றும் முற்போக்கு பக்கம் நிற்போர் ,கம்யூனிஸ்ட் கட்சியோடு ஏதோ ஓர்வகையில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வோர் ,பாசிச எதிர்ப்பில் தன்னை முன்நிறுத்துவோர் வாசிக்க வேண்டிய காப்பியம்‘  “மணிமேகலை” . அதனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார் இந்நூல் வழி அ.மார்க்ஸ் .

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் : மணிமேகலை  [ இரண்டு பாகங்கள் ] , ஆசிரியர் : அ.மார்கஸ் ,வெளியீடு : எழுத்து பிரசுரம் , தொடர்புக்கு : மின்னஞ்சல் : zerodegreepublishing@gmail.com   / 89250 61999 பக்கங்கள் : 350 + 240  / விலை :  ரூ .420 + 290

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

05/05/25

வர்ஜீனியா , அமெரிக்கா ,

 

 

 

 

 

 

.