நட்பின் வட்டம் விரிவடைந்து கொண்டே போகிறது .

Posted by அகத்தீ Labels:

 

மெல்போர்ன , ரொறன்ரோ , ஸ்டொக்ஹோம், மாஸ்கோ ,பீகிங், ஹனாய் , அபுதாபி ,தோகா , நீயூயார்க் ,வாஷிங்டன் ,லண்டன், சிங்கப்பூர் , ஹவானா,கென்யா ,ஜிம்பாவே ,எகிப்து , சென்னை ,பெங்களூர் , டெல்லி ,திருவனந்தபுரம் ,ஹைதராபாத் , மும்பை ,கொல்கத்தா  எங்கெங்கோ நட்பின் வட்டம் விரிவடைந்து கொண்டே போகிறது .

 

பகல் ,இரவு ,நேரம் ,காலம் ,மொழி,இனம் ,மதம் ,வடக்கு ,கிழக்கு ,தெற்கு ,மேற்கு எல்லாவற்றையும் தாண்டி நட்பின் வாசம் பரவிக்கொண்டே இருக்கிறது .

 

சிரித்துக் கொண்டும் ,சீண்டிக்கொண்டும் ,காதலித்துக் கொண்டும் , தகவல் பரிமாறிக்கொண்டும் , ஜோக் அடித்துக் கொண்டும் , எல்லைக் கோட்டைத் தாண்டி என்னென்னமோ உரையாடிக்கொண்டும் உறவாடிக்கொண்டும் இருக்கின்றனர் .

 

வானமே எல்லையாய் வரப்புகளற்று வரம்புகளற்று ‘சாட்’ செய்து கொண்டே இருக்கிறார்கள் . கோபம் ,சண்டை ,பிரிவு , கைகுலுக்கல் .அரவணைப்பு எல்லாம் காற்று வழி நடந்துகொண்டே இருக்கிறது .

 

விரல் நுனியில் நட்பும் ,காதலும் ,உறவும் ,தோழமையும்,விரோதமும் ,வெறுப்பும் ,சமாதானமும் ,சமரசமும் ,பூப்பதும், வாடுவதும் , மீண்டும் முளைவிடுவதும் , மீண்டும் மண்மூடுவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் நடந்துகொண்டே இருக்கிறது .

 

சொந்தக் கதை ,சோகக்கதை ,ஊர்கதை , உறவுக்கதை ,நாட்டுக் கதை ,கூட்டுக்கதை ,அறிவியல் ,அரசியல் ,இலக்கியம் ,வியாபாரம் ,ராஜதந்திரம் ,தொழில்நுட்பம் , படைப்பார்வம் ,விமர்சனம் ,வெட்டிக்கதை பேசாத பொருளில்லை . பேசிப்பேசி அடைந்ததென்ன சொல்லவும் தெரியவில்லை .

 

ஆனால் அண்டை வீட்டான் யாரெனத் தெரியவில்லை .எதிர்வீட்டான் எதிரியாகத் தெரிகிறான் .வீட்டுக்குள் ஆளுக்கொரு திசையாய் ஆளுக்கொரு வழியாய் முறைத்துக் கொண்டும் முரண்டு கொண்டும் . சாதி ,மதம் என்னென்னமோ வீம்பும் வீறாப்பும் வெறுப்பும் கனன்று கொண்டே இருக்கிறது . நுகர்வோரியமும் பணவெறியும் ஓட்டிக்கொண்டே இருக்கிறது .

 

வேரையும் தொலைத்துக் கொண்டு விழுதுகளும் இல்லாமல் ஒரு கனவுலகில் எதைஎதையோ தேடி அலைந்து கொண்டே இருக்கிறோம்.

 

மெல்போர்ன , ரொறன்ரோ , ஸ்டொக்ஹோம், மாஸ்கோ ,பீகிங், ஹனாய் , அபுதாபி ,தோகா , நீயூயார்க் ,வாஷிங்டன் ,லண்டன், சிங்கப்பூர் , ஹவானா, கென்யா ,ஜிம்பாவே ,எகிப்து  ,சென்னை ,பெங்களூர் , டெல்லி ,திருவனந்தபுரம் ,ஹைதராபாத் , மும்பை ,கொல்கத்தா ,எங்கெங்கோ நட்பின் வட்டம் விரிவடைந்து கொண்டே போகிறது .

 

 

சுருங்கியது உலகமா ? உள்ளமா ?

 

விடிவதும் விசாலமாவதும் எப்போது ?

 

சுபொஅ.

10/11/2023.

 


0 comments :

Post a Comment