புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்த பீரங்கி முழக்கம்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி -47


புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்த பீரங்கி முழக்கம்


- சு.பொ.அகத்தியலிங்கம்




லெனினின் முதல் பிரகடனமே யுத்தத்திற்கு எதிரான 
சமாதான முழக்கமாயிருந்தது. 
இரண்டாவது பிரகடனம் 
நிலத்தை உழுபவனுக்கு வழங்குவதாக அமைந்தது




“சமாதானப்பூர்வமான மாற்றமாக இருந்தாலும் சரி - சமாதானப்பூர்வமற்ற மாற்றமாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும் சரி; தொழிலாளி வர்க்கத்தையும் அனைத்து உழைக்கும் மக்களையும் ஆயுதபாணி ஆக்குவது அவசியம்.”“


 " பொறுமை, பொறுமை என்று அவர்கள் நமக்கு ஓயாமல் உபதேசிக்கிறார்கள். ஆனால் நாம் பொறுமை காக்க அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? நாம் உண்பதற்கு ஜார் கொடுத்ததைவிட கெரென்ஸ்கி கொடுத்திருக்கிறானா? அதிகமாக வாய்ப்பறை கொட்டியிருக்கிறான்; வாக்குறுதிகளை வீசியிருக்கிறான். ஆனால் துளியூண்டு ரொட்டியும் அதிகம் தரவில்லை. செருப்புக்கும் ரொட்டிக்கும் இறைச்சிக்கும் இரவு முழுக்க கொட்டும் பனியில் கால் மரத்துப் போகுமளவு காத்துக்கிடக்கிறோம். அதே சமயம் நம் பதாகையின் மீது விடுதலை என பொறித்துக் கொள்கிறோம். ஆனால் நமக்கு இருக்கும் ஒரே விடுதலை- அடிமை வேலை செய்வதும் - பட்டினி கிடப்பதும்தானே; முன்பும் இப்படித்தானே இருந்தது.
”இப்படித்தான் அந்த இடைக்கால ஆட்சி குறித்து மக்கள் பேசிக்கொண்டார்கள்; கசப்பும் வெறுப்பும் ஓங்கியது. 


லெனின் இக்காலத்தில் வகுத்தளித்த ஏப்ரல் கோட்பாடு மிகச்சரியானது என்பதை ஒவ்வொரு நொடியும் மக்கள் உணர்ந்து கொண்டிருந்தனர்.பின்லாந்தில் கவர்னர் அவ்வட்டார போலீஸ் அதிகாரியை அழைத்து லெனினை கைது செய்ய ஆணை பிறப்பித்துகொண்டிருந்த அதே வேளையில் அதே அதிகாரி வீட்டில்தான் லெனின் தலைமறைவாக இருந்து புரட்சிக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்.


நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க அனைத்து ரஷ்ய ஜனநாயக மாநாடு, தற்காலிக அவை என பஞ்சுக் கேடயங்களால் நெருப்புக் கணைகளைத் தடுக்கமுயற்சித்து தடுமாறிக்கொண்டிருந்தனர் மென்ஷ்விக்குகள்.


பின்லாந்திலிருந்து லெனின் இரு கடிதங்கள் எழுதினார். ஒரு கடிதம் போல்ஷ்விக்குகள் அதிகாரத்தை ஏற்கவேண்டும் என வலியுறுத்தியது; அடுத்தகடிதம் மார்க்சியமும் ஆயுதம் தாங்கிய எழுச்சியும் குறித்து விவரித்தது. இக்கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட்டவிவரத்தை மேலும் இது உறுதி செய்தது.ஆயுதம் தாங்கிய எழுச்சி ஒரு கலை எனும் மார்க்ஸின் வார்த்தைகளுக்கு லெனின் உயிரூட்டிக் கொண்டிருந்தார்.


அங்கே கட்சிக்குள் சிலர் திரிபு வேலை செய்ய லானார்கள். சோவியத்துகளுக்கே அனைத்து அதிகாரங்களும் என முழங்கிவந்த சூழலில் சோவியத்துகளை கைப்பற்றி தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்த சூழ்ச்சி பின்னினர் துரோகிகள். கட்சி தற்காலிகமாக தன் கோரிக்கையை அடக்கி வாசித்தது. “சமாதான முறையில் புரட்சி வளர்ச்சி அடைகிறகாலகட்டம் முடிந்துவிட்டது.


கைகலப்புகளும் அதிர்வெடி களும் நிரம்பிய காலம் ஆரம்பமாகிவிட்டது.” என்றார் ஸ்டாலின்.டிராஸ்ட்கியவாதி ப்ரியோபிரஜன்ஸ்கி புரட்சியை தள்ளிப்போட முயன்றபோது ஸ்டாலின் சொன்னார். “சோஷலிச நாடாக ரஷ்யா மாறுவதற்கான வாய்ப்புகள் வற்றிவிடவில்லை. ஐரோப்பாவினால்தான் நமக்கு வழிகாட்டமுடியும் என்கிற மக்கிப்போனக் கருத்தை நாம்ஒதுக்கியாக வேண்டும். இரண்டுவகை மார்க்சியம் உண்டு,ஒன்று வறட்டுச் சூத்திர வகை மார்க்சியம்; இன்னொன்று படைப்பாற்றல் மார்க்சியம் [CREATIVE MARXISM]. இதில் இரண்டாவதை நாம் பின்பற்றுவோம்.”


ஜெனரல் கோர்னிலாவ் வஞ்சகமாக தாய் நாட்டைக்காக்கப் போகிறேன் என சொல்லிக் கொண்டு கெரென்ஸ்கியோடு ரகசிய ஒப்பந்தம் செய்து எதிர்க்கலகம்துவங்கினான். மக்கள் முறியடித்தனர்.


ஜெனரல் கிரை மோவ் தற்கொலை செய்துகொண்டான். விளைவு எங்கும்சோவியத்துகளில் போல்ஷ்விக் பலம் பன்மடங்கு கூடியது.சோவியத்துகளுக்கே அதிகாரம் எனும் முழக்கம் இப்போது அர்த்தச் செறிவுடன் வலுவாக முழங்கியது.1917 அக்டோபர் 20 ஆம் தேதி லெனின் ரகசியமாகப் பெட்ரோகிராடு வந்து சேர்ந்தார்.


மத்தியக் குழு கூடியது. ஆயுதப் புரட்சியைத் துவக்க தீர்மானித்தது. டிராஸ்ட்கி எதிர்த்தார். மத்தியக் குழு உறுப்பினராக இருந்த காமெனவ், ஜினோவிச் இருவரும் மென்ஷ்விக் ஏட்டில் இம்முடிவை விமர்சித்து கட்டுரை எழுதி திட்டத்தை எதிரிகளுக்குப் போட்டுக் கொடுத்துவிட்டனர்.“இவர்களோடு எனக்கு முன்பு இருந்த தொடர்புகளின் காரணமாக இந்த முன்னாள் தோழர்களைக் கண்டனம் செய்யத் தயங்குவேனானால் நான் பெருந்தவறு செய்தவனாவேன்.” என்றார் லெனின். அரசில் குழப்பம் மேலிட்டது. இராணுவ அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார்.


“இன்று வெற்றிக்கு வாய்ப்பு இருக்கும் போது- கண்டிப்பாக இன்று வெற்றிகரமாக நடக்கும் -அதைத் தவறவிட்டால் புரட்சியாளர்களை வரலாறு மன்னிக்காது.” என லெனின் மிகக் கச்சிதமாக நாள் குறித்தார். கிழவர் வேடம் பூண்டு நள்ளிரவில் 18 கிமீ நடந்து லாதகா ஏரிக்கு அருகிலுள்ள ஸ்மோல்னி மாளிகை புரட்சி அலுவலகத்தை அடைந்தார்.


“தாமதம் செய்வது சாவுக்குச் சமானம். தந்தி, தொலைபேசி, ரயில் நிலையங்கள், பாலங்கள் என ஆதாரமான அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் - இப்போதே இன்றிரவே ஸநவம்பர் 6] என லெனின் ஆணையிட்டார். 


செம்படை அணிவகுத்தது. மக்கள் ஆவேசமாய் வீதியில் திரண்டனர்.நவம்பர் 6 எதிர்ப்புரட்சியின் கடைசித் தடுப்பும் தகர்க்கப்பட்டது. அன்று மாலை அரோரா போர்க்கப்பல் மாரிக்கால அரண்மனை நோக்கி தன் வரலாற்றுப் புகழ்மிக்ககுண்டுவீச்சைத் தொடங்கியது. அந்த குண்டு வீச்சு உலகெங்கும் எதிரொலித்து ஓர் புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதை அறிவித்தது.


அரண்மனை கைப்பற்றப்பட்டது. அரசுப்படை சரணடைந்தது. அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.நவம்பர் 7 காலை 10 மணி. லெனின் அறிவிக்கிறார்;“தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டுவிட்டது. அரசு அதிகாரமானது பெட்ரோகிராடு தொழிலாளர், படைவீரர் பிரதிநிதிகளின் சோவியத்துகளுக்கு மாறியுள்ளது; அதாவது பெட்ரோகிராடு பாட்டாளிகளுக்கும் படைவீரர்களுக்கும் தலைமை தாங்கிக் கொண்டிருக்கிற புரட்சிகரஇராணுவக் குழுவிற்கு மாறியுள்ளது. எந்த லட்சியத்திற்காக மக்கள் போராடினார்களோ அந்த லட்சியம் - உடனடியாக ஜனநாயகம்- சமாதானம் -நிலவுடைமை ஒழிப்பு - உற்பத்தியின் மீது தொழிலாளர் கண்காணிப்பு-சோவியத் அரசமைப்பு எனும் லட்சியம் எட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்-படைவீரர்-விவசாயி புரட்சி நீடூழி வாழ்க!”கட்சியின் இரண்டாவது மாநாடு புரட்சி அலை களிடையே கூடி முடிவெடுத்தது சாதாரணச் செய்தியா?


தனி நபர் அதிகாரமாக இல்லாமல் கூட்டுமுடிவாகவே துவக்கமே வழிகாட்டியது.ஜான் ரீடு சொல்வது போல; தொலைவில் இடை யறாது எழுந்த பீரங்கி முழக்கம் ஜன்னல் வழியாகக் கேட்டது. பிரதிநிதிகள் இடையறாது விவாதித்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்...இவ்விதம் பீரங்கி வெடி அதிர்ச்சிக்கிடையே இருட்டில்வெறுப்புக்கும் அச்சத்துக்கும் எதற்கும் தயங்காத துணிவுக்கும் நடுவில் புதிய ரஷ்யா பிறந்து கொண்டிருந்தது.ரஷ்யப் புரட்சி மானுட வரலாற்றில் புதிய சகாப்தத்தைதொடங்கிவைத்தது என்பது மிகை அல்ல; வெறும் ஆள் மாற்றமோ அதிகார மாற்றமோ அல்ல உழைக்கும் மக்களின் கையில் அதிகாரம் எனும் கனவு மெய்ப்படத் தொடங்கிய தருணம் அது.




லெனினின் முதல் பிரகடனமே யுத்தத்திற்கு எதிரான சமாதான முழக்கமாயிருந்தது. இரண்டாவது பிரகடனம் நிலத்தை உழுபவனுக்கு வழங்குவதாக அமைந்தது.இரவு இரண்டரை மணிக்கு அரசாங்க அமைப்பு பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. 

அரசியல் நிர்ணயசபை கூடுகிறவரை நாட்டை நிர்வகிக்க தொழிலாளர் கள், விவசாயிகளது இடைக்கால அரசாங்கம் அமைக்கப் படுகிறது. மக்கள் கமிசார் என்று அழைக்கப்படும் அவை. தலைவராக லெனினை முன்மொழிந்தது. உற்சாகமும் சீட்டிகை ஒலியும் கரகோஷமும் முழக்கமும் இடியென எழுந்தது. அதேசமயம் நாடு முழுவதும் என்ன நடந்து கொண்டிருந்தது? தோற்றவர்களும் துரோகிகளும் சும்மா இருப்பார்களா?


புரட்சி தொடரும்...

நன்றி ; தீக்கதிர் 25.09.2017.

0 comments :

Post a Comment