செக்கு எண்ணெயும் நாட்டு மாட்டுப்பாலும்

Posted by அகத்தீ Labels:






அறிவு - மூடநம்பிக்கை - அறிவியல் பார்வை
செக்கு எண்ணெயும் நாட்டு மாட்டுப்பாலும்


சு.பொ. அகத்தியலிங்கம்



நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் வந்திருக்கிறது, ஊடகம் சொல்லியிருக்கிறது, வீடியோ, போட்டோ வந்திருக்கிறது என்பதற்காகவெல்லாம் ஒன்றை அப்படியே நம்பிவிடுவதும் மூடநம்பிக்கைதானே? யாரோ ஒரு கிரிமினல் தன் தொழில்நுட்பத் திறனை உபயோகித்து பொய்யை மெய்போல் ஆக்கிவிடக்கூடும் அல்லவா?


தலைப்பில் அறிவை முதலிலும் மூடநம்பிக்கையை இரண்டா வதாகவும் வைத்தேன். ஏனெனில் அறிவைப் பற்றிய மூடநம்பிக்கையே அதிகமாகிவிட்டதால் அது பற்றியும் பேசவேண்டி இருப்பதால் அப்படி அமைத்தேன் .வழக்கமாக அறியாமையோடு சடங்கு, சம்பிரதாயங்களில் மூழ்கிக் கிடப்பதையே மூடநம்பிக்கை என்று நம்பிப் பழகிவிட்டோம். இதுவும் தவறான பார்வையே. யோசித்து கேள்வி கேட்டு சோதித்துப் பார்க்காமல் ஒப்புக் கொள்கிற எதுவும் மூடநம்பிக்கையே!






என் நண்பர் ஒருவர் - “செக்கு எண்ணெய் வாங்கியே உபயோகிக்கிறேன். உங்களுக்கு வேண்டுமெனில் நான் வர வைத்துத் தருகிறேன். எனக்குத் தெரிந்தே பெங்களூருவில் நூறு பேருக்கு மேல் செக்கு எண்ணெய் வாங்குகிறார்கள். இப்போது இந்தப் பழக்கம் வேகமாகப் பரவுகிறது,” என்று பெருமையோடு சொன்னார்.






நான் கேட்டேன்: “செக்கு என்றால் என்ன?”கேள்வி அவருக்கு கோபத்தை உண்டாக்கியது. பல்லைக் கடித்துக்கொண்டு, “செக்கு தெரியாதா? மரத்தால் பெரிய உரல் போலச் செய்திருப்பார்கள். மாடுகட்டி இழுப்பார்கள்,” என விவரிக்க ஆரம்பித்தார். “ அதாவது மாடு கட்டி இயக்குகிற பிழி இயந்திரம் -அப்படித்தானே,” என்றேன் குறுக்கிட்டு .“ஆமாம் ஆமாம்,” என வேகமாகத் தலையாட்டினார் .



மின்சாரத்தின் உதவியால் இயந்திர சக்தியைக்கொண்டு பிழியும் இயந்திரம் செக்கு ஆகாதோ?” என்றேன். “ மாடுகட்டி பிழிந்து கோடிக்கணக்கான மக்களுக்கு எண்ணெய் தர முடியுமோ,” என்றேன். விவாதம் சூடு பிடித்தது.



.ஒரு விளம்பரம் சொல்லுகிறது: “நாட்டு மாட்டுப் பாலில் தயாரான எங்கள் பிஸ்கெட் உடலுக்கு நல்லது.” அந்த நிறுவனத்துக்கு தினசரி பெருமளவு விற்கும் பிஸ்கெட் தயாரிக்கும் அளவுக்கு திடீரென்று நாட்டுப் மாடும் பாலும் எங்கிருந்தது குதித்தது? பச்சையான மோசடி விளம்பரம்தானே. யோசிக்காமல் நாட்டு மாட்டுப் பாலில் தயாரித்தது என நம்புவதும் - நாட்டு மாட்டுப் பால் என பெருமளவில் விற்கப்படும் எதையும் விரும்பி வாங்குவதும்; அது நல்லது என பிறருக்குச் சொல்லுவதும் ... இதெல்லாம் சரியா ?



இன்னொரு விளம்பரம்: குட்டி திரிகைக்கல்லில் ஒரு கை மூலிகையை அரைத்துக் கொண்டிருக்கிறது . பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட எங்கள் ஹேர் ஆயிலை உபயோகித்தால் முடிப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறது. அந்த நிறுவன ஹேர் ஆயில் தினசரி பல ஆயிரம் பாட்டில்கள் விற்கப்படுகிறது.



அவை அனைத்துக்கும் திரிகைக்கல்லில் அரைப்பதெனில் எவ்வளவு மனித கரங்கள் தேவைப்படும்? எவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் ? நடைமுறையில் இப்படி செய்து லாபகரமாய் தொழில் செய்ய முடியுமா ? யோசிக்காமல் இந்த விளம்பரங்களை நம்புவதும் பிறருக்கு பரிந்துரைப்பதும் சரியா ?



நண்பரிடம் நான் சொன்னேன்: “நான் திறந்த மனதோடு இருக்கிறேன். நாட்டு மாட்டுப் பால் பிற மாட்டுப் பாலைவிட எந்த விதத்தில் சக்தியானது? எந்த விதத்தில் அது சிறந்தது? செக்கு எண்ணை எந்த விதத்தில் ஆரோக்கியமானது? எந்த விதத்தில் சிறந்தது? சோதனைச் சாலையில் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் . ஆதாரத்தோடு நிரூபியுங்கள் . போட்டோ ஷாப் ஜோடனை ஆதாரமல்ல ; அந்த அமெரிக்க ஆய்வகம் சொன்னது - இந்த ஆய்வு சொன்னது என்கிற சரடல்ல . நிரூபிக்கப்பட்ட ஆய்வு முறையில்; எங்கே எத்தனை முறை சோதித்தாலும் ஒரே முடிவு கிடைப்பதே அறிவியல் ஆய்வு. அந்த முறையில் நிரூபியுங்கள் . நான் சொன்னது தவறெனில் ஒப்புக் கொள்வேன். என் முடிவை மாற்றிக் கொள்வேன் .



அதுவரை இவற்றை அறிவாளித்தனமான மூட நம்பிக்கை என்பேன் .அவ்வளவுதான் .



இது மட்டுமல்ல “எங்கள் சிட் பண்டில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் இரட்டிப்பாய்த் திருப்பித் தருவோம்,” என்றதும் முட்டிமோதி முதலீடு செய்ய ஓடுகிறோமே! அதனை எப்படி தரமுடியும்? சாத்தியக்கூறென்ன? யோசிக்காமல் முதலீடு செய்துவிட்டு ; சீட்டுக் கம்பெனி ஓடியபின் புகார் கொடுக்க முண்டியடிப்பதும் ; ஊடகங்கள் முன் புலம்புவதும் அறிவு பூர்வமானதா ?



அறிவியல் பார்வை என்பது ஏதோ பழைய காலத்துக்கொவ்வாத சடங்குகளைச் சாடுவதில் மட்டும் போதுமா ?






ஒருவர் நான் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று காதில் பூ சுற்றுகிறார். காதைக் கொடுத்தது அல்லாமல் ஆட்சியையும் அவரிடம் கொடுப்பது எந்த வகையில் அறிவியல் பார்வையாகும் ?



இப்போது இன்னொரு கேள்வி அரசுப் பள்ளி மாணவருக்கு அறிவுத் திறன் குறைவு ; தகுதி போதாது என நீட்டர்கள் கூப்பாடு போடுகின்றனர் .
என் கேள்வி, அறிவு என்பதென்ன? டாக்டர் படிப்புக்கு நீட் தேர்வில் வெற்றிபெறுவது மட்டுமே அறிவா? நம் சராசரி ஆயுள் காலம் கூடியிருக்கிறது, அதன் காரணம் யார்? இந்த மருத்துவ வளர்ச்சியை உருவாக்கியதெல்லாம் நீட் தேர்வு எழுதியவர்களா? சாதாரண பஞ்சாயத்து போர்டு பள்ளியில் படித்தவர்தாமே?சரி மருத்துவராவதும் கம்ப்யூட்டர் நிபுணராவதும் மட்டுமே அறிவா? நாம் உண்பது - உடுப்பது -காண்பது -அனுபவிப்பது -களிப்பது - எல்லாம் அறிவற்றவர்களால் உருவாக்கப்பட்டதா? சாதாரண அரசு பள்ளிகளில் பயின்ற அல்லது அரைகுறையாய் படித்த இவர்களின் உழைப்பும் அறிவும் இன்றி ஒரு நிமிடம் கூட உன்னால் என்னால் வாழ முடியுமா?



ஒரு துறை வல்லுநர் இன்னொரு துறை பற்றி அறியவில்லை என்பதால் முட்டாளாகிவிடுவாரா? என் தாய்க்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியும் - சமைக்கத் தெரியும் - ஆனால் கணினி தெரியாது. இதனால் என் தாய் முட்டாளாகிவிடுவாரா?



சந்தி தெரு பெருக்குவதிலிருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள் விடுவது வரை பூமிப் பந்தில் நாம் செய்கிற ஒவ்வொன்றும் அறிவார்ந்த செயல்கள்தாம் .



உழைப்பும் வியர்வையும் சேர்ந்ததே உலகின் வளர்ச்சி. இதைப் புரியாமல் தரம், தகுதி என அவரவர் விரும்பும் படிப்பைப்படிக்கவிடாமல் தடுப்பதும் நியாயப்படுத்துவதும் அறிவாளித்தனமான மூடநம்பிக்கையே! ஏமாற்றே!



அறிவியல் பார்வை என்பது எதையும் சந்தேகிப்பதும், கேள்விகேட்பதும், சோதனைக்கு உட்படுத்தச் சொல்வதும், நிரூபிக்கப் பட்டவைகளையே ஏற்பதும், மற்றவைகளை ஐயத்தோடே அணுகுவதும்தான்.



நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் வந்திருக்கிறது, ஊடகம் சொல்லியிருக்கிறது, வீடியோ, போட்டோ வந்திருக்கிறது என்பதற்காகவெல்லாம் ஒன்றை அப்படியே நம்பிவிடுவதும் மூடநம்பிக்கைதானே? யாரோ ஒரு கிரிமினல் தன் தொழில்நுட்பத் திறனை உபயோகித்து பொய்யை மெய்போல் ஆக்கிவிடக்கூடும் அல்லவா ?



அறிவு என்பது நடைமுறையோடு உரசி உரசி உண்மை காண்பதல்லவா ?எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதன்றோ அறிவு ?



அரசியல் நடத்தவும் குடும்பம் நடத்தவும் அறிவியல் பார்வை தேவை,” எனச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கூறியது எவ்வளவு பொருள் பொதிந்தது ?



இந்துத்துவா பெயரில் சொன்னாலும்; தமிழ் மொழி, இனத்தின் பெயரால் சொன்னாலும் கேள்வி கேட்காமல் எதையும் நம்பக்கூடாது; நிரூபிக்கப்படாத எதையும் ஏற்கக்கூடாது . பாரம்பரியம் என்பதாலோ -நம் முன்னோர் வாக்கு என்பதாலோ எதையும் ஏற்கவும் வேண்டாம்; கண்ணை மூடி நிராகரிக்கவும் வேண்டாம். கேள்விக்கு உட்படுத்துங்கள். சோதனைக்கு உட்படுத்துங்கள். சரியானதை மட்டுமே ஏற்பதே அறிவு . அறிவியல் பார்வை.



நன்றி : வண்ணக்கதிர் , 17/09/2017 .தீக்கதிர்.


0 comments :

Post a Comment