மதமாற்றம் :
கள்ள
நியாயம் பேசும் பெரியமனிதர்கள் !
சு.பொ.அகத்தியலிங்கம் .
“ முகமதிய ஆட்சிகூட முற்றிலும் கெட்டதல்ல . எதுவும்
முற்றிலும் கெட்டதல்ல ; எதுவும் முற்றிலும் நல்லதல்ல . ஏழைகளுக்கும் , தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் முகமதிய ஆட்சி சுதந்திரம் அளித்தது . அதன் காரணமாகத்தான் நம் மக்களில்
ஐந்தில் ஒரு பகுதி முகமதியர் ஆனார்கள் . கத்தியும் , நெருப்பும் கொண்டே இம்மாறுதல்
அனைத்தும் நடந்ததென நினைப்பது பயித்தியக்காரத்தனமாகும் .நீங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்
உங்கள் சென்னை மாகாணத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஏன் பாதிப்பேர் கூட கிருத்தவராகி விடுவார்கள்
.நான் மலையாளத்தில் பார்த்ததைவிட முட்டாள்தனமான விஷயம் உலகில் வேறு எங்காவது இருக்கிறதா
?பாவம் ! பறையர்கள் , மேல் ஜாதியினர் நடக்கும்
தெருக்களில் கூட நடக்க அனுமதிக்கப்படுவதில்லை . ஆனால் அவன் பெயரை மாற்றி , வாயில் நுழையாத
ஆங்கிலேயர் பெயரையோ,முகமதியன் பெயரையோ வைத்துக்
கொண்டால் , அப்போது அவன் எல்லாம் சரியாகப் போய்விடுகிறானாம் ! மலையாளத்திலிருப்பவர்கள்
அனைவரும் முழுப்பைத்தியக்காரர்கள் என்பதைவிட வேறு என்ன நாம் நினைக்க முடியும் ? இந்த
கொடிய பழக்கங்களிலிருந்து தங்களைத் திருத்திக் கொள்ளும் வரை , இந்தியாவிலுள்ள மற்ற
அனைவரும் அவர்களைக் கேவலமாக நடத்தவேண்டும் . இவ்வளவு கோரமான பிசாசுத்தனமான பழக்கங்களைப்
பின்பற்ற அவர்களுக்கு அவமானமாக இல்லையா ? இத்தாழ்த்தப்பட்டவர்கள் நம் குழந்தைகளாக இருக்கும் வரை அவர்களைப் பட்டினி
போட்டு சாகடிக்கிறோம் ; அவர்கள் மதத்தை மாற்றிக் கொண்டவுடன் , அவர்களுக்கு விருந்து
போடுகிறோம் என்றால் , இதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு உண்டா ? இந்த வெட்ககரமான ஜாதி
வித்தியாசங்கள் அறவே ஒழிய வேண்டும் .”
இதனைச் சொன்னவர் பெரியாரல்ல , அம்பேத்கரல்ல மாறாக சுவாமி
விவேகாநந்தர் சொன்னது . [ஆதாரம் : இந்தியப்
பிரசங்கள் – சுவாமி விவேகாநந்தர் – பக்கம் 191 ]
இந்துக்களைக் கட்டாயப் படித்தியே பிற மதங்களுக்கு மாற்றினர்
என்று இன்றும் குருமூர்த்தியும் , இராம . கோபாலனும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தும்
இதர சஙரிவார் அடிப்பொடிகளும் கூறுவதை அன்றே பைத்தியக்காரத்தனம் என எள்ளி நகையாடினார்
விவேகாநந்தர் . விவேகாநந்தரைவிட இந்த கலவர மூர்த்திகள் இந்துமதத்தை அறிந்தவனோ !
மலயாளத்தில் நடந்த பைத்தியக்காரத்தனம் என விவேகாநந்தர் சுட்டிக்காட்டுவதை
; அதனை எதிர்க்க வேண்டும் என விவேகாநதர் கோரியதை ; வைக்கம் போராட்டத்தில் செய்து காட்டிய
மாவீரர் தந்தைப் பெரியார் . ஆனால் அவரை செருப்பாலடிக்க
வேண்டும் எனக் கொக்கரிக்கிற ராஜாக்கள் ஊன்மையில் விவேகாநந்தர் வார்த்தையில் சொல்வதானால்
முழுப்பைத்தியக்காரனே !
அம்பேத்கர் மதம் மாறியது குறித்து சமீபத்தில் குருமூர்த்தி தினமணியில் பூசி மெழுகி மென்று விழுங்குகிறார்
. அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பை பற்றி அவர் வரலாற்றை எழுதிய தனஞ்சய் கீர் எழுதுகிறார்
.
“ மத மாற்ற அறிவிப்பைப்போல்
அம்பேத்கரின் வேறு எந்த அறிவிப்பும் உலக அளவில் இந்த அளவு கவனத்தை ஈர்க்கவில்லை . ஆம்
உண்மையில் அது ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களின் அச்சம் நிறைந்த வேதனையின் இறுதி
ஓலமாக இருந்தது . துன்பப்படும் ஆன்மாவிடமிருந்து வீறிட்டெழுந்த அலறல் ஒலி அது . அவர்களின்
சொல்லொணாத் துன்பங்களையும் - கூனிக்குறுகச்செய்த
அவமானங்களையும் - பன்னெடுங்காலமாக சுரண்டப்பட்டு
மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட இழிவுகளையும் மதமாற்ற அறிவிப்பின் வாயிலாக அம்பேத்கர்
அவர்கள் வெளிப்படுத்தினார்”
நாம் குருமூர்த்தியை கேட்கிறோம் , இந்த அடிப்படையிலா தாய்
மதத்துக்கு திரும்புதல் என்கிற புனுகு பூசிய மதமாற்றத்தில் நடக்கிறது ?
குறைந்த படம் அன்று மதம் மாறாமலிருக்க அம்பேத்கர் விதித்தாரே
ஒரு நிபந்தனை ; அதையாவது நிறை வேற்றிவிட்டோம் என்று குருமூர்த்தி கூறமுடியுமா ? அந்த
நிபந்தனை மறந்து போயிருக்கும் உங்களுக்கு , எனவே நினைவூட்டுகிறோம் ;
“ சாதி இந்துக்களின்
மனமாற்றத்திற்காக நான் இன்னும் ஐந்து ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரைக் காத்திருக்க
முடியும் . ஆனால் , அதற்கிடையில் ‘ கேசரி’ [ திலகரால் நடத்தப்பட்ட பத்திரிக்கை ] வட்டத்தாரால்
மிகச் சிறந்த இந்துவாகக் கருதப்படுகின்ற , தீண்டப்படாத வகுப்புத் தலைவரான கே.கே.சகத்தை
; மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் சங்கராச்சாரியர் பதவியில் ஓராண்டுகாலம் அமர்த்தவேண்டும்
; அவர்கள் மனம் மாறியதற்கும் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்கும் அடையாளமாக ஒரு நூறு சித்பவன்
பார்ப்ப்னக் குடும்பங்கள் புதிய சங்கராச்சாரியார்
காலில் விழுந்து வணங்க வேண்டும் .”
அம்பேத்கரின் இந்த நிபந்தனையை அன்று ஏற்காததால் அவர் மதம்
மாறினார் இன்று நிலைமை மாறிவிட்டதா ? வடக்கே ஒரு சங்கராச்சாரியார் தலித்துகள் கோவிலுக்குள்
நுழைந்தால் கோவில் தீட்டுப்பட்டுவிடும் என்கிறார்
. இவரை மோடி அரசு தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திலேனும் கைது செய்ததா ?
குருமூர்த்தி சொல்கிறார் ; சங்பரிவார் செய்வது மதமாற்றம்
இல்லையாம் ; மனமாற்றமாம் ; தாய்மதம் திரும்புதலாம் .சாதி இந்து மதத்தின் அடிப்படை இல்லையாம்
சொல்கிறார் . அப்படியே இருக்கட்டும் அம்பேத்கர் அன்று கூறிய ஒரு செய்தியை கீழே பதிகிறோம்
; அதற்குப் பதில் சொல்ல முடியுமா ?
“ இந்து சமூகத்தைச்
சிதறடிக்கிற சக்தியாக சாதி இருக்கிறது . சாதியின் இந்த விளைவுகளுக்கு எதிராகச் செயல்பட்டு
இந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தி எதுவுமே இல்லை . மற்ற மதத்தவரிடையே ஒருங்கிணைக்கும்
சக்திகள் ஏராளமிருக்கின்றன . இந்துக்குள் சாதி இருப்பது போல் மற்ற மதத்துக்குள்ளும்
சாதிகள் இருக்கத்தான் செய்கின்றன . இருந்த போதிலும் இந்துக்கள் சாதிக்குத் தருகிற முக்கியத்துவத்தை
மத்த மதத்தவர் தருவதில்லை. ஒரு முகமதியனையோ ஒரு சீக்கியனையோ நீ யாரென்று கேளுங்கள்
. நான் முகமதியன் , சீக்கியன் என்றே பதில் தருவான் . தனக்கென்று ஒரு சாதி இருந்த போதிலும்
கூட அவன் தன் சாதியைச் சொல்வதில்லை . நீங்களும் அவன் பதிலில் திருப்தி அடைந்து விடுவீர்கள்
. அவனை நீ சன்னியா , சையதா , ஷேக்கா ,சாதிக்கா , பிஞ்சாரியா [ தமிழகச் சூழலில் லப்பையா
உருதா ] என்றெல்லாம் கேட்கப் போவதில்லை . தானொரு சீக்கியன் என அவன் கூறியதும் ? நீங்கள்
அவனை ஜாட்டா , ரோதாவா , மாம்பியா , ராம்தாஸியா என்றெல்லாம் கேட்பதில்லை .நான் ஒரு இந்து
என்று எவனாவது சொன்னால் நீங்கள் அந்தப் பதிலால் திருப்தி அடைந்து விடுவத்தில்லை . அவனுடைய
சாதி என்னவென்று விவரமாகத் தெரிந்து கொள்வது அவசியம் என உணருகிறீர்களே ஏன் ? ஒரு இந்துவைப்
பொறுத்த மட்டில் அவனுடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவன் எத்தகைய மனிதன்
என்பதை உங்களால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்குச் சாதி முக்கியத்துவம்
வாய்ந்ததாக உள்ளது .”
சமூக உளவியலை அம்பேத்கர் கீறிக்காட்டிவிட்டார் . இப்போது
மதம் மாறுகிறவர்கள் எந்த சாதி ? அவர்களின் பூர்விக சாதியில் வைக்கப்படுவார்கள் அல்லது
தனி ஜாதியாக வைக்கப்படுவார்கள் என்பதுதானே உங்கள் நிலைப்பாடு . வாதத்துக்காக பிராமணனாகக்
கூட மாறலாம் என்கிறார் ராம.கோபாலன் . ஆனால் அப்படி மாறினால் என்ன ஆகும் ? ராமனுஜர்
ஜாதியை எதிர்த்ததுடன் தீண்டப்படாத சாதியினருக்கு பூணூல் அணிந்து பிராமணன் என்று அறிவித்தார்
. ஆனால் அவர்கள் பிராமணரிலும் தனிப்பிரிவாகவே இன்றும் நடத்தப் படுகின்றனர் . அந்த குடும்பத்தோடு
இதரர் கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்வதில்லை . “ கறுப்புப் பாப்பானை நம்பவே கூடாது”
என ஒரு சொலவடையே உருவாக்கிவிட்டனர் . சாதிய அகம்பாவத்தின் குறியீடல்லவா இது . அப்படி
சமூகச் சூழல் இருக்க மனமாற்றம் தாய்மதம் திரும்பல் என வித்தாரம் பேசுவது வீணே !
நாங்கள் எப்போதோ சாதியை உதறிவிட்டோம் ; எதிரிகள்தாம் நினைவூட்டிக்கொண்டே
இருக்கிறார்கள் என சங்பரிவார் சாதுரியம் பேசுகிறார்கள் . அவர்களுக்கு சிந்தனைச்
சிற்பி சிங்காரவேலர் நெற்றியடியாகக் கூறுகிறார்
, “ சகோதரத்துவம் என்ற பேச்சு சாதி உள்ளவரை
இந்தியாவில் வெறும் பேச்சே ! மந்திர தந்திரங்களால் நோயைப் போக்க முடியாததுபோல் நமது
சமூகப் பெரு நோயாகிய சாதி என்னும் நோயைக் கள்ள நியாயத்தால் போக்கமுடியாது . பூணுலைத்
தரித்துக் கொண்டு அதற்குரியச் சாதிச் சடங்குகளைச் செய்துகொண்டே சாதியை விட்டுவிட்டதாகச்
சொல்லும் நமது பெரியோர்களின் நியாயம் கள்ள நியாயமே . இந்த கள்ள நியாயம் வெகு காலமாக
இருந்து வருகிறது .”
குருமூர்த்தி , ராமகோபாலன்களின் நியாயம் கள்ள நியாயமே ! நாம்
சங்பரிவாரைக் கேட்போம் ; ஆசை காட்டியும் அதிகாரத்தால் மிரட்டியும் தாய்மதம் திரும்ப
ஏழைகளை நிர்பந்திக்கும் நீங்கள் !அவர்கள் மனம் திருந்திவிட்டதாகக் கூறும் நீங்கள்
! மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் நஜ்மாஹெப்துல்லாவை , நக்வியை ஏன் மனம் மாறி
தாய்மதம் திரும்பச் சொல்லவில்லை ? இரண்டாம் தாரமாக ஹேமமாலினியைத் திருமணம் செய்ய தர்மேந்திரா
முஸ்லீமாக மாறி தில்வர்கான் ஆனார் ; ஹேமமாலினி ஆயிஷா ஆனார் ; இப்போ அவங்களை ஏன் பாஜக
தாய்மதம் திரும்பச் சொல்லவில்லை ? சங்பரிவாரின்s நாடகத்தை வஞ்சகத்தை புரிந்துகொள்ள
மிகவும் நுட்பமாகப் பார்க்கவேண்டும் . விழிப்பாக இருக்க வேண்டும் . மகாபாரதக் கதையில்
மாவீரன் கர்ணனையே எப்படி வஞ்சகமாக தந்திரத்தால் வீழ்த்தினார்கள் என்பதறிவோம் . இவர்களிடம்
இப்போது அதிகாரமும் உள்ளது . இரட்டை விழிப்புணர்வு தேவை .
0 comments :
Post a Comment