சொற்களை..

Posted by அகத்தீ Labels:



சொற்களைக்காணவில்லை ..
==========================
சொற்களைக்காணவில்லை
அகராதியைப் புரட்டினேன்
அங்கு இருந்த சொற்கள்
பேசுவது உண்மையா
மீண்டும் குழப்பம்

புரட்சி ,மறுமலர்ச்சி .
மாற்றம் ,தர்மம்
எல்லா சொற்களும்
இங்கு மலினப்பட்டுவிட்டது
அர்த்தமிழந்து பல்லிளிக்கிறது
கடைசியாய்
மக்கள் என்ற சொல்லும்
மொழி
ஆண்களின் மொழியாய் இருக்கிறது
மீட்டெடுக்க வேண்டும்
என்றார் பெண்ணுரிமைப் போராளி
மொழி
ஆதிக்க சாதியினர் மொழியாய் உள்ளது
ஜனநாயகப் படுத்த வேண்டும்
என்றார் ஒடுக்கப்பட்டவர்
மொழி
மத மயக்கத்தில் புதைந்து கிடக்கிறது
தெளியவைக்க வேண்டுமென்றார்
பகுத்தறிவாளர்
மொழி
சுரண்டல் வர்க்க மொழியாய் இருக்கிறது
போராட்ட மொழியாக்க வேண்டும்
என்றார் போராளிகள்
சொற்களைக்காணவில்லை
அகராதியைப் புரட்டினேன்
அங்கு இருந்த சொற்கள்
பேசுவது உண்மையா
மீண்டும் குழப்பம்
எம் வள்ளுவன்
சொன்னான்
எப்பொருள்
யார்யார் வாய் கெட்பினும்..
ஆமாம் ஆமாம்
மெய்ப்பொருள் தேட
முனைவோம்
சொற்களுக்கு பஞ்சமில்லை
கலகமொழியில்
கவிதை யாத்திடுக !




எனக்கு அதுபோதும்
=====================
“ உனது கவிதைகள்
எதுவும் காலத்தை வென்று நிற்காது ;
நொடியில்
மரணத்தைத் தழுவும் ;
காலத்தை மீறி நிற்கும்
கவிதை யாத்திடு ;
கலகக் கவிதைகள்
அற்ப ஆயுளில் முடிந்து போகும் “
எனது நண்பர் தோழர்
இடித்துரைத்தார் ..
“ நன்றி ! நண்பா !தோழா!
காலத்தை மீறிய கவிதைகள்
எனக்குத் தேவையே இல்லை;
கண்ணெதிரே காணும்
கொடுமையைக்
கண்டிக்கும்
கலக விதைகளையே
தூவ விரும்புகிறேன்.
நொடியில் மடிந்தாலும்
சிறு சலனத்தையேனும்
ஏற்படுத்தினால்
அது போதும்.
சமூகத்தை
தலைகீழாகப் புரட்ட
எனது கவிதைக்கு
சக்தி இல்லாமல் போகலாம்
ஆனால்
அதற்காக
சுண்டு விரலையேனும்
அசைக்கிறேனா ? இல்லயா?
அது மட்டுமே
என் அளவு கோல்
அது எனக்குப் போதும்”

0 comments :

Post a Comment