குஷ்வந்த சிங் ; பாகிஸ்தான் ரயில்

Posted by அகத்தீ Labels:

[   
   குஷ்வந்த சிங் மரணத்துக்கு அவரது நூலை நினைவுகூர்வதைத்தவிர வேறு சிறந்த அஞ்சலி எதுவாக இருக்க முடியும் ? அதுவும் மதவெறி தலைவிரித்தாடும் தேர்தல் களத்தில்...........]பாகிஸ்தான் போகும்ரயிலும் 
 
மதச்சார்பின்மையின் அத்தியாவசியமும்
சு.பொ.அகத்தியலிங்கம்

பாகிஸ்தான் போகும் ரயில்,
ஆசிரியர் : குஷ்வந்தசிங்

தமிழில்:ராமன் ராஜா,

கிழக்குப் பதிப்பகம்,


பொதுவாகவே நான் ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன் அல்ல. நூற்றுக் கணக்கான மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்துள்ளேன், ஆயினும் என் ஆர்வம் ஏனோ ஆங்கில நாவல்கள் பக்கம் 
குறிப்பிடத்தக்க விதத்தில் திரும்பியது இல்லை. குஷ்வந்த் சிங் ஜோக்குகளைப் படித்திருக்கிறேன்.ரசித்தும் இருக்கிறேன். இருப்பினும் அவர் எழுத்துகளில் மது, மாது(ஷ்வீஸீமீ ணீஸீபீ ஷ்ஷீனீமீஸீ) சங்கதிகளே 
தூக்கலாக இருக்கும். என்னுள் படிந்த சித்திரம் இதுவே. மேலும் அவர் காங்கிரஸ் கட்சி என்கிற எண்ணம் வலுவாக என்னிடம் வினையாற்றியது. அவர் சஞ்சய் காந்தியோடு நெருங்கி இருந்ததும் என் பார்வையில் குறுக்கீடாக இருந்தது. பின்னர் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம்வரினும், 

அவரை காங்கிரஸ் சார்பு மாநிலங்களவை உறுப்பினராகவே பார்த்தேன். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற ஏடுகளின் ஆசிரியராகச் செயல்பட்டபோது அவற்றை படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாற்றல் மிகச்சிறப்பாக இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நாவல் குறித்து பல நண்பர்கள் கூறியபோது 
படிக்க எண்ணினும் வாய்ப்பு அமையவில்லை. நானும் அது பற்றி பெரிதாக முயற்சித்ததில்லை. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக, இப்போது தமிழில் வெளிவந்ததும் படித்தேன். குஷ்வந்த் சிங் என்னுள் 
விஸ்வரூபமெடுத்தார். அடடா இந்த நாவலை இதுவரை படிக்காமல் இருந்து விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியே ஏற்பட்டது. 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது இந்நாவல். இன்று படிக்கும் போதும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் சம்பவங்களோடு பொருந்திப் போவது தற்செயலானது அல்ல. ஆம், மதவெறி நெருப்பு தானாகப் பற்றுவதல்ல; பற்றவைக்கப்படுவதே என்பதை இந்நாவல் உரக்கப்பேசுவதால் -
நெஞ்சில் பதிய வைப்பதால் இன்றும் உயிர்த்துடிப்புடன் இந்த நாவல் மனதைக் கவ்வுகிறது. இந்திய விடுதலையின் போது இந்தியா- பாகிஸ்தான் என இரு கூறாக்கப்பட்ட சூழலில் இந்நாவல் பிறந்துள்ளது. பாகிஸ்தான் எல்லையோர இந்தியக் கிராமமான மானோ மாஜராதான் கதைக்களம். சீக்கியர்கள் 
பெரும்பான்மையாக உள்ள கிராமம். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவரும் அருகருகே 

வாழும் அமைதியான கிராமம். எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகச்சொற்பம்.நாட்டு நடப்புகள் குறித்து அதிகம் தெரிந்திராத மக்கள். உழைப்பையும் அன்பையும் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அந்த கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாக குஷ்வந்த் சிங் நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார். 

அந்த கிராமத்தில் ராம்லால் சேட் வீட்டைப் பக்கத்து ஊர் சமூகவிரோதிகள் கொள்ளையடிப்பதும்... அந்தசமயம் அரசால் பத்தாம் நம்பர் ரவுடி என முத்திரை குத்தப்பட்ட ஜக்கா சிங் ஒரு ஏழை நெசவுக்காரமுஸ்லிம் பெண் நூரனிடம் காதலால் கட்டுண்டு கிடப்பதுமாய் நாவல் மொட்டவிழ்கிறது. காதல் காட்சிகளை குஷ்வந்த் சிங் அவரது பாணியில் தீட்டியுள்ளார். கொள்ளைக்காரர்களால் ராம்லால் சேட் 
கொல்லப்பட்டதும் நாவல் சூடுபிடிக்கிறது. அதிகார வர்க்கமும் காவல் துறையும் மிக எளிதாக அந்தப்பழியை ஜக்கா சிங் மீது சுமத்துவது முதலில் அதிகார வர்க்க நடைமுறையைக் கேலிசெய்வதாக அமையினும், போகப்போக அதற்குள் மிகப்பெரிய மதக்கலவர சதி புதைந்திருப்பதை மிக நுட்பமான காட்சி சித்தரிப்புகளூடே குஸ்வந்த் சிங் நூல் நெடுகச் சொல்லிச் செல்கிறார்.அவை ஒவ்வொன்றும் இன்றையகுஜராத்தின் சில பக்கங்களையாவது நினைவூட்டாமலிருக்காது. 

கொம்புசீவிவிடப்பட்ட மதவெறியால் பாகிஸ்தானில் கோரமாய்க் கொல்லப்பட்ட சீக்கியப் பிணங்கள் கூட்ஸ்களில் நிரப்பப்பட்டு அந்த ரயில் கிராமத்துக்கு வந்தது. மத வேறுபாடின்றி அக்கிராம மக்கள் பதைத்தார்கள். கண்ணீர் உகுத்தார்கள். ஆயினும் அவர்களுக்குள் அது பகைமை நெருப்பை பற்ற வித்திடவில்லை. அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? முன்பு நடந்த கொலைக்காக ஜக்கா சிங்கையும், 

சம்பந்தமின்றி ஊருக்குப் புதிதாய் வந்த படித்த இளைஞனை (அவன் கம்யூனிஸ்ட் என குஸ்வந்த் சிங் பெயர் சுட்ட மாட்டார் வர்ணனை அப்படி தோற்றமளிக்கச் செய்யும்) கைது செய்கிறது.லாக் அப்பில் பூட்டுகிறது அதிகார வர்க்கம். ஆனால், உண்மையான குற்றவாளியான மல்லியைக் கைது செய்தபின் அவனை விடுதலை செய்து மதவெறிக் கோரநர்த்தனத்துக்கு முன்னிற்கச் செய்கிறது. அதிகார வர்க்கத்தின் 
மூர்க்கம்,வஞ்சகம்,பேராசை, காமக்களியாட்டம் எல்லாம் நேரடிக்காட்சிபோல் நாவலில் நகர்கிறது. மீண்டும் பிண ரயில், அகதிகள் வருகை மெல்ல மெல்ல மனோ மஜரா கிராமத்தில் மதவெறி குரோத வைரஸ் செலுத்தப்படுகிறது.ஆயினும் மக்கள் மதமாச்சரியங்களை மீறி வாழவே பிரியப்படுகிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்?விதியின் போக்கைத் தீர்மானிப்பது சூழலும் 
ஆளும் வர்க்கமுமாய் அல்லவா இருக்கிறது? இன்றும் அதுதானே நிலைமை. அந்த கிராமத்தை 

விட்டு முஸ்லிம்கள் வெளியேறவேண்டியதாகிறது. நூரன் குடும்பம் உட்பட முஸ்லிம்கள் மிகுந்த மனச்சோர்வோடுதான் வழியனுப்பப்படுகிறார்கள்.ஆனாலும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் வேறாகவே இருக்கிறது. மாஜிஸ்திரேட் ஹூகம் சந்த், சப் இன்ஸ்பெக்டர் இருவரின் நடவடிக்கைகளை விலாவாரியாகப் பதிவு செய்து அதிகார வர்க்கத்தையே தோலுரித்துக் காட்டிவிட்டார். 
குரோத நெருப்பு வலிய மூட்டப்படுகிறது. நெருப்பு சூடேற சூடேற இளைஞர்கள் பலர் மனதில் விஷம் ஏறுகிறது. மனிதம் தொலைய மிருகம் பழிவாங்கப் புறப்படுகிறது. அகதிகளாய் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ள முஸ்லிம்களைப் பிணமாக்கி பிண ரயிலை அனுப்பி பழிவாங்கக் கச்சிதமாய்த் திட்டம் தீட்டப்படுகிறது. இது ஒருபுறம். மறுபுறம், அந்த நேரம் ஹூகம்சந்த் மனதை விலைமாதாய் இன்பம் தர அழைத்துவரப்பட்ட இளம்பெண் ஹஜீனா மீதான மையல் ஆட்டிப்படைக்கிறது. தன் 
மகள் வயதொத்த அந்த முஸ்லிம் பெண்ணின் மீது பரிவும் பற்றும் அவருக்குள்ளும் கல்லுக்குள் ஈரமாய் தலைநீட்டுகிறது.விழித்துக் கொண்ட மனிதம் அவரை யோசிக்க வைக்கிறது. இப்போது 

அவர் மூளையில் உதிப்பது சதியல்ல.. ஒரு புத்திசாலித்தனக் கணக்கு. ஜக்கா சிங்கின் காதலும் வெள்ளந்தியான மனிதநேயமும் முரட்டுவீரமும் உசுப்பிவிடப்பட்டால்-அத்துடன் அந்த படித்த இளைஞனும் சேர்ந்தால்... கதை மாறலாம் அல்லவா? அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.படித்த இளைஞன் ஆத்திரப்படுகிறான். குழம்புகிறான். கையைப்பிசைந்து மதுவில் மூழ்குகிறான். ஆனால் ஜக்கா சிங் ஒற்றை ஆளாய் கடவுளைக் கும்பிட்டுக் கிளம்புகிறான். அவனது நம்பிக்கைக்கு பெரிய 
தத்துவ அடிப்படை எல்லாம் கிடையாது. அன்பு... மனிதர் மீதான காதல். நல்லது செய்யும் பெரிய மனது. அவ்வளவுதான். அவனின் முயற்சி வெற்றிபெறுகிறது.சதிக்கும்பலின் திட்டம் இவனொருவனால் தவிடு 
பொடியானது.ஆனால் அதற்கு ஜக்கா சிங் தன் உயிரையே விலையாக அல்லவா தந்தான். நமக்கும் நிம்மதிப் பெருமூச்சு... இந்த நாவல் மத நடைமுறைகளை-தத்துவ ஊனங்களைப் போகிறபோக்கில் நன்றாகப் பகடிசெய்கிறது. ஒரு ஆபத்தான கதைக்கரு, கதைக்களம் கிட்டத்தட்ட வாள் முனைமேல் நடப்பது
போன்றது.அதில் குஸ்வந்த் சிங் வெற்றி பெற்றது எப்படி? 96 வயதைக் கடந்து எப்படியும் சதம் அடிப்பேன் என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் தமது கடைசி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். 

அதையொட்டி அவர் அளித பேட்டியொன்றில் தான் கடவுள் மத நம்பிக்கையற்று இருப்பதற்காகப் பெருமைப்பட்டார்.இறுதிமூச்சுவரை அப்படியே வாழ்வேன் என்றார்.மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தார். இந்த உறுதிதான் 1956ல் எழுதிய இந்த நாவலை இன்றும் பேசவைக்கிறது. குஸ்வந்த்சிங் எழுத்து நடை வீரியமிக்கது. காட்சிசித்தரிப்பாயினும், மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாயினும், சமூக விமர்சனமாயினும், ஆசிரியர் குரலாயினும் அதனை இயல்பாகப் 
பதிவு செய்கிற வல்லமை அவருக்கு கைவரப்பெற்றிருக்கிறது. அந்த வீச்சும் வேகமும் ஆற்றொழுக்கு நடையும் சற்றும் குறையாமல் தமிழில் தந்திருக்கிற ராமன் ராஜா நம் பாராட்டுக்குரியவர். மதவெறி இன்றைக்கும் நம் சமூகத்தில் முக்கிய அஜெண்டாவாக உள்ளது. குஜராத் அதன் சோதனைக் களமாக உள்ளது. இந்நிலையில் மதவெறிக்கு எதிராக உரக்கப்பேச இந்த நாவலும் ஆயுதமாகும்

1 comments :

  1. hariharan

    நல்ல நாவல், குஷ்வந்த்சிங் ஒரு ஜோக் எழுத்தாள்ர் என்றே நினைத்திருந்தேன். மனோமஜ்ரா இன்னும் ம்றையாமல் மனதில் நிற்கிறது.

    கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட மற்றொரு நாவல் லஜ்ஜா- தஸ்லிமா நஸ்ரீன் இரண்டுமே வகுப்புவாதம் , மதவன்முறைகளில் சிறுபான்மையினரின் வலியை சொல்கிறது.

    மதம் மனித மனங்களை பிளந்துவருகின்ற நேரத்தில் அவசியமான நாவல்கள்..

Post a Comment