ஒரு சிறுகதையை முன்வைத்து ..
காளியே ஆயினும்....
சு.பொ.அகத்தியலிங்கம்
[ இந்த அலசலின் சுருக்கப்பட்ட வடிவம் இன்றைய தீக்கதிர் இலக்கியச் சோலையில் இடம் பெற்றுள்ளது . முழுக்கட்டுரையையும் வாசிக்க விரும்புவோர் இங்கு வாசிக்கவும் ]
இடம் பெயர்தல் வாழ்க்கையின் நியதி . வேலையின் நிமித்தம் - பஞ்சம் பிழைக்க - கலவர பூமியிலிருந்து உயிர் பிழைக்க - ஆதிக்கத்தை எதிர்க்க வலிமையற்று ; என பலவாறாக அன்றாடம் இடம் பெயர்தல் நடக்கிறது . நடோடிகள் , அகதிகள் , வந்தேறிகள் இப்படி பலவிதமாய் வாழ்க்கைச் சூறாவழி குதறிப்போடுகிறது .
ஆயினும் பொதுவாக சாமிகள் இடம் பெயர்வதில்லை ; சாலை விரிவாக்கம் போன்ற விதிவிலக்குகள் தவிர . பிள்ளையாரைத் திருடி பிரதிஷ்டை செய்வதே வழக்கம் . என்றாலும் ஏழைகளின் குலசாமிகள் இடம் பெயர்வதில்லை . வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் அணைக்காக கிராமமே பெயர்க்கப்பட்ட போது பேயத்தேவர் தன் குலதெய்வத்தை தம்மோடு கொண்டுவர முயன்ற காட்சி கண்ணில் நீரை வரவழைக்கும் . சிரிக்கத்தெரியாதவன் மட்டுமல்ல அழத்தெரியாதவனும் மனிதனில்லை .
ம.காமுத்துரையின் “ இடம் பெயர்தல் ”பண்பாட்டு பாசிசம் சர்க்கரையாய் பேசி நெய்தடவி கழுத்தறுப்பதை நுட்பமாய் பதிவு செய்கிறது .
“கோயிலு கோயிலுன்னு விழுந்தடிச்சு வேல பாக்கறியே.. அங்க என்னா மாசாமாசம் சம்பளமா
எண்ணித்தர்ராக..? ஒண்ணுக்கும் ஆகாதுன்னுதான ஓன் அண்ணந்தம்பியெல்லா இத ஓங்கிட்ட தட்டி
விட்டுட்டுட்டாங்க.. அதப் புரிஞ்சிக்காம நிய்யும் என்னத்தியோ பொதயலக் காக்குறமாதிரி பேயா
அலஞ்சி, பெருச்சாளியா கொடஞ்சிக்கிட்டிருக்க.” கருத்தம்மாளின் பாட்டு ஓயாதொலித்தது
அவளைப்போல பூசாரிவேலையை அத்தனை அலட்சியமாய் போட்டுவிட்டுப் போய்விட
முடியாது. ஜாதிக்குச் சொந்தமான கோயில்தான் என்றாலும், கருவறைக்குள் நுழைய தன்குடும்பம்
தவிர யாருக்கும் பாத்யதை இல்லை. பங்காளிகள் வந்து போகலாம். ஆனால் தனக்கு இருக்கும்
உரித்து யாருக்கும் கிடையாது அந்த ஒருபெருமைதான் முருகேசனை பம்பரமாய் ஆட்டுகிறது. ஆனால் அங்கும் இங்கும் பணம்புரட்டி கோயிலை நிர்வகிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை . ஆயினும் கோயிலை பெருமைப்படுத்த முருகேசம் மற்றவர்களை காப்பியடிக்க ஆரம்பித்தார் .
விளக்குபூசை ஒன்றை காப்பியடித்து பெண்களை வரச் செய்து ’சொந்த மக்களுக்கு’ கோயிலின்
ஞாபகத்தை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாகத்தான் மார்கழி முப்பதும் திருப்பாவை பாடி
பொங்கலும் பூசையும் அதிகாலையில் நடத்த முடிந்தது. அது சிலபேருக்குப் பொறுக்கவில்லை.
“இல்லாத வழக்கத்த ஆரம்பிக்கிற..!” என்றனர்.
“காவு குடுத்து கறி படைக்கிறதுதே நம்ம வழம... தெரியாதா?..”
“ரோட்டுமேல கோயில வச்சுக்கிட்டு ஆள்வராம வவ்வால் அடைஞ்சி கெடக்கே..சாமி..! ”
“சரிப்பா...... பூசாரிக்கி பொங்கதிங்க ஆச வந்திருச்சு..”
“ஆனா இதுக்கெல்லா சமுதாயத்துல இருந்து படி குடுக்க முடியாது முருகேசா. அம்புட்டு
வசதி நம்மட்ட கெடயாது. தெரியும்ல..”
“அத நாம் பாத்துக்கறே..சாமி ஒங்க பிள்ளைகள மட்டும் கோயிலுக்கு தவறாம அனுப்பிச்சு
விடுங்க..” – என்று எதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார்.
“பனிக்காலத்தில அவெவெ வேலவெட்டிக்கி வெளியேறவே நேரமில்லாமத் திரியிறாங்கெ.. நீ
என்னமோ பகுமானமா பஜனைக்கி வாப்பா...ங்குற....ம் ?”
ஆனாலும் படித்த, அரசு வேலைபார்க்கிற சிலபேர் முருகேசனுக்கு ஒத்துழைப்புத்
த்ந்தார்கள். அவர்கள்தான் மார்கழி பஜனைக்கு மைக் வைக்கச்சொன்னார்கள். அதுஒரு
பெரியசெலவாக இருந்தாலும் முருகேசனால் சமாளிக்க முடிந்தது. மைக் வந்ததும் திருப்பாவையும்
திருவெம்பாவையும் வேற’ஆளுக’ வந்து படித்தால் நன்றாக இருக்கும் என போஸ்ட்டாபீஸில்
வேலைபார்க்கும் நாகராசனின் சம்சாரம் பிரியப்பட்டது.
எதோ ஒரு உள்ளுணர்வில் ‘அதுக்கெல்லா தோதுப்படாது’ என பலமாய் மறுத்த முருகேசன்
தானே படிக்க ஆரம்பித்தார். புத்தகம் வாசித்து பிற்பாடு பூசையும் நடத்துவது கொஞ்சம்
சிரமமாய்த்தான் இருந்தது. எப்படியோ அந்தம்மாள் கொஞ்சநாளில் ஒரு குருக்களை அழைத்து
வந்துவிட்டார். அவர் வந்ததில் முருகேசனுக்கு ஒருவகையில் வசதியாய் இருந்தது. அவர் பாசுரங்கள்
படிக்கிற நேரத்தில் பொங்கல் வைத்துவிட்டு அம்ம்னுக்கு அலங்காரம் முடித்துவிடலாம்.
குருக்கள்வந்து ராகம்போட்டு திருப்பாவை - திருவெம்பாவை படித்ததில் கூடுதலாய் ஒரு கூட்டம் வந்து சேர்ந்தது. தினமும் சர்க்கரைப் பொங்கல் என்ற தளுகை மெனுவில் மாற்றம் உண்டாக்கினார் குருக்கள். திருவாதிரைக்கு அரிசிக்களியும், கூடார வெள்ளிக்கு புளியோதரையும், வளர்பிறை தேய்பிறை கிழமைகளைக் கணக்கிட்டு வெண்பொங்கல் முதலான பிரசாதங்கள் புதுபுதுசாக உருவாகின. அப்போதுதான் முருகேசனுக்கு ஒருபயம் கவியத் துவங்கியது. விதவித மான பிரசாதத் தயாரிப்பில் தான் தோற்றுவிடக் கூடாதே என்பதற்காக கருத்தம்மாளிடம் வந்து யோசனை கேட்கலானார்.
அவளுக்குக் கடுப்பாகிப் போனது ‘’ ந்தா, கூட்டுச்சாறு, கோழிச்சாறு, கறிக்கொழம்பு, கருவாட்டுக்கொழம்பு இப்பிடி எதியாச்சும் தெரிஞ்சதக் கேளு.. சும்ம்ம்மா.. வெம்பொங்களு வேகாதபொங்களு.. தேங்காசோறு, மாங்காசோறுன்னு உயிர வாங்காத..”
இப்படி உள்ளே நுழைஞ்ச பார்ப்பணியம் ஒட்டகத்துக்குள் தலையை நுழைச்ச கதையாய் ஆகிப்போனது . சிவன் , விஷ்னு ,மகாலட்சுமி என ஒவ்வொண்ணா உள்ளே வந்தது . திருவிளக்கு பூசைன்னு பெண்களை ஸ்பெஷலாக இழுக்க ஏற்பாடானது . பரம்பரை காளி மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டாள் .
“ஒங்க தெய்வத்துக்கு பலி குடுக்கிற வழக்கமெல்லாம் உண்டா..?”
“பலி..ன்னா.. காவு தான.. அதெல்லாங் குடுப்பம்ங் சாமி..”
“வேற..? “
“வே...ற..யாராச்சும் நேந்துக்கிட்டாங்கன்னா..சாவ... கோழி ..அறுப்பாங்க..”
“கோயிலுக்கு ஏடு வாசிச்சிருக்கீங்களா..? ‘
......... ........... ..........
“மனுசரப்போல கோயிலுக்கும் ஏன் வீடுகளுக்கும் கூட தொட்ர்ச்சி இருக்கு... ஊர் மாற்றம்
கண்டதிலிருந்து ஒங்க தெய்வம் பசியோட அலையுது அது யாருக்காச்சும் தெரியுமா..? அதனோட
இயல்பான சக்தி பாதிக்கப் பட்டிருக்கு, பவர் இல்லாம பாவமா நிக்கிது. அதனால சமுதாயத்துல
பொறுப்பில இருக்கவங்க குடும்பத்தில சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஏற்பட்டிருக்கலாம். “ ஏதோ
ஒரு ஏட்டுசுவடியை கையில் வைத்துக்கொண்டு பேசினார்கள்.
அவர்கள் சொல்வது பூராவும் வாஸ்தவமாகவே இருந்தது. போன மூணாம்மாதம் தலைவராய் இருந்த கருப்பன் லாரியில் லோடுஇறக்கிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி வந்து துள்ளத்துடிக்கச் செத்துப்போனார். முதல்வருசம் கைகால்வராமல்போன பெரியதனம் இன்னமும் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார். நாட்டாமை சுகர் பிரசர்னு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைகிறார். இப்படி பெருசுகள் பூராவும் விழுந்துகிடப்பது இதனால்தானா...! தரைவிரிப்பில் உட்கார்ந்திருந்த அத்தனைபேருக்குமே கவலை அதிகரித்தது.
’’ஒங்களப் பயமுறுத்தறதுக்காகச் சொல்லல.. எங்களுக்கு சொல்லப்பட்டதச் சொல்றம்..”
“சுடுகாட்டு அம்பாளுக்கு பொணவாடைதான் சுவாசம். நீங்க சுவாசத்தத் தடை பண்றீங்க..
அதனால ஒங்க அம்பாள்மூச்சுத்திணறிக்கிட்டிரு க்கா..”
உட்கார்ந்திருந்தவர்களுக்கு மூச்சுமுட்டுவது போலிருந்தது..
இருதரப்பிலும் அமைதி ஊடாடியது.
“அப்பன்னா ஆத்தாள கொண்டுக்குப் போயி சுடுகாட்ல வச்சிரணுமா..”
உட்கார்ந்திருந்தவர்களில் ஒருகுரல் அவசரமாக ஒலித்தது.
“அதுக்கு எடம் இருக்கா.” பீடத்தில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்தும் ஒருகுரல் அவசரமாய் வந்தது.
“அதுக்காக ஆள் பேர்வராத எடத்திலயா போயா சாமிய வப்பாக..? பொண்ணுபொடுசுக
போய்வரவேணாமா..” கீழிருந்தே ஆட்சேபமும் எழும்பியது.
“ந்மக்காக தெய்வத்த அலக்கழிக்கக் கூடாது..”
“பேசாம இப்ப இருக்க கோவில்லயே ஒருபலிபீடத்த கட்டி வக்கெக்கலாம்ல..”
“அது முடியாது. “ குருக்கள் கொஞ்சம் பலமாய் குரல் உயர்த்திச் சொன்னார்.,” அய்யப்பனுக்
கான ஆலயத்த உருவாக்கியாச்சு. அவருக்கான ஆச்சாரமும் அனுஷ்டானமும் எல்லாருக்கும்
தெரியும். பலிங்கற வார்த்தையே அய்யப்பனுககு ஆகாது அப்பறம் ஒங்க இஷ்டம்..”
“அப்ப....? “ ஏதோ முட்டுச்சந்தில் சிக்குண்ட ஆட்டுமந்தைபோல அத்தனை பேரும்
பரிதவித்தனர்
இப்படி விரட்டியடிப்பது பார்ப்பணியத்தின் நுட்பமான யுத்தியாகும் .திருப்பதியில் மலைக்காளி இடம் சைவர்களாலும் பின்னர் வைணவர்களாலும் வஞ்சகமாகப் பறிக்கப்பட்டு இப்போது வெங்கடாஜலபதியாய் மாற்றப்பட்டு மக்களையும் ஏற்கச்செய்துவிட்டனர்.பழமையின் மிச்சசொச்சமாய் மொட்டையடிப்பதை மட்டும் தொடர்கின்றனர் . பதினோராம் நூற்றாண்டுவரை அதாவது பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் முருகனும் வள்ளியும் மட்டுமே கோலோச்சினர் . அப்புறம் வடநாட்டு சுப்ரமணியனும் தமிழகத்து முருகனும் ஒன்றாக்கப்பட்டு வள்ளிஎனும் முருகனின் மனைவியே தெய்வயானையின் சக்காளத்தியாக்கப் பட்டாள் .
குமரி மாவட்ட வரலாற்றோடு பிசையப்பட்ட பொன்னீலனின் “ மறுபக்கம் ” நாவல் பாரம்பரிய இசக்கியம்மன் வழிபாட்டை பார்ப்பணிய வழிபாடு ஆக்கிரமித்ததை விவரிக்கும் . ஒற்றைக் குரலாயினும் அதற்கு எதிரான வலுவான குரலுடன் நாவல் நிறைவு பெறும் .
இச்சிறுகதையும் அதன் நீட்சிதான் . ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டை எப்படி பார்ப்பணியப் பண்பாடு விழுங்கும் - அதுவும் யானை தானே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டதைப்போல நடக்கும் என்பதை நுட்பமாய் சித்தரிக்கிறது . இது கதைமட்டுமல்ல நிகழ்கால அரசியலும் கூட ..
0 comments :
Post a Comment