பரண்கள் நேற்றும் இன்றும்

Posted by அகத்தீ Labels:

பரண்கள்: நேற்றும் இன்றும்

சு.பொ.  அகத்தியலிங்கம்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் பரண் இருந்தது . அதில் ஏற மரப்படியும் இருந்தது .உங்கள் வீடுகளிலும் இதுபோல் இருந்திருக்கும் . ஞாபகத்திரையை கொஞ்சம் ஓடவிட்டுப்பாருங்கள். தை மாதம் பொங்கலை ஒட்டியோ; சித்திரை வருஷப்பிறப்பை ஒட்டியோ வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடிப்பார்கள் . அப்போது பரணிலுள்ள எல்லாம் கீழே இறங்கும். அந்தக் காட்சி அப்படியே கண்முன் விரிகிறது .

மயில் குத்து விளக்குகள், தாம்பாளங்கள் ,வெங்கல பிள்ளையார் சிலை , மரத்தொட்டில் , நடைவண்டி,  தொட்டில் கம்பு ,கலைவேலைப்பாடுமிக்க மரப்பெட்டி, நெல் அளக்கும் மரக்கால் ,உலக்கை, குந்தாணி, பல்லாங்குழி, கடப்பாரை, வெட்டரிவாள்,  டிரங்பெட்டி, பித்தளை தவலைகள்,  வெண்கல உருளி, செம்புக்குடம் ,  கிணற்றில் விழுந்த வாளி போன்றவற்றை எடுக்கப் பயன்படும் பாதாளக் கொறடு, காலுடைந்த நாற்காலி, நாலைந்து மரப்பாச்சி பொம்மை , பிள்ளைகள் விளையாடும் மரச் சட்டிப்பானைகள், சைனா பீங்கான் ஊறுகாய்ச் சட்டி, மண் அகல் விளக்குகள்,  ஜாடிகள் ,  பழைய புத்தகங்கள், வெற்றிலை இடிக்கிற சிற்றுரல்-குழவி, திருகை ,  தாம்புக்கயிறு , சாக்குப்பைகள், டின்கள், பிஞ்ச விளக்குமாறு, சவுரிமுடி, கொண்டையூசி பழைய போர்வை... இத்யாதி இத்யாதி..

 “வீட்டை அடைச்சிக்கிட்டு இதெல்லாம் எதுக்கு? வேண்டாதவற்றை தூக்கிப் போட்டு விடலாமே  -” - இது அப்பாவின் குரல் . “ டேய் !அவசரப்பட்டு எதையும் செஞ்சுடாதே ! தலைமுறை தலைமுறையா ஞாபகமா இருக்கிறவற்றை போட்டுட முடியுமா? ஒவ்வொண்ணா பார்க்கலாம்..” - இது பாட்டியின் பதில். 

 “இது பாட்டி கொடுத்தது ,  இது திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திலே வாங்குனது, இது சுசீந்திரம் மாமா கொடுத்தது,  இது நாளை பேரப்பிள்ளைகளுக்குப் பயன்படும்...”  - இப்படி ஒவ்வொன்றாகக் கழித்த பிறகு பழைய புத்தகங்கள் கொஞ்சமும், சில சாக்குப் பைகளும், காலுடைந்த நாற்காலியும்தான் போகியில் கொளுத்தப்பட்டன.

வருடா வருடம் இதே காட்சிதான். எந்தப் பொருளும் கெட்டுப் போவதில்லை. சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் இல்லை . நேற்றின் நினைவுகளை பேசிக்கொண்டே இருக்கும்.

இப்போதெல்லாம் அந்த அளவு பரணுள்ள வீடுகளே அபூர்வம் ;  ஆனாலும் இருக்கிற லாப்ட் என்கிற குட்டிப் பரணில் ,  கட்டிலடியில், பாதரூமுக்கு மேல என கிடைக்கிற இண்டு இடுக்குகளில் அடைஞ்சி கிடக்கிறதை காலிபண்ண வீட்டிலே யுத்தமே நடக்கும் .

 “வீடு முழுக்க குப்பையும் கூளமும் நிறைஞ்சி போச்சு ; பூச்சி பொட்டு சேருது ஒரு நாள் டைம் ஒதுக்கி கிளீன் பண்ணுங்கண்ணு நானும் தலைபாட அடிச்சுக்கிறேன் .. இந்த மனுசன் காதிலேயே போட்டுக்க மாட்டேங்கிறாரு.. .” - இப்படி மனைவி பலநாள் புலம்பித் தீர்த்த பின்னால் ,  ஒரு நாள் ரோஷம் கொப்பளிக்க களத்தில் இறங்குவார்கள்.

இப்போதும் பழைய சாமான்கள்  குவிகின்றன . ஆனால் எது பயன்படும் என்று சொல்வது ரொம்ப சிரமம்.  நம் பட்டியலைப் பார்ப்போம்:

உடைந்த பிளாஸ்டிக் சேர், பாடாத ரேடியோ, ரிப்பேரான (இப்போது தேவைப்படாததாகவே ஆகிவிட்ட) டேப்ரிக்கார்டர், பழுதான டேபிள் ஃபேன், பிய்ந்த பிளாஸ்டிக் பொம்மைகள் ,  ஓட்டையாகிப்போன பிளாஸ்டிக் குடம் , ரிப்பேராகிப்போன குட்டி டிவி , கொஞ்சம் பைக் உதிரி பாகங்கள், பழைய இற்றுப்போன பிளாஸ்டி பாய்கள்,  ஃபீஸ் போன குண்டு பல்புகள், டியூப் லைட்டுகள், கொஞ்சம் எலக்ட்ரிக் ஒயர், சுவிட்சுகள், பிளக்குகள், பிய்ந்த மெத்தை,  உடைந்த சோஃபா, கொஞ்சம் பழைய பாத்திரங்கள், பாழாய்போன மிக்சி, கிரைண்டர், ஏசி மிஷின்,  மண்ணெண்ணை ஸ்டவ் ,  பழுதான கம்ப்யூட்டர், ஓட்டைக் கடிகாரம், உடைந்த கிரிக்கெட் மட்டை, பந்து, பழைய கேசட்கள், சிடிக்கள் , வாராந்திரிகள் , கொஞ்சம் புத்தகங்கள், ரிப்பன், பழைய பிய்ந்த தலையணை, ,சவுரிமுடி, ஹேர்பின், பவுடர் டப்பா, பிள்ளைகள் வாங்கிக் குவித்த கோப்பைகள், ஷீல்டுகள், நினைவுப் பரிசுகளென்னும் சில ஸ்டாண்டுகள், அட்டைப் பெட்டிகள் , தெர்மாகோல்கள், போட்டோக்கள்... இத்யாதி இத்யாதி...

போட்டோக்கள்,  சில பரிசுகள் தவிர எதுவும் ஞாபகச் சின்னமாய் இல்லை ; தாத்தா-பாட்டி முன்பு சண்டையிட்டது போல் சண்டையிடுவதில்லை ; அவர்களையே முதியோர் இல்லத்தில் தூக்கிப் போட்டுவிடலாமா என யோசிக்கிற  காலம் .  அவர்களும் கப்சிப். பாதுகாக்க வேண்டியது எதுவும் இல்லை.

அதனால் குவிந்த குப்பைகளை மொத்தமாய்த் தூக்கி பழைய சாமான் பிளாஸ்டிக் வாங்குகிறவனிடம்  போடுவதைத் தவிர வேறு வழியில்லை. அபூர்வமான புத்தகங்களையும் பழைய பேப்பர் கடைக்காரனிடம் போடுவது மட்டும்தான்  வருத்தத்துக்குரியது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் வீட்டையும் நாட்டையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதைத் தவிர வேறொன்றுக்கும் உதவாது.

நேற்றைய பரண்கள் ஒவ்வொரு வீட்டிலும் குட்டி மியூசியமாக அருங்காட்சியகமாக இருந்தன. தலைமுறையின் ஞாபகவடுக்களை தழும்புகளை நம்மோடு பேசிக்கொண்டிருந்தது ; எல்லாவற்றையும் போற்றிப் பாதுகாக்கிற பாரம்பரியமாக இருந்தது; இடத்தை அடைத்தது . கனமாக இருந்தது. ஆனாலும் நெஞ்சம் அசைபோட நிறைய சேதி சொன்னது.

இன்றைய பரண்கள் குப்பைத்தொட்டியாய் உள்ளது . யூஸ் அண்ட் த்ரோ (பயன்படுத்து தூக்கி வீசு) கலாச்சாரத்தின் எச்சமாக உள்ளது . மாண்பைப் பறைசாற்றவில்லை ; மாறாக மாசாக - வீட்டுக்கும் நாட்டுக்கும் வில்லனாக உருவெடுக்கிறது ..

நேற்றையும் நேற்றைய பரண்களையும் அசைபோடுவோம்... இன்றை பரண்களை சுத்தபபடுத்துகையில் இன்றைய சுற்றுச்சூழல் மாசைக் குறைப்போம்...

நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர் 16 -02-2014Inline image 1

0 comments :

Post a Comment