ஜூதான்....

Posted by அகத்தீ Labels:


சுயத்தின் முடிச்சுகள்        அவிழும் கணத்தில்


 சு.பொ.அகத்தியலிங்கம்.


//த்திரப்பிரதேசத்தில்  சுஹ்ரா சாதியில் பிறந்தவன்  நான் என்று வெளிப்படையாகச் சொன்னேன் .
அவள் கண்களில் நீர் முட்டியது.  “  நீங்கள் பொய் சொல்கிறீர்கள் , அப்படித்தானே ?” என்று அழுதபடி கேட்டாள்.

  “ இல்லை சவி..நான் உண்மையைத்தான் பேசுகிறேன் . நீ இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் .” என்று இதமாக எடுத்துச் சொன்னேன்.
நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனாகப் பிறந்தது குற்றம் என்பதுபோல் அழத்தொடங்கினாள் . வெகுநேரம் அழுதாள் . எனக்கும் அவளுக்கும் இடைவெளி திடீரென அதிகரித்தது . ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வந்த வெறுப்பு எங்கள் மனதில் புகுந்து கொண்டது . பண்பாடு , நாகரீகம் என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமான பொய்கள் .//

- மேலே உள்ளவை நாடக வசனமல்ல , வெறுமே நாவல் வரிகளல்ல . நம் கதாநாயகனின் சுய அனுபவம் நாவலாய் விரிந்துள்ளது. ஒம் பிரகாஷ் வால்மீகி எழுதிய  ஜூதான் [ எச்சில் ] நாவலா சுயசரிதையா ? இரண்டும் கலந்தது. நான் சொல்வதெல்லாம் உண்மை , உண்மையைத் தவிர வேறில்லை என நீதிமன்றக் கூண்டிலேறி சத்தியப்பிரமாணம் செய்யவில்லை . ஆனால் , எழுத்தின் ஒவ்வொருவரியிலும் பொதிந்திருக்கும் உண்மையின் கங்குகள்  நம்மைச் சுட்டெரிக்கின்றன.

// இப்பவெல்லாம் யார் சாதிபார்க்கிறாங்க..யார் சாதியைக் கேக்கிறாங்க..// இப்படி வித்தாரம் பேசுகிறவர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம் . தர்மபுரி ரணத்தைக் காட்டிப் பேசினால்கூட மழுப்புகிறார்கள் . // அதுவா ? அது ஒரு அய்சலேட்டட் இன்சிடெண்ட் .. ஆமாம் விதி விலக்கான நிகழ்வு.. டோண்ட் ஜெனரலைஸ்ட் ..பொதுமைப்படுத்தக்கூடாது // இப்படி வியாக்யானம் வேறு செய்கிறார்கள் . இவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்களா அல்லது அப்பாவிகளா ? முடிவை வாசகர்களுக்கே விட்டுவிடுவோம் . ஆனால் நாம் வாழும் இந்த யுகத்திலும் சாதி மனித்ததை எப்படி குத்திக் கிழிக்கிறது என்பதை இரத்தமும் சதையுமாய் இந்நூல் உரக்க்கப் பேசுகிறது .

// நீங்கள் தலித் என்று அடையாளம் தெரியாதவரை அனைத்தும் சுமுகமாகவே நடக்கிறது . உங்கள் சாதி என்னவென்று தெரிய வந்த அடுத்த கணமே அனைத்தும் மாறிவிடுகிறது. அவர்களின் முணுமுணுப்புகள் உங்கள் இரத்த நாளங்களில் கத்தியாய் இறங்குகின்றன . வறுமை , அறியாமை , உடைந்துபோன வாழ்க்கை , வெளியே நிற்பவர்களின் வேதனைகள் ......// இவை நுல் நாயகனின் வாக்குமூலம் மட்டுமல்ல - இவற்றின் படப்பிடிப்பே இந்நூல் .

உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் சுஹ்ரா எனப்படுகிற தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன் வால்மீகி. இறந்த மாட்டின் தோலை உரிப்பது - மலம் அள்ளுவது , சுமப்பது , இப்படி சமூகத்தில் இழிவாய்க் கருதப்பட்ட தொழில்கள்  அவர்கள் சாதிக்கென விதிக்கப்பட்டிருந்தது . இதனூடே இந்த இழிவிலிருந்து கரையேற கல்வி மட்டுமே ஒரே மார்க்கம் என அவன் தந்தை நம்பினார் . பள்ளியில்  சேர்க்க அவர் பட்ட கஷ்டம் தனி . பள்ளியில் என்ன நடந்தது ?

// ஒரு நாள் தலைமையாசிரியர் என்னைத் தன் அறைக்கு அழைத்துடேய் உன் பெயர் என்ன ?” என்று கேட்டார்.

ஒம்பிரகாஷ்என்று அச்சத்துடன் மெதுவாகப் பதில் சொன்னேன் . தலைமையாசிரியர் எதிரில் வந்தாலே மாணவர்கள் பயப்படுவார்கள் . பள்ளியே அவரைப் பார்த்து நடுங்கியது .

 “ சுஹ்ரா சாதிக்காரனா? ” தலைமையாசிரியர் இரண்டாவது கேள்வியை வீசினார்

 “ ஆமாம் ” 

 “ சரி, அங்கே ஒரு தேக்கு மரம் தெரியுதுபார் . அதில் ஏறி சில கிளைகளை உடைத்து ஒரு விளக்கு மாறை தயார் செய் . பள்ளி முழுவதையும் கண்ணாடி போல சுத்தமாகப் பெருக்கு . இதுதான் உன்னுடைய குடும்பத் தொழில் தெரியுமா ? ” //

இது ஒரு நாள் ஒரு சமபவம் அல்ல . ஒவ்வொரு நாளும் சாதியின் பெயரால் அவன் பட்ட பாடு.. அதன் வலிகள் .. மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் குத்தூசியாய் நம் இதயத்துள் இறங்குகிறது .

// நான் பள்ளியில் படித்த கவிஞர் சுமித்திரா நந்தன்  பந்தின்  “ ஆகா , கிராம வாழ்க்கைதான் எவ்வளவு அற்புதம்.. ” என்ற கவிதையின் ஒவ்வொரு வரியும் செயற்கையானது ; பொய்யானது . // என வால்மீகி  சொல்வது வெறும் அனுபவம் மட்டும்தானா ? தலித்தாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அதை உணர முடியும் .

// ஏதேனும் ஒரு வழியில் வறுமையையும் , ஆதரவற்ற நிலையையும் கடந்து விடலாம் . ஆனால் , சாதியைக் கடப்பது என்பது முடியவே முடியாது. //  இந்த வார்த்தைகள் வால்மீகி தன் வாழ்க்கை ரணங்களோடு சமூகத்தின் நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லும் உண்மை .

கல்லூரி வாழ்க்கையும் பெரிதாய் மாறுபடவில்லை. ஆசிரியப் பணி எவ்வளவு உயர்வானது. ஆனால் ஆசிரிய நெஞ்சங்களுக்குள்ளும் சாதிய வன்மம் குரூரமாய் சிரிக்கும் போது ; ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்களுக்கு விடிவேது ? சேலத்தில் கண் குருடாக்கப்பட்ட தனம் நினைவில் வந்து போகிறாள் . வால்மீகியின் கல்லூரி வாழ்க்கையும் தடைபட்டது சாதியநஞ்சாய்ப் போன ஆசிரியர்களால் .

ஆயுதப்படை தொழிற்சாலையில் பயிற்சி பெற்றதும் மும்பை சென்றதும் கூட் அவனை சாதி சகதியிலிருந்து மீட்கவில்லை .மேலும்மேலும் தான் சுஹ்ரா சாதியில் பிறந்தவன் என்பதை உணரவைத்தது , ஆனால் மேம்பட்ட நிலையில் தலித் என்ற வார்த்தையையே அதன் பின்னரே அறிகிறான் . அவனுள்  போர்க்குண்மிக்க விழிப்புணர்வு மெல்ல வேர்பிடித்தது .
மரத்வாடா பல்கலைத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்தைத் தொடர்ந்து உசுப்பிவிடப்பட்ட எதிர்ப்பு கலவரம்அதன் எதிர்வினையாய் தலித் மக்களிடையே முகிழ்த்த போர்க்குணம் மிக்க எதிர்ப்புணர்வுமராத்திய அரசு தன்முடிவில் பின்வாங்கியதுதலித் பாந்தர் அமைப்பின் உதயம்தலித் இலக்கியம் என்றொரு புதியபோக்கு முளைவிட்ட்து என அண்மைக்கால சமூக அரசியல் நிகழ்வுகளில் வால்மீகி பங்கேற்றது என ஒவ்வொன்றும் இயல்பாய் நுட்பமாய் பதிவாகியுள்ளது . வால்மீகியின் அனுபவப் பதிவுகள் எல்லாமே நம் கன்னத்தில் அறைந்து சாதிய ஆணவம் இன்னும் தொடர்வதைப் பார்த்தாயா எனக் கேட்கிறது

// சாதியச் சக்திகளின் கைகள்தான் அன்றைய தினம் ஓங்கியிருந்தன . தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பை விதைத்திருந்தார்கள் . “ தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குகஎன்று முழக்கமிட்டுவந்த தொழிற்சங்கங்களால்கூட இந்த வெறுப்புணர்வு வளர்வதைத் தடுக்க முடியவில்லை . // இவ்வாறு வால்மீகி சொல்வது மிகையல்ல . இங்கு தமிழகத்திலும் சாதிக் கலவரம் மூண்டபோதெல்லாம் நம் கசப்பான அனுபவமும் அதுதானே!

வால்மீகி என்றதும் இராமாயணம் எழுதியவர் என்றே தமிழக மக்கள் கருதுவர் . ஆயின் , அது தலித் சாதியில் ஒரு பிரிவினர் என்பதை அறியும் போது  அதிர்ச்சியாக இருக்கிறது . இவர் வால்மீகி பெயரைத் தாங்கித் திரிவதால் பலநேரம் தப்பாக புரிந்து கொண்டு நட்பு பாராட்டியதும் , சுஹ்ரா சாதியின் அடைமொழி என அறிந்தபோது அவமானப்படுத்தப் பட்டதும் கொஞ்சமா ? பிடிவாதமாய் வால்மீகி பெயரை போர்க்குணத்தோடு இவர் சுமந்து வாழ்ந்த கதை நெஞ்சைப் பிசைகிறது .

பெயரில் வார்த்தையில் என்ன இருக்கிறது எனக் கேட்போருண்டு. வால்மீகியின் சமூகவலியை இந்நூல் சொல்லும்.தியாகி என்றால் நாமறிந்த பொருள் வேறு அதுவும் ஆதிக்க சாதியின் பெயர் என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது . தமிழ் நாட்டில் சண்டாளத்தனமாய் உள்ளது என சில கொடுமைகளைச்  பொதுவழக்கில் சொல்வதுண்டு . ஆயின், அது தலித்தில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல் என்று அறிந்த பின்அந்தச் சொல்லின் சமூகவேர் பிடிபட்டபின் அந்த சொல்லை இனி பயன் படுத்துவது தவறு அல்லவா ? ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று மார்க்சியம் சொல்லும் . இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் மட்டுமல்ல ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு வர்க்க்த்தின் நலன் மட்டுமல்லஒரு வர்ணத்தின், சாதியின் நலனும் ஒளிந்திருக்கிறது என்று கூறுவது சற்றொப்ப சரிதான்.

இந்நாவல் எதிர்மறையான ஆட்களை மட்டுமல்லசிமன் லால்ஜி போன்ற சாதி வேற்றுமை பாராட்டாத மனிதர்கள் சிலரையும் நமக்கு அடையாளம் காட்டி இன்னும் நம்பிக்கை வற்றிவடிந்துவிடவில்லை என கோடிட்டுச் செல்கிறத// ஒரு சமூக நோயோடு நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்ற புரிதலோடு இப்போது இந்தப் பிரச்சனையை அணுகுகிறேன் . மரியாதைக்கும் , திறமைக்கும் , சமூகமேலாண்மைக்கும் அடிப்படையாகச் சாதி இருக்கும்போது , இந்தப் போராட்ட்த்தில் ஒரே நாளில் வெற்றி கிடைத்துவிடாது . இது நீடித்த போராட்டம் , வெளி உலகிலும் , நம் உள்ளங்களிலும் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரப்  போகின்ற ஒரு போராட்டம் . சமூக மாற்றத்திற்கு வழிகாட்டுகின்ற உணர்வை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்ற போராட்டம் நமக்குத் தேவைப்படுகிறது . // இப்படி அனுபவ நெருப்பில் புடம் போட்டு நூலாசிரியர் வால்மீகி சொல்லி இருப்பது மிக முக்கியமானது

// என்னுடைய எழுத்துகள் பிரச்சாரமாகவும் முரட்டுத்தனமாகவும் இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள் .//  - என நூலின் கடைசி பத்தியில் வேதனைப் பட்டு

// அதாவது , நான் தலித்தாக இருப்பதும் , என்னுடைய சூழல் , என்னுடைய சமூகப் பொருளாதாரச் சூழல் ஆகிவற்றிற்கேற்ப நான் ஒரு கண்ணோட்ட்த்துக்கு வந்து சேருவது ஆணவமாம் . காரணம் அவர்கள் கண்ணோட்ட்த்தில் , நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் . கதவுக்கு வெளியே நிற்பவன் // - இந்த கடைசி வரிகள் அவர் பட்ட வலியின் உச்சம்.

// இந்த நூலை நான் எழுதிக்கொண்டிருந்தபோது ஆழமான மனவேதனைக்கு உள்ளானேன் . ஒவ்வொரு அடுக்காக என் சுயத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பது என்பது ஒரு பயங்கரமான வேதனை என்பதை உணர்ந்தேன் . // - ஆம், நூலை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அதே மன உழைச்சல் ஏற்படும் . அதுதான் இந்நூலின் வெற்றி .


ஜூதான் [ எச்சில் ],

ஆசிரியர் : ஓம் பிரகாஷ் வால்மீகி,

தமிழில் : வெ . கோவிந்த்சாமி,

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர் , சென்னை – 600 098 .

பக் :194  , விலை : ரூ.150. 

                       நன்றி : புத்தகம் பேசுது 8/13

0 comments :

Post a Comment