மார்க்சை படிக்காமலே ஒப்பீடு செய்வதா.....

Posted by அகத்தீ Labels:


மார்க்சை படிக்காமலே 

 

ஒப்பீடு செய்வதா..... 

சு.பொ. அகத்தியலிங்கம்


உலகத்தத்துவ சிந்தனையாளர்களோடு பெரியாரை ஒப்பீடு செய்து ஒரு ஆய்வு நூல் வந்திருப்பது நல்ல முயற்சி. அதற்காக பாராட்டலாம். ஆனால் இந்த ஒப்பீடு எந்த நோக்கத்தோடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்தை இந்த நூல் நிறைவேற்றுகிறதா? சாக்ரட்டிஸ், பினோசா, ரூசோ, வால்டேர், காரல்மார்க்ஸ், கான்ட், சங்கரர் என எழுவரோடு பெரியாரை ஒப்பிட்டு பெரியாரே அனைத்திலும் விஞ்சி நிற்பதாக நூலாசிரியர் நிறுவமுயன்றிருக்கிறார். அது தான் அவருடைய நோக்கமும் கூட. அதில் பிழையில்லை.  நூலை வாசித்து முடிக்கும் போது வாசகன் அத்தகைய உணர்வுக்கு வந்து சேரவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை என்பது தான் இந்த நூலின் பலவீன மான பகுதி.

காரல்மார்க்ஸ், சங்கரர் தவிர மற்றவர்களுடைய தத்துவங்களை யாம் முழுமையாக கற்றவனில்லை. ஓரளவே அறிவோம். இந்நிலையில் ஆசிரியரின் ஒப்பீடு எந்த அளவு சரி, தப்பு என்று கூறுகிற நுண்மான் நுழைபுலம் எமக்கில்லை: என்று கருதுவதால்  யாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை.
அதே சமயம் காரல்மார்க்சை முறையாக பயிலாமலும், மார்க்சியத்தின் அடிப் படையை அறிந்து கொள்ளாமலும் நூலாசிரியர் ஒப்பீடு செய்ய முனைந்திருப் பது நகைப் பிற்குரியது. மேலும் வடிகட்டிய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக துப்பி விட்டு இது தான் மார்க்ஸ் என்று சித்திரம் வரைய முயல்வது சிறுபிள்ளைத்தனம். இந்நூல் நெடுக நூலாசிரியர் அதைத்தான் செய்திருக்கிறார். இது மார்க்சுக்கு மட்டுமல்ல பெரியாருக்கும் செய்திருக்கிற பெருந்துரோகம் ஆகும். ஏனெனில் பெரியார் மார்க்ஸ் மீதும் மார்க்சியத்தின் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் வைத்திருந்தார். இந்தியாவில் செயல்படும் கம்யூனிஸ் டுகள் மீது பெரியாருக்கு சில விமர்சனங்கள் இருந்த போதும் மார்க்சை அவர் கொச் சைப்படுத்தியதில்லை. ஆயினும் நூலாசிரியர் இந்த அடிப்படை உண்மையைக் கூட தெரியாமல் ஒப்பீடு செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை அந்த குறிப்பிட்ட அத்தியாயத்திலிருந்து எடுத்துச் சொல்ல முடியும். இடம் கருதி ஒன்றிரண்டை மட்டும் இங்கே சுட்ட விழைகிறோம்.
 "பொதுவுடமை தோற்றுபோன கனவாகி விட்டதே "என தொடங்கும் வரிகளிலேயே நூலாசிரியருக்கு மார்க்சின் மீது உள்ள வெறுப்பை விதைப்பதாக உள் ளது. அடுத்து " மார்க்சின் மூலதனம் என்பது அரைகுறையான தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட் டாகும்" என நூலாசிரியர் முதல் பத்தியிலேயே விஷம் கக்குகிறார். உலகமயச் சூழலில் உலகம் கடும் பொருளாதார சமூக நெருக்கடியில் சிக்குண்டு திணறுகிறது.  உலகமே மார்க்சின் மூலதனத்தில் தான் இதற்கான விடையை தேடிக் கொண்டிருக் கிறது என்பது உலகெங்கிலும் நடக்கும் விவாதத்தில் வெளிப்பட்டுள்ள பேருண்மை இதனை நூலாசிரியர் அறியாமல் இருப்பது வியப்புதான். " மார்க்சின் அழிவு தரும் கற்பனை உலகசிந்தனை" என போகிற போக்கில் நூலாசிரியர் புழுதி வாரிதூற்றுகி றாரே தவிர அதற்கான சான்றாதாரம் எதையும் சமர்ப்பிக்கவும் இல்லை.  சமர்ப்பிக்கவும் முடியாது.
கம்யூனிச சமுதாயம் என மார்க்ஸ் வரைந்து காட்டிய சமூகம் எங்கும் நிறுவப்பட வில்லை என்பதே உண்மை. ஆனால் ரஷ்யாவில் அமலிலிருந்த சோஷலிச அமைப் பிற்கு ஏற்பட்ட பின்னடைவை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாக சித்தரிப்பது மார்க்சைப் பற்றிய, மார்க்சியத்தைப்பற்றிய அடிப்படை ஞானமின்மையால் ஏற்படுவதே ஆகும்.  ஒவ்வொருவரும் தன் சக்திக்கு ஏற்ற உழைப்பை வழங்கிவிட்டு தேவைக்கேற்ற பங்கீட்டை பெறுகிற ஒப்புயர்வற்ற சமூகமே கம்யூனிச சமூகம். அதற்கு முந்தைய கட்டம் சக்திக்கு ஏற்ற உழைப்பு, உழைப்பிற்கு ஏற்ற கூலி என்கிற சோஷலிச கட்ட மைப்பு. அதையும் கூட ஒரே பாய்ச்சலில் அடைய முடியாது என்பதால் தான் சீனா மக்கள் ஜனநாயக புரட்சி என்றது. எது எப்படி இருப்பினும் சுரண்டலை மையமாக வைத்தி ருக்கிற முதலாளித்துவத்தைக் காட்டிலும் இந்த அமைப்புகள் பன்மடங்கு உயர்ந் தவை என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நூலாசிரியர் முதலாளித்துவத்தை உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார். மறுபுறம் மார்க்சை இகழ்கிறார். அவருடைய நோக்கம் பிசிறில்லாமல் சுரண்டும் வர்க்கத்திற்கு சேவகம் செய்வது என்பதாகவே இருக்கிறது.   
மதம் என்பது ஒரு அபின் (ஓபியம்)  என மார்க்ஸ்  சொன்னது ஏதோ கிறுத்துவ மதத்தின் மீது செய்யப்பட்ட விமர்சனம் எனத் தோற்றம் அளிக்கும் வகையில் நூலாசிரியர் எழுதிச் செல்வது நேர்மையற்றது. அனைத்து மதங்கள் குறித்தும் மார்க்ஸ் சொன்னது அது. ஆனால் அதற்குமேல் மதம் என்பது இதயமற்றவர்களின் இதயம் என்றும், ஏழைக ளின் ஏக்கப் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியதை நூலாசிரியர் படித்ததாகவே தெரிய வில்லை. அதற்கான சுவடே இந்நூலில் இல்லை. 
பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்தோட்டங்களை அங்கொன்றும் இங்கொன்று மாக திருடி கோர்க்கப்பட்ட ஒரு முரண்பாட்டு மூட்டை தான் மார்க்சியம் என நூல் நெடுக  தவறான சிந்தனையை நூலாசிரியர் விரவியிருக்கிறார். இது தான் ஆகப்பெரும் பிழை. மார்க்ஸ் வானத்திலிருந்து குதித்தவராக தன்னை ஒரு போதும் அறிவித்தவர் அல்ல. மார்க்சிஸ்டுகளும் அப்படிச் சொல்வதில்லை. மார்க்சியம் என்பது ஜெர்மன் தத்துவம், பிரஞ்சு அரசியல், பிரிட்டிஷ் பொருளாதாரம் என மூன்று அடிப்படைக் கூறுகளின் மீது கட்டப்பட்டது என்பதை மார்க்சிஸ்டுகள் ஒருபோதும் மறைத்ததில்லை.  இளம் ஹெகலி யாராக கல்லூரி நாட்களில் விளங்கிய மார்க்ஸ்  கருத்துமோதலில் விமர்சனங்களூடே ஹெகலையும் பாயர்பாக்கையும் மறுத்தும் உட்கொண்டும் புரட்சிகர தத்துவத்தை நோக்கிய படிமலர்ச்சி அடைந்தார் என்பது தான் வரலாறு.  தலைகீழாக நின்ற ஹெகலை நிமிர்த்தியது, நிறுத்தியது தான் என் பணி என்று மார்க்சே கூறியுள்ளார்.  டூரிங்கிற்கு மறுப்பு என்கிற நூல் ஒன்றே மார்க்ஸ் மற்றவர்களுடைய கருத்துக்களோடு எவ்வாறு உரசி, மோதி தனது தத்துவத்தை வளர்த்தெடுத்தார் என்பதற்கு சாட்சிகூறப்போதும்
மார்க்சை பயில்வது என்பது நூலாசிரியர் செய்வது போல் மேலோட்டமானதாகவோ அல்லது எதிர்நிலையிலிருந்தோ அணுகுவதாகாது. முதலில் நூலாசிரியர் மார்க்சை முழுமையாக புரிந்து கொள்ள முயலட்டும்.  அதன் பிறகு  விமர்சனம் செய்யவோ, ஆய்வு செய்யவோ முன் வரட்டும். சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கைவரலாறு ஆரம்ப நிலையில் மார்க்ஸ் குறித்த எழுச்சியூட்டும் சிந்தனையை நெஞ்சில் விதைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆய்வாளர்களுக்கு அதுமட்டுமே போதுமானதல்ல. மேலும் ஆழமான புரிதல் தேவை. அதற்கு கருவியாக பல நூல்கள் வந்துள்ளன . ஹென்ரி வோல்கவ் எழுதிய கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத் தினுடைய வளர்ச்சியின் வரலாற்றைக் கூறும்   மார்க்ஸ் பிறந்தார்  எனும் நூல் , ஒன்பது ஆசிரியர்கள் கூட்டாகத் தொகுத்த   கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு  உள்ளிட்ட நூல்களை நுட்பமாக வாசிப்பதும் அதன் தொடர்ச்சியாக  டெவிட் ரியாஜெனோவ் எழுதிய மார்க்ஸ், எங்கல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம் நூலை  வாசிப்பதும் புரிதலில் தெளிவையும் விசாலப்பார்வையை யும் உருவாக்கும். மார்க்ஸும் எங்கெல்ஸும் எவ்வாறான நிலைமைகளிலும் சுற்றுச் சூழல்களிலும் வளர்ந்து சிந்தனை  பெற்றனர் என்பதை கூர்மையாகப் புரிந்து கொள்ள முடியும் . 
 "ஒவ்வொரு தனிமனிதனும் , குறிப்பிட்ட சமூகச்சூழலின் படைப்பே ஆவான்  சாதனை ஒன்றை உருவாக்கும் எந்த ஒரு மேதையும் அதை தனக்கு முன்னால் அடை யப்பெற்ற சாதனைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்குகிறான் . சூன்யத் திலிருந்து அவன் உதிக்கவில்லை"  இவ்வாறு கூறும் ரியாஜெனோவ் 9 அத்தியாயங் களில் வரலாறு எப்படி மார்க்சை செதுக்கியது ? ; வரலாற்றை  பாட்டாளிவர்க்கத்துக்கு சாதகமாக மடைமாற்ற சிந்தனைக் களத்திலும் செயல் களத்திலும் எவ்வாறு மார்க்ஸ் இயங்கினார்,  இதில் எங்கெல்ஸின் பாத்திரம்யாது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கண்டிருக்கிறார். இந்த மார்க்சிய அறிவியலை வெறுமே தத்துவவியாக்கியானமாகப் பயிலாமல் அறிவியலாகப் பயில்வது இன்றையத் தேவை. அதற்கு  தொடர்ந்து விக் டர் ஆல்பேன் ஸீவ் எழுதிய மார்க்சிய, லெனினிய தத்துவம் என்ற நூலையும் வாசிப்பது அவசியம்.  இவற்றை எல்லாம் வாசிக்குமாறு யாம் நூலாசிரியருக்கு சிபாரிசு செய்வது மார்க்ஸ் மீதும் பெரியார் மீதும் கொண்ட பெரும்பற்றினால்தான்.
ஈரோட்டு திட்டத்தைப் பற்றி பேசுகிறபோது அதை வடிப்பதில் முதன்மைப் பாத்திரம் வகித்த தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் - செயல் முன்னோடி .சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் என்பதை நூலாசிரியர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ஈரோட்டுத் திட்டமே பெரியார் ரஷ்யாவிற்கு போய் விட்டு வந்த பின்னர் பொதுவுடமை யின் பால் கொண்ட ஈர்ப்பால் உருப்பெற்றதே. இதனை நூலாசிரியர் உள்வாங்கியதாக தெரியவில்லை. கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலில் மொழி பெயர்த்து குடி யரசு ஏட்டில் வெளியிட்டவர் பெரியாரே. அதுவும் சோவியத் யூனியனுக்கு போவதற்கு முன்பே செய்தார். பிரிட்டிஷாரின் கடும் நெருக்கடிக்குப் பயந்து ஈரோட்டுத் திட்டத்தை  பெரியார் கைவிட்டார் என்று கூற இயலாது. மாறாக சமூக சீர்திருத் தமா கம்யூனிச பிரச்சாரமா எதற்கு முதலிடம் என்பதில் பெரியார் சமூக சீர்திருத்தத்திற்கே முன்னுரிமை வழங்க விரும்பினார். அதற்காக ஈரோட்டுத் திட்டத்தை கைவிட்டார். அதே சமயம் மார்க்சியத்தை அவர் என்றைக்கும் முற்றாக நிராகரித்ததில்லை. இந்திய கம்யூனிஸ்டுகள் மீது பெரி யாருக்கு விமர்சனங்கள் உண்டு. அதை பகிரங்கமாக சொல்லவும் அவர் தவறி யதில்லை. 
 மார்க்சையும் பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவதும்; பெரியாரையும் அம் பேத்காரையும்  எதிர் எதிராக நிறுத்துவதும் சுரண்டும் வர்க்கம் மற்றும் மநுவாதிகளின் சூழ்ச்சியாகும். இன்றைய உலக மயத்தை எதிர்க்கவும் இந்துத்துவாவை எதிர்க் கவும் மார்க்சும், பெரியாரும், அம்பேத்கரும் தேவைப்படுகிறார்கள். இந்த கூரியபார்வை கூட நூலாசிரியருக்கு இல்லை என்பது தான் வேதனைக்குரியது. 
பிற தத்துவ ஞானிகளோடு பெரியாரை ஒப்பிட்ட நூலாசிரியர் அம்பேத்கரோடு ஒப்பிட ஏன் தவறினார்? என்கிற பெருங்கேள்வி நம்முன் உள்ளது.  அதுபோல எந்த தத்துவத்தை எடுத்தாலும் அனைத்துமே இந்துத்துவ சிந்தனையிலிருந்து பெறப் பட்டது என்பது போல் நூலாசிரியர் நூல் முழுவதும் விவரிக்கிறார். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இப்படி பொத்தாம் பொதுவாகக் கூறுவது ஒப்பியல் ஆய் விற்கு அழகாகாது. 
1953 ல் ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்வித் திட்டம் என்பதை நாம் அறி வோம். அப்படிச் சொன்னால் தான் வாசகர்  பிழையின்றி புரிந்து கொள்ள இயலும். ஆனால் மொழி பெயர்ப்பாளர் மாற்றி அமைக்கப்பட்ட கல்வி என்று கூறுவது எதனால்? இப்படி மொழி பெயர்ப்புக்காக கையாண்ட பல சொற்களும் கூறவந்ததை  தெளிவாக புரிந்து கொள்ள தடையாக அமைந்துள்ளது. 
 பெரியாரியம் என்றால் அது வெறுமே கடவுள் மறுப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் மட்டும் தானா? தீண்டாமை எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு முதலியனவும் உள்ளடக்கியது அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக பெண் விடுதலை குறித்து பெரியாருக்கு நிகராக  தமிழ் நாட்டில் வேறு யாரும் சொன்னதில்லை. ஆனால் அந்த அம்சத்தை மொத் தமாக நூலாசிரியர் மறந்து விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா? 
இந்தநூலுக்கு  மரியாதைக்குரிய கி. வீரமணி முன்னுரை எழுதியிருக்கிறார். எப்போதும் எதைப்பேசினாலும் எழுதினாலும் காரணகாரியங்களோடு தர்க்க நியாயங் களோடு எழுதவல்லவர் அவர். அவரோடு முரண்படுகிறவர்களும் அவர் எழுத்தை மதிப்பர். எமக்கும் பெருமதிப்புண்டு.  ஆனால் இந்த நூலை முழுமையாக  ஐயா வீரமணி அவர்கள் வாசித்துத் தான் முன்னுரை எழுதினாரா? என்கிற ஐயம் எமக்கு ஏற்படுகி றது. ஏனெனில் பெரியாரையே சரியாக நூலாசிரியர் உள்வாங்கவில்லை என்பது எம்முடைய தாழ்மையான கருத்து. இந்நூல் குறித்து வீரமணி அவர்கள் மறுபரிசீலனை செய் வார்கள் என்று நம்புகிறோம்.  குறைந்த பட்சம் காரல்மார்க்சை மிகத் தவறான கோணத் திலேயே கையாண்டிருக்கும் நூலாசிரியரின் அணுகுமுறையின் போதாமையை உணர்ந்து அந்த இயலை மட்டுமாவது திரும்பப்பெற  வீரமணி அவர்கள் முயற்சி எடுப்பார் என நம்புகிறோம்.


உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்
ஓர் ஒப்பியல் ஆய்வு
ஆசிரியர்:  பேரா. ஆர். பெருமாள்
தமிழாக்கம்: முனைவர் ப. காளிமுத்து
வெளியீடு: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர், வல்லம்,
தஞ்சாவூர் - 613403
பக் : 144,  விலை ரூ. 60/-  

0 comments :

Post a Comment