ஒரு கவிதை கொஞ்சம் சுயபுராணம்...

Posted by அகத்தீ Labels:








ரு கவிதை
கொஞ்சம் சுயபுராணம்...
சு.பொ.அகத்தியலிங்கம்
 நான் எழுதிய கவிதை  தீக்கதிர் 1977 மேதின இதழில் வெளியானபோது  பெற்ற மகிழ்ச்சி இன்று  மீண்டும் அதனைப் பார்த்தபோது என்னுள் ஊற்றெடுத்தது.
பொன்விழாவையொட்டி தீக்கதிர் வெளியிட்டுவரும் காலப்பெட்டகத்துக்காக பழைய ஏடுகளை அன்றாடம் புரட்டும் மதுரைத் தோழர்கள் முருகனும் விஜயகுமாரும் அருள்கூர்ந்து இதனை தேடி எடுத்து எனக்கு மின்னஞ்சல் செய்தனர்.அவர்களுக்கு நன்றி.
அந்தக் கவிதை என் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் . ஒரு தொழிலாளியை முழுநேர கட்சி ஊழியனாக மாற்றிய திருப்புமுனையில் பிறந்ததல்லவா அது !
நினைவுகள் அலையடிக்கிறது .
கிண்டி சி.டி.ஐ யில் டூல் அண்ட் டைமேக்கர் படித்துவிட்டு - சில தொழிற்சாலைகளில் அத்துக்கூலியாய் பணியாற்றி - என் அரசியல் செயல்பாடுகள் காரணமாக வெளியேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டு -  பெஸ்ட் அண்ட் கிராம்டன் [ லிப்ட் பேக்டரி தண்டையார் பேட்டை]யில் தினக்கூலியாக பணியாற்றி வந்தேன். தினக்கூலி ரூ.10.
அங்கு தினக்கூலிகள் படும்வேதனையை கவிதையாக்கி தீக்கதிருக்கு அணுப்பினேன். மேதின இதழில் வெளியானது. கம்பெனி தொழிற்சங்கச் செயலாளர் கோபிநாத் அதை நோட்டீஸ்போர்டில் ஒட்டியதோடு தொழிலாளிகளிடம் சுற்றுக்கும்விட்டார். அவ்வளவுதான் மேனஜர் கொதித்தார் . என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று மற்ற தொழிலாளிகள் பேசத்தொடங்கிவிட்டனர்.
சில நாட்களுக்குப்பின் தொழிற்சங்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருபகுதி தினக்கூலிகள் நிரந்தரமாக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என் பெயர் இல்லை. நான் சங்கச் செயலாளரைக் கேட்டேன் . “ நாங்கள் உன் பெயரைத்தான் சீனியாரிட்டி அடிப்படையில் பத்தாவதாக வைத்திருந்தோம். அந்த நாற்பது பெயரில் உன் பெயரை ஏற்க முடியாதென நிர்வாகம் உறுதியாக நின்றது. பேச்சுவார்த்தை முறியும் சூழலில் தலைவர் வி.பி.சி. அவனை விட்டுவிடுங்கள் , நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி ஒப்பந்த்தத்தை இறுதியாக்கினார்.”
செயலாளர் இப்படிச் சொன்ன பின் மேனஜரிடம் சண்டை போடச் சென்றேன் அவர் சொன்னார் , “ நன்றாக கவிதை எழுது! கட்சி வேலை செய்! உனக்கு இங்கெதற்கு வேலை

எண்4 [இப்போது 16 ] ஸ்டிரிங்கர் தெரு அலுவலகத்தில் தோழர். வி.பி.சியைச் சந்தித்தேன். அவர் கூறினார், “ நாங்களெல்லாம் எந்தக் கம்பெனியில் வேலை செய்கிறோம். முதலாளி கொள்ளைக்கு உன் சக்தியை ஏன் விரயம் செய்கிறாய் ? பேசாமல் கட்சி முழுநேர ஊழியராகிவிடு. கட்சிக்கு நீ தேவை. நாங்கள் கட்சி செயற்குழுவில் ஏற்கெனவே பேசிவிட்டோம். அதனால்தான் உன் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்க சம்மதித்தேன் . அதன் மூலம் மற்றவர்கள் நிரந்தரமாக்கலும் எளிதானது.. உங்கள் அம்மா அப்பாவிடம் நான் பேசுகிறேன்.. நீ நாளையே மாவட்டச் செயலார் பி.ஆர்.பி யைப்பார்..
அந்த மணிக்குரலின் கட்டளை என்னைக் கட்டுப்படுத்தியது. .யோசிப்பதாகச் சொல்லி விடைபெற்றேன். வழியில் மின்சார ரயிலில் சந்தித்த கே.எம். ஹரிபட்டும் இதையே சொன்னார். உ.ரா. வரதராசன் அப்போது ரிசர்வ் வங்கி ஊழியர் , “ எனக்குக் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கிடைத்துள்ளது மறுக்காதே என்றார். து. ஜான்கிராமனும் அப்படியே வழிமொழிந்தார். மறுநாள் தோழர் பி.ஆர். பரமேஸ்வரனை 81 வடக்குக் கடற்கரைச் சாலையில் செயல்பட்டுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலத்தில் சந்தித்தேன் . முழு நேர ஊழியர் ஆனேன்.
சு.பொ.அலி என்ற என் புனைப்பெயரிலேயே கவிதை வெளியாகி இருந்தது. பல்வேறு சிற்றேடுகளின் என் கவிதைக்ள் அப்போது வெளிவந்தன. எதையும் சேகரித்து வைக்கவில்லை. “ சு.பொ.அலி என்ற ஒரு வீரியமிக்க கவிஞர் சிற்றிதழ்களில் அவசரகாலத்தில் தென்பட்டார். நிறைய நம்பிக்கை இருந்தது. இப்போது அவரைக் காணவில்லை. அவர் உயிரோடு இல்லை என்று கருதுகிறேன்என்று ஒரு இலங்கை கவிதாவிமர்சகர் எண்பதுகளில் எழுதினார்.
 பிறகு வாலிபர் சங்கப் பணியில் முழுவதுமாக மூழ்கிவிட்டேன். எழுத்துப் பணி சற்றே தடை பட்டது. இளைஞர் முழக்கம் ஏட்டின் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியபோது என் எழுத்தாயுதம் அன்றைய தேவைக்கு ஏற்ப சுழன்றது.1993 ஆம் ஆண்டு தீக்கதிர் சென்னைப் பதிப்பு துவக்கப்பட்டது. அதில் பொறுப்பேற்றபோது என் எழுத்துப் பணி வேறு தளத்தில் விரிவடைந்தது. அதன் பின் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிவிட்டேன். விடுதலைத் தழும்புகள், மனித உரிமைகள் வரலாறும் அரசியலும் , சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள், பொதுவுடைமை வளர்த்த தமிழ், ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் , குடும்பத்தில் கூட்டாட்சி போன்ற என் நூல்கள் காலம் கடந்து நிற்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.
கவிதை மீதான என் காதல் இன்னும் மீதமிருக்கிறது...
மீண்டும் 1977ல் வெளியான அக்கவிதைக்கு வருகிறேன்...அதன் உயிர்துடிப்பு இன்றைக்கும் மெய்தானே!!!
படியுங்கள்... உங்கள் கருத்தைப் பதியுங்கள்..........

 வாழ்க்கைப்  பாடலில் சில வரிகள்

சு. பொ. அலி
 
ரசியல் சட்டத்தில் தினக்கூலிகள் - நாங்கள்
அனுபவ நடப்பில் அபாய நோயாளிகள்
கனவில் வாழ்வதும் வாழ்வில் நைவதும்
வாடிக்கையான எங்கள் வாழ்க்கைப் பதிகம்

ஒருகவளம் சோற்றுக்காகவே
எங்கள் உழைப்பை! எங்கள் திறமையை!
சோரம் செய்கிறோம்...
சோரம் செய்தும் ஒரு கவளம் சோறும்
நிரந்தரமில்லை அழுது  சாகிறோம்

குறைந்த கூலியில் அதிக உழைப்பை
தந்திடும் மனித மாடுகள் எந்திர ஜீவன்கள்
இது தான் சமுதாய வீதியில் எங்கள் மதிப்பு

நேற்றைய மழையில் சரிந்த சுவரை
அப்புறப்படுத்த அவசரமாக தேவைப்படுவோன்
தினக்கூலியாவான்
சட்டம் எங்களை இப்படித்தான் நிர்ணயம் செய்கிறது.

குண்டுசி முதல் ஆர்யப்பட்டா வரை
ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்திடும்
நாங்கள் எப்படி தினக்கூலி யாவோம்?
உற்பத்தி என்பது அவசரத் தேவையா?
ஒரு நாள் கூற்றுக்கு வைத்திடும் மீசையா?
கேள்விகளை எல்லாம் கோஷங்களாக்கி
நாங்கள் முழங்கத் தொடங்குகிறோம்

சட்டமடாயலங்களில் எங்களுக்காக
நியாயத் தீர்ப்புகள் வாசிக்கப்படுகிறது
அமலாக்கப்படுவதில்லை
காகித சர்க்கரை கண்ணில் காட்டப்படுகிறது
சப்புக் கொட்டியே நாட்கள் நகர்கிறது

இருநூற்றி நாற்பது நாட்கள் உழைத்தால்
இதுவரை உழைத்ததின் பயனைக்காணலாம்
வேலை அங்கே நிரந்தரமாகும்
சலுகைகள் அனைத்தும் உடனே கிடைக்கும்

நீட்டி முழக்கி காகிதப் புலிகள்
கர்ஜனை செய்கிறது!
எங்களை கழுதைகளாக்கி
கழுத்தில் காரட்டை கட்டி ஒடவிடுகிறது!!

ஆண்டுகள் ஐந்தாய்
காரட்டை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கிறோம்
நாட்கள் என்னவோ?
இன்னும் இரு நூற்றி நாற்பது ஆகவே இல்லையாம்!
ஓய்வையும் இதுவரை உணரவே இல்லை
விந்தை இது தான்! எங்கள் வேதனை இது தான்!

வெளியே இருக்கும் வேலை இன்மையை சுட்டிக்காட்டி
நிரந்தர மின்றியே நியாயப்படுத்துவார்

எங்கள் கூடவே உழைப்பவர்
எங்கள் ரத்தம் பிழிபடும் போதும்
பார்த்து கண்ணீர் விடுகிற
எங்கள் சகாக்கள்
எங்களுக்காக போராடும்போது
காட்டிக்கொடுக்கும் கருங்காலிகளாக
நாங்கள் மாற்றப்படுவோம்

அடித்து உதைத்து
ஆசை வார்த்தைகள் ஆயிரம் காட்டி மிரட்டி
எங்கள் தலையில் நாங்களே
மண்ணை போடச் செய்வதில்
முதலாளிமார்கள் ரொம்ப சமத்தர்கள்

நியாயமான போர் குரல் ஒடுக்க
சகாக்கள் மீது வேலைப்பளு திணிக்க
லாபம் மேலும் உறிஞ்சி கொழுக்க
பயன்படும் நாங்கள்
கருவேப்பிலையாகவே எறியப்படுகிறோம்

தள்ளாதவயதில் விழுதுகள் தன்னை தாங்குமென்றே
நம்பிவளர்த்த எங்கள் தாய்கள்
இன்றோ
தள்ளதாத வயதிலும் தாய் விருட்சமே
இன்னும் விழுதை தாங்கி நிற்கும் சோகச்சித்திரம்
இது தான்
எங்கள் வாழ்க்கைச் சித்திரம்

சோக விதியை தூளாய் மாற்ற
சொந்தக்காவில் விருட்சமாய் வளர
ஆண்டுகள் பலவாய் முயன்றுபார்க்கிறோம்
ஆனகதை ஏதுமில்லை
எங்கள் படை எடுப்புகளெல்லாம்
தோல்வியில் முடிகிறது.

ஒவ்வொருமுறையும்
சோலை இதுவென எங்கோ நடந்தோம்
பாலைவனத்து சுடுமணல் நெருப்பில்
பாதம் வெந்ததும்! பாதைதெளிந்தோம்

ஒவ்வொருநாளும்
வேலை இன்று உண்டா? இல்லையா?
கேள்வியுடனே பொழுதுகள் விடிகிறது
இன்றைக்கு வேலையில் ! நாளைக்கு வீதியில்!
வள்ளுவர் பாஷையில் நெருதல் உள்னெருவன் இன்றில்லை
என்றபெருமை உடையவர்கள் நாங்கள்
நடமாடும் நடைபிணங்கள்

குறைந்த கூலியில்! அதிக உழைப்பை
தந்திடும் மனிதமாடுகள்? எந்திர ஜீவன்கள்
கனவிலே வாழ்வதும்! வாழ்விலே நைவதும்
வாடிக்கையான வாழ்க்கை பதிகம்
ஆகமொத்தம்
அரசியல் சட்டத்தில் தினக்கூலிகள்
அனுபவநெசப்பில் அபாய நோயாளிகள்
எங்கள் அபாயநோய்க்கு
காகித மருந்துகள் எதுவும்
கறுப்புக் கோட்டு டாக்டர் எவரும்
பயன்படமாட்டா! பயன்படமாட்டா!
வேதாந்த ஓத்தடம் வேண்டாம்! வேண்டாம்!

வேலைவாய்ப்பு அடிப்படை உரிமை
வேலை கொடுப்பது அரசின் கடமை

எங்கள் கோஷம் வானை கிழிக்க!
எங்கள் பயணம் இன்றே தொடங்கும்

இன்குலாப் ஜிந்தாபாத்

4 comments :

  1. Unknown

    நேற்றைய மழையில் சரிந்த சுவரை
    அப்புறப்படுத்த அவசரமாக தேவைப்படுவோன்
    தினக்கூலியாவான்

    தினக்கூலியின் வரையரையை இன்றுதான் புரிந்துகொண்டேன்

  1. venu's pathivukal

    யாருக்குமே தமது கடந்த காலத்தைத் திரும்பப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு தருணமும் முக்கியமான இன்னொரு புதிய அனுபவமாக மாறிவிடும்.
    ஒரு தெருவைக் கடக்கும் போது ஒரு வாழ்க்கையைக் கடக்கிறோம் என்ற சுந்தர்ஜி கவிதை மீண்டும் எனக்கு நினைவுக்கு வருகிறது....ஓர் இலக்கியவாதிக்கு அவரது பழைய பிரதியைக் கடக்கும் போது வாழ்க்கையை அவர் மீண்டும் கடக்க நேரிடுகிறது...

    உங்கள் விஷயத்தில், நீங்கள் களப் போராளியாகவும், சித்தாந்தத் தேடல் உள்ள முன்னணி ஊழியராகவும் இருந்த ஒரு காலத்தில் பட்டறையில் பட்ட பாடுகள் பாட்டுக்களாக வெடித்தவற்றை இப்போது மறு விஜயம் செய்து பார்க்கும் அனுபவம் ஓர் இலக்கியவாதியின் தொழிற்சங்க வாழ்க்கையை மறு வாசிப்பு செய்வதாகவும், தொழிற்சங்கப் போராளியின் இலக்கிய உள்ளத்தை மறு பிரவேசம் செய்வதாகவும், அன்றைய அரசியல்-சமூக-பொருளாதார உலகிற்குள் ஒரு டைம் மெஷினில் ஏறிச் சென்று அடைவது போலவும் கூட இப்போது உங்களுக்கு அமையும்....

    உங்களுக்கு மட்டும் அல்ல, எங்களைப் போன்ற வாசகர்களுக்கும் !

    சுய புராணம் என்பதை ஏற்க முடியாது...ஒரு கண்ணாடியாக அன்றைய தினக் கூலியின் உளவியலை, வாழ்க்கை போராட்டத்தை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள்...ஓர் அரசியல் ஊழியரது உருவாக்கம் உங்களது தனிப்பட்ட கதையின் மூலம் மற்றவர்களுக்குப் பொருள் படுகிறது...பெருமைக்குரிய, பெருமிதம் ஊட்டக் கூடிய அந்த இன்பம் மட்டுமே உங்களுக்கு சுய புராணம் என்று சொல்லத் தக்க அளவில் அனுமதிக்கப் படுவது

    உங்களது கவிதையின் வேகமும், சு பொ அலி மறைந்துவிட்டாரோ என்று இலங்கை கவிதா விமர்சகர் ஒருவர் எண்பதுகளில் உங்களைத் தேடும் ஓர் அறிமுகத்தை உங்களுக்குப் பெற்றுத் தந்த உங்களது கவிதை வீச்சும் உள்ளபடியே நெஞ்சை நெகிழ வைக்கிறது.....

    உங்களது எதிர்ப்புணர்ச்சிக் கவிதையில் உண்மையின் கொதிப்பும், உணர்வுகளின் பொங்குதலும், வெறுப்பின் பிரதிபலிப்பும், வேதனையின் பெருமூச்சும் ஓங்கி இருந்தாலும், நம்பிக்கையின் கொடி பட்டொளி வீசவும் செய்கிறது....

    காகித சர்க்கரை கண்ணில் காட்டப்படுகிறது
    சப்புக் கொட்டியே நாட்கள் நகர்கிறது
    என்ற வரிகள் எத்தனை இயல்பாக வந்து விழுந்திருக்கின்றன....


    உண்மையில் சு பொ அலி காணாமல் போய்விட்டார்.....இந்தக் கொடுமைகளைப் பாட்டாலும் கவிதையாலும் இலக்கியப் படுத்தவும், இலக்கிய களத்தில் அரசியல் மொழியை முன்வைக்கவும் படைப்பாளிகள் கடுமையாகத் தேவைப்படும் நேரம் இது....எல்லாம் நன்றாயிருப்பதாக முதலாளித்துவமும் புதிய தாராளமய சந்தைப் பொருளாதார அறிவுஜீவிகளும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரை மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழ்ந்துவிடவுமான வீறுமிக்க கவிதைகள் தேவை என்பதை முன் வைக்கிறது உங்களது இந்தப் பதிவும் நினைவு கூரலும்.

    அதே போன்று, நிரந்தரப் பட்டியல் ஓட்டப்படவேண்டிய இடத்தில் உங்களது கவிதை ஓட்டப்படவும் நிரந்தரமாகவே உங்களது பெயர் நிறுவனத்தின் பட்டியலில் இருந்து எடுக்கப் பட்டுவிடுவதும் ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதுவும் ஒரு வாழ்க்கையைக் கடந்து போக வைக்கும் வரிகள்.....இயக்கத்தின் ஊழியராக உங்களது பெயர் கட்சி தயாரித்த பட்டியலில் சேர்க்கப் பட்டிருப்பது பின்னர் தெரியவரும் இடமும், நாங்கள் எல்லாம் எந்தக் கம்பெனியில் வேலை செய்கிறோம் என்று தோழர் வி பி சிந்தன் போன்ற அர்ப்பணிப்பு மிக்க மூத்த தோழர் உங்களுக்கு ஞானஸ்நானம் செய்வித்தது எப்பேற்பட்ட கொடை !

    பின்னர் வாலிபர் இயக்கத்தில், தீக்கதிரில் என தொடர்ந்த உங்களது எழுத்துப் பணி இப்போது திரும்பிப் பார்க்கையில் காலம் கடந்து நிற்கும் பங்களிப்பை வழங்கி இருக்கும் கம்பீரத்தை உங்களுக்கு வழங்கி இருப்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்.....நீங்கள் சொல்லாது விட்டிருப்பது, தீக்கதிரிலும் முன்னர் இளைஞர் முழக்கத்திலும் எத்தனை எத்தனை இளைய படைப்பாளிகளை ஊக்குவித்து எழுதத் தூண்டினீர்கள் என்பதும், என்னைப் போன்ற எத்தனையோ தோழர்களின் எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட எவ்வளவு ஆர்வத்தோடு தோள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதும்.

    மிகுந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும், நெகிழ்வின் கரைதலையும் அன்போடு அனுப்பி வைக்கிறேன் உங்களுக்கு.....


    எஸ் வி வேணுகோபாலன்

  1. நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

    தோழரே! நான் திருவையாற்று அரசர் கல்லூரியில் படித்த 1974-1978)காலத்தில் நீங்கள் “சு.பொ.அலி” எனும் கவிஞராகத்தான் சிற்றிதழ்கள் வழியாக எனக்கு அறிமுகமானீர்கள் அப்போது நான் தமுஎச கிளை தொடங்கி அதன் செயலராக இருந்து, 1975-76 நாகை முதல் மாவட்ட மாநாட்டில் உங்களை நேரில் சந்தித்ததாக நினைவு. உங்கள் தொழிற்சங்க அனுபவங்களை எழுதுங்கள் தோழரே! தொடரும் பயணத்தில் அது உங்களுக்கு இளைப்பாறுதலாகவும், தொடரும் தோழர்களுக்கு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கும். வாழ்த்துகள் தோழா! வணக்கங்களுடன், நா.முத்துநிலவன்,
    புதுக்கோட்டை-622004,
    02-06-2013 ஞாயிறு-காலை10-15
    http://valarumkavithai.blogspot.in/

  1. நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

    உங்கள் கவிதை எனக்கும் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது... அந்தக் கவிதை இன்றைக்கும் பொருந்துவதாக (ஒப்பந்தத் தொழிலாளர் எனும் பெயரில் எல்லாத் துறைகளிலும் பரவி) இன்றும் பொருந்துவதாக இருப்பதுதான் முரண்சுவையான வாழ்க்கையின் அடையாளமா தோழரே?

Post a Comment