வினையும் எதிர்வினையும்
காவிரியைக் குளிர வைக்கும் கனமழையே !
கலங்கிய உள்ளத்தைத் தெளிய வைப்பாய்..
வானின்றி அமையாது உலகெனினும் - இன்றும்
பெய்கையிலே தேக்காத பிழைசெய்தார் யார் ?
உரிமைப்பங்கைப் பெறுவதில் உறுதி வேண்டும்
யாருமிதை எப்போதும் இங்கு மறுப்பாரில்லை
கால்வாய்கள்,கண்மாய்கள்,ஏரிகுளம் உடைப்பெடுக்க
காலத்தே செப்பனிட்டு காக்காத கயவர் யார் ?
மழையமுதம் பூமித்தாய் அருந்தவும் வழியின்றி
வாயெல்லாம் வழிமறித்து இடமடைத்துத் தூர்த்தவர் யார் ?
பெய்து கெடுத்ததும் பொய்த்துக் கெடுத்ததும் கொஞ்சம் - இவர்
தூர்த்துக் கெடுத்ததும் தூங்கிக் கெடுத்ததுமே அதிகம்.
இல்லை என்கிறபோது ஏங்கிச் சபிப்பவர்கள்
வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளையிலே கைமடங்கின்
வீணாகக் கலந்துவிடும் சமுத்திரத்தில் - அப்புறம்
கூப்பாடுபோட்டாலும் கூவியழுதாலும் திருப்பிவாராது.
அடங்கா ஆசையொடு கட்டுக்குள்ளடங்காமல் எங்கும்
வெறிகொண்டு இயற்கையை நாளும் விருதாவாக்கினோம்
ஒவ்வோர் வினைக்கும் எதிர்வினை உண்டென்பதை மறந்தோம்
இனி நாளும் இயற்கை நமைப் பழிதீர்க்கும் என்செய்வோம்?
சு.பொ.அகத்தியலிங்கம்
2 comments :
இயற்கை பழிதீர்ப்பதை மாற்றுவோம். அதற்கு முன் உரிமைக் கோருதலை நம் ஆட்சியாளர்களின் சதித்தனத்தினை ஒப்பிட்டு மூடி மறைப்பது ஏன்? ஆட்சியாளர்கள் செய்த பிழைக்கு மக்கள் வஞ்சிக்கப்படவேண்டும் என்று கூறுகிறீரா. முதலில் உரிமையை கேட்கத் தெரிந்துகொள்ளுங்கள். அதை மாற்ற தேவையான மாற்றம் தானாய் வரும்.
அருமை. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.
Please avoid Word Verification.
Post a Comment