மூலதனத்தைப் படிக்க - புரிய எளிதான வரைபடம்

Posted by அகத்தீ


மூலதனத்தைப் படிக்க - புரிய எளிதான வரைபடம்

சு.பொ.அகத்தியலிங்கம்

மார்க்ஸின் மூலதனத்திற்குள்
பயணிக்க ஒரு வழிகாட்டி
ஆசிரியர்: டேவிட் ஹார்வி
தமிழில்: இலக்குவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
பக்: 496, விலை: ரூ. 300/-

மூலதனம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட் டது. முன்பு அதை படிக்காமல் இருந்ததற்கு தமிழில் மூலதனம் இல் லையே என்று கூறி தப்பித்துவிடலாம். ஆனால் தமிழில் மொழி பெயர்க் கப்பட்ட பின்பு அதை முழுமையாகப் படித்தவர் எத்தனைபேர்? புத்தக அலமாரியில் தூசு படிந்து கம்பீரமாய் மூலதனத் தொகுப்புகள் இருப்பது பெருமை அல்ல, அதைப் படிப்பது எப்போது? படித்தால் புரியவில்லை என்று பொதுவாக கூறும் காரணம். அதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது, ஆயினும் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு அது மூடுதிரையாக அமைந்தது! இனி அப்படியும் தப்பிக்க முடியாது. ஆம், நம் கையைப் பிடித்து மூலதனத்திற்குள் அத்தியாயம் அத்தி யாயமாய் அழைத்துச் சென்று படிக்கவைக்க ஒரு வழிகாட்டி கிடைத்துவிட்டது. இது வரை மேற்கத்திய உலகில் மட்டும் பல நூற்றுக்கணக்கானோரை மூலதனம் எனும் அறிவுப் பொக்கிஷத்திற்கு அழைத்துச் சென்ற அந்த வழிகாட்டி நூலை தமிழில் வெளியிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளது பாரதி புத்தகாலயம் . இலக்குவன் மொழி பெயர்ப்பு வாசிப்பை மேலும் எளிதாக்குகிறது.இந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இனியும் வாய்ச்சவடால் பேசித் திரிவது சரியாகுமோ?

டேவிட் ஹார்வி மூன்று வகையில் வழிகாட்டுகிறார். முதலாவதாக மார்க்சின் வழி முறைப்படியே மூலதனத்தை எப்படி வாசிக்க வேண்டுமென அங்குல அங்குல மாக பாடம் நடத்துகிறார்.இரண்டாவதாக, இன்றைய உலகமயச் சூழல், மார்க்ஸ் காலாவதியாகிவிட்டார் என் கிற வாதத்தை தவிடுபொடியாக்கி மார்க்ஸின் மூலத்தத்துவத்தை உரக்க ஒலிக்கிறார். அதே சமயம் ஆங்காங்கு பொருத்தமான விமர்சனங்களையும் மறுப்புகளையும் முன் வைக்கிறார். இது மார்க்ஸை இன்றைய சூழலில் சரியாக புரிந்து கொள்ள வழி செய்கிறது. மூன்றாவதாக, மூலதனம் பயிலும் செயல்பாடே ஒரு சமூகமாற்றச் செயல் பாடுதான். களப்போராட்டத்தை மேலும் கூர்மையாக நடத்திட வழிகாட்டும் என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியவைக்கிறார்.

மார்க்ஸ் ஏன் வர்க்கப் போராட்ட வரலாற்றுடன் மூலதனத்தைத் தொடங்க வில்லை? பணம் பற்றிய கோட்பாட்டுடன் தொடங்கவில்லை? அறிமுகப்பகுதியில் இந்த கேள்விகளை எழுப்பி ஒரு மர்மக்கதை படிக்கும் பரபரப்பை விதைக்கிறார். இந்த அத்தியாயம் நீளமானது, வாசிக்க சலிப்பூட்டுகிறது. இந்த அத்தியாயம் இலக் கியச்சுவை ஊட்டுவதாக உள்ளது என ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் ஒரு முன் னோட்டத்தை நம் முன் இந்நூல் வைத்துவிடுகிறது. இந்த மலையை ஏறிக்கடந்தால் தான் அந்த ஆற்றை கடக்கும் படகு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் வழிகாட்டலும் நிச்சயம் மூலதனத்தை முழுதாய் படிக்கச் செய்திடும் சீரிய முயற்சியே. இதற்காக ஹார்வியை பாராட்டித் தான் ஆகவேண்டும் பலரும் மூன்றாவது அத்தியாயத்துடன் மூலதனம் படிப்பதை நிறுத்திவிடுவார்கள் என முதலிலேயே பீடிகைபோடும் ஹார்வி அதிலிருந்து வாசகர்களை மீட்டு தொடர்ந்து படிக்க ஆசையைக் கிளறி விட்டுள்ளார். இந்நூலின் முதல் வெற்றியே அது தான்.

படித்தவற்றை எளிதாக மனதில் பதிய வைத்து அடுத்துச் செல்ல உதவும் வகை யில் சில வரைபடங்களைப் பயன்படுத்தியுள்ளார். நான்காவது அத்தியாயம் தொடங் கும் போது முந்தைய அத்தியாயச் சுருக்கங்களை வரைபடமாகத் தந்து விட்டு ஹார்வி எழுதுகிறார்., மார்க்சின் வாதங்கள் இதுவரை பயணித்துள்ள திசை வழியின் மீது எனது பார்வையைச் செலுத்த விரும்புகிறேன். ஒரு சங்கிலி இணைப்பு போல அமைத்து அவர் முன்வைத்துள்ள அடிப்படை வாதங்களை ஒரு வரைபடச் சித் தரிப்புடன் விளக்கி உள்ளேன். மார்க்சின் வாதங்களை இத்தகைய வடிவத்தில் சுருக்குவது அவரது வளமான சிந்தனைக்கு தவிர்க்க முடியாதபடி அநீதி இழைப்ப தாகவே இருக்கும். ஆனால் அவரது வாதங்களை ஏதோ ஒரு விதத்தில் உய்த்துணரக் கூடிய ஒரு வரைபடமாகத் தயாரிப்பதன் மூலம் சுழித்தோடும் நீரோட்டத்தில் எளிதாக நீங்கள் உங்களுடைய கலத்தைச் செலுத்த முடியும்.
இந்த வரிகள் ஹார்வியின் நேர்மையையும், தாம் எடுத்துக் கொண்ட பணியை நிறைவேற்ற வேண்டும் என்கிற அக்கறையையும் ஒருங்கே புலப்படுத்துகின்றது.

 தனது முந்தைய பொருளாதார நிபுணர்களிடமிருந்து மார்க்ஸ் எதனை எடுத்துக் கொண்டார்? எதனை விமர்சித்தார்? எதனை மாற்றி அமைத்தார்? அதன் தேவை என்ன? சூழ்நிலை என்ன? என்பதை இந்நூல் நெடுக ஹார்வி சுட்டிச் செல்கிறார். டார்வினைக் கூட விமர்சனம் இன்றி மார்க்ஸ் ஏற்கவில்லை என்பதையும் அதே சமயம் அவரது பரிணாம ஆய்வைப் பாராட்ட வேண்டிய அளவு பாராட்டியிருக்கிறார், பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் ஹார்வி பதிவு செய்கிறார்.

எட்டாவது அத்தியாயத்தைப் பற்றி வழிகாட்டும் போது கூறுகிறார், இந்த மிகப் பெரிய அத்தியாயத்தை வாசிக்கும் போது (அதிலேயே மூழ்கப்போவதும் கூட நடை பெறலாம்) அதில் இடம்பெற்றுள்ள ஒட்டு மொத்த வாதத்தின் ஆற்றலைப்பற்றி உணர் வைப் பெறுவதற்கு அதன் பிரிவுத் தலைப்புகளின் மீது கவனம் செலுத்துவது உதவி யாக இருக்கும் என்று கூறுவதுடன் அவ்வாறு நினைவூட்டவும் செய்கிறார். மூலதன நூலை வாசிக்க இப்படி ஒவ்வொரு கூறாக பயிற்சி யளித்திருப்பது மிக முக்கியமானது.

16- ஆம்அத்தியாயத்தில் காணப்படும் புதிய பார்வை சர்ச்சைக்கிடமானது என்பதையும் விட சற்றுக் கூடுதலானது. எனவே அதனைக் கவனமுடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது என ஹார்வி பீடிகைபோட்டே தொடங்குகிறார். மார்க்ஸை ஆராதிப் பவராக தொண்டரடிப்பொடியாக நின்று விதந்தோதாமல், மார்க்ஸ்சை சரியாக புரிந்து கொள்ளவும் விமர்சனப் பார்வையோடு அணுகவும் ஹார்வி முயற்சித்துள்ளார். மார்க் சின் முடிவுகள் எல்லாம் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய கூற்றுகள் அல்ல. அவரது அனுமானங்களின் அடிப்படையிலும் அவற்றின் வரம்புக்குள்ளும் அமைந்த நிச்சயமற்ற ஆய்வு முடிவுகள். இதனை மறந்தோம் எனில் அது நமக்கு பாதகமாக முடியும். என்கிறார் ஹார்வி ஓரிடத்தில். இதன் பொருள் ஹார்வி மார்க்ஸ்சை நிராகரிக்கிறார் என்பதல்ல.

 மார்க்சின் சில அனுமானங்கள் மாறியுள்ளதை மறுக்கக் கூடாது: என்கிறார் அவ்வளவே. பிறிதொரு இடத்தில் ஹார்வி கூறுகிறார். நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் அளவில் அமைந்த தொழில் நுட்ப மற்ற வடிவங்கள் குறித்த அவரது (மார்க்சின்) உள்ளுணர்வு சரியானதே என்பதும் என் (ஹார்வி) கருத்து. (ஆனால் பலரும் என் கருத்துடன் உடன்பட மாட்டார்கள்) இப்படி பகிரங்கமாக சில விமர்சனங்களையும் மாறுபாடுகளையும் சுட்டிச்செல்கிற ஹார்வி ஒட்டு மொத்தத்தில் மார்க்ஸ் வழியே இன்றும் சரியானது என்பதில் அசைக்க முடியா பற்றுறுதியை வெறும் வறட்டு நம்பிக்கையாக அல்ல அறிவியல் பூர்வமான தெளிவோடு பிரகடனம் செய்கிறார்.

கடந்த கால் நூற்றாண்டுகாலமாக நம்மில் பலர் ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வர்க்கம் என்பது முக்கியமானதல்ல, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தே பத்தாம் பசலித்தனமானது, நடைமுறை உலகுடன் ஒட்டாத அறிவார்ந்த டைனோசர்களின் தீவனம் அது என்றெல்லாம் நம்மிடம் மீண்டும் மீண்டும் கூறப் படுகிறது. ஆனால் வர்க்கப்போராட்டம் என்பதை நமது அரசியல் பதாகையில் பொறிக் காமல் அதன் பேரிகை முழக்கங்களுக்கு ஏற்ப அணிவகுக்காமல் நாம் முன்னேற முடியாது என்பதைத் தான் மூலதனம் நூலின் வாசிப்பு மறுக்க முடியாத வகையில் நமக்கு உணர்த்துகிறது.

மேலும் ஹார்வி அவரே கூறுவது போல உரையாடல் மற்றும் விவாதத்துக்கான பரப்பைத் திறந்துவிட்டு அதன் மூலம் உலகத்தைப் பற்றிய மார்க்சின் மனக் காட்சியை அறிவுத்தளத்தில் அரசியல் ரீதியிலும் மீண்டும் அரங்கின் மையப் பகுதிக்கு கொண்டுவருவது என்கிற தனது கடமையை இந்நூல் மூலம் மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்.

இந்த நூலை படித்து முடித்த போது (படிப்பதற்கு மொத்தமாக 9 மணி நேரம் ஆனது எனக்கு) எனக்குள் மூலதனம் படிக்கும் ஆவல் பீறிட்டது. அதை எப்படிப் படிக்க வேண்டும் என்கிற திட்டமும் உருவானது.
முதலில் ஹார்வியின் இந்த வழிகாட்டும் நூலை தோழர்களுடன் கூட்டாக அமர்ந்து வாசிக்க வேண்டும். அதனையே ஹார்வியும் வலியுறுத்துகிறார்.
இரண்டாவதாக, அந்த வெளிச்சத்தில் சிரமம்பாராமல் புரிந்தாலும் புரியாவிட்டா லும் மூலதனத்தை முதலில் முழுதாக மொத்தமாக ஒரு முறை வாசித்துவிட வேண்டும்.
மூன்றாவதாக, மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் புதியவெளிச்சத்தில் மூலதனத்தைப் புரிய முடியும் என் கிறார் ஹார்வி. மெய்தான்.. ஆம் அப்போதுதான் அவர் விரும்பியது போல் நாம் சொந்தமாகப்படித்து சொந்த மான கருத்துக்கு வர இயலும். அதற்கு வழிகாட்டுவது தான் இந்நூல்.

உலகம் இடைவிடாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்ப தால் அறுதியான, முழுநிறைவான, துல்லியமான புரிதல் என்பது இருக்கவே முடியாது. எனவே மீண்டும் மீண்டும் மூலதனம் நூலை வாசிப்பதன் மூலமே புத்தொளி பெற முடியும்.

குறிப்பு: அருஞ்சொல் பொருள் விளக்கத்தை - ஆங்கில மூலத்துடன் பின் இணைப்பாக அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். அது புரிதலை மேலும் எளிதாக் கும். வருங்காலத்தில் மொழிபெயர்ப் பாளர்கள் ஒரே மாதிரி சொற்களைப் பயன்படுத்த வசதி ஏற்படுத்தித்தரும்.

வாசகர்கள் கருத்துக்கள்

உங்கள் கருத்துகளை பதிவு செய்ய

பெயர்
மின் அஞ்சல்
கைப்பேசி எண்
உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யவும்

 
 

1 comments :

  1. kumaraguruparan

    ஆவலைத் தூண்டும் சுவையான நூல்-அறிமுகம். "மூலதனம் " நூலை வாங்கிக்கொலு வைத்தால் மட்டும் போதாது. உள்வாங்கியபின், கூட்டாக அலச வேண்டும் என்ற அழுத்தமான பதிவை முன்வைக்கிறார் தோழர் சு பொ அகத்தியலிங்கம்...நூலைச் சுவைப்போம்; விவாதிப்போம் வாருங்கள்.-இரா. குமரகுருபரன், சென்னை-47

Post a Comment