மெய்யான பகுத்தறிவைத் தேடி...

Posted by அகத்தீ Labels:

புரட்சியில் பகுத்தறிவு:மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்,ஆசிரியர்:ப.கு.ராஜன்,
வெளியீடு:பாரதிபுத்தகாலயம்,
421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600 015.
பக்கங்கள்;876 விலை:ரூ.565.

வ்வொரு சொல்லுக்கும் நமக்கு தெரிந்த ஒரு பொருள் உண்டு. வெவ்வேறு இடங் களில் பயன்படுத்தப்படும்போது அதன் பொருள் மாறுபடும். சொற்களை அக ராதியில் சொல்லப்படும் அர்த்தங்களைக் கொண்டு எடை போட முடியாது. இதனை இந்நூலில் சில இடங்களில் ஆசிரியர் சுட்டிச் செல்கிறார். பகுத்தறிவு என்ற சொல்லும் அப்படித்தான்.

கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே பொருள்கொண்டு பழகி விட்ட தமிழக வாசகர்களுக்குப் பகுத்தறிவு குறித்த புதிய சாளரங்களை இந்நூல் திறக்கிறது. மெய்யான பகுத்தறிவு எது என்பதை இந்நூல் விவரிக்கிறது. இந்நூல் 25 அத்தியாயங்களையும், 872 பக்கங்களையும் கொண்டது என்பது மட்டு மல்ல, பூமிப்பந்தில் இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் கண்ட வெற்றி வரலாற்றை நன்கு விவரிக்கிறது. தமிழ் வாசகனை விரிந்த அறிவியல் உலகுக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது.“துல்லியமான அறிவியல் (நஒயஉவ ளஉநைnஉநள) எனப்படும் இயற்பியலில் நியூட்டன் - ஐன்ஸ்டீன் போன்ற சகலரும் ஒத்துக்கொண்ட மாமேதைகள் கருத்துகளையே பொது மைப்படுத்த இயலவில்லை. அப்படியென்றால் தத்துவக் கூற்றுக்களை மட்டும் எப்படி பொதுமைப்படுத்த இயலும்? தத்துவமும் ஏனைய அறிவுப் புலங்களைப்போல மாற்றங் கள் தேவைப்படும் இயலே; ஏனைய அறிவுப் புலங்களைப்போல வரம்புகளைக் கொண்டதே” இப்படி ஒரு தெளிவான புரிதலோடுதான் இந்நூலில் தன் தேடலை ஆசிரியர் தொடங்குகிறார். “மார்க்சியத் தத்துவமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்ற தெளிவானத் தன்னுணர்வு இல்லாதவர்கள் மார்க்சியர்களாக இருக்க முடியாது” என உறுதியாக நம்புகிற நூலாசிரியர், நவீன அறிவியல் வளர்ச்சியோடு மார்க்சியத் தத்துவம் முரண்படுகிறதா? உடன்படுகிறதா? என உரசிப்பார்க்க முயன்றிருக்கிறார். அதற் காக, அவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் ஒரு நெடும்பயணம் நடத்தியுள்ளார்.

ஆர்க்கிமிடிஸ், கோபர்நிக்கஸ், கெப்ளர், கலீலியோ, ஃபாரடே, மேக்ஸ்வெல் என அறிவிய லாளர்கள் தொடங்கி, சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டெஸ்கார்ட்ஸ், வால்ட்டர் ரூசோ, காண்ட், ஹேகல், ஃபாயர்பேக் என தத்துவ ஞானிகள் வழி மார்க்ஸை அடை கிறார். மார்க்சிய தத்துவம் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தையும் செய்கிறார். “மார்க்சியம் கூறும் பொருள் முதல்வாதம் மார்க்சும் ஏங்கெல்சும் அருளிச் சென்ற தல்ல. மார்க்சும் ஏங்கெல்சும் துவக்கி வைத்ததுதான். அது முழுமையும் நிறைவும் அடைந்துவிட்ட அறுதிப்பொருள் (குiniளாநன ஞசடினரஉவ) அல்ல. இதில் ஏங்கெல்ஸ் மிகத் தெளிவாகவே இருந்தார். ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கொப்ப முரணியக்க பொருளியமும் புதுப்பிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். இந்த திசை வழியில் முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. ஆனால், இந்தப் புலத்தின் முக்கியத்து வத்திற்கும் தேவைக்கும் ஈடுகொடுக்கும் அளவில் இது நடைபெறவில்லை என்று தான் கூறவேண்டும்” என்று நூலாசிரியர் 6வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் நவீன அறிவியல் வரலாற்றினை விரிவாகப் பதிவு செய்து அதில் மார்க்சியம் வென்று வருவதை சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

“எல்லா அறிவியல் முன்னேற்றங்களும் மானுடத்தின் இயற்கை குறித்த புரிதலை ஆழப்படுத்துபவைதான்.அறிவியலில் ஏற்படும் காத்திரமான புரட்சிகள் மானுடம் தான் வாழும் உலகு குறித்து வைத்திருக்கும் தவறான புரிதல்களை, மீபொருண்ம (ஆநவயயீhலளiஉள) நோக்குகளை, பிரம்மைகளை, மயக்கங்களை தெளிவுபடுத்து பவையே. நியூட்டனின் இயங்கியலும், கோபர்நிக்கஸின் சூரிய மையக் கோட்பாடும், டார்வினின் இயற்கை தெரிவு, பரிணாம விளக்கமும், ஐன்ஸ்டீனின் சார்பியலும் இந்தப் பணியைச் செய்த புரட்சிகரமான நிகழ்வுகளே. இவையெல்லாவற்றையும் விடக் கடு மையாக பிரம்மைக் குலைப்பை நிகழ்த்தியது குவாண்டம் இயங்கியல் புரட்சியாகும்” என்கிற நூலாசிரியர், இந்த குவாண்டம் இயங்கியலில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குழப்பங்களையும், இந்த அறிவியலையே கருத்துமுதல் வாதிகள் தங்களுக்கு சாதக மாக ஹைஜாக் செய்ய முயன்றதையும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அடுத்து, துகள்கள் இயற்பியல், இழைக் கோட்பாடு என அறிவியலின் வியத்தகு முன்னேற்றங்களை ஆழமாகவே விவரிக்கிறார். நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவீடுகளுக்கு மேல் காலம் உட்பட புதிய அளவீடுகள் சேர்க்கப்படுவதின் அவசி யத்தை அதன் விளைவுகளை விளக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. பொதுவாக, அடிப்படை அறிவியல் கல்வி பெறாத ஒருவர் இந்தப் பகுதியை படித்து எளிதில் கடப் பது அவ்வளவு சுலபமல்ல.

இன்னும் கொஞ்சம் எளிமையாய் எழுதியிருக்கக் கூடாதா என எண்ணத் தோன்றுகிறது.இக்கேள்வி நூலாசிரியருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கமும் சொல்கிறார். “அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ; அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால், அதற்கு மேல் எளிமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்பார் ஐன்ஸ்டீன். எளிமை கருதி சொல்ல வேண்டிய அறிவியல் கருத்தின் பன்முக அம்சங்களை சொல்லாது விடுவதோ, சிக் கல் நிறைந்த விளக்கங்களை தவிர்ப்பதோ அறிவியலுக்கு நியாயம் செய்வதாகாது`` அண்டவியலில் பெருவெடிப்புக் கோட்பாடு தொடங்கி கோள்கள் பற்றிய கருத் தோட்டங்கள் வரை சொல்லியிருக்கிற செய்திகள் இந்த பூமியை யாரோ ஒருவர் படைத் தார் என்கிற நம்பிக்கையை நிச்சயம் சிதறடிக்கும். நிலவியல் பற்றிய ஒரு அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது. ஆசிரியர் கூறுகிறார், ‘புவியில் இருந்து பல கோடி ஒளி ஆண்டு கள் தொலைவில் உள்ள விண்மீன்களின் மையத்தில் நிகழும் வினைகளைப் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு, நமது காலிற்கு கீழேயுள்ள புவியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள வில்லை. ஆனால், அறிந்த மட்டும் புவியின் நிகழ்வுகளும் மாற்றங்களும் அணுவிற்கு உள்ளே இருந்து அண்டங்கள் வரை நிகழும் மாற்றங்கள் போல அடிப்படை விதிகளின் படிதான் நடக்கின்றன” என்கிற ஆசிரியர், மார்க்சிய அடிப்படை விதிகளை அடுத்து சுட்டுகிறார். “முரண்பாடும் எதிர்மறைகளின் ஒத்திசைவும், அளவு மாறுபாடு, பண்பு மாறு பாட்டுக்கு இட்டுச் செல்வதும் விதிவிலக்கின்றி இங்கு நடைபெறுகின்றன” இதன் மூலம் மார்க்சிய விதிகள் மேலும் மேலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படுவதை நிறுவுகிறார்.உயிரின் தோற்றம், பரிணாமம் எனத் தொடரும் அத்தியாயங்களில் மனிதன் பிறந்த கதையை அறிவியல்பூர்வமாக மிகவும் துல்லியமாக படம் பிடிக்கிறார்.

“இருப்பிற்கான போராட்டமும் தப்பிப் பிழைக்கும் தகுதி படைத்தவையும்” (ளுவசரபபடந கடிச நஒளைவயnஉந யனே ளரசஎiஎயட டிக கவைநேளள) குறித்து நன்கு விளக்கமளித்துள்ளார். மரபணுவியல் பகுதியிலும் அதை அடுத்து வரும் பகுதிகளிலும் மனிதன் உரு வான கதையை மட்டுமல்ல, ஆண் பெண் உருவாவதின் கதை, மானுட மூளையின் உருவாக்கம், பாசம், கரணீய அறிவு, காத்திர உணர்வு ஆகியவற்றுக்கும் மூளை செயல் பாடுகளுக்கும் உள்ள உறவு, மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கான விடை, பண்பாட்டு உருவாக்கம், அறிவியல் வரலாறு என ஒரு பெரிய வட்டத்துக்குள் நம்மை சுற்றி வரவைத்து எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறார். கடைசி அத்தியாயங்களில் ஆன்மீக குருக்கள் குறித்தும், தத்துவங்கள் குறித்தும் சில குறிப்புகளைத் தந்து இறுதியாக மார்க்சியமே செயல்பாட்டுக்கான தத்துவம் என முடித்திருக்கிறார். சில மாதங்கள் முன்பு, மார்க்சிஸ்ட் தத்துவ காலாண்டு ஏட்டில் (ஆங்கிலம்) விஞ் ஞானி டி. ஜெயராமன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் தலைப்பு “இயக்கயியல் பொருள்முதல்வாதமும் சமகால அறிவியல் வளர்ச்சியும்” (னுயைடநவiஉயட ஆயவநசயைடளைஅ யனே னுநஎநடடிஅநவேள in உடிவேநஅயீசடியசல ளஉநைnஉந) என்பதாகும். அக்கட்டுரையை இங்கு சுட்டுவது அவசியமாக இருக்கிறது. எல்லா அறிவியலும் வளர்ந்து கொண்டிருக்கும் போது; முந்தைய கருதுகோள்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போது; பல வருடங் களுக்கு முன் எழுதப்பட்ட மார்க்சிய தத்துவ பாடத்தை அப்படியே கிளிப்பிள்ளை சொல்வதுபோல் இப்போது திருப்பிச் சொல்வது நம்பிக்கை அளிக்காது, நியாயமும் ஆகாது. மாறாக, நவீன மாற்றங்களோடு மார்க்சியம் எவ்வாறு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது, மாற்றமடைந்துள்ளது என்பதையும் சேர்த்து சொல்லியாக வேண்டும். அந்தத் தேவையிலிருந்துதான் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இந்த நூலும் கிட்டத் தட்ட அதே பாதையில்தான் பயணிக்கிறது. ஆனால், விரிவான விஞ்ஞான விளக்கங் களுக்குள் நூலாசிரியர் புகுந்துவிட்டதால்; மார்க்சியத்தை அதோடு இணைத்துப் பார்ப்பது ஜெயராமன் கட்டுரையில் வெளிப்பட்ட அளவு கூர்மையாக வெளிப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. நூலின் கடைசியில் நிறைவுரையாக வாதங்களின் தொகுப்பை வழங்கி மார்க்சி யத்தை, அதன் மெய்யான இருப்பை வலுவாகச் சொல்லியிருக்கலாம்.அடுத்து வரும் பதிப்பில் இப்படியொரு அத்தியாயம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.

நல்ல தமிழில் அறிவியலை விளக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆயினும், இந் நூலில் கையாளப்பட்டுள்ள அறிவியல் கலைச்சொற்களின் பட்டியலை ஆங்கில மூலத்தோடு பின் இணைப்பாகத் தந்து அந்த சொற்களுக்கான சிறு விளக்கமும் தந் திருந்தால், என் போன்ற சாதாரண வாசகர்கள் நூலுக்குள் செல்லும்போது எதிர் கொள்கிற சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்திருக்கும். புரிதல் இலகுவாகியிருக்கும். தமிழக வரலாற்றில் அறிவியல் முன்னேற்றங்களை தத்துவ நோக்கோடும், வாழ் வியல் நோக்கோடும் தொடர்ந்து கட்டுரையாக தந்தவர் சிந்தனைச்சிற்பி ம. சிங்கார வேலர். அவருக்குப்பின் அந்தப் பணி முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. இந்த வெற்றிடத்தில்தான் பகுத்தறிவு என்ற போர்வையில் ஒரு குறுகிய சிமிழுக்குள் நின்று கொண்டு வாதாடுகிற திராவிட பகுத்தறிவு மரபு உருவாகிவிட்டது.அறிவியல்பூர்வமாக பிரச்சனைகளை அணுக கற்றுக்கொடுக்காததால், அந்த பகுத்தறிவு மரபு இன்று நீர்த்துப்போய் இந்துத்துவ தாக்குதலுக்கு ஈடுகொடுக்கத் திணறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிங்காரவேலரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உரிய நேரமிது. அதற்கு அறிவியல்பூர்வமாக பகுத்தறிவை அலசியிருக்கிற இந்நூல் ஒரு நல்ல முயற்சி.

சு.பொ.அகத்தியலிங்கம்   
    

1 comments :

  1. IVAN DOSTOYEVSKY

    Great actually now I am reading this book. Its interesting and now only I am understanding communism, materialism, idealism from this book..

Post a Comment