அகத்தேடல்-8

Posted by அகத்தீ

அகத்தேடல்-8

கமும் புறமும் வேறாமோ
அங்கும் உளதோ முரண்பாடு?
எங்கும் தேடி சலித்தாலும்

முகம் காட்டும் கண்ணாடி
முகவரியைக் காட்டிடுமோ

கண்ணாடி காட்டும் முகம்
அசலா?போலியா?
அணிந்துள்ள முகமூடியா?
அறிய முயல்கிறேன்
அகத்துள்ளே தேடுகிறேன்

மறுபடியும் மறுபடியும்
கருங்குரங்கை நினைக்காமல்
லேகியம் சாப்பிடத்தான் ஆசை
விடாமல் துரத்துகிறதே
அந்தக் கசப்பு

பரமனின் அடிமுடியைப்
பார்த்தவரில்லை என
ஆன்மீக அடிப்பொடிகள்
அளந்த கதை கேட்டதுண்டு

சாதியின் ஆணிவேர் சல்லிவேரை
அலசி அடையாளங் கண்டு
அமிலத்தை ஊற்றிடவே
ஆசைப் படுகிறேன் வெகு நாளாய்..

இதுதான் விஷவேர் என்றே
வெளிச்சம் பாய்ச்சியவர்கள்
அநேகம் அநேகம்
ஆனால் அவர்கள்
தோற்ற இடம் எது?

தோண்டி எடு வரலாற்றை
துருவிப்பார் தத்துவத்தை
சாதிச்சிலுவை யுகயுகமாய்
அழுத்துவதின் ரகசியத்தை
அறிவியலின் வெளிச்சத்தில்
ஆராய்ந்து கண்டுபிடி
அனுபவக் கல்லில் உரசி
ஆழத்தை அளந்து சொல்

நிச்சயமாய்ச் சொல்வேன்
திறந்த மனதோடு
உனக்கு எதிராக
உன்னையே நிறுத்து
குறுக்கு விசாரணையில்
சாதிய அழுக்கைத்
தோலுரித்துக் காட்டு

இது கட்டளையா?
இலை இல்லை
சுய அடையாளத் தேடலின்
முதல் முடிச்சை
அவிழ்க்கும்
இடம் இதுதான்..

தொடரட்டும்
அகத்தேடல்...

சு.பொ.அகத்தியலிங்கம்.


..

0 comments :

Post a Comment