அகத்தேடல்-7

Posted by அகத்தீ

அகத்தேடல்-7

உன் சாதிக்கு என் சாதி
உயர்ந்ததென்றும்
இழிந்ததென்றும்
பிதற்றுவதில் பெருமையென்ன?

மிதிக்கின்றாய் ஒருவனை
மிதிபடுகின்றாய் ஒருவனிடம்
கதைக்கின்றாய் சாதிப்பெருமை
உன்னை நீயே
சிமிழுக்குள் சிறையிட்டு
இழக்கின்றாய் சிறகை

தலைமுறை தலைமுறை
சாதி அழுக்கு உன்
தலைக்குள்ளே..

சுத்தமானவன் என்று
எப்படிச் சொல்கிறாய்?
வெட்கங்கெட்டவனே

சாதியின் வேர்களைத்தேடி
சரித்திரத்தின் இருண்ட தாழ்வாரங்களில்
கண்டதென்ன?

சனாதனத்தின் குடிமியையா?
வர்ணஸ்ரமப் பூணூலையா?

இரண்டும் குறியீடுதானே

மநுவின் சட்டம்
அர்த்த சாஸ்த்திரம்
கீதையின் போதனை

முக்கூட்டு மூளைச்சலவையில்
இழந்த சுயத்தை
எப்போது மீட்கப்போகிறாய்?

சடங்குகள் சம்பிரதாயங்கள்
விலங்குகள் என்பதை
எப்போது உணரப்போகிறாய்?

கடல்தாண்டினும்
மலைதாண்டினும்
மதம் மாறினும்

உடை மாற்றி குரல் மாற்றி
நடை மாற்றினும்
மாறாத சாதியை

மனதிலிருந்தே
துடைத்தெறியாத வரையிலும்
சாதிக்கறைதானே
உன் அடையாளம்?

அறிவியலில் நீ
பெற்ற வெற்றியெல்லாம்
விழலுக்கு நீர்தானே

துணியில் கறை நீக்க
சோப்பு உண்டு
சாதிக்கறை நீக்க என்ன வழி
நீ யோசி

மதம் மீறி சாதி மீறி
மனதுக்கு ஏற்ற துணை
நீ தேடு
காதல் பெ
ரு நெருப்பில்
கருகட்டும் சாதி மதம்

-சு.பொ. அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment