“ஆயிரம் சொன்னாலும்
நல்லது கெட்டதுக்கு
சாதி சனம்தானே வந்தாகணும்...
கொள்வினை கொடுப்பினையில்
சாதியை விட்டுவிட இயலுமா?
ஆசிட்டிலே
முங்கி எழுந்தாலும்
உன் சாதி அடையாளம்
உன்னை விட்டுத்தொலையுமா?”
கேள்விக் கொடுக்குகள்
மீண்டும் மீண்டும்
கொட்டும்போதும்
உனக்குள்ளிருக்கும்
சாதிய நச்சரவம்
தலைநீட்டத்தான்
செய்கிறது..
மேடையில் முழக்கிய
சாதிய எதிர்ப்பு
வீட்டுக்குள்
முடங்கிப் போகிறது
பொதுவெளியும்
தனிவெளியும்
முரண்பட
சாதியவெறியரின்
நகைப்புக்கு இடமாக..
சாதிபடுத்தும் பாடு
தாளம்படுமா?
தறிபடுமா?
சாதிக்குள் முடங்க
அறிவும் தடுக்கிறது
மனச்சாட்சியும் மறுக்கிறது
ஆயினும்
சமூகநிர்பந்தமும்
குடும்ப நிர்பந்தமும்
முடிவைத்திணிக்கிறது
இப்போதும்
திமிறி வெளிவருவதில்தான்
உனது
மெய்யான இருத்தல்
அர்த்தம் பெறுகிறது...
அதற்கு நீ
அதிகவிலை
கொடுக்கநேரலாம்..
ஆனாலும்
சூழும் தோழமை
கொட்டிய கேள்விக்கெல்லாம்
விடையாகும்
மருந்தாகும்
இன்னும் மீதமிருக்கிறது
நம்பிக்கை
தேடலைத்தொடர்க..
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment