அகத்தேடல்-5

Posted by அகத்தீ

ஊரு முழுக்க உறவு
மூச்சு முட்டப் பகை
உதறவும் முடியாது
அணைக்கவும் முடியாது
விசித்திரமான சிலந்திவலை



உனக்குத்தான்
எத்தனை எத்தனை
அடையாளங்கள்

நீயே
மகன்/மகள்
நீயே
தந்தை/தாய்

மாமா/அத்தை
அக்கா/அண்ணன்
தம்பி/தங்கை
இன்னுமுள்ள
எல்லா உறவுகளும்
நீயாயும் இருக்கிறாய்
உனக்கும் இருக்கிறது

ஆனாலும்
உனக்காக யார்
எப்போதும்
தொக்கிநிற்கும் கேள்வி

தாய்தந்தை உறவும்
ஒரு எல்லையோடு சரி

கடைசிவரை
ஒட்டிக்கொண்டிருக்கும்
உறவுச் சங்கிலி
கணவன் மனைவி

அதிலும்
எத்தனை விரிசல்கள்

கவிதையில்
உபதேசத்தில்
பட்டுத்தெறிக்கும்
விசாலமனது
சொந்தவெளியில்
தொலந்துபோனது

சொந்தங்கள்
சுகமாவதும் சுவையாவதும்
போதா காலவினை அல்ல
புழங்கும் காசு நிலையால்

உனக்காக யாருமில்லை
ஓயாமல் புலம்புகிறாய்
யாருக்காகவேனும்
இருக்கிறாயா நீ

உன்னோடு
உறவுகளுக்குப் பிரச்சினையா
உறவுகளோடு
உனக்குப் பிரச்சினையா

நீ கொஞ்ச நேரம்
அந்தப்பக்கம்
நின்றுபார்
சிக்கலின் முடிச்சு
தானாய் அவிழும்

ஆனாலும்

வீம்பும் பிடிவாதமும்
ஈரக்கம்பளியாய் அழுத்த
அகம்பாவ மழையில்
அணு தினமும் அலைகிறாய்
அணுவேனும் அகத்தில்
உணர்ந்தாயில்லை

சொந்தங்களின்
சுழல்வட்டத்திற்கு
வெளியே
சற்றே எட்டிப்பார்
விரிந்துகிடக்கிறது
வானமும் பூமியும்..

-சு.பொ.அகத்தியலிங்கம்


0 comments :

Post a Comment