அகத்தேடல்-3
Posted by
ஞாபக்கேணியின்
அடியாழத்தில்
நேற்றின்
நினைவுகள்.
கல்லெறிந்த குளத்தில்
கரைதொடும் அலைகள்
அற்ப ஆயுளெனினும்
ஸ்பரிசம் இனிது.
இன்னாரின் மகனென/மகளென
தெருவோர் சுட்ட
மிடுக்குடன் திரிந்த
நாட்கள் இனிது
அது
கவலையறியா
பிஞ்சு அடையாளம்
இன்னாரின்
மனைவி/கணவர்
தாய்/தந்தைஇவரென
விரல்கள் சுட்ட
கர்வம் மிகுந்தது
அது
பருவப்பசியால்
ஈட்டிய அடையாளம்
முகத்தின் சுருக்கம்
முகவரியாக
இனிக்கும் பழமாய்
தாத்தா/பாட்டி
அவரவர்
வாழ்க்கை சிறுவெளியில்
அதுவன்றோ
முழுமையின் அடையாளம்.
நோய்வாய் படாமல்
பாயில்கிடந்துழலாமல்
சட்டென வருவதோ
கல்யாணச்சாவு
நைந்து நசிந்து நாறி
கிடந்து இழிந்து
நொந்து வெந்து
முடியும் வாழ்வை
என்னென்று சொல்ல
எது எப்படியோ
வந்ததும் செல்வதும்-உன்
வசத்தில் இல்லை
வாழ்ந்ததில்-நீ
பதிந்த அடையாளம் எது?
அகத்தாய்வோ
அகத்தேடலோ
காட்டுமோ
உன்
அடையாளத்தை?
-சு.பொ.அகத்தியலிங்கம்.
0 comments :
Post a Comment